இந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்
ஸௌரத்தின் மிச்சங்கள்
ரதம் – சிறுகதை
நண்பர்கள் சிலர் புவனேஸ்வரில் உள்ளனர். நண்பர் சங்கர்குட்டி, அய்யம்பெருமாள். அவர்கள் புவனேஸ்வருக்கு அழைத்துக்கொண்டே இருந்தனர். ஒரு மாதம்முன்னர் தற்செயலாகப் பார்த்தபோதுதான் ஜூலை 4 அன்று பூரி தேரோட்டம் என்று தெரியவந்தது. நானும் அருண்மொழியும் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தோம். சைதன்யா வருவதாகச் சொன்னாள். ஆகவே மூவரும் கிளம்பி பூரி செல்கிறோம். கொனார்க், புவனேஸ்வர் ஆகிய ஊர்களையும் பார்த்துவிட்டு திரும்பி வருவதாக எண்ணம்.
நான் புவனேஸ்வருக்கு 1986ல் முதல்முறையாக வந்தேன். அன்றைக்கு கொனார்க் யுனெஸ்கோவால் பழுதுபார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அருகே இன்னொரு ஆலயத்தை கற்குவியல்களாக எண்களிட்டு வைத்திருந்தனர். பின்னர் இருமுறை சென்றிருக்கிறேன். இறுதியாக 2010 ல் நண்பர்களுடன். அன்று பூரி கடற்கரையில் தங்கினோம்.
முதல்முறை சென்றபோது அருகே கடல் இருக்கிறது என்னும் பிரமையிலிருந்து என்னால் விடுபடவே இயலவில்லை. கொனார்க் உண்மையில் மாமல்லபுரம் போல கடலோரம்தான் இருந்திருக்கிறது. கடல் விலகிச்சென்றுவிட்டது. தமிழர்கள் கொனார்க்கை மாமல்லபுரத்துடன் ஒப்பிடாமலிருக்க முடியாது. முதல்முறை கொனார்க்கைப் பார்த்தபின் டெல்லி சென்றேன். டாக்டர் சக்திவேல் அவர்களுடன் தங்கியிருந்தேன். அன்று ஒரு கனவு வந்தது. அக்கனவை அப்படியே ரதம் என்றபேரில் பின்னர் கதையாக எழுதியிருக்கிறேன்.
மீண்டும் ஒரிஸா. மீண்டும் சூரியனின் நிலத்திற்கு….