அறிவடைந்த குரங்கின் கதை- ராகவேந்திரன்

சேப்பியன்ஸ் வாங்க

ஜெ

யுவல் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் குறித்து.

மனித குலம் தனது வரலாற்றை பல காரணங்களுக்காக வியப்புடன் பரிசீலித்து  வந்திருக்கிறது. நாம் இன்று சந்திக்கும் சிக்கல்கள் நம் முன்னோராலும் எதிர்கொள்ளப்பட்டவையா என்ற வினா எப்போதும் எழுந்து வந்துள்ளது. வெறும் ஐம்பது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நாம் இருக்கும் ஊரின் படத்தைப் பார்க்கும்போதே ‘ எப்படி இருந்த்து இப்படி ஆகி விட்டது ‘ என்று வியக்கிறோம்.  . நம் முன்னோர்கள் நடந்த பாதையில் நடந்து அவர்கள் நுகர்ந்த காற்றை சுவாசித்து அவர்களின் மரபணுத் தொகுப்புடன் வாழும்போதும் வரலாற்று வாழ்வை நினைவு படுத்தும் ஒவ்வொரு கல், மணி, எலும்பு, ஓவியக் கிறுக்கல்கள், பழம்பொருளும் நம்மை அறுபடாத காலச் சங்கிலியில் பல கண்ணிகள் கடந்து நம்மைக் கொண்டு வைத்து விடுகின்றன.

காடு நாவலில் கிரிதரன் ஒரு கல்வெர்டில் பொறித்து வைத்த தன் பெயரையும் உடன் பதிந்த ஒரு மிளாவின் தற்செயலான காலடித்தட்த்தையும் சில பத்தாண்டுகள் கழித்துப் பார்க்கும்போது எழும் நினைவுக் குமிழிகள் எல்லோருக்கும் அமைவதில்லை. தனது இருப்பை இயற்கையில் பதியும் விழைவு தான் பரிணாம வளர்ச்சியோ?

ப்ரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் ஒரு குகைச் சுவரில் பதிந்துள்ள மனிதக் கைவிரல்களின் வயது 39000 ஆண்டுகள் என்று துவங்குகிறது சேப்பியன்ஸ். நாம ரூபம் அறியாத அந்த மூதாதையின் ஜீன்களில் ஒரு சிறு படிமம் நமது செல்லில் இருக்கும் வாய்ப்பே சிலிர்ப்பூட்டுகிறது.

13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புடவியில் ஒரு குழந்தையாக 3.5 பில்லியன் ஆண்டுகள் முன் தோன்றிய புவியில் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ என்னும் பேரினத்தின் (ஜீனஸ்) பகுதியாக   2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சேப்பியன்ஸ் எனும் சிற்றினம் (species) , 70000 ஆண்டுகள்  முன் வரை வரலாற்றில் சொல்லும்படி எதுவும் செய்யவில்லை; அல்லது வரலாற்றில் அப்படி எதுவும் பதிவாகவில்லை.

ஆப்பிரிக்காவில் தோன்றி நடந்தே ஐரோப்பா ஆசியா அமெரிக்காக்கள்,  ஆஸ்திரிலேயாக்கண்டங்களை அடைந்துள்ளனர்.

மூன்று புரட்சிகளின் மூலம் வரலாற்றி போக்கை முன்வைக்கிறார் ஆசிரியர் அறிவாற்றல் (cognition) , வேளாண்மை  மற்றும் அறிவியல் புரட்சிகளின் வழியே சேப்பியன்கள் படிப்படியாக  பரிணாம ஏணியின் உச்சியை அடைந்துள்ளனர்.

