ஜப்பான், ஒரு கீற்றோவியம் -7

ஹிரோஷிமா அளித்த ஆழ்ந்த அதிர்ச்சியை வெவ்வேறு வகையில் பேசிப்பேசிச் சீரமைத்துக்கொண்டிருந்தோம். ஹிரோஷிமாவைப்பற்றி பேசுவது ஒருவகை. ஹிரோஷிமா அல்லாதவற்றைப் பேசுவது இன்னொரு வகை. ஹிரோஷிமா பற்றிய பேச்சு எப்போதுமே நம்மை அதிலிருந்து விலக்கிக்கொள்வதாகவே அமைவதைக் கவனித்தேன்.

அதாவது அணுகுண்டுவெடிப்புக்கு முழுக்காரணமும் மேலைநாட்டு அறிவியல் மேலாதிக்கம், அதை கருவியாகக் கொண்டு உலகைவெல்லவேண்டும் என்னும் அவர்களின் மிதப்பு, அதற்கு வழிவகுத்த தொழிற்புரட்சி, அதன் விளைவான நுகர்வு வெறி. உடனே தாயக்கட்டை மறுபக்கம் திரும்பி ஜப்பானின் போர்வெறி, உலகமெங்கும் ஜப்பான் இழைத்த மன்னிக்கமுடியாத போர்க்குற்றங்கள் என காட்டத்தொடங்கும்

ஆனால் அது வெறும் தப்பித்தல். உண்மையில் அணுகுண்டு சராசரி இந்திய உள்ளத்தை மகிழ்விக்கிறது. இந்தியாவின் மீதான எந்தத் தாக்குதலின்போதும் ‘அணுகுண்டு போட்டு பொசுக்கிடணும் சார்!” என்ற குரல் எழாமல் இல்லை.நாம் அனைவருமே உள்ளூர அணுகுண்டுகளை ஏந்தியிருக்கிறோம். ஒவ்வொரு முறை போர்வெறியுடன் நாம் பேசும்போதும் திரும்பிநின்று அதை நோக்கவேண்டும்.

போர்வெறி என்பது தேசியவெறியின் மறுபக்கம். போர்வெறி இல்லாமல் தீவிரத்தேசியவாதத்தை நிலைநிறுத்த முடியாது. நான் தேசியவாதத்திற்கு எதிரானவன் அல்ல. நாளை தேசியவாதம் இல்லாமலாகும் சூழ்நிலை வருமென்றால் அது நன்றே என நினைக்கிறேன். ஆனால் இன்று ஒரு நிலத்தில் வாழும் மக்கள் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருமைகண்டு இணைந்து வாழ சிறந்த கொள்கை அதுவே. மதவெறியால் உருவாக்கப்படும் தேசியக்கொள்கைகளை விட நவீனத்தேசியக்கொள்கை மேலானதும் முற்போக்கானதுமாகும். மதவெறித்தேசியத்தை ஆதரிப்பவர்களின் நவீனத்தேசிய எதிர்ப்பு என்பது போலியானது, சூழ்ச்சியானது என எண்ணுகிறேன்.

காந்தியும் நேருவும் அம்பேத்கரும் உருவாக்கிய நவீன இந்தியத் தேசியம் எனக்கு ஏற்புடையது. அது ஆற்றலிழக்குமென்றால் அழிவுச்சக்திகளே மேலோங்கும். ஆனால் தேசியத்தை ஒரு வகை வெறியாக ஆக்கிக்கொள்வதில் உடன்பாடில்லை. ஏனென்றால் அது நேராக போர்வெறிக்கு கொண்டுசெல்லும். இன்றைய சூழலில் எல்லா போர்வெறிகளும் கடைசியாக அணுகுண்டில்தான் சென்று நின்றிருக்கும்.

