அரியணைகளின் போர் – வாசிப்பு -கடிதங்கள்

காட்சியூடகமும் வாசிப்பும் – ஓர் உரையாடல்

 போதைமீள்கையும் வாசிப்பும்

அரியணைச் சூதுகளும் வாசிப்பும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா.? அண்மையில் அவசரகாலக்கட்டத்தில் வாழும் ஒரு நண்பரைச் சந்தித்தேன். உங்களது தளத்தில் நீங்கள் வேண்டுமென்றே நீட்டி நீட்டி எழுதுகுறீர்கள் என்று கூறினார். இது என்னை சீண்டியது, இருப்பினும் வாசிப்பு என்னும் கடின உழைப்பை பயின்றுக்கொண்டிருக்கும் நான் அதன் மூலம் கிடைத்த நிதானத்திலும் அந்நிதானம் இருந்தால் மட்டுமே சிந்தனை உருவாகும் என்பதாலும் சற்றே நிதானித்து அவரிடம் சிலவற்றை பகிர்ந்துக்கொண்டேன்.

எந்த காலகட்டமாக இருந்தாலும் ஒரு வருடம் ஒரு நாளாக மாறிவிடாது. கருத்தரித்த ஒரே நாளில் குழந்தை பிறந்துவிடாது. பிறந்த குழந்தை மறுநாளே வளர்ந்து வேளைக்கு சென்றுவிடாது. இதுபோன்ற நிகழ்வுகள் அதன்ப்போக்கில்தான் செல்லும். அப்படிதான்  மொழியூடகமும். அவசரகாலக்கட்டம் என்பது ஒருவித மாயைதான். மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜியும் கூட. அதில் நாம் இயந்திரமாகவே இருந்திட வேண்டும் மாறாக சிந்திக்கத் தொடங்கினோம் என்றால் ஒன்று அதிலிருந்து வெளியேறிவிடுவோம் அல்லது வெளியேற்றப்பட்டுவிடுவோம்.

ஒருவர் நமக்காக நேரம் எடுத்து எழுதுகிறார் என்றால் அதை நினைத்து பெருமைக்கொள்ள வேண்டும் அல்லது அதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இவ்விரண்டும் ஒத்துவரவில்லை என்றால் விலகிச் சென்றிட வேண்டும். ஏனெனில் அவ்வெழுத்துக்கள் பல வாசகர்களின் பற்பல கேள்விகளுக்கு பதில் அளித்தும் அவர்களை அக்கருத்துக்கள் மீதான சிந்தனைகளில் இட்டுச்செல்லும், என்றேன்.

அவர் எதற்காக இதையெல்லாம் என்னிடம் கூறுகிறீர்கள் என்று கேட்டார். எனது பேச்சுத்திறனை பரிசோதித்து பார்த்தேன் என்று கூறியபடி நகர்ந்தேன்.

நன்றி,

த. செந்தில் வேல் கண்ணன்

***

அன்புள்ள ஜெ

இன்றைய வாசிப்பு பற்றிய பல எண்ணங்களை நீங்கள் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி எழுதிய கட்டுரை அளித்தது. ஒருவர் சுருக்கமாகச் சொல், ஒரே காட்சியில் காட்டிவிடு என்றெல்லாம் சொல்கிறார் என்றால் அது பொறுமையின்மையை மட்டுமே காட்டுவது அல்ல. அதற்குப்பின்னால் உள்ள மனநிலை சிக்கல்களைப் பார்த்து எரிச்சலடைவது. எதையும் எளிமையாக அணுகுவது. எதையும் எளிமையாக அணுகும் மனநிலை கொண்டவர்கள் எல்லாமே உண்மையில் எளிமையானவைதான், வேண்டுமென்றேதான் சிக்கலாக ஆக்கிக்கொள்கிறார்கள் என்று வாதிடுவார்கள். இதை நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன்.

பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும்போது எளிமையாக புரிந்துகொள்ளும் வழி ஒன்று உண்டு. இது கணக்குப்பாடங்களுக்கு பொருந்துவது. தத்துவத்துக்கும் பொருந்தலாம். அதாவது பிரச்சினைகளை முடிந்தவரை எளிமையாக்கி அதன் மையமுடிச்சை பிடிப்பது. அதன்பின் அதை சிக்கலாக விரிக்கலாம். இதேபோல ஒரு விஷயத்தை விளக்கும்போதும் மையத்தை சொல்லிவிட்டு அதன்பின் விரிவாக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் பிரச்சினையே அவ்வளவுதான் என நினைத்தால் அது அறிவின்மை.

நம்முடைய கல்விமுறை மிக எளிமையாக்கப்பட்ட ஒரு சித்திரத்தை எல்லாவற்றுக்கும் அளிக்க முயல்கிறது. இவ்ளவுதாண்டா விஷயம் என்று வகுப்பில் சொல்லவேண்டியிருக்கிறது. அது எல்லாமே இவ்வளவுதான் என்று பையன்கள் நினைக்க வைக்கிறது. நான் புகழ்பெற்ற சில நாவல்களின் சினிமா வடிவங்களைப் பார்க்கையில்தான் அவை எவ்வளவு சுருக்கப்பட்டு எளிமையாக ஆக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டேன். எனக்கு அது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. ஆனால் அந்த மீடியாவின் வழி அது. அதற்கு ஒரு ரோல் எங்கும் உண்டு. ஆனால் அது அல்ல அறிவின் வழி. அறிவு என்பது ஒவ்வொன்றையும் முழுமையாகப் புரிந்துகொள்வது. முழுமையாகப் புரிந்துகொள்வது என்றால் சிக்கலாகப் புரிந்துகொள்வதுதான்.

சத்யமூர்த்தி

***

முந்தைய கட்டுரைஅமேசான் குப்பைகள்
அடுத்த கட்டுரைசெல்பேசித் தமிழ் -கடிதங்கள்