பெரிய மூளை அதிக சிந்தனையை வளர்த்தது., நிமிர்ந்து நடத்தல் வேட்டையை எளிதாக்கியது., நடத்தலில் இருந்து விடுபட்ட கைகளால் புதிய வேலைகளைச் செய்வதன் மூலம் மனித இனத்தின் பாய்ச்சல் தொடங்கியது. பிற மிருகங்களை விட அதிக காலம் மனிதக் குழந்தைகளை வளர்க்கவேண்டி இருந்ததால், குடும்ப – சமூக பிணைப்பு தேவையானது.   பிற மனிதர்களுடன் பழகவேண்டிய தேவைக்காக   கிசுகிசு (அலர்) உருவானது. இதற்காகவே மொழி உருவானது. எனவே புறங்கூறலுக்கும் பயன் இருந்திருக்கிறது

பிற மனித  சிற்றினங்களை வென்று அழித்துத்தான் இப்போதைய மானுடம் நின்றிருக்கிறது.  ஹோமோ சேப்பியன்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அரேபியாவிற்கு பெயர்ந்த போது அங்கே முன்பே சில லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நியண்டர்தால் எனும் வேறொரு ஹோமோ சிற்றினத்துடன் கலந்தனர்; அல்லது அந்த இனத்தை அழித்திருக்கலாம். இவ்விரண்டு கொள்கைகளுக்கிடையே அறிஞர்கள் பிரிந்து நிற்கின்றனர். ஆயினும் மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய மக்களில் 1 முதல் 4 விழுக்காடு நியண்டர்தால் மரபணு கலந்துள்ளது. கிழக்காசியாவின் ஹோமோ எரக்டஸ் ,ஆஸ்திரேலியாவின் டெனிசோவன்கள், ப்ளாரன்ஸ் தீவின் போளோரோஸன்ஸிஸ் சிற்றினம் – இவை அனைத்துடனும் சிறிது கலந்தும் மீதியை அழித்தும் ஹோமோ பேரினத்தின் ஒரே சிற்றினமாக சேப்பியன்ஸ் நிலைபெற்றது. ஆயினும் பெரிய மூளையும் வலிமையும் கொண்ட நியண்டர்தால்களை சேப்பியன்கள் எப்படி வென்றனர் என்பது

வரலாற்றின் புதிர்தான்.

வெவ்வேறு சிற்றினங்களும் ஒரு காலத்தில் வெவ்வேறு தொகைகளாக (population)  இருந்து, கால ஓட்டத்தில் தனி உயிரியல் சிற்றினமாக கிளைத்தன என்பது முக்கிய அவதானிப்பாகும். இனவாதம் வருவதை விரும்பாத அறிவியலாளர்கள் ஜீன் தொகுப்பின் வேறுபாடுகளையும் அடக்கியே வாசிக்கிறார்கள்.சமூகமாக சேர்ந்து வாழத்துவங்கிய மானுடம் கற்பனைகளை உருவாக்கிக் கொண்டது. அனைவரும் நம்பி, பகிரும்இந்த புனைவுகளே (myth ) மானுடம் ஒன்றுபட்டு வெல்ல உதவியது.

10000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேட்டையாடிய ஊனை உண்டு, 10000 ஆண்டுகளாக பயிர்செய்து உண்டு, 200 ஆண்டுகளாக தொழிலாளியாக, அலுவலகம் செல்பவனாக உருவெடுத்த சேப்பியனின் நவீன வாழ்வும், உடையும் கருவிகளும் வரலாற்று நோக்கில் பச்சைக் குழந்தைகள்

எப்படியோ கடல் கடந்து 45000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவை அடைந்தும் 44000 ஆண்டுகளுக்கு முன் வடகிழக்கு சைபீரியாவிலிருந்து நடந்தே வடமேற்கு அலாஸ்கா வழியே அமெரிக்காவில் நுழைந்தும் வினோதமான விலங்கினங்களை வென்றழித்த சேப்பியன்களின் முதல் (அறிவாற்றல்) புரட்சி இவ்வாறு நிறைவடைகிறது.

வேளாண் புரட்சி

10000 ஆண்டுகளுக்கு முன்பு  சிறு பயிர்களை வளர்க்கத் துவங்கினர். தென்மேற்கு துருக்கி- மேற்கு ஈரான் இடையே 8500 ஆண்டுகள் முன்பு கோதுமை மற்றும் ஆடு வளர்ப்புடன் வேளாண்மை துவங்கியது

வேளாண்மையால் மனிதன் அதிகம் பயன்பெற்றான் என்பதை மறுக்கிறார் ஆசிரியர். உணவு, ஊட்டம் காலத்தை மிச்சப்படுத்தவில்லை . மக்கள் தொகை வெடிப்பு, நிலவுடைமை சமுதாயம், சுரண்டல் காரணமாக விவசாயி தனது முன்னோரான வேட்டை சமுதாயத்தாரை விட குறைந்த உணவையே பெறமுடிந்த்து