அணுகுண்டுப் பேச்சிலிருந்து விலகுவதற்கென்றே இன்னொரு இடத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம். மியோஜிமா [Miyajima ] ஜப்பானின் தொன்மையான ஆன்மிகநிலையம். ஷிண்டோ மதத்தின் முதன்மையான ஆலயங்களில் ஒன்று.  கடலுக்கு அப்பாலுள்ள சிறிய தீவு அது. இன்றும் அதை படகுகளில் செல்லும்படியே வைத்திருக்கிறார்கள். பெருங்கரையிலிருந்து அரைமணிநேரத்திற்கு ஒருமுறை ஒரு படகு அங்கே செல்கிறது. நாங்கள் சென்றபோது ஒரு படகு சென்றுவிட்டது. ஆகவே அரைமணிநேரம் அங்கிருந்த உணவகத்தில் அமர்ந்து ஒரு பழச்சாறு அருந்தினோம்.

அங்கே ஒருவரைப் பார்த்தேன். போர்ச்சுக்கல்காரர். தன்னை எழுத்தாளர், வரலாற்றாய்வாளர் என அறிமுகம் செய்துகொண்டார். மிதமான போதையில் இருந்தார். அங்கிருந்த கல்லூரியில் மேலைநாட்டுக்கலை கற்பிப்பதாகச் சொன்னார். தனிமை அவரை வாட்டுவது தெரிந்தது. ஜப்பானிய மாணவர்கள் புத்தர் சீனாவில் பிறந்தவர் என நம்புவதையும், அவர் இந்தியாவில் பிறந்தவர் என்பதை நம்ப பிடிவாதமாக மறுப்பதையும் பற்றிச் சொன்னார். அதெப்படி என ஆச்சரியமாக இருந்தது. ஆனால் உலகமெங்கும்  கலாச்சார அடிப்படைவாதம் என்பது ஒருவகை மூடநம்பிக்கையாகவே உள்ளது.

ஜப்பானியர்களுக்கு சீனர்கள் அவர்களைப்போலவே மேலானவர்கள். கரிய இந்தியர்களில் ஒருவராக எப்படி கடவுள் பிறக்க முடியும்? ஏசு சமாரியர், ஆகவே அவர் கரிய இனத்தவராகவே இருக்கமுடியும், இன்றைய ஏசுவின் முகம் பின்னாளில் ரோமாபுரியில் சக்கரவர்த்திகளின் சாயலில் வரையப்பட்டது என வாதிடும் நண்பர் ஒருவர் எனக்கிருந்தார். ஏசுவை கருப்பராக வரைந்த ஓர் ஓவியத்தை அவர் தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது காட்டினார். பக்தர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். ஒரே வசை. வசைபாடிய அனைவருமே கருமையானவர்கள். ஏசு வெள்ளையராக நீலக்கண்களும் சிவப்புத்தாடியுமாகவே இருக்கமுடியும் என நம்பினர்.

மதச்சொற்பொழிவாளரான கிருஷ்ணபிரேமி ஓர் உரையில் கிருஷ்ணன் கரியவன் அல்ல, கிருஷ் என்றால் வியாபிப்பது என்று பொருள், அப்பொருளிலேயே அவன் கிருஷ்ணன் என வாதிட்டதை கேட்டேன். வெண்முரசில் கிருஷ்ணன் இளைய யாதவர் என்றே குறிப்பிடப்படுகிறார். வாரம் ஒருவர் கொந்தளிப்புடன் அதைப்பற்றி எனக்கு எழுதிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் ஜப்பானியர்களின் அந்த நம்பிக்கை வெறும் கற்பனை அல்ல. சீனா அவ்வண்ணம் பல நூல்களில் எழுதிக்கொண்டிருக்கிறது. அதாவது புத்தர் பிறந்தது நேப்பாள எல்லையில்,நேப்பாளம் சீனாவின் நிலப்பகுதி, ஆகவே புத்தர் சீனரே என அவர்கள் வாதிடுகிறார்கள். உண்மையில் சென்ற பத்தாண்டுகளாக சீனா அந்நம்பிக்கையை கீழைநாடுகள் பலவற்றில் அழுத்தமாக நிறுவியும்விட்டது.

ஜப்பானுக்கு பௌத்தம் தமிழ்நாட்டில் காஞ்சியிலிருந்து கிளம்பிய போதிதர்மர் என்னும் பிக்ஷு வழியாகச் சென்றது என்பது தொன்மம். போதிதர்மர் காலத்தில் – கிபி ஆறாம் நூற்றாண்டு வாக்கில் – காஞ்சி இந்தியாவின் மாபெரும் பௌத்த மையங்களில் ஒன்று. திக்நாகர், தர்மகீர்த்தி, தர்மபாலர் என தொடர்ச்சியாக பௌத்த மெய்ஞானிகள் அங்கே திகழ்ந்தனர். விக்ஞானவாதபௌத்தம் அங்கே தழைத்தது. ஜப்பானிய ஜென் பௌத்த மரபின் தத்துவார்த்தமான வேர் என்பது விக்ஞானவாதமே.

விக்ஞானவாதத்தை தொகையறிவு வாதம் என தமிழாக்கம் செய்யலாம். விக்ஞானம் என்றால் அறிவியல் அல்ல. புவியிலுள்ள அத்தனை அறிவுகளையும் ஒன்றாக கருதினால் வரும் தொகையறிவு. ஆலய விக்ஞானம் என்றால் புவியிலும் புடவியிலும் உள்ள அனைத்து தன்னறிவுகளும் ஒன்றாகச் சேர்ந்த ஒற்றை பேரறிவு. தனியுடல் சார்ந்தது அல்ல. தோன்றாமல் அழியாமல் என்றும் இருப்பது

கியோமோரி

படகுத்துறையில் மறுகரை செல்வதற்காக எங்களுடன் நின்றிருந்த ஒரு பெண்மணி செந்திலுடன் பேசினார். மறுபக்கம் கடைவைத்திருக்கிறார். உற்சாகமாக அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். செந்தில் நன்றாக ஜப்பானிய மொழி பேசுபவர். ஜப்பானிய மொழி ஒருவகையில் கரடுமுரடானது, வல்லின ஒலிகள் மிகுந்தது என்னும் செவிப்பதிவு எனக்குண்டு. ஆனால் சிரிக்கும்பெண் பேசுகையில் அது மழலையாக ஆகி செவியை இனிக்கச்செய்தது.

மியாஜிமா கோயிலுக்கு படகில் சென்றோம். படகில் கூட்டமே இல்லை. பிரம்மபுத்திராவில் நாற்பது கார்களும் நாநூறுபேரும் இதேபோல ஒரு படகில் சென்றதை நினைவுகூர்ந்தேன். படகின் ஓரமாக அடுக்குமாடிக் கட்டிடங்கள். ஜப்பானியருக்கும் கடலோர வீடுகளில் ஈடுபாடு மிகுதி. பெரும்பாலானவை விருந்தினர் மாளிகைகளாக இருக்கலாம். உப்பரிகைகளில் சிறிய நாற்காலிகளும் மேஜைகளும் போடப்பட்டிருந்தன. பல உப்பரிகைகளில் சிறிய தொங்கும்தோட்டம் இருந்த்து. அந்த கட்டிடங்கள் நடுவே பறந்து சென்றுகொண்டிருப்பதுபோலத் தோன்றியது

கூகாய்

மியாஜிமா தீவில்தான் மீசென் மலை அமைந்திருக்க்கிறது. இந்த மலை ஜப்பானின் உயரமான மலைகளில் ஒன்று. சூழ்ந்திருக்கும் காடு மிக அடர்த்தியானது. ஒருகாலத்தில் பகலிலும் கண் தெரியாத இருட்டு இருக்கும். ஆகவே இது மர்மமான ஒன்றாக, தெய்வங்களுக்குரியதாக கருதப்பட்டது. ஜப்பானிய பழங்குடி வழிபாடுகளில் இருந்து உருவான ஷிண்டோ மதத்தின் புனிதத்தலமாக நாளடைவில் உருவாகியது

