உலகம் -கடிதங்கள்

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1

அன்புள்ள திரு ஜெ

 

வணக்கம். நலம் அடைந்திருபீர்கள் என்று நம்புகிறேன்.

 

சில வருடங்களுக்கு முன்பு, பாஸ்டன் அருகில் உள்ள சிறு நூலகத்தில் உறுப்பினகராக பதிவுசெய்திருந்தேன் , அங்கு நேஷனல் ஜியோக்ராபிக் பதிப்பிற்காக மட்டும் இருந்த தனியறைக்கு முதலில் சென்றபோது ஒரு மிட்டாய் கடையில் தனித்து விடப்பட்ட சிறுவனாகத்தான் உணர்தேன். ஒரு பதிப்பை கூட எடுக்கமால் , பதிப்பின் வருடங்களை மட்டும் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தேன் , நினைவு சரியாக இருந்தால் 188x/189x   பதிப்புகள் அங்கே இருந்தது , பின் நாளில்  அருகில் இருந்த மற்றோரு நூலகத்திற்கு , இங்கில்லாத நூலை எடுக்க சென்ற போது , அங்கும் இதே போல்.

 

இதற்கு முன் , இந்தியாவில் சில காலம் , நேஷனல் ஜியோக்ராபிக் புத்தக வடிவில் subscribe செய்திருந்தேன் , கொஞ்சம் சிறிய வடிவம் மற்றும் மெல்லிய தாளில் வந்தது. பின் நேஷனல் ஜியோக்ராபிக்ன்  பிரத்யேக ஐபேட் app வாயிலாகவும் ,  app வடிவம் மிக ப்ரமாண்டமாக இருந்தது , வேறு பதிப்புகள் அவ்வாறு வந்ததா என்று தெரியாது. இருந்தாலும், ஐபாட் ஆப் சுவிட்ச் ஆப் செய்து மறையும் போது மனம் ஏனோ புத்தக வடிவத்தை தன நாடியது, குறிப்பாக 70 களின் வடிவத்தில் . மிக சிறு காலம் இரண்டையும் subscribe  செய்து பின் இரண்டும் இல்லாமலாகியது.

 

முதல் முறையாக  நேஷனல் ஜியோக்ராபிக் வாசிப்பது அல்லது படம் பார்ப்பது மிக இளமையில், என்னுடைய தாத்தா/ஆச்சி வீட்டில் , பெரும்பாலும்  உள் பக்கத்தில் எம். சிவசுப்பிரமணியன் என்று ரப்பர் ஸ்டாம்ப் ( வேறு சில புத்தகங்களில் கையெழுத்தும் பார்த்த ஞாபகம் ), யாரு னு கேட்டதுக்கு, அது திருப்பதிசாரத்து தாத்தா க்கு பேரு . என்னுடைய தாத்தாவின் நெருங்கிய உறவினர் , ஒரு முறை, என் தாத்தா எதற்காகவோ எம்.எஸ் அவர்களை காண என்னையும் அழைத்து சென்றபோது, அங்க ஊறுபட்ட புக்கு இருக்கும் , வா னு சொன்னது நினைவிருக்கிறது. அந்த புத்தங்களை பல நூறு தடவை வாசித்திருப்பேன், சமீபத்தில் கூட.  எம்.எஸ் அவர்களை பற்றி வேறு நினைவு இல்லை, ஒரு தாத்தா ஒரு சிறுவன் எப்போதாவது சந்திக்கும் பொது உள்ள சிறு சம்பாஷணைகளின்றி, ஆனால் என்னுடைய வாசிப்பு பழக்கத்திற்கு அச்சாணி அந்த ரப்பர் ஸ்டாம்பிட்ட புத்தங்கள் .

 

இப்பொழது கையில், இந்த ஒரு பைண்டிங் தான் என்  கையில் உள்ளது , மேலும் ஒன்றோ இரண்டோ தனி பதிப்புகள் இருக்கலாம்.

 

சுந்தர்

 

அன்புள்ள ஜெ

 

ஜப்பானியப் பயணக்கட்டுரையில் உலகைப்பார்க்கும் அன்றைய துடிப்பைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். ஒருகாலத்தில் சென்னையில் சபையர் கெயிட்டி போன்ற ஏராளமனா திரையரங்குகளில் ஆங்கிலப்படங்கள் வெளியாகும். சப்டைடில் எல்லாம் கிடையாது. சினிமாக்களின் கதையும் எவருக்கும் புரியாது. ஏனென்றால் அந்த வாழ்க்கைமுறையே நமக்கெல்லாம் தெரியாது. ஆனால் எல்லா சினிமாவுக்கும் நல்ல கூட்டம் இருக்கும். ஒரே காரணம் உலகத்தைப் பார்ப்பது

 

உலகம் என்றால் ஐரோப்பாதான். அங்கே செல்வது என்றால் சாதாரண விஷயம் அல்ல. முதலில் நாம் இங்கே அனுமதி பெற முடியாது. அன்னியச்செலவாணி தட்டுப்பாடு உள்ள காலம். ஆகவே நாம் நம் சொந்தப்பணத்தைச் செலவிடவேண்டும் என்றாலும்கூட மத்திய அரசு எண்ணி எண்ணித்தான் நமக்கு டாலர் அல்லது பவுன் தரும். வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்க மேலும் ஒரு போராட்டம். அன்றைக்கு அமெரிக்காவிலிருந்த ஹிப்பி வகையறா இயக்கங்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள மாட்டோம் என்று நிரூபிக்கவேண்டும்

 

ஆகவே தியேட்டரில் போய் கனவு காண்பது மட்டும்தான் ஒரே வழி. அதிலும் இங்கே அன்றெல்லாம் 10 ஆண்டு பழைய படங்கள்தான் வரும். எதுவானால் என்ன? உலகம் தெரியும் சன்னல் அல்லவா?

 

டி.தியாகராஜன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-4
அடுத்த கட்டுரைடால்ஸ்டாய் கதைகள்- கேசவமணி