ஜப்பான், ஒரு கீற்றோவியம் -4

கியோட்டோவில் 24 அருங்காட்சியகங்களும் 37 பௌத்த ஜென், ஷிண்டோ மதப் பல்கலைக்கழகங்களும் தத்துவக் கல்லூரிகளும் உள்ளன. கிட்டத்தட்ட முன்னூறு ஆலயங்கள். இவற்றை முழுமையாக பார்ப்பதற்கு பல வாரங்கள் ஆகும் நாங்கள் கியோட்டோவின் ஒரு கீற்றை மட்டும் ஒரு நாளில் அறிமுகம் செய்துகொள்ளும் எண்ணம் கொண்டிருந்தோம். ஆகவே நகரத்தின் சாலைகளினூடாக சுற்றி வந்தோம் நகரத்தை ஓரிரு முறை சுற்றிப்பார்த்து புரிந்துகொண்டோம். ஒரு நகரம் நம்மில் ஆழ்ந்த பதிவொன்றை உருவாக்குகிறது. மனித முகங்களை அவற்றின் வெவ்வேறு சிறுகூறுகளை முன்பு அறிந்த முகங்களின் கூறுளுடன் ஒப்பிட்டு நாம் அடையாளம் கண்டுகொள்வது போலத்தான் நகரங்களையும் நுண்ணுணர்வால் அறிகிறோம்

கியோட்டோ சுற்றுலாபயணிகளால் நிறைந்திருந்தது மற்றபடி வழக்கமான நகரம். ஒழுங்கு, ஒழுங்கு குலைந்துவிடுமோ எனும் அச்சத்தால் ஏற்பட்ட மேலும் ஒழுங்கு, ஒழுங்காக இருக்கிறோம் எனும் பெருமிதத்தில் உருவான மேலும் ஒழுங்கு என நம்மைப்போல் ஒழுங்கின்மையில் திளைக்கும் இந்தியர்களுக்கு மூச்சுத் திணறவைக்கும் ஒரு நகரம். ஆனால் ஒழுங்குக்குள் சென்றுவிட்டால்  விரைவிலேயே அதை நாம் அதை உளப்பூர்வமாக உணர ஆரம்பித்துவிடுகிறோம். ஒழுங்கின்மை உருவாக்கும் பதற்றமும் எச்சரிக்கை உணர்வும் இல்லாமலாகும்போது ஒழுங்குக்குள் இயல்பாக படிந்து அதை மறந்தும் விடுவதனால் ஒரு விடுதலையை உணர்கிறோம்.

உண்மையில் ஒழுங்கின்மை அல்ல ஒழுங்கே தனிமனித விடுதலை. ஒழுங்கின்மை ஒவ்வொரு தனிமனிதன் மேலும் ஒட்டுமொத்தச் சூழலும் வந்து அழுத்தம் அளிக்க செய்கிறது. ஒழுங்கு ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் அமைத்து ஒவ்வொருவருக்கும் உரிய வழியை உருவாக்கிக்கொடுத்துவிடுவதனால் முழுமையான விடுதலையை இயல்பாக்குகிறது. மிகச்சரியாக வகுக்கப்பட்ட ஒரு நகரத்தெரு நம் கவனத்தை தெருவின் அமைப்பிலிருந்து விடுவித்து வேறு நுண்ணிய செய்திகளை நோக்கி கொண்டுசெல்கிறது. ஜப்பானிய நகரத்தில் எவரும் தொலைந்துபோக முடியாது.

கின்காகுஜி  [Kinkaku-ji]  என்னும் ஆலயம் இதனருகே உள்ளது. ஒரு சோலைசூழ்ந்த தடாகத்தின் கரையில் அமைந்த்து. மரத்தாலான மூன்றடுக்குக் கட்டிடம். பொன்முலாம் பூசப்பட்டது, பொன்மாளிகை என்பதே அப்பெயரின் பொருள். இங்கே இருந்த பழைய மாளிகை சையோஞ்சி கிண்ட்சன் என்னும் போர்த்தளபதிக்கு உரியதாக இருந்த்து. 1397ல் இது அஷிகாகா யோஷிமிட்சு என்னும் தளபதியால் வாங்கப்பட்டு விரிவாக்கிக் கட்டப்பட்டது. யோஷிமிட்சு இறந்தபோது அவருடைய விருப்பப்படி அவருடைய மகனால் ஜென் கோயிலாக மாற்றப்பட்டது.