 

மியாஜிமா தீவுக்கு பழைய பெயர் இட்சுகுஷிமா [Itsukushima ] மியாஜிமா என்றால் ஆலயத்தீவு என்று பொருள். இத்தீவிலுள்ள இட்சுகுஷிமா ஆலயம் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. பல சிறு ஆலயங்கள் அமைந்த ஒரு வழிபாட்டிடம் இது. கதைகளின்படி கிபி ஐந்தாம் நூற்றாண்டில் [554 –628] ஜப்பானை ஆண்ட சக்கரவர்த்தினி சாய்கி குரமட்டோவால் [Saeki Kuramoto] இது கட்டப்பட்டது. பின்னர் பலமுறை விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்றிருக்கும் வடிவில் கிபி 1555 ல் டைய்ரா நோ க்யோமோரியால் [Taira no Kiyomori] யால் அமைக்கப்பட்டது.

போதிதர்மர்

 

கிபி 806 ல் குகாய் அல்லது கோபோடாய்ஷி [Kukai ,Kobodaishi ] என்னும் புகழ்மிக்க பௌத்த துறவி மியாஜிமாவுக்கு வந்ததாகவும் அங்கே ஆவிகளின் இருப்பை உணர்ந்தமையால் அதை ஒரு புனிததலமாக அறிவித்ததாகவும் கதைகள் உண்டு. ஏற்கனவே சாய்கி அமைத்த ஆலயத்தை ஒட்டி ஹோண்டோ எனப்படும் ஒரு தியான அறையை அவர் அமைத்தார். அங்கே அவர் குமோன்ஜி [Gumonji ] எனப்படும் நூறுநாள் அனல் தியானம் ஒன்றை மேற்கொண்டார். அன்று மூட்டப்பட்ட அனல் இன்றும் அழியாச்சுடராக பேணப்படுகிறது.

மிதமான குளிருடன் பளிச்சிடும் வெயில் நிறைந்து நின்றிருந்த மியாஜிமா தீவுக்குச் சென்றோம். அங்கும் மான்கள் நிறைந்திருந்தன. ஆனால் அருகிருந்த மலையில் இருந்து இறங்கி வந்தவை. மேயும்கலை அறிந்தவை. ஆகவே பொதுவாக பயணிகளைப் பொருட்படுத்தவில்லை. செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை. வெயில் காய்ந்து கண்சொக்கி கிடந்தன.

க்யோமோரி பதினாறாம் நூற்றாண்டில் இந்த பகுதியில் கடலாதிக்கம் செலுத்திவந்த குறுநிலமன்னர். அவர் தன்னுடைய ஆதிக்கத்தையும் மாண்பையும் நிலைநிறுத்தும்பொருட்டு இதைக் கட்டினார். கியோமோரி முறையான அரசக்குருதி கொண்டவர் அல்ல. அவர் ஒரு கடல்போராளி மட்டுமே. இந்த ஆலயத்தை கட்டியதனூடாக அவருடைய குடி அரசகுடி என ஏற்கப்பட்டது. ஒரு முதிய பிக்ஷு இந்த ஆலயத்தை அவர் மீட்டுக் கட்டினால் அவருக்கு முழு ஜப்பான் மீதும் ஆதிக்கம் உருவாகும் என்று கூறியதாகவும் ஆகவேதான் அவர் இதைக் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியாவிலுள்ள பெரும்பாலான சமணத்தலங்களில் இக்கதை உண்டு. சமணத்திற்கு பல காலகட்டங்கள் உண்டு. முந்தைய காலகட்டத்தில் இருந்து அழிந்துவிட்ட ஆலயத்தை இன்னொருவர் மீட்டு கட்டுவதற்கான ஆணையை சமணத்துறவிகள் அளிப்பார்கள். உதாரணமாக தர்மஸ்தலாவின் ஆலயம் அவ்வாறு மீட்டுக் கட்டப்பட்டதே.

இந்த ஆலயம் மிகாரோ குடியைச்சேர்ந்த மூன்று இளவரசிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூன்று பெண் தெய்வங்கள் [sanjoshin] என அறியப்படுகிறார்கள். அவர்கள் கடல் அலைகளையும் புயல்களையும் கட்டுப்படுத்துவதாக நம்பிக்கை. போதிசத்வ அவலோகிதேஸ்வரர் சீன மொழியில் குவான்யின் எனப்படுகிறார். ஜப்பானின மொழியில் கன்னோன். இந்த மூன்று தேவியரும் போதிசத்வ அவலோகிதேஸ்வரின் பெண்வடிவங்கள் என்று நம்பப்படுகிறது.

ஆகவே இந்தத்தீவே போதிசத்வர்களுக்குரிய மண் என்பறு ஜப்பானிய பௌத்தர்களின் நம்பிக்கை. அதாவது ஷிண்டோ மதத்தின் தெய்வங்கள் பௌத்த மதத்தால் உள்ளிழுக்கப்பட்டு போதிசத்வர்களாக ஆக்கப்பட்டார்கள். ஹெய்கெ நோக்யோ [Heike Nōkyō] எனப்படும் புனிதசுவடி இந்த ஆலயத்தில் வழிபாட்டுக்குரிய்தாக உள்ளது. 32 சுருளேடுகள் கொண்டது இது. தர்மபுண்டரீக சூத்ரம்,அமிர்த சூத்ரம், பிரக்ஞா பாரமிதா அல்லது இதயசூத்ரம் ஆகிய மூன்று சூத்ரங்கள்  கியோமோரி மற்றும் அவருடைய மைந்தர்களால் பிரதி எடுக்கப்பட்டு பொன்னாலும் வெள்ளியாலும் முத்துச் சிப்பியாலும் அணிசெய்யப்பட்டு வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.

முற்காலத்தில் ஷிண்டோ நம்பிக்கையின்படி இது பிறப்பும் இறப்பும் அற்ற நிலம். ஆகவே இங்கே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. 1878 வரை இங்கே இறப்பும் பிறப்பும் நிகழலாகாது என்ற ஆணை இருந்தது. இன்றும் கருவுற்ற பெண்கள் இத்தீவில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. இறந்தவர்களை புதைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. நோயுற்றவர்கள் உடனே தீவிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படுவார்கள்.

பின்னணியில் இருக்கும் மிசன் [Mount Misen] மலை மேல் டொயோட்டோமி ஹிடெயோஷி என்பவரால் இன்னொரு ஆலயம் கட்டப்பட்டது. மலைக்குமேல் ஏறிச்சென்று அங்குள்ள ஆல்யங்களில் வழிபடுவதும் செரிபிளாஸம் பூக்கும் காலங்களில் அங்கே மலைநடை செல்வதும் ஜப்பானியரின் வழக்கம். இலையுதிர்காலத்தில் மொத்த மலையே சிவப்பாக மாறிவிடும் என்று செந்தில் சொன்னார். கயிற்று வண்டிகளில் மேலே செல்லமுடியும்.

காவல் சிம்மம் சீனா

இட்சுகுஷிமா ஆலயத்தின் மையக் கவற்சி என்பது கடலுக்குள் நின்றிருக்கும் தோரணவாயில்.ஜப்பானிய ஆலயங்கள் மற்றும் மாளிகைகளின் முகப்பில் உள்ளதுபோன்ற தோரணவாயில்தான் இது. இதை இங்கே தோரி என்கிறார்கள். நாம் தோரணமே தோரி ஆகியது என்று ஓங்கி சொல்லிவிடமுடியும்தான் – நமக்குள்ளேதான். சாம்பிராணி மரத்தாலானது இது. ஆகவே கடலின் உப்பால் மட்குவதில்லை.

