நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்
விமர்சனக் கட்டுரைகள் – கடிதங்கள்
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
நலம்தானே?
சமீபத்தில்தான் யுவன் சந்திரசேகரின் புனைவுலகம் பற்றி சுரேஷ் பிரதீப் எழுதிய நீண்ட கட்டுரையை வாசித்தேன். யுவன் கதைகள் மேலோட்டமான வாசிப்புக்கு எளியவை. அவை உற்சாகமான வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன. வடிவங்களால் புதிர்கள் போடுவதில்லை. மொழி எளிமையான உரையாடல். ஆனால் அவருடைய கதைகள் எல்லாமே புதிர்கள். அந்தப்புதிர்கள் அக்கதைகள் எந்த வகையிலே கோக்கப்பட்டிருக்கின்றன என்பதில்தான் உள்ளது. சிலசமயம் ஒன்றோடொன்று இணைகின்றன கதைகள். சிலசமயம் முரண்படுகின்றன. இணைதலும் முரண்பாடுகளுமாக அமைந்துள்ள இந்தக்கதைகளை புரிந்துகொள்ள நாம் முயலக்கூடாது. அவற்றுடன் விளையாடவேண்டும். அந்த விளையாட்டின் விதிகளைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் சுரேஷ் பிரதீப். அழகான ஆழமான கட்டுரை.
ஆர்.மகேஷ்
அன்புள்ள ஜெ,
சுரேஷ் பிரதீப் எழுதிய விமர்சனக்கட்டுரையை விரும்பி வாசித்தேன். ஓர் இலக்கியவாதியைப் பற்றி சமகால விமர்சகர்கள் எழுதும் கட்டுரைகளில் பொருள் இல்லை. தமிழில் அப்படி எந்த நல்ல எழுத்தைப்பற்றியும் வெறும்விமர்சகர்கள் பொருட்படுத்தும்படி எதையும் எழுதியதில்லை. சமகால எழுத்தாளர்களைப் பற்றி அதே அலைவரிசை கொண்ட இன்னொரு எழுத்தாளர் மட்டுமே நல்ல குறிப்புகளை எழுத முடிந்திருக்கிறது.
அவ்வகையில் யுவன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைப்பற்றி நீங்கள் எழுதிய விமர்சனங்கள் மிக முக்கியமானவை. உங்கள் சமகாலத்தவர்களாகிய இவர்களை இத்தனைக் கூர்ந்து கவனித்து இவ்வளவு விரிவாக எழுதியிருப்பது ஆச்சரியம்தான். பொதுவாக எழுத்தாளர்கள் இதைச்செய்வதில்லை. குறிப்பாக அவர்கள் இருவரும் உங்கள் எழுத்துக்களைப்பற்றி ஒரு சொல்கூட எழுதியதில்லை.
ஆனால் அடுத்த தலைமுறை எழுத்தாளர் ஒருவர் ஒரு முக்கியமான எழுத்தாளரைப்பற்றி எழுதுவது மிக முக்கியமானது. அந்த எழுத்தாளரின் எழுத்தில் அடுத்த தலைமுறைக்கு எஞ்சுவது என்ன என்பதை அதிலே காண்கிறோம். சுரேஷ் பிரதீப்பின் கட்டுரை ஆகவே முக்கியமான ஒரு கட்டுரை. அவருக்கு என் பாராட்டுக்கள்
இக்கட்டுரையில் யுவன் சந்திரசேகர் கிருஷ்ண என்னும் கதாபாத்திரத்தை புனைவது பற்றிச் சொல்லியிருந்தார். இஸ்மாயில் போன்று பல கதாபாத்திரங்களை அவர் புனைந்திருக்கிறார். அவர்கள் எல்லாருமே தர்க்கத்தை சற்று மீறிச்செல்லும் விளிம்பில் இருக்கிறார்கள் என்பதுதான் இதில் முக்கியமானது. அவர்கள் மாற்று யதார்த்தங்களை ஏற்கும் மனநிலையில் இருக்கிறார்கள்.
யுவன் சந்திரசேகரின் கதைகளின் நுட்பம் முழுக்க நுட்பமே இல்லை என்று அவை கொள்ளும் பாவனையில் இருக்கிறது. ஒன்றும் பெரிசா சொல்றதுக்கில்லை என்று சொல்லிக்கொண்டே அவர் பைத்தியத்தின் விளிம்புவரைச் செல்லும் விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். வடிவச்சோதனைகள் எதையும்செய்வதில்லை. பெரும்பாலான கதைகளுக்க் கதைக்குள் கதை என்னும் ஒரே வடிவம்தான். ஆனால் அதற்குள் அவர் வாழ்க்கையின் மையமான சிலபுதிர்களை கையாள்கிறார்
நான் வாசித்தவரை வாழ்க்கையை வாழ்வதற்கும் பின்னர் அதை நினைவாகத் தொகுத்துக்கொள்வதற்கும் நடுவே நாம் ஒரு விளையாட்டை ஆடுகிறோம். கதைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே உள்ள முரண்பாடு இது. இதைத்தான் யுவன் எழுதிக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்
சாரங்கன்