1467 போரின்போது இது எரித்து அழிக்கப்பட்டது. மீண்டும் கட்டப்பட்ட பொற்கோயில் 1950ல் 22 வயதான ஹயாஷி யோகன் என்னும் பௌத்த துறவியால் எரியூட்டப்பட்டது. அவர் தற்கொலைக்கு முயன்றார். காப்பாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு ஏழாண்டு சிறைத்தண்டனை பெற்றார். ஆனால் சித்தப்பிரமை கொண்டவர் என நிரூபிக்கப்பட்டமையால் விடுதலையானார். 1956ல் காசநோயால் மறைந்தார். அதன்பின் பொற்கோயில் மீண்டும் கட்டப்பட்டது.

தங்க ரேக்கு பதிக்கப்பட்ட கோயில் இது. அந்தியொளியில் என எப்போதுமே தென்படுகிறது.  40 அடி உயரமானது. அதை நம் கண்கள் ஆலயம் என எடுத்துக்கொள்வதில்லை, ஒரு வசந்தமண்டபம் என்றே தோன்றுகிறது. சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தபோது ஒரு பெரிய பொற்கலம் என்றும் தோன்றியது. அந்த குளம் மலர்கள் நிறைந்து அந்த மலர்கள் நடுவே ஒரு மாபெரும் மலர் என பொற்கோயிலின் நீர்ப்பாவையைக் காட்டிக்கொண்டிருந்தது.  நீருக்குள் தீப்பற்றிக்கொண்டதுபோல. அந்த மாளிகையையே ஓங்கி எழுந்த தீ என்றே என் உள்ளம் எண்ணியது.

அந்த பௌத்த துறவி ஏன் பொன்மாளிகையை எரியூட்டினார்? சித்தப்பிரமை ஐயமில்லை. ஆனால் சித்தமயக்கத்தினாலும் எரியூட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். இந்தப்பொன் அவரை எரிச்சலுறச்செய்ததா? அல்லது அந்த எரிவண்ண மாளிகையை மேலும் எரியழகு பெறச்செய்ய விரும்பினாரா?  ஒரு ஜென் துறவி மாளிகையை எரியூட்டுவது, அற்புதமான ஒரு கதைக்கான முதன்மைப் படிமம். எனக்கு தர்கோவ்ஸ்கியின் சாக்ரிஃபைஸ் படத்தில் வீட்டை எரிக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. “உன் வீட்டை எரித்துவிட்டு கிளம்பு” என ஒரு ஜென் நன்னெறிச்சொல் உண்டு.  அந்த ஜென் துறவியை அச்சொல் ஊக்கியிருக்குமா என்ன?

அது ஒரு சுற்றுலாமையம் என்பதனால் பெரிய கூட்டம். காதல் இணைகள் வந்து தழுவித்தழுவி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். நாம் காதல்கொண்டாலும் கொஞ்சம் காத்திருந்தே இடம் பெற்றுக்கொண்டு படம் எடுத்தாகவேண்டும். உலகம் முழுக்க காதலர்களின் பாவனை ஒன்றே. ஆனால் ஜப்பானில் எவர் எந்தப் புகைப்படம் எடுத்துக்கொண்டாலும் எம்ஜியார் முத்திரை காட்டுகிறார்கள்.

மேலும் காலத்தில் அமிழ்ந்து நாரா நகரைச் சென்றடைந்தோம். கன்சாய் பகுதியின் மையநகரமான நாரா ஜப்பானின் தொன்மையான தலைநகரம், பின்னர் ஆன்மிக நகரம், இன்று சுற்றுலா மையம். கிபி 708ல் சக்கரவர்த்தினி ஜென்மேயி தலைநகரை நாராவுக்கு மாற்றும் ஆணையை பிறப்பித்தார். 710 ல் நாரா இன்றைய வடிவில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து நாரா மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. 784ல் கியோட்டோவுக்கு தலைநகர் மாற்றப்படும் வரை இதுவே ஜப்பானின் ஆட்சிமையமாகத் திகழ்ந்தது.

நாராவின் முதன்மை கவற்சி அங்குள்ள மான்கள் என நினைக்கிறேன். எங்கு பார்த்தாலும் அவை கட்டின்றிச் சுற்றி வருகின்றன. தவிடு கலந்து செய்யப்பட்ட ஒருவகை பிஸ்கட்டுகளை இங்கே விற்கிறார்கள். அவற்றை வாங்கி அந்த மான்களுக்குப்போடுவது சுற்றுலாப்பயணிகளின் கொண்டாட்டம். மான்களும் முறையாக பழகி ஜப்பானிய ஒழுங்கை கற்றுக்கொண்டிருக்கின்றன.  பிஸ்கட்டுகளை விற்பவர்களை அவை அணுகுவதே இல்லை, இவ்வளவுக்கும் அவர்கள் கையில் மான்களை விரட்டுவதற்கான குச்சிகள் ஏதுமில்லை. சுற்றுலாப்பயணிகளை பிஸ்கட்டுகளை வாங்கும்படி கிட்டத்தட்ட மிரட்டுகின்றன.  வாங்கிவிட்டால் சூழ்ந்துகொண்டு முட்டி மோதி அலைக்கழித்து பிடுங்கி உண்கின்றன.

 

 

ஒர் அம்மணி கூச்சலிட்டுக் கதறினாள். மகிழ்கிறாரா இல்லையா என்று சொல்லத்தெரியவில்லை. அருண்மொழி ஒரு பொட்டலம் பிஸ்கட் வாங்கிவிட்டு மான்களால் சூழப்பட்டு அலறி கையிலிருந்து வீசிவிட்டாள். அவை அதன்பின்னரும் அவளைத் துரத்திவந்தன. நாராவில் வாழ்ந்த பழைய அரசு அதிகாரிகளின் மறுபிறப்புகளாக இருக்கலாம். எந்த அரசும் அடிமட்ட அதிகாரிகளுக்கு ஊழல் செய்யும் உரிமையை அளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்பது அரசியல்கொள்கைகளில் தலையாயது.

நாராவின் முதன்மையான கவற்சி என்பது இங்குள்ள டோட்டய் ஜி [ Tōdai-ji ] என்னும் பௌத்த ஆலயம். ஜப்பானிலுள்ள ஏழு மாபெரும் பௌத்த ஆலயங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது. கிபி 738ல் இந்த ஆலயம் கட்டப்பட்டதுஒரு ஒப்புமைக்காக நம் பல்லவர் காலத்தில் என்று சொல்ல்லாம் நாம் அப்போது பல்லாவரம், மாமண்டூர் போன்ற ஊர்களில் சிறிய குடைவரைக்கோயில்களை உருவாக்க ஆரம்பித்திருந்ந்தோம். நம் ஆலயக்கலை வளர்ச்சி அடைந்தது மேலும் இருநூறாண்டுகள் கடந்தபின்னர்தான். இந்த ஆலயம் கிபி 752ல் தான் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது. உலகிலுள்ள மிகப்பெரிய பித்தளை புத்தர்ச்சிலை இங்குதான் உள்ளது.

பேரரசர் ஷோமுவின் ஆட்சிக்காலத்தில் பஞ்சம் , விபத்து முதலிய இழப்புகள் உருவாயின. அவருடைய ஆணைப்படி ஜப்பான் முழுக்க இத்தகைய சிலைகள் உருவாக்கப்பட்டன. உச்சகட்டமாக இந்த பெரிய சிலை வார்க்கப்பட்டது. இச்சிலை டாய்பிட்சு [Daibutsu] எனப்படுகிறது. கிட்டத்தட்ட ஐம்பதடி உயரம் கொண்டது. முகம் மட்டும் 17 அடி. கண்கள் மூன்றடி நீளம் கொண்டவை. மூக்கு இரண்டு அடி நீளம். 500 டன் எடைகொண்டது இந்தச் சிலை.

இதன் கட்டுமானத்தின் சிறப்பம்சமே இந்த எடைதான். அமெரிக்க்ச் சுதந்திரதேவிச் சிலை இத்தனை தடிமனான உலோகத்தால் ஆனது அல்ல. ஆகவே அதற்குள் சிக்கலான பொறியியல் தாங்குக் கட்டுமானம் தேவைப்பட்டது. நிலையற்ற மண்கொண்ட ஜப்பானில் இச்சிலை ஆயிரத்துமுந்நூறு ஆண்டுகளாக அசைவிலாதிருப்பது இந்த பேரெடையால்தான். டோடோய்ஜி சிலையின் காலடியில் உள்ளே சில எலும்புகளும் பல்லும் புதைக்கப்பட்டுள்ளன என சமீபத்தைய ஆய்வுகள் காட்டுகின்றன. அவை பேரரசர் ஹோமுவுடையவையாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

தத்துவ அடிப்படையிலும் இந்த ஆலயம் முக்கியமானது. பௌத்த மெய்ஞானியான க்யோகி [Gyōki] ஏழுநாட்கள் நீண்ட பெருநோன்பை மேற்கொண்டபின் ஷிண்டோ மதத்தையும் பௌத்த மதத்தையும் ஒன்றாக்கும் மெய்யறிதலை வெளியிட்ட இடம் இது.  வைரோசன புத்தரை ஷிண்டோ மதத்தின் அமடெரசு [ Amaterasu] என்னும் சூரியதெய்வத்தின்  இன்னொரு வடிவமாக வழிபடலாம் என உடலிலிக் குரல் ஒலித்ததாக அவர் சொன்னார். அது ஜப்பானிய பௌத்த மரபின் ஒரு மாபெரும் திருப்புமுனை

வைரோசன புத்தர் ஊழ்கத்தில் அமர்ந்திருந்தார். வைரோசனர் என்றால் விண்ணில் நிறைந்திருந்து அறம் உரைப்பவர், தன் அறத்துடன் மண்ணில் எழவிருப்பவர். வைரோஜன புத்தர் பல தோற்றங்களில் இந்தியாவில் மலைப்பகுதி ஆலயங்களில் இருக்கிறார். ஆயிரம் கைகள் கொண்ட சிலை புகழ்பெற்றது.

டோடோய்ஜி ஆலயத்தின் கோபுரமுகப்பும் பிரம்மாண்டமானது. சமீபத்தில் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் தமிழகக் கோபுரக்கலை என்னும் நூலில் தொன்மையான கோபுரங்களைப் பற்றி வாசித்தேன். பசுக்கொட்டில்களின் முகப்பில் அமைக்கப்பட்ட காவல்மாடம் கொண்ட முகப்புதான் பின்னர் கோபுரமாக ஆகியது. தொன்மையான கோபுரங்களின் வடிவம் தோரணவாயில் போலவே உள்ளது. அவர் மாதிரிக்கு அளித்திருந்த கோபுரங்கள் சாஞ்சி பௌத்த தூபியின் முகப்பிலுள்ள வாயில்வளைவுகள் போலவே இருந்தன.

கேரளத்து ஆலயங்களின் முகப்புகளின் அமைப்பும் இவ்வாறே. அவை ஒருவகை மாபெரும் வாயில்மண்டபங்கள். இங்கே அதை கொட்டியம்பலம் என்போம். இல்லங்களுக்கும் அது உண்டு. என் முன்னோர்களின் தொன்மையான  வீட்டு முகப்பிலும் கொட்டியம்பலம் இருந்தது. கோட்டு அம்பலம் – வளைந்த மண்டபம்- என்று அதன் சொற்பொருள். டோடாய்ஜி ஆலயத்தின் முகப்பு மாபெரும் கொட்டியம்பலம். தடிமனான மரத்தால் ஆனது.

உள்ளே – ஷிண்டோ பௌத்த இணைவை உலகுக்கு அறிவித்த இடத்தில் ஒரு தூபி கட்டப்பட்டுள்ளது. அறத்தை அறிவிக்கும் மணி தொங்கவிடப்பட்ட ஒரு மண்டபம். திபெத்தியபாணி மணி. நம் மணிகளைப்போல கவிழ்ந்த மலர் வழிவம் அல்ல. குவளை கவிழ்த்த வடிவம். இவை உலோக ஓசையால் அதிர்வதில்லை. ஓங்காரம் போல் முழங்கி ரீங்கரிக்கின்றன.

