கதைகள்,மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எல்லோரும் சொல்லிக்கொள்வதுபோல் இது என் முதல் கன்னிக் கடிதம் என்று
எழுதுவதில் உண்மை அதிகம் ஒளிந்திருக்கிறது. உங்களது படைப்புகளையும் இணைய
தளத்தையும் ஒரு சேரக் கவனித்து வாசிக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களில்
நானும் ஒருவன். மணிமேகலையின் அட்சய பாத்திரம், பெருஞ்சோற்று உதியன்,வானலோகக் கற்பகத்தரு என இலக்கியம் படித்தவர்களுக்கெல்லாம் உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதும் தெரிந்திருக்கும். ஆனால்
படிக்காதவர்களுக்கும் அவ்வுணர்வை அளிப்பதில் இக்கதை முன்னிற்கிறது. அள்ளி
அள்ளி உணவளிக்கும் முகங்கள் , கைகள் இன்னும் ஆங்காங்கே மிச்சமிருக்கின்றன
என்பதற்கு கெத்தேல் சாகிப் போன்றவர்களின் கதைகளே சாட்சி. உயிர்ப்பான கதை
தன்னைத் தானே எழுதிக் கொண்டதுபோல் உங்கள் கதைகளில் அதிகப்படியான
சொற்களும் இல்லாமல் பெரும் உயிர்ப்புடன் வாழப்போகிறது இக்கதை.

எதேச்சையாய்ப் படிக்கத் தொடங்கிய எல்லோருக்கும் இதயத்தின் அடியாழத்தின்
ஈரத்தைத் தொட்டிருக்கும் இக்கதை. எத்தனை பேர் படித்துமுடித்துவிட்டுக்
கண்ணை நனைத்திருப்பார்களோ தெரியாது. ஆனால் எனக்கு நேர்ந்தது.
உயிர்ப்புள்ள இக்கதையைப் தேடித் தேடி என் நண்பர்கள் முகவரிக்கு இணைப்பாக
அனுப்பி நிமிர்ந்தபோது இன்னும் மகிழ்வாய் இருந்தது. மொத்தத்தில் நெருநல்
உளனொருவன் இன்றில்லை என்னும் கூற்றை உணவளித்து மறைத்திருக்கிறார்
கெத்தேல். இக்கதை இருக்கும்வரை அவர் இருப்பார். உண்மையில் கேரளம்
இயற்கையின் கொடை மட்டுமல்ல இதயத்தின் கொடையும் நிறைந்த பகுதி
என்பதற்குதாரணமாகவும் கொள்ளலாம்.

உங்களையும் என்னையும் நட்பாக்குவதற்காகவே முளைத்ததிந்த சோற்றுக்கணக்கு
என்பதென்கணக்கு!

இப்படியான உணர்வுதொடும் கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் பலரில்
ஒருவன்

அன்பன்
சரவணப்பெருமாள்
சிங்கப்பூர்

முந்தைய கட்டுரைவாசிப்பின் பாவனைகள்
அடுத்த கட்டுரைபெருவலி-கடிதங்கள்