பழங்காலத்தில் இவ்வண்ணம் மாபெரும் தோரணவாயில்களைக் கடலோரம் அமைக்கும் வழக்கம் இருந்தது. அது ஓர் அடையாளம். துவாரகை, கபாடபுரம் போன்ற பெயர்கள் அவ்வாறு வந்தவையாக இருக்கலாம்.ஐம்பதடி உயரம்கொண்டது இந்தத் தோரண வாயில். படகுகள் அதனூடாக உள்ளே வந்திருக்கலாம். இன்று மிகத்தள்ளி படகுகள் பயணிகளை கொண்டு இறக்கும் துறைமேடைகள் உள்ளன. அங்கிருந்து நடந்து வருகையில் கடலுக்குள் இருந்து எழுதது போல இது நின்றிருக்கிறது. பொன்னாலான ஒரு நகையை கடல் அணிந்திருப்பதுபோல.

காவல் நாய் ஜப்பான்

தோரணவாயிலும் சரி ஆலயமும் சரி செந்நிறமானவை. ஆனால் வெயிலில் பொன்னொளி கொள்கின்றன. ஜப்பானின் தொன்மையான கட்டிடங்கள் அனைத்தும் நாங்கள் செல்வதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் கட்டி முடிக்கப்பட்டவை போல பழுதறச் செம்மை செய்யப்பட்டிருக்கும். இட்சுகுஷிமா ஆலயம் நாங்கள் சென்றபோதும் செம்மைப்பணி முடியவில்லை. சில இடங்கள் மூடிவைக்கப்பட்டு வேலை நடந்துகொண்டிருந்தது.

இட்சுகுஷிமா ஆலயத்தொகையில் மையமானது நான்கு அடுக்குகள் கொண்ட புத்தர் ஆலயம். இது கடலோரமாகக் கட்டப்பட்டுள்ளது. கடலோரச்சேற்றில் பாறைகளை நிறுத்தி அதன்மேல் வலுவான மரத்தடிகளை நட்டு மேலே எழுப்ப்பட்டது. ஒரு கப்பல்மேல் செல்லும் உணர்வு உருவாகும். காலடிக்கு கீழே கடல். இந்தவகையான கட்டிடக்கலைக்கு ஷிண்டன் சுகுரி [Shinden zukuri] பாணி என்று பெயர். ஒரு கப்பலைத்தான் கட்டிடமாக உருவகிக்கிறார்கள்.

இக்கட்டிடத்தின் சிறப்புக்கூறு கட்டிடத்தின் உள்ளே அங்கணம் போன்ற அமைப்புகளில் கடல் உள்ளே  இருக்கிறது என்பதே. ஜப்பானில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் உருவான கட்டிடக்கலையில் அக்கட்டிடம் அமைந்துள்ள இடத்தின் இயற்கையை கட்டிடத்திற்குள் விட்டு கட்டப்படும் பாணி முக்கியமான ஒன்று. காடு என்றால் கட்டிடத்திற்குள்ளேயே காட்டின் சிறுபகுதி இருக்கும். மலைப்பகுதியில் பாறைகள் உள்ளே விடப்பட்டிருக்கும். இங்கே கடல்.

கடலின் ஒளியும் காற்றும் ஆலயம் முழுக்க நிறைந்திருந்தன. தூண்களின்மேல் அமைந்த இடைநாழிகளினூடாக அந்த ஆலயங்களுக்குச் செல்லலாம். அரையிருள் நிறைந்த கருவறைகளுக்குள் பொன்மின்னும் புத்தர் சிலைகள். பெண் போதிசத்வர்கள். அந்தப்பொழுதில் வழிபாடு ஏதுமில்லை. திபெத்திய பௌத்த ஆலயங்களில் இருப்பதுபோன்ற தியான கூடமாகிய முகப்பும் ஓங்கார ஒலி எழுப்பும் மணியும் இருந்தன.

