அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்

 

இந்த இணையதளத்தில் நான் எழுதிய ‘எனது இந்தியா’ என்ற கட்டுரைக்கு ‘தீராநதி’ இதழில் அ.மார்க்ஸ் ஒரு மறுப்பை எழுதியிருந்தார்.  அந்த மறுப்பு வழக்கமாக அ.மார்க்ஸ் எழுதுவதுபோல அரைகுறை ஆதாரங்கள், திரிபுகள், உதிரிமேற்கோள்கள் ஆகியவற்றால் ஆனது என்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

என்னால் விரிவாகவே அதை மறுத்து எழுத முடியும். ஆனால் மார்க்ஸின் வழக்கம் என்னவென்றால் இன்னும்பெரிய ஒரு அரைகுறைத்தகவல் கட்டுரையை அவர் எழுதுவார் என்பதே. அதையும் நாம் மறுக்கவேண்டும். ஒரு கட்டத்தில் நாம் சலித்து விலகிக்கொண்டால் அதை தன் வெற்றியாக அவர் கொண்டாடுவார். வேறு உருப்படியான வேலை இருப்பவர்கள் அ.மார்க்ஸ¤டன் விவாதிப்பது கடினம். அவருக்கு இருபத்தைந்து வருடங்களாக இந்த அரசியல் அக்கப்போர்கள் அன்றி வேறுவேலை கிடையாது.

மேலும் அவதூறுகள் வசைகள் வழியாகவே அவரால் உரையாட முடியும். ஒருபோதும் மாற்றுத்தரப்புடன் அவரால் உரையாடமுடிவதில்லை. ஆகவே அவர் எழுதும் இதழ்களில் அவருக்கான மறுப்பு வெளிவருவதை அவர் தடுப்பதும் அதை வெளியிடுபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதும் உண்டு. அவரது பிரசுரகர்த்தர்கள் பலர் அதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைக்கு பதிலாக அதிலுள்ள தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட கடிதங்கள் எதையுமே தீராநதி இதழ் பிரசுரிக்கவில்லை. நம்முடைய சிற்றிதழ்கள் அனைத்துமே தனிநபர் காழ்ப்புகளை தவிர்த்தால் ஒரே வகையான கருத்தியலை கண்மூடித்தனமாகப் பிரச்சாரம்செய்பவை. மாற்றுக்கருத்துக்கள் எத்தனை காத்திரமானவையாக இருந்தாலும் பிரசுரிக்க மறுப்பவை. அடிப்படையில் ஜனநாயகப்பண்பில் நம்பிக்கை இல்லாதவை.

நம் சிற்றிதழ்க்கட்டுரையாளர்கள் யாராக இருந்தாலும் — அது எஸ்.விராஜதுரையோ, அ.மார்க்ஸோ, யமுனா ராஜேந்திரனோ, அ.முத்துகிருஷ்ணனோ, இப்போது உயிர்மையில் முளைத்துள்ள மாயாவோ– அனைவருமே ஒரே குரலைத்தான் ஒலிக்கிறார்கள். இந்திய ஆங்கில ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கும் இந்தியதேசியம் மீதான காழ்ப்பையும், இந்தியப்பண்பாட்டு மரபுகள் மீதான எதிர்ப்பையும் அப்படியே திரும்பக் கக்குபவை அவை. இந்த நாட்டுக்கு எதிரான அன்னிய சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் விஷப்பிரச்சாரங்களின் நகல்கள் அவை.

இத்தகைய அப்பட்டமான மோசடிக்கருத்துக்களை அவர்கள் எங்கும் எழுதலாம். ஆனால் பிறர் எளிய மறுப்பைக்கூட பதிவுச் செய்ய முடியாது. இவர்கள் சேர்ந்து முன்வைக்கும் இந்த ஒற்றை அரசியல் தரப்புக்கு எதிராக எதையுமே நம் சிற்றிதழ்களில் நாம் அச்சேற்றிவிடமுடியாது. உண்மையில் இணையம் வந்தபிறகுதான் இவர்களின் ·பாசிச அணுகுமுறைக்கு மாற்று உருவானது. ஆகவேதான் இவர்கள் இணையத்தை மீண்டும் மீண்டும் காய்கிறார்கள்.

தீராநதியும் அவ்வழக்கத்தை மீறவில்லை பாகிஸ்தானி மதவெறி ஊடகங்களின் பிரச்சாரத்தை மறுபிரதிசெய்த அ.மார்க்ஸின் அபத்தமான திரிபுகள் மற்றும் தவறுகளைச் சுட்டிக்காட்டிய கடிதங்கள் நிராகரிக்கப்பட்டன.  என்னுடைய மறுப்புக்கடிதம் நான் அதில் எழுதுபவன் என்பதனாலும் நான் கூப்பிடு வலியுறுத்தியதனாலும் மட்டுமே அதில் இடம்பெற்றது.

தீராநதி மறுத்த இரு கடிதங்கள் தற்போது திண்ணை இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. வாசகர் கவனத்துக்கு அவற்றைக் கொண்டு வருகிறேன்.

தேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை
கோபால் ராஜாராம்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20901157&format=html

அ.மார்க்ஸின் சுவனத்தின் ஆதாரப்பிழைகள்
அரவிந்தன் நீலகண்டன்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20901156&format=html

 

 

இஸ்லாம், மார்க்ஸ்:ஒரு கடிதம்

அ.மார்க்ஸ்:கடிதங்கள்

அ.மார்க்ஸ்;கடிதம்

அ.மார்க்ஸ் என்னும் வழக்குரைஞர்

எனது இந்தியா

முந்தைய கட்டுரைசாங்கிய யோகம் : ஆழியின் மௌனம்
அடுத்த கட்டுரைதிருவையாறு