வெறும் காட்டுப் புல்லாக இருந்த கோதுமை திடீரென உலகில் பரவியது. மனிதனை ஆட்டிப் படைக்கத் துவங்கி விட்ட்து. நில சீரமைப்பு, பூச்சிக்காப்பு, நீர் மேலாண்மை, தாவர நோய்கள்  என மனிதன் மிகவும் பரபரப்பானவனாகி விட்டான். வேட்டையாடி வந்ததை கூட்டாக அமர்ந்து உண்டு, குறைந்த வேலை, நிறைந்த ஓய்வு என்றிருந்தவன் இப்போது விளைநிலத்தில் கட்டப் பட்டு விட்டான். ஓய்வு கிடைத்தது. யாருக்கெனில் மிகச்சிலருக்கு. ஆனந்தமாக வேட்டையாடிக்கொண்டிருந்த சேப்பியன் வேளாண்மையால் தண்ணீர் வாளியைத் தூக்கிக் கொண்டான். மக்கள் தொகை 50 லட்சத்திலிருந்து 25 கோடியாக உயர்ந்துவிட்ட்து

ஆட்சியாளர்கள் உருவாயினர். விவசாயியின் உபரியில் ஆதிக்கம் செலுத்தினர். அரசர், அதிகாரிகள், வீர்ர்கள், குருமார்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் அரசியல்,  போர்க்கலை, தத்துவம் மூலம் சுரண்டலைத் துவங்கிவிட்டனர்.

கிராமம் உருவாகி, மெல்ல நகரமாகி , பெருநகரமானது.  1770 இல் உலகின் பெருநகராக பாபிலோன் திகழ்ந்தது புதிய அரசுகளும் வணிகப் பாதைகளும் உருவாயின. சட்டம் உருவானது. பெண்கள் ஆண்களின் சொத்துகளாக கருதப்பட்டனர் . புகழ்பெற்ற சட்டமியற்றியவரான ஹமுராபியின் நீதி முறையில் ஒருவன்  மற்றொருவனின் அடிமைப் பெண்ணைக் கொன்றால் உரிமையாளருக்கு 20 ஷெகல் வெள்ளி தந்தால் போதும்.

பெருங்கற்கால நடுகற்கள் காஷ்மிரிலிருந்து ஐரோப்பா வரை பரவி இருந்ததையும் காரணம் தெரியாத , முன்னோரின் மவுன மொழியான அவற்றின் முன் திகைப்புடன் நின்றிருந்ததையும் இமயச்சாரல் தொடரில் ஜெ பதிவு செய்திருப்பார். (ஆனால் இணையத்தில் அகழ்விடத்தின் சதுரக் களம் மட்டுமே படமாக உள்ளது. 15 அடி கல்லைக் காணக் கிடைக்கவில்லை – பதிவு நாள் 10.8.2014)

துருக்கியின் Gobekli Tepe என்ற இடத்தில் 50 டன் எடையும் 30 மீட்டர் உயரமும் கொண்ட பெருங்கற்கள் புதைபொருளாய்வில் கண்டெடுக்கப் பட்டதை குறிப்பிடுகிறார் ஹராரே.  இவற்றை அமைத்த வேட்டையாடிய முன்னோர்கள் நாம் அறியாத யாதொன்றை அறிந்து உணர்ந்தனர் என்ற வினாவே வரலாற்று வாசிப்பின் பயனும் கிளர்ச்சியும்.

வேளாண்மையால் மானுடம் பல சிக்கல்களுடன் விரிந்து வளர்ந்தது. சமூக அடுக்குகள் பெருகின.  புனைவுகளும் myth களும் வளர்ந்தன. கலாச்சாரம் என்பதே செயற்கையாக உருவாக்கப் பட்ட உணர்ச்சிகளின் வலைப்பின்னலே என்கிறார் ஆசிரியர் . சிறு பண்பாடுகள் மெதுவாக இணைந்து பெரிய சிக்கலான நாகரிகங்களை உருவாக்குகின்றன. வெடித்து வளர்ந்தாலும் மானுடம் ஒருமையை நோக்கியே பயணிக்கிறது. நம் நாட்டில் சாதிகள் பகுக்கப் படவில்லை , தொகுக்கப் பட்டிருக்கின்றன என்ற ஜெ யின் பதிவு ஒப்பு நோக்கத்தக்கது.

