வாசிப்பு எனும் நோன்பு
வாசிப்புச் சவால் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலம் அறிய ஆவல். ஒரு வாசகருக்கு, கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றிய தங்களது எதிர் வினையையும், கடலூர் சீனு-வின்கடிதத்தையும் வாசித்தேன். அதற்கு எனது சார்பாக ஒரு கடிதம் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டேஇருந்தேன். காரணம் , என்னடா இவனும் இப்படி ஆகிவிட்டானே என்று நீங்களும் , கடலூர் சீனுவும் நினைத்துவிடக்கூடாதுஎன்று ஒரு சிறு தயக்கம். இன்னோரு பக்கம், தாங்கள் புத்தகத்திற்கும், காட்சியூடகத்தில் வந்ததற்கும் நிறைய வேறுபாடுஇருக்கும் , புத்தகமே மேலாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கு என்னிடம் அன்றாட வாழ்க்கைத் தகவல்கள்உண்டு.
என்னோடு வேலை செய்பவர்கள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் , ஒரு நாற்பது பேர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்களிடம், நீங்கள் , லார்ட் ஆஃப் ரிங்ஸ் வாசித்திருக்கிறீர்களா என்று கேட்டால், முப்பது பேர் ஆம் என்பார்கள். (இது சமயம் எனக்கு ஒரு சின்ன கனா வந்து மறையும். ஒரு புளியமரத்தின் கதை வாசித்திருக்கிறீர்களா ? விஷ்ணுபுரம் வாசித்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு இத்தனை ‘ஆம்’ வந்தால் எப்படி இருக்கும்). வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களாவது லார்ட் ஆஃப் ரிங்ஸ் பாத்திரங்களை பற்றிய பேச்சு இருக்கும். படம், புத்தகத்தைப் போல் இருக்குமா என்று கேட்டால், இல்லவே இல்லை என்று ஒரு சேர பதில் சொல்வார்கள்.
என் மகனுக்கு நெருக்கமாக ஒரு பத்து நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அப்படித்தான் ‘லார்ட் ஆஃப் ரிங்ஸ்’என்றால் , அதன் பைத்தியம் என்பார்கள். டோல்கின்ஸ் எழுத்தைச் சொல்லும்பொழுது, அவர் ஒரு மரத்தையும், அதில் இருக்கும் கிளைகளையும் , இலைகளையும் விலா வாரியாக எழுதியிருப்பார் என்று சிலாகித்து பேச ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களுக்கு, படத்தின் மீது அந்த அளவு ஈடுபாடில்லை. ஹாரி பாட்டர் படம் எப்படி என்று கேட்டால் , புத்தகத்தைப் போல் இல்லை என்று கோபம் கோபமாக பேசுவார்கள.
ஹார்பர் லீ-யின் To Kill a Mocking Bird நாவலை வாசிக்காத நடுத்தரப்பள்ளி (இங்கு ஆறு முதல் எட்டு வகுப்புகள் உள்ள பள்ளி) மாணவர்களே இல்லை எனலாம். அந்த படத்தை பார்த்தீர்களா என்று கேட்டால், நாவலில் வந்த தந்தையை பற்றிய அவர்களது கற்பனை வடிவம் மாறிவிடும் என்பார்கள்.
நான் தேர்ந்தெடுத்து பொழுதுபோக்கிற்காக சீரியல்-களை பார்ப்பவன். அப்படி கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரை, அந்தஅந்த வருடம் வந்தபொழுது பார்த்தவன். , இந்த வருடம், மற்ற சீசன்களை திரும்ப ஒரு முறை பார்த்துவிட்டு, எட்டாவதுசீசனைப் பார்த்தேன். இந்த இடத்தில் கடலூர் சீனு குச்சி எடுத்துக்கொண்டு ஆஸ்டின் வந்து அடிக்காமல் இருப்பதற்காக ஒன்று சொல்லிக்கொள்கிறேன். விஷ்ணுபுரம், காடு நாவல்களை வாசித்து முடிக்க விடியற்காலை நான்கு அல்லது ஐந்துமணி என்று எழுந்து வாசித்திருக்கிறேன். அப்படி ஒருபோதும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்த்து முடிப்பதற்காக சிரத்தைஎடுத்துக்கொண்டதில்லை.