அலயத்திற்குள் அமைந்த மாபெரும் சிலையைச் சுற்றிச்சுற்றி வந்து வெவ்வேறு கோணத்தில் பார்த்தேன். அதன் கால் நம்மருகே பேருருவில் தெரிய தலை எங்கோ அப்பால் என திகழ்ந்தது.  கீழிருந்து நோக்குகையில் விழிகள் விண்ணில் வளைந்த இரு விற்கள். புத்தர்சிலைகளின் அழகே அவை எவரையும் நோக்குவன அல்ல என்பதே. அவற்றின் ஊழ்கவிழிகள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. அருகமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தால் நம்மையும் ஊழ்கத்திற்குள் இழுக்கின்றன.

வைரோசனரின் கை அருளுரை புரிந்து மலர்ந்திருந்தது. ஆடை உடலெங்கும் வழிந்திருக்க மலைப்பாறை போன்ற தலைமேல் குழல்கற்றையின் அலைகள். நோக்க நோக்கச் சிறிதாகி உளம்புகுகிறது. ஒருகணத்தில் எழுந்து விண் நிறைக்கிறது. பெருஞ்சிலைகளின் முகத்தில் திகழும் அமைதி பேருரு கொண்டுவிடுகிறது. விண்ணின் அமைதி. அந்தப் புத்தர்சிலையே விண்ணில் முகில்திரள் போல நின்றிருப்பதாகத் தோன்றியது

இத்தகைய பேருருவ புத்தர் சிலைகளை உலகில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் ஆண்டுதோறும் ஒரு புதிய பேருருவ புத்தரைப் பார்க்கிறேன்.  இத்தனை பெரிய சிலைகள் வேறு மதங்களில் இல்லை. மிகப்பிந்தைய காலத்தில் விஷ்ணுவுக்குச் சில பெரிய சிலைகள் உருவாக்கப்பட்டன – திருவட்டாறு ஆதிகேசவன் ஆலயம் போல. ஆனால் புத்தருக்கு இணையானவை அல்ல.

இப்பெரிய சிலைகளை உருவாக்க என்ன உந்துதல்? புத்தரின் உடலை மகாயான பௌத்தம் தர்மகாயம் என்கிறது. இப்புடவியை ஆளும் நெறியையே அவருடைய உடலாக உருவகம் செய்கிறது. ஆகவே அது பேருருவாக அமைக்கப்படுவது இயல்பே.

கியோகி

தீர்த்தங்காரர் சிலைகளையும் பேருருவர்களாக அமைப்பது வழக்கம். ஏனென்றால் அவர்களையும் மானுடர்களுக்கு மேல் எழுந்த விண்வடிவர்களாக சமணர் நினைக்கிறார்கள். சில தீர்த்தங்காரர்களின் காலடியில் முழங்கால் உயரத்தில்தான் மலைகள் இருக்கும். சாஞ்சியின் சிலை ஒன்றில் துறவுபூண்டபின் யசோதரையிடம் பிச்சை ஏற்க வரும் புத்தர் பேருருவர். அவருடைய முழங்கால் அளவுக்கே கபிலவாஸ்துவின் மாளிகைகள் இருக்கின்றன. துறப்பதனூடாக, ஞானம் வழியாக அவர்கள் அடைந்த பேருரு எனக்கொள்ளலாம்

ஆனால் எனக்கு எளிமையாகத் தோன்றுவது ஒன்றுண்டு. இச்சிலைகளுக்கும் மலைகளுக்குமான உறவு. மலைமுடிகளை நோக்கும் உணர்வையே இவற்றை நோக்கும்போது நாம் அடைகிறோம். மலைகளை நோக்குகையில் அமைதியிலாழ்ந்த புத்தரை நோக்கும் உணர்வை அவர்கள் அடைந்திருக்கலாம். வைரோசனர் கதிர் எழுந்த மலைமுடி.

[மேலும்]

 

முந்தைய கட்டுரைகலை வாழ்வுக்காக
அடுத்த கட்டுரைஆடல்வல்லான் -கடலூர் சீனு