இன்றைய காந்திகளைப்பற்றி…

இன்றைய காந்திகள்

இலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்! – பாலா

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்– பாலா

ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் –பாலா

சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா

ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! –பாலா

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா

லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்– பாலா

போற்றப்படாத இதிகாசம் –பாலா

ஜான்ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!

அன்புள்ள ஜெ

இன்றைய காந்திகள் என்றபேரில் பாலா எழுதிய கட்டுரைகள் நூலாக வரவிருக்கின்றன என நினைக்கிறேன். சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகள் இவை. இன்றுவரை இவர்களைப்பற்றி இவ்வளவு விரிவாக அக்கறையாக எவரும் தமிழில் பதிவுசெய்யவில்லை. அவ்வப்போது உதிரிச்செய்திகளாக இவர்களில் சிலரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய இவர்களைப்பற்றி இப்படி ஒரு சித்திரம் என்னிடம் இல்லை

இலா பட், பங்கர் ராய் பற்றியெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை. இவர்கள் அனைவரும் சாதனையாளர்கள். இவர்களின் சாதனை என்ன என்று பார்த்தால் மிகச்சின்ன அளவில் தொடங்கி வளர்ந்ததுதான். அப்படித்தான் மரங்கள் வளர்கின்றன. காடு வளர்கிறது. small units , total vision, long term dedication  என்று இவர்களின் பணிமுறையைச் சொல்லலாம் என நினைக்கிறேன்

இந்தப்பட்டியலில் நம்மூர் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களையும் சேர்த்துக்கொண்டிருக்கலாம். நமக்கும் ஒரு காந்தி இருக்கிறார் என நாம் பெருமிதம்கொள்ள முடியும்

சரவணன் குமாரவேல்

***

அன்புள்ள ஜெ

இன்றைய காந்திகள் கட்டுரை தொகுதியை இரண்டுநாட்கள் எடுத்து வாசித்து முடித்தேன். நீங்கள் எழுதிய பல கட்டுரை நூல்களின் தொடர்ச்சி போல அமைந்திருந்தது. ’பொன்னிறப்பாதை’ ’தன்மீட்சி’ ‘இன்றையகாந்தி’ ‘உரையாடும் காந்தி’ ஆகிய நூல்களின் வரிசையில் இதையும் வைக்கலாம். வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை உருவாக்குவது. எதிர்காலம் பற்றிய கனவை உருவாக்குவது. நாம் வாழும் வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்கவேண்டும், வெறும் நுகர்வோராக வாழ்ந்து மடியக்கூடாது என்னும் உறுதியை உருவாக்குவது இந்நூல்

பாலா அவர்களுக்கு நன்றி

டி. ஜெயச்சந்திரன்

***

அன்புள்ள ஜெ

இன்றைய காந்திகள் கட்டுரைகள் ஒவ்வொன்றையும் நகலெடுத்து வைத்து படித்தேன். என் பள்ளியில் இக்கட்டுரைகளை இரண்டு பக்க அளவில் சுருக்கி மாணவர்களுக்கு அளித்தேன். தமிழில் இத்தகைய எழுத்துக்கள்தான் இன்று இல்லை. இவையே இன்றைக்குத் தேவையானவை. ஊழல் சீரழிவு என்று நாள்தோறும் செய்திகள் வருகின்றன. ஒன்றுமே செய்யமுடியாது என்று நாம் அறிகிறோம். நம்பிக்கையில்லாத சூழலில் இத்தகைய நம்பிக்கையூட்டும் மனிதர்களும் அவர்களின் சாதனைகளும் பெருமிதமளிக்கின்றன

இவர்கள் இன்றைய காந்திகள். ஆனால் இதே போல பலநூறுபேர் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். அவர்களால்தான் நம் ஜனநாயகம் வாழ்கிறது. அவர்கள் அனைவருக்கும் வணக்கம். அவர்களை அறிமுகம் செய்த பாலா அவர்களுக்கு நன்றி

பாலகிருஷ்ணன் எம்

***

அன்புள்ள ஜெ

காந்தி இன்றைக்கு அவதூறு செய்யப்பட்டு சிறுமைப்படுத்தபட்டு நின்றிருக்கிறார். ஏனென்றால் இன்றைக்கு எவருக்கும் லட்சியவாதம் என்பதிலே நம்பிக்கை கிடையாது. இன்றையசூழலில் இதுதான் காந்தி, இவர்கள்தான் காந்தியின் இன்றைய வடிவங்கள், இவர்களுக்கு சமானமாக நீங்கள் ஒரு நாலைந்து பெயர்களைச் சொல்லுங்கள் பார்ப்போம் என்ரு பாலா சுட்டிக்காட்டியிருக்கிறார்

காந்திக்கு உலகளாவிய வேர்களும் விழுதுகளும் உண்டு. இவான் இல்யிச் முதல் வாங்காரி மாதாய் வரை வெளிநாட்டு காந்தியர்களைப் பற்றி பாலா எழுதவேண்டும்

எஸ்.மாதவன்

***

இன்றைய காந்திகள் -கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18
அடுத்த கட்டுரைவாசிப்புச் சவால் – கடிதங்கள்