ஆலயவாயில்களில் சீனபாணி சிம்மங்களைக் கண்டேன். சீனச்சிம்மங்கள் சிம்மங்களின் அலங்காரத் தோற்றங்கள். சிம்மங்களை தழல்வடிவுடன் கலந்து உருவாக்கப்பட்டவை. பிடரிமயிர் வளைந்து வளைந்து பரவியிருக்க அவற்றின் உடலே தழல்நெளிவு கொண்டிருக்கும். வாயிற்காவல் நின்றிருக்கும் சீனச்சிம்மங்களில் ஆண் ஒர் உருளையை காலால் மிதித்திருக்கும். அல்லது கையில் வைத்திருக்கும். அது அதிகாரத்தின் அடையாளம். பெண்சிம்மம் குருளையை அருகில் வைத்திருக்கும். அல்லது கோப்பை ஒன்றை கீழே வைத்திருக்கும்.

ஆனால் அருகே சென்றபோது தெரிந்தது, அவை சிம்மங்கள் அல்ல, நாய்கள் என. ஆனால் நாயின் எந்தக்கூறும் இல்லை. நாய்வடிவிலான காவல்தெய்வம் என எழுதி வைத்திருந்தனர். சீனச் சிம்மத்தை அப்படியே நாயாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். நாயை நாம் ஓநாயிலிருந்து எடுத்து பலநூற்றாண்டுகளாகச் சிம்மமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். அல்லது கைக்கடக்கமான, சொன்னபேச்சு கேட்கும் ஒரு சிம்மத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்

இப்பகுதி கடல்வேலியேற்றம் வேலியிறக்கம் ஆகியவற்றுக்குப் புகழ்பெற்றது. வேலியேற்றத்தின்போது கடல்நீர் ஆலயத்தின் விளிம்புவரை வரும். வேலியிறக்கத்தின்போது மிக அப்பால் விலகிச்சென்று ஒரு சேற்றுமணல் வெளி வெளியே எழும். நாங்கள் சென்றபோது நீர் மேலேறத்தொடங்கியிருந்தது இரவில் வேலியேற்றம் முழுமையாகும் போலும்

சேற்றுப்பரப்பில் பல்லாயிரம் குமிழிகள். சுருசுரு ஒலியுடன் அவை வெடித்துக்கொண்டிருந்தன. பின்னர் கண்டேன், அவை நண்டுக்குஞ்சுகள். மென்மையான சதுப்பின் துளைகளில் இருந்து எழுந்து பக்கவாட்டில் ஓடி மீண்டும் துளைகளுக்குள் புகுந்துகொண்டன. மீண்டும் எழுந்து மீண்டும் உள்ளே புகுந்தன. மண்ணுக்கு அடியிலும் மேலுமாக ஒரு வாழ்க்கை. மேலே இருக்கும் உலகம்தான் அவை உணரும் சொற்கமாக இருக்கவேண்டும். மேலே எழுவதுதான் தியானம்.

நாங்கள் திரும்பும்போது ஒரு கடையில் இருந்து பெண்மணி ஒருத்தி உற்சாகமாக கூச்சலிட்டு கையை அசைத்தாள். ஏதோ வாங்குவதற்காக அழைக்கிறாள் என நினைத்தோம். அதன் பின்னரே முன்னர் படகில் கண்ட பெண்மணி எனத்தெரிந்தது. வெறும் வாழ்த்துதான். அந்த பாவனைகளும் தோரணைகளும் அற்ற சிரிப்பை நான் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ கண்டதில்லை. ஜப்பானில் நான் அடைந்த முக்கியமான தன்னுணர்வு அது, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நான் அந்நியனாக உணர்ந்தேன். அங்குள்ளோரின் அத்தனை நட்புக்கும் நயத்தகு பாவனைகளுக்கும் அடியில் நீ வேறு என விலக்கும் ஒன்று இருந்தது.ஜப்பானில் அவ்வாறு ஒரு தருணத்திலும் தோன்றவில்லை.

முந்தைய கட்டுரைஎழுத்தாளனுக்கு வாசகனே உறவு- லக்ஷ்மி மணிவண்ணன்
அடுத்த கட்டுரைசூரியனின் நிலம் நோக்கி…