கவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும்

ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது

உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்

ச.துரை பேட்டி -அந்திமழை

ச.துரை – கவிதை

ச.துரை, ஐந்து கவிதைகள்

மூவகைத் துயர். ச.துரை கவிதைகள் மூன்று

ச.துரை -மேலும் நான்கு கவிதைகள்

அன்பு ஜெயமோகன்,

கவிஞர் ச.துரையை உங்கள் தளம் வழியாகவே அடைந்தேன். கவிதையெனும் சிறகின் புதிய வண்ணத்தை அல்லது கவிதைவனத்தின் கேட்டிராத பறவைக்குரலை துரை நமக்கு வழங்கி இருப்பதாக வியந்து இருந்தீர்கள்.

துரையின் கவிதைகளைக் கட்டுரைகளில் வாசித்தபோது மிகச் சாதாரணமாகவே அவற்றைக் கடந்தேன். ஒருவேளை, கவிதை வாசிப்பில் அதிகம் ஈடுபாடும், தொடர்ச்சியும் இல்லாதது காரணமாக இருக்கலாம். ஆனந்த விகடனில் வெளிவரும் சொல்வனம் கவிதைகளையே கொஞ்சம் தயக்கத்தோடுதான் வாசிப்பேன்; பல நேரங்களில் மேலோட்டமாக அப்படியே கடந்து விடுவேன்.

சமீபமாய், என்னைத் திகைக்கச் செய்த கவிதையாக துரையின் ஆப்பிள்மூளை கவிதை இருக்கிறது. அக்கவிதையை இருவர் சுட்டிக் காட்டுகின்றனர். ஒருவர், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்(சில மாதங்களுக்கு முன் மத்தி நூல் வெளியீட்டு விழாவில் :https://www.youtube.com/watch?v=l3RaRH4oZQ4). மற்றவர், அருணாச்சல்ம் மகாராஜன்(குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வில் : https://www.youtube.com/watch?v=MhlS2Wo3x7E).

ஆப்பிள்மூளை கவிதையைக் கொண்டு இளங்கோ கிருஷ்ணன் கவிதையின் நவீன பரிணாமத்தைத் தொட்டுப் பேசினார். அதாவது, இரண்டாயிரத்துக்கு முற்பட்ட நவீனக் கவிஞர்கள் ரூபத்தில் இருந்து அரூபத்துக்கு நகர்வதைக் களமாகக் கொண்டிருந்தனர் என்றும், பிறகு வந்த இளங்கவிஞர்கள் அரூபத்தில் இருந்து ரூபத்துக்கு நகர்வதான பெயர்ச்சி இருப்பதாகவும் குறிப்பிட்டார். சில கவிதைகளைக் கொண்டு அதை விளக்கவும் செய்தார். ஏனோ, என்னை அவர் ஈர்க்கவில்லை. எனினும், அவரின் உரை அக்கவிதை குறித்த குறுகுறுப்பை எனக்கு அதிகமாக்கியது.

அதே ஆப்பிள்மூளை கவிதை தொடர்பாய் அருணாச்சலம் மகாராஜன் சில நிமிடங்கள் குமரகுருபரன் நிகழ்வில் பேசினார். அப்பேச்சில் ஆப்பிள் எனும் பதத்தின் மாறுபட்ட அர்த்தங்களை வாசிப்பின் வழியாக விரித்துச் செல்லும் மாயத்தை அவர் நிகழ்த்திக் காட்டினார். அம்மாயத்தின் விசித்திரக் கவர்ச்சியில் என் மூளை திடுக்கிட்டதையும் உணர முடிந்தது. சிந்தனாவாதத்துக்கான குறியீடாக அவர் ஆப்பிளையும், பிழைப்புவாதத்துக்கான குறியீடாக அவர் மூளையையும் சுட்டிய போது.. அக்கவிதை என் மூளைக்குள் ஒரு ஆப்பிளாக அமர்ந்தது. நான் ஆப்பிளுக்குள் நிசப்தமாய் இருக்கும் மூளையைப் போல இருந்தேன்.

தற்செயலாகத்தான் மூளைக்குப் பதிலாக ஆப்பிளை தலையில் வைத்து தைத்ததாகச் சொல்கிறார் துரை; அதை வெகுசிறிய மாற்றம் என்றே குறிப்பிடவும் செய்கிறார். பெரும்பாய்ச்சலாய்ப் படர்ந்து செழித்திருக்கும் அறிவை(மூளையை) அகற்றுவது என்பது சாமன்ய காரியமா? தனது கவிதையால் அல்லது படைப்பால்(ஆப்பிளால்) தற்செயலாக அதைச் செய்து விட்டதாகச் சொல்கிறார். இங்குதான் படைப்பு மனதின் அசாத்தியத் துணிச்சல் துலக்கம் பெறுகிறது.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா எனும் பாடல் பாரதியின் ஆப்பிளாகவும், நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்ற வரிகள் அவரின் மூளையாகவும் தொனித்த காட்சி ஒன்றும் எனக்குள் மிளிர்ந்து நகர்ந்தது.

ஆப்பிளைக் குழந்தைமை என்றும், மூளையை வயோதிகம் என்றும் பொருத்திப் பார்க்கும் வாசிப்புச் சாத்தியமும் எனக்கு நேர்ந்தது. அதற்கு கூடைக்குள் வைக்கப்படுகிற ஆப்பிளைப் போலத்தான் உன்னைத் தொட்டிலுக்குள் வைப்பேன் மகளே எனும் துரையின் பிறிதொரு கவிதையே தூண்டியது.

ஒரு கவிதை அல்லது இலக்கியப்படைப்பு என்பது திட்டவட்டமான அர்த்தத்தைக் கொண்டதல்ல. மாறாக, வாசிப்பவர்களின் சிந்தனையில் பலவகைப்பட்ட அர்த்தப்புலப்பாடுகளைச் சாத்தியப்படுத்திக் கொண்டே இருப்பது. கால வெளியின் புதிர் இயக்கத்தில் ஒரு படைப்பு ஒருபோதும் படைப்பவனைக் கோருவதில்லை; வாசிப்பவனையே வேண்டி நிற்கிறது.

கவிஞர் துரைக்கு ஆப்பிள் முத்தங்கள்.

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

***

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -9