அன்புள்ள ஜெ,
கடந்த சில நாட்களில் தங்களின் சிலுவையின் பெயரால் புத்தகத்தை முடித்தேன். இப்படி ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதியதற்கு என் வாழ்த்துக்கள்.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பல காலங்களாக மதங்களுக்கு இடையில் உரையாடல்கள் தர்மங்களின் அளவிலேயே இருந்தது என்று தோன்றுகிறது. எனக்கும் அப்படி இருந்தால்தான் சரி என்று படுகிறது. எந்த மதமானாலும் ஒருவன் ஆன்மீக பயணத்தில் தர்மத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என்று தான் சொல்லும். இதுவே எல்லா மதங்களையும் பிற மதங்களோடு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு பொதுத் தளத்தை அமைத்து கொடுக்கிறது.
காலத்திற்கு ஏற்ப இந்த தர்மங்கள் மாறுபட்டே வந்திருக்கக் கூடும். எந்த ஒரு மதத்திற்கும் (குறிப்பாக இந்து மதம்), பிற மதங்களில் இருந்து தர்மங்களை எடுத்துக் கொள்வது எளிது. இப்படித்தான் விக்டோரியா ஒழுக்கமும் நம் கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கவேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட தர்மம் அந்த மதத்தின் தத்துவத்தோடு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஒவ்வொரு மதமும் தன் தத்துவத் தளத்தை பாதுகாத்து, தர்மங்களை பிற மதங்களில் இருந்து எடுத்துக்கொண்டால் அது மேலும் வளர்கிறது.
மாறாக தங்கள் தத்துவத் தளத்தை இந்த உரையாடல்களில் தக்க விட்ட மதங்கள் அழிந்து போக வாய்ப்பு நிறைய இருக்கிறது. அப்படி விட்டுக் கொடுக்கும் மதங்கள் ஒரு விதமான வலுவில்லாத மதங்களே.
இப்படிப் பார்க்கையில் கேரள கிருத்துவ சர்சுகள் விஜய தசமி போன்ற விழாக்களை கொண்டாடுவது ஒரு விதத்தில் இந்திய கிருத்துவத்திற்கு பெருமையே சேர்க்கும். ஆனால் அவற்றைப் புகுத்த அவர்கள் சொல்லும் காரணங்கள் வேடிக்கையாக இருக்கின்றன. அதற்கு ஒரு வேடிக்கை என்ற அளவு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, நாம் அதை கடந்து சென்று விடவேண்டும். அவ்வளவுதான்.
-சீனு நரசிம்மன்
அன்புள்ள சீனு
நலம்தானே
சிலுவையில் பெயரால் நூலின் மையம் மதம் கடந்த ஆன்மீகம். மதத்தைத் தாண்டி
சென்று கிறிஸ்துவை அறியும் முயற்சி. அதையே கிருஷ்ணனுக்கும் புத்தருக்கும்
செய்கிறேன் என்று தோன்றுகிறது.
ஜெ