மானுடத்தை ஒன்றுதலை நோக்கி செலுத்திய மூன்று முக்கிய விசைகள் பணம், பேரரசுகள்  மற்றும் மதம் என்கிறார் ஆசிரியர்.  பேரரசுகள் இரு முக்கியப் பண்புகள் கொண்டுள்ளன. வெவ்வேறு வகையான மக்கள் கூட்டங்களை ஆள்வது மற்றும் விரிந்துகொண்டே இருக்கும் எல்லைகள். நிலையான அரசைத்தருவதே பேரரசுகளின் முக்கியப் பங்களிப்பாகும் வெல்லப்பட்ட சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக மைய சமுதாயத்தில் உள்ளிழுக்கப் படுகின்றன.

வரலாற்றின் முதல் பேரரசு கி மு 2250ல் ஆண்ட அக்காடியன் அரசு- பேரரசர் சார்கன் மெசபடோமியாவிலிருந்து கொண்டு, தான் உலகை ஆள்வதாக சொல்லிக் கொண்டார். ஆனால் இதன் எல்லையோ பாரசிக வளைகுடா முதல் மத்தியதரைக்கடல் வரை தான்.

பேரரசர்கள் குடிகளின் காவலர்களாகவும் சமத்துவம் கொண்டவர்களாகவும் திகழ்ந்திருக்கின்றனர். பாரசிக மன்ன்ன் சைரஸ் உலகின் நலத்திற்காக உலகை ஆள்வதாகச் சொன்னார். யூதர்களை அவர்கள் அகதிகளாக இருந்த பாபிலோனில் இருந்து குடியேற அனுமதித்து கோயிலைக் கட்டிக்கொள்ள அனுமதித்தார்.

மதம் மக்களைப் பிரிக்கவில்லை; இணைத்திருக்கிறது என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு மதமும் காலப்போக்கில் மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறது என்கிறார். ஒரு கடவுள் கொள்கையை அடிநாதமாகக் கொண்ட கிறித்துவம், தீமைகளை விளக்க சாத்தான் – கடவுள் (இருமைத் தத்துவம்), புனிதர்களை வழிபடல் மூலம் (மறைமுகமாக) பலகடவுள் வழிபாடு, மற்றும் பேய் நம்பிக்கைகள் மூலம் ஆவியுலகக் கோட்பாடு என அனைத்து அம்சங்களையும் தன்னுள் இழுத்துக் கொண்டது. (syncretism)

மானுடத் துன்பம் தீர புத்தரின் தீர்வு வேட்கையை விடுதல். மதங்களைப் பொறுத்தவரையில் ஆசிரியர் ஆழமான தத்துவ ஆய்வில் புகவில்லை. ஒரு நக்கலான நம்பிக்கையற்றவரின் பார்வையை வைக்கிறார். நூலின் நோக்கம் , மதம் ஒட்டுமொத்த மானுடத்தின் மீது செலுத்திய ஆளுமையை அறிவது தான். அறிவியல் புரட்சியால் மானுடன் ஆயுதங்கள், நாடுபிடித்தல், ரயில் பாதைகள், இயந்திரங்கள் என நவீனமாகத்துவங்கினான்..

ஐரோப்பாவை விட அதிக வலிமையும் அறிவுத்தளமும் கொண்டிருந்த அரேபிய, சீன சமுதாயங்களில் வெளிப்படாத அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஐரோப்பாவில் மட்டும் சாத்தியமாகக் காரணத்தை ஆராய்கிறார் ஆசிரியர். பிற சமுதாயங்கள் அனைத்தும் அறியப்பட்டு விட்டன் என்று மனத்தை மூடிக்கொண்டபோது ஐரோப்பியன் தனக்குத் தெரியாதவை உள்ளன என்ற புரிதலும் அவற்றை அறிந்துகொள்ளும் தேடலும் கொண்டு தேடலை தொழில்நுட்பமாக மாற்றிக் கொண்டுவிட்டான். இதுவே ஐரோப்பா விஞ்ஞானத்தில் கோலோச்சக் காரணம் என்கிறார். ஆனால் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் படித்த “கான்ஸ்டான்டினோபிலை துருக்கி தாக்கியது – அறிஞர்கள் ஐரோப்பாவிற்கு குடிபெயர்தல்  – மறுமலர்ச்சிக்கு வித்திடுதல் குறித்து ஆசிரியர் பேசுவதாகத் தெரியவில்லை

நாடுபிடிக்கும் போட்டியில் ஹாலந்து- பிரான்சு – பிரிட்டன் –ஸ்பெயின் இடையே மாறிவந்த சமநிலைகளை சுவைபட விவரிக்கிறார்.  உள்நாட்டு அமைதியின்மையால் ஹாலந்து பந்தயத்தில் பிந்தியது. பிரான்சில் நிலவியதை விட அதிகமான ஜனநாயக விழுமியங்களும் சட்டத்தின் ஆட்சியும் இங்கிலாந்தில் திகழ்ந்தன. சூரியன் மறையாத பேரரசின் வெற்றிக்கு அதன் சமூக அமைப்பு முக்கியக் காரணம். பிரான்சில் 1717 இல் பதினைந்தாம் லூயியின் நண்பரான ஜான் லா  என்பவர் அமெரிக்காவில் தங்கவேட்டை நடத்த மிசிசிபி என்னும் கம்பெனியைத் துவங்குகிறார். இவரே பிரான்சின் ரிசர்வ் வங்கித் தலைவர் மற்றும் நிதி அமைச்சர். {அம்பானியையே நிதிஅமைச்சராக்கியது போல) . செயற்கையாக கம்பெனியின் பங்குகளை வீங்க வைக்கிறார். குமிழ் வெடித்து பங்கு விலை விழும்போது முட்டுக்கொடுக்க அதிகம் கரன்சிகளை அடித்து இறக்குகிறார் ரிசர்வ் வங்கி தலைவர் லா. அதனாலும் பயனில்லை பங்கு விலை தரையைத் தொடும்போது பிரான்சின் பொருளாதாரம் பாதாளத்தில்.  பின் மன்னர் 150 ஆண்டுகளாக்க் கூடாமல் இருந்த பாராளுமன்றத்தைக் கூட்ட , பிரெஞ்சு புரட்சிக்கு வித்திடப்படுகிறது.

முதலாளித்துவப் பொருளியலில் பங்குச் சந்தையே கோயில். நவீன பொருளியலில் சந்தையும் அரசும் மனிதனை தனிமனிதனாக்கி , குடும்பம் – சமுதாயத்தின் பிடிகளிலிருந்து தளர்த்தி , ‘எனக்கு வேலை செய்; உன் தேவையை நான் கவனிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டன.

ஒபியம் போரை கோடிட்டுக் காட்டும் ஆசிரியர் சீனாவில் போதை விற்றுவந்த பிரிட்டன் கம்பெனிகளில் முதலீடு செய்திருந்த  பிரிட்டிஷ் M P க்கள் சீன அரசர் நடவடிக்கை எடுத்தபோது ராணியிடம் முறையிட ராணி கப்பலை அனுப்பி  வைக்கிறார். ஒபியம் விற்கும் நற்செயலைத் தொடர்ந்து கொள்ள அனுமதிக்கிறது சீனா

எதிர்கால அறிவியல் எங்கு இட்டுச் செல்லும் எனும் வியப்புடன் முடிக்கிறார். சுய கற்கும் நிரல்கள், மெய்நிகர்,  DNA   நிரல்படம், உணர்வும் உயிரும் கொண்ட கணிணி நிரல்கள் இவை சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றன.

இறுதிப் பகுதியான அறிவியல் குறித்த பக்கங்கள் ஆர்வத்தைத் தூண்டவில்லை. 10000 ஆண்டுக்கு முன்னுள்ள பழைய செய்திகளின் மணம் இதயத்தை நிறைத்திருக்கிறது

தேசங்கள் அரசுகள் , வளம் , மனிதனின் அடுத்த நகர்வு குறித்த சிந்தனைகளைத் தூண்டும் நூல்.

அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

***

முந்தைய கட்டுரைஇரு விமர்சனங்கள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகலை வாழ்வுக்காக