எட்டாம் சீசன் வந்துகொண்டிருந்த மார்ச் மாதத்தில் ஒரு நாள் மதிய உணவு உரையாடலின்போது நண்பர் ஒருவர்சொன்னது, நீங்கள் சொன்ன கூற்றை உண்மை எனச் சொல்லும் சான்று. அவருக்கு பதின்ம வயதில் ஒரு மகன்இருக்கிறான். ஆதலால், அவனுடன் சேர்ந்து நீங்கள் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்ப்பீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், “எங்களுடன் பார்ப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அவன் பார்க்கததற்கு காரணம், புத்தகத்தை போல் இல்லை என்பதால்” என்று பதில் சொன்னார்
புத்தகத்தில் முக்கிய கதாநாயகனை George RR Martin இடையிலேயே கொன்றுவிடுவார். பொருள் ஈட்டும் சீரியலில், அவனைமந்திரம் போட்டு பிழைக்க வைத்துவிடுவார்கள். அதனால் கோபம் கொண்ட வாசகர்களை நான் அன்றாட வாழக்கையில்பார்த்தேன். கடைசி இரண்டு சீசன்-களும், புத்தகம் வெளிவரும் முன்னர், படத்தை இயக்கியவர்களே எழுதி எடுத்தது. குறிப்பாக, கடைசி சீசனை, தீர்ப்பை மாற்றி எழுதுவதற்காக , இன்னொரு முறை எடுக்கச் சொல்லி 20,000 பேர்கையெழுத்துப்போட்டு HBO-விற்கு விண்ணப்பித்த செய்தியை நீங்கள் படித்திருக்கலாம்.
கடந்த ஒரு வருடமாக நான் மாதம் ஒருமுறை வாசிப்பனுபவம் எழுதி வருகிறேன். இந்த மாதம் கி.ரா-வின் கோபல்லகிராமத்து மக்கள் நாவலை மறுவாசிப்பு செய்துவிட்டு, எனது குறிப்பில் இப்படி எழுதியிருந்தேன். சுதந்திரம் அடையும்தினம் பத்திரிகைகளில் அறிவிக்கப்படுகிறது. “ஈவு இரக்கமில்லாமல், மக்களைத் தேய்த்து நசுக்கியவன் இப்போதுஒரு சலாம் போட்டு , நான் வெளியேறிக்கொள்கிறேன் என்று சொன்னால் எப்படி? அவன் இந்த நாட்டில் நிறுவியமூலதனத்தையெல்லாம் விட்டு எப்படி போவான்?” என்று சிதம்பரம்பட்டி என்பவர், கோபல்லபுரத்துக்குதேசாந்திரியாக வந்த மணி என்பவரிடம் கேட்கிறார். அவர் அதற்கு சொல்லும் பதில், கப்பல் படையில் இருக்கும் சிப்பாயிகள் வெள்ளையருக்கு எதிராக போராடுவதாக , நடுக்கடலில் நடக்கும் சண்டையாக ஆறு அத்தியாயங்கள் விரிகிறது. நல்ல பொருள் போட்டு எடுத்தால், அந்த ஆறு அத்தியாயங்களையும் ‘கேம் ஆப் த்ரோன்ஸ் ‘ கொடுத்தவிறுவிறுப்பில் எடுக்கலாம்.
நான், கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்த்ததற்கு பிராயச்சித்தமாக, சுகுமாரன் எழுதிய பெருவலி நாவலுக்கும், ஜோ டி க்ரூஸ் எழுதிய அஸ்தினாபுரி நாவலுக்கும் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்குள் வாசிப்பனுபவம் எழுதிவிடுகிறேன்.
வ. சௌந்தரராஜன்,
ஆஸ்டின்
ஜெ அவர்களுக்கு
வணக்கம்.
என் முகநூல் பதிவின் சுட்டி இங்கே.
.https://m.facebook.com/story.php?story_fbid=487865208621799&id=100021949715165
100 மணி நேர வாசிப்பு கிடந்ததை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.
வெண்முரசு வாசிக்க இதில் இணைந்தது கூடுதல் உத்வேகம் தருகிறது. நல்ல புத்தகங்கள் குறித்த உங்கள் பரிந்துரைகள் மிகவும் உதவுகிறது.
நன்றி.
ரஞ்சனி பாசு