மாயாவிலாசம் -கடிதங்கள்

 

இந்தப் பதிவிற்காக எவ்வளவு வருடங்கள் காத்துக்கொண்டுருந்தேன் !!!

 

மென்பொருள் என்ற சொல்லே ஒரு தனி பரிமாணம் அல்லவா ? அதைப் பற்றி இதுவரை நீங்கள் எதுவும் எழுதியதில்லை.

 

ஆனால் நீங்கள் சொல்வது போல ‘ அது புறவயமாக ஒரு கருவியில் ஏற்றப்பட்ட உள்ளத்தின் ஒரு செயல்பாடு’ – அது ஒரு சவால், கலைவெளிப்பாடு போல, ஒவ்வொரு மென்பொருளிலும் எவ்வளவு சாத்தியமாகியிருக்கிறது என்பதைத் தான் பார்க்கமுடியும்

 

என்னளவில், பல மென்பொருள்களில் உள்ள undo option என்பதை முதன்முதலில் வடிவமைத்தவன் காலத்தின் விதிகளை மீறி திரும்பச்செல்லும் விழைவு கொண்டிருந்திருப்பான் என்று தோன்றும். இன்னும் ஆயிரம் வருடங்களில் இந்த undo optionக்கும் காலத்திற்கும் உள்ள கடக்க முடியாத இடைவெளி மனிதனை மிகவும் படுத்தும் என்று படுகிறது

 

அன்புடன்
மது

 

 

அன்புள்ள ஜெ

 

நகைச்சுவையும் இன்னொரு பக்கம் தீவிரமும் கலந்தது மாயாவிலாசம் என்னும் கட்டுரை. உண்மையாகவே இன்றைய பிரம்மாண்டமான தகவல்தொழில்நுட்பமும் அதிலுள்ள மென்பொருட்களும் ஒன்றாக இணைந்து நம் சிந்தனையை கட்டுப்படுத்துகின்றன. நாம் என்ன வாங்கவேண்டும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதுடன் எந்தெந்த சேனல் வழியாகச் சிந்திக்கவேண்டும் என்பதையும் அவையே முடிவெடுக்கின்றன அவற்றை உருவாக்குபவர்கள் மறைமுகமாக நம் சிந்தனையை வடிவமைக்கிறார்கள்

 

ஏற்கனவே இதை நான் கவனித்திருக்கிறேன். நான் குழந்தைகளை பார்க்கும்போது அவர்கள் இப்போது வரும் அனிமேஷன் படங்களில் இருந்து அசைவுகளை அறியாமல் இமிடேட் செய்கிறார்களோ என்று தோன்றும். அவர்களிடமிருக்கும் வன்முறையும் அங்கிருந்து வருகிறதா என்று தோன்றும்

 

இந்த கம்யூட்டர் கேம்ஸ் நம் குழந்தைகளின் சிந்தனையை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதெல்லாம் இன்னும் ஆழமாக யோசிக்கவேண்டியது. வன்முறையை மட்டும் சொல்லவில்லை. ஒருவிஷயத்தை எப்படி அணுகவேண்டும் எப்படி பிரச்சினைகளை தொகுத்துக்கொள்ளவேண்டும் என்பதெல்லாம் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி இயற்கையிலிருந்தும் விளையாட்டின் வழியாகவும் கற்றுக்கொள்கின்றன. அதையெல்லாம் ஒன்றாக ஆக்க இவை முயல்கின்றன.

 

இன்றைய மானுட மனம் இந்த மென்பொருட்களால் ஒற்றை மனமாக ஆக்கப்படுகிறது என நினைக்கிறேன். இனி கொஞ்சநாள் கழித்து இந்த மென்பொருட்களால் பாதிப்படையாத ‘பிற்பட்ட’ தொழில்நுட்பம் கொண்ட ஊர்களிலிருந்து புதிய சிந்தனைகள் வந்துசேரக்கூடும். ஏற்கனவே மிதமிஞ்சிய தகவல்தொடர்பு காரணமாக அமெரிக்க ஐரோப்பிய இலக்கியங்களும் கலைகளும் சூம்பிவிட்டன. லத்தீனமேரிக்காவும் ஆப்ரிக்காவும் அவர்களுக்கு மேலான இலக்கியத்தை அளிப்பவையாக ஆகிவிட்டன. அந்தப்போக்கு தொடரலாம்

 

சொ. ராமநாதன்

முந்தைய கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -2
அடுத்த கட்டுரைஅரியணைகள்,வாசிப்பு -கடிதங்கள்