டிராகனின் வருகை

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -2

இனிய ஜெயம்

ஓமக்குச்சி பெயர்க் காரணம் அறிந்து மகிழ்ந்தேன். ஓமக்குச்சி உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார் என்பதை அறிந்தது கொள்ள இத்தனை ஆண்டு எனக்கு தேவைப்பட்டு இருக்கிறது.  எனது பத்துப் பன்னிரண்டு வயதில் ஓமக்குச்சி நரசிம்மன், லூஸ் மோகன் இருவரையும் சந்தித்திருக்கிறேன்.

எங்கள் பொடிக்கடைக்கு மேலே அப்போது ஒரு லாட்ஜ் உண்டு. அருகே சைவ ஓட்டல், எதிரே அசைவ ஓட்டல், பக்கத்தில் வாடகை வாகன ஸ்டாண்டு, பஸ் ஸ்டாண்டு எல்லாம் உள்ள இடம் என்பதால், அந்தப்பக்கம் சூட்டிங் நடக்கும்போது இரண்டாம் வரிசை நடிகர்களுக்கு,சம்பந்தப்பட்ட பட நிறுவனம் இந்த லாட்ஜில்  அறை போட்டுத்தரும்.

அப்படி படப் பிடிப்புக்காக வந்து தங்கி இருந்த நரசிம்மன் அவர்கள் கீழே ஓட்டலுக்கு வரும்போது, அவரை சூழ்ந்த சிலரில் நானும் இருந்தேன், படு பொடியனாக,டார்லிங் பட சின்னவயசு பாக்யராஜ் போல இருப்பேன். எக்கி சட்டைப் பை அருகே அவரை தட்டி கூப்பிட்டு, ”அங்கிள் உங்களை ஏன் ஓமக்குச்சி அப்டின்னு கூப்பிடறாங்க ” என்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன்.

சுற்றி இருப்போர் சிரிக்க, நரசிம்மன் புன்னகையோடு பதில் சொன்னார்,”பெரிய கராத்தே மாஸ்டரோட பேரு. என்ன மாறியே இருப்பான்”. பக்கத்தில் நின்றிருந்த மோகன் ”அக்காங்,… பெரிய ஆளு கண்ணு, புர்சலியவே, அப்டே அல்லாக்கா தூஊக்கி… மல்லாக்கா போட்ட்டுவாங் …ஆங் ” என்றார்.

இரவு அப்பா வசம் கதை கேட்கையில், அப்பா ஓமக்குச்சி ப்ருஸ் லீ  ய விடவா நல்லா சண்ட போடுவாரு என ஏக்கத்தோடு கேட்டேன். அப்போதுதான் ப்ரூஸ்லி நான் பிறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பே செத்துப் போனார் எனும் அழ வைக்கும் தகவலை அறிந்தேன்.  பேச்சு தொடர, அப்பா என்டர் தி ட்ராகன் புதுச்சேரி நகரில் ரிலீஸ் ஆகும் போதான கதைகளை சொன்னார். பல இப்போது நினைக்கையிலும் புன்னகை வரவழைப்பவை.

அப்போதெல்லாம் [88,89 துவங்கி ]  சினிமாஸ்கோப் திரை கொண்ட அரங்காக கடலூரின் ஒரு  அரங்கு மாறிவிட்டத்தால் அதில் அவ்வப்போது, தீபாவளி பொங்கல் புது படங்களுக்கு முன்னால் ஒரு வாரத்துக்கு,ஷோலே, மெக்கானஸ் கோல்டு போன்ற படங்கள் திரும்ப திரும்ப மறு ரிலீஸ் ஆக வரும். அப்படி ஒரு வரவில்தான் என்ட்டர் தி ட்ராகன் பார்த்தேன். பிறகென்ன ப்ரூஸ்லி வெறிதான். அட்டைக் குழாயில் நூல் கட்டி, நானே எனக்கொரு நுன்சாக் செய்து, என்னை நானே அடித்து வெளுத்துக் கொண்டேன்.

யாமகுச்சி

தமிழ்நாடு முழுக்க,கடலூர் உட்பட,தெருவுக்குத் தெரு அன்று கராத்தே பள்ளிகள் இயங்கின என்றார் அப்பா, ப்ரூஸ் லீ போலவே, ப்ருஸ் லை எனும் பெயரில் ப்ரூஸ் லீ போன்றே முகம் கொண்ட நாயகன், அவரது அண்ணன் ப்ரூஸ்லி எப்படி மர்மமாக செத்தார் என்பதை கண்டு பிடித்து, எதிரிகளை கொல்லும் படம் எல்லாம் ஒரு நாலைந்து வெளியாகி அதுவும் பரபரப்பாக ஓடியது. இரவு பத்து மணி காட்சியில் எல்லாவற்றையும் பார்ப்போம்.

பின்னாளில் எனது பள்ளியின் பிடி வாத்தியார்  எனது ப்ரூஸ்லி பைத்தியம் கண்டு, முதன் முறையாக ப்ரூஸ்லி போடுவது குங்க்பு அது கராத்தே அல்ல எனும் வேறுபாட்டை விளக்கினார். பிறகுதான் ப்ரூஸ்லி தனது படங்களில் ஜப்பானிய ஆதிக்கத்துக்கு எதிராகவும் கராதேக்கு எதிராக சீன குங்பு கலையை அவர் முன்வைத்து போட்ட சண்டைக் காட்சிகள் சார்ந்த பின்புலமே பிடி கிடைத்து. வெளியே நேர் தலைகீழாக ப்ரூஸ்லி எந்த கராத்தே கலைக்கு எதிராக நின்று, குங் பூ கலையை பரவ வைத்தாரோ, அந்த கராத்தே கலையின் நாயகன் யாமகுஷி  இந்தியா  வரும் அளவு,ப்ரூஸ்லி பெயரால் கராத்தே பள்ளிகள் இயங்கிக் கொண்டிருந்தன.

அதற்கும் பிந்தி, குங்க்பூ கராத்தே ஜூடோ மூன்றையும் கலந்து தவோ பார்வையையும் இணைத்து   ப்ரூஸ்லி உருவாக்கிய ஜூகுங்தே எனும் தற்காப்புக் கலை குறித்து,அதற்க்கு விளக்கப்படங்களுடன் ப்ரூஸ்லி எழுதிய நூல் ஒன்றைக் கண்டேன். பொம்மை பார்த்த வகையில், எல்லா அடிமுறையும் எதிராளி அசந்த சமயத்தில் அவன் விதைக் கொட்டைகளை பதம் பார்ப்பதாக இருந்தது.

அந்த காலத்து கணையாழி கடைசி பக்கங்களில் சுஜாதா  ப்ளாக் டிக்கட் விற்பனையில் பரபரப்பாக இருந்த என்டர் தி ட்ராகன் படத்தை பார்த்த அனுபவத்தை எழுதி இருக்கிறார்.

‘ ப்ரூஸ்லி, ‘எக்ஸ்ப்ரசோ காப்பி மிஷன் போல வீஈஈஈஈஈஈஈஈய் யா  என கத்திக்கொண்டே ஓடி வந்து எகிறி எதிராளி விதைக் கொட்டையில் உதைக்கிறான்.

படம் முடிந்து  நெடுநேரம் ஆகியும் தினவு அடங்க வில்லை. என்னை விட சோப்ளாங்கியாக எவரும் சிக்கினால்,ஒரு குத்து  விட்டுப் பார்க்கும் உத்தேசம் எழுந்தது”

வீட்டில் அப்பா சொன்ன கதை இன்னும் தமாஷ். ரெண்டு சித்தப்பாக்களில் ஒருவர் சிவாஜி,மற்றவர் எம்ஜியார் ரசிகர். அப்பா சித்தப்பாக்கள்  மூவரும் முதன் முதலாக என்டர் தி ட்ராகன் பார்த்துவிட்டு வந்த அன்றிரவெல்லாம் எம்ஜியார் சித்தப்பா கதறிக் கதறி அழுதிருக்கிறார். விடிகையில்தான் காரணம் தெரிந்திருக்கிறது. படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களில் ஒருவர் வசமிருந்தது  ”யார்றா இவன். வாத்யார விட பிரமாதமா சண்டை போடுறான்” எனும் குரலை கேட்டதன் விளைவு அது. :)

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைகாந்திகள் வாழ்க!
அடுத்த கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -8