அரியணைகள்,வாசிப்பு -கடிதங்கள்

காட்சியூடகமும் வாசிப்பும் – ஓர் உரையாடல்

போதைமீள்கையும் வாசிப்பும்

அரியணைச் சூதுகளும் வாசிப்பும்

அரியணைகளும் வாசிப்பும் 1

 

 

அன்புள்ள ஜெ

 

காட்சியூடகத்தை வாசிப்பை அழிப்பது என்று சொல்வது எந்தவகையிலும் பொருந்தக்கூடிய பேச்சு அல்ல.  காட்சியூடகம் நாம் அறியாத உலகத்தை நமக்கு உருவாக்கிக் காட்டுகிறது. நாம் இன்றைக்கு கற்பனைகள் இல்லாத சமூகமாக ஆகிவிட்டோம். புறவுலகம் யதார்த்தமானது. அது இரும்பு போல நெகிழ்வில்லாததாக உள்ளது. இந்தவகையான கதைகள் காட்டும் கதைஉலகம் நம்மை ஓர் கற்பனை உலகில் வாழச்செய்கிறது . அதன்வழியாக வாழ்க்கையின் பல தளங்களை நாம் கண்டடைகிறோம். அது நம் சிந்தனையை வளர்க்கவே செய்கிறது என்பது என் எண்ணம்

 

மேலும் பலகோடிப்பேர் இதை பார்க்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உண்மையையே அடைகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையான கதாபாத்திரத்துடன் தான் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அக்காலத்தில் பொன்னியின் செல்வன் வெளிவந்தபோது பலர் அதை இழிவாகப்பேசினார்கள். அவர்களெல்லாம் கிளாஸிக் எழுத்தை முன்வைத்தார்கள். இன்று பொன்னியின் செல்வன் ஒரு கிளாசிக் ஆக நிலைகொண்டிருக்கிறதென்பதை எவராலும் மறுக்க முடியாது

 

காட்சி ஊடகமாக இருந்தாலும் இவ்வளவு பெரிய புனைவு மக்களிடையே செல்வதும் மக்கள் அதில் வாழ்க்கைநடத்துவதும் மிகச்சிறந்த விஷயம். அது இலக்கியவாதிகளுக்குப் பிடிக்காமலிருப்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். எழுத்துவடிவ கிளாஸிக்குகள் காலாவதியாகிவிட்டன. இனி இம்மாதிரியான காட்சிவடிவ கிளாஸிக்குகளே உலகில் நிலைகொள்ளும்

 

செல்வ கணேஷ்

 

 

 

ஜெ

 

மேலும் மூன்று கடிதங்கள். மூன்றாவது கடிதம் இன்ப அதிர்ச்சி. பிரியமுள்ள அண்ணன், மலேஷியா எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள் பாராட்டி ஊக்கமளித்து எழுதிய கடிதம். முந்தய இரண்டும் வழமை போல  GOT  ரசிக இலக்கியர்களின் முறைப்பே . அதிலும் சுனில் குறித்த பிலாக்கணம்.

 

நண்பர்களுக்கு என்னதான் பிரச்னை? விருது பெற்ற சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை தொகுதிக்கு நூலக ஆணை கிடைக்கவில்லை. ஆனால் அதே சமயம் அந்தத் தொகுதி அவர் விருது பெற்ற நாள் முதல் பைரேடட் காப்பியாக இணையவெளியில் இலவசமாக கிடைக்கிறது. ஒரு இலக்கிய வாசகனின் பிரச்னை இதுவாகத்தானே இருக்க இயலும்.? இதுதானே சூழலின் சரிவு? சுனில் தொகாதொடர் ரசிகராக இருப்பதா சரிவு?

 

எஸ்ரா கனவுகளுடன் துவங்கிய பதிப்பகத்தின் அத்தனை நூல்களும், விரும்பிய கோப்பு வடிவில் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் மொத்த நூல்கள்,காலச்சுவடு பதிப்பகத்தின் பெஸ்ட் செல்லர்கள் அனைத்தும் இலவசமாக விரும்பிய கோப்பு வடிவில் தரவிறக்கிக்கொள்ளக் கிடைக்கிறது.

 

இந்த சூழலில் அமேசான் பெரும் விளம்பரம் இலவசம் வழியே, புதிய எழுத்தாளர்கள் எனும் பெயரில், பெரும் டெங்குக் கொசு படையையே கொண்டு வந்து இறக்குகிறது. பதிப்பகம் துவங்கி வாசிப்பு சூழல் வரை அனைத்தும் அதன் நசிவின் தீவிர கணத்தில் இருக்கிறது. இந்த சூழலில் நமது காசையும் பிடுங்கிக் கொண்டு நமது  எழுத்தை இடம் பெயர்க்கும் இந்த சீரியல் மீது  அப்படி என்னதான் காதல் நமது வாசக தெய்வங்களுக்கு?

 

வெகுஜன ரசனை என்பதன் எல்லையை ஹாலிவுட் விரிக்கும் முயற்சியில் அது அடைந்த வெற்றியின் சாட்சியமே g o t, கதை திரைக்கதை, நடிப்பு,காட்சியமைப்பு என அத்தனையிலும் ஒரு தீவிர சினிமா ரசனைப் பார்வையாளன் எதை எதிர் பார்ப்பானோ, அதையும் இணைத்து, அந்த ரசிகனுக்கும் சேர்த்து சமைக்கப்படும் வெகுஜன ரசனைப் படமே இன்றைய பெரும்பாலான ஹாலிவுட் படங்கள். அந்தப் பயணத்தின் உச்சமே got. அது ஒரு வெகு ஜன ரசனை சீரியலே அன்றி, வேறில்லை. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள அப்படி என்ன தயக்கம்?

 

நமது பதிப்பு,வாசிப்பு சூழல் மொத்தமும் தரை தட்டி நிற்க, அப்படி நிறுத்தி வைக்கும் காரணிகளில் ஒன்றான got ஐ தலைக்கு மேல் தூக்கி கூத்தாடும் இலக்கிய வாசகனை, தீவிர இலக்கிய எழுத்தாளரை, கொஞ்சம் நுண்னுணர்வு கொண்ட வாசகன் எவனும் மனதுக்குள் இதைத்தான் நினைப்பான். பல வாசகர்கள் இங்கிதம் அறிந்தவர்கள்.வெளியே சொல்ல மாட்டார்கள். எனக்குதான் எந்த எழவும் கிடையாதே வெளியே சொல்லி விட்டேன்.

 

போதும் ஜெ.ஊதும் சங்கை ஊதிவிட்டேன். got ரசிகர் எவரும் தீக்குளிகுமுன் இங்கே இதை நிறுத்திக் கொள்கிறேன்.  :)

 

கடலூர் சீனு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைமாயாவிலாசம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -3