நீர் என்ன செய்தீர்

சத்திமுத்தப் புலவர்

ஜெயமோகன்,

சமீபத்தில் நீர் எழுதிய சம்பவத்தை படித்தேன் அறம் என்ற தலைப்பில். (கதை என்ற வார்த்தையை பிரயோகிக்க மனம் வர வில்லை )  படித்து முடிததவுடன் கண்ணை கட்டி விட்டார் போல் இருந்து. அவ்வளவு சோக ரசம். அந்த முதிர்ந்த எழுத்தாளர் பட்டினியும் பசியுமாக காயக் கிலேசம் செய்து நாற்பது வயதில் நிச்சயம் ஒரு அறுபது வயது வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டும்.

நீர் எழுதிய வரிகளில் பறங்கிக் கொடியின் பற்றுச் சுருளைப் போல் வறுமையின் சுருள்கள் அந்த முதியவரின் வாழ்வில் சுருட்டிக் கொண்டது என்பதை நன்றாகவே உணர முடிந்தது.என் வயிற்றில் வேதனைப் பந்து  சுற்றி கொண்டது  என்னமோ நிஜம்.

ஆனால் என் மனதில் பட்டதை நான் உம்மிடம்  கேட்டே ஆக வேண்டும். மற்றவர் போல் ஜெயமோகன்  பூசி முழுகும் சாதி இல்லை… ரகம் இல்லை என்று நம்புகிறேன்.

அப்படி ஒருவரை வறுமையில் பார்த்து விட்டு வந்தீரே… நீர் என்ன செய்தீர் அந்த முதியவரின் நலனுக்கு.? அவர் இறக்கும் வரையில் உம்மால் ஆன பொருள் உதவி ஏதேனும் செய்தீரா ?

உம் கட்டுரையை வாசித்த போது இன்னமும் அவர் வறுமையின் பிடியில் தான் தொங்கிக் கொண்டிருந்தார்  என்பது புலனாகிறது. ( தகர சேர், தெரு முனையில் வாங்கி வந்த காபி, இத்யாதி…இத்யாதி…)

நிச்சயம் இந்த சம்பவத்தை எழுதி நீர் சில ஆயிரங்களை  பார்த்து இருப்பீர். நீங்கள் அவரை சந்தித்து வந்த சமயத்தில் ஏதாவது அவருக்கு பணம் கொடுத்து இருந்தால் என் வந்தனம் உமக்கு ….

அப்படி இல்லையென்றால் அவரிடம் பணம் தரமால் ஏமாற்றிய செட்டிக்கும் உமக்கும்  என்ன அய்யா வித்தியாசம்?

அன்பன்

கள்ளக்குறிச்சி சுரேஷ்.

***

அன்புள்ள கள்ளக்குறிச்சி சுரேஷ்

அரிய உளநிலையில் இருக்கிறீர்கள். நானும் இதே உளநிலையில் இருந்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது. அப்போது சத்திமுத்தப்புலவர் என்பவர் எழுதிய ஒரு கவிதையை படித்தேன்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

“எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே” [1]

என்னை அந்தக் கவிதை கொந்தளிக்க வைத்தது. ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவி பேழைக்குள் இருக்கும் பாம்புபோல மூச்சுவிட்டுக்கொண்டிருந்த கவிஞனை எண்ணி எண்ணி ஏங்கினேன். அவருக்கு உதவிசெய்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன். ஒருவாரம் முயற்சி செய்தபின்னர்தான் அவர் இறந்துபோய் இருநூறாண்டுகள் ஆகிவிட்டன என்று அறிந்தேன். அன்றைக்கு நான் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. நான் அவருக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த இரண்டரை ரூபாயை என்ன செய்வது என அறியாமல் குழம்பி கடைசியில் நானும் நண்பன் செல்வராஜும்  தோசை ரசவடை சாப்பிட்டோம். அந்நினைவுகளை எழுப்பியது உங்கள் கடிதம்

ஜெ

***

முந்தைய கட்டுரைஸ்ரீபதி பத்மநாபா – கடிதம்
அடுத்த கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -12