இரு விமர்சனங்கள் – கடிதங்கள்

உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்

நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்

விமர்சனக் கட்டுரைகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

யுவன் சந்திரசேகர் சுரேஷ்குமார இந்திரஜித் இருவருடைய கதைகளைப்பற்றியும் வெளிவந்த கட்டுரைகள் சமீபத்தில் வாசித்த நல்ல விமர்சனங்களாக இருந்தன. பொதுவாக வாசகனே ஏற்கனவே அறிந்திருக்கும் சின்ன விஷயங்களை ஏகப்பற்ற கோட்பாட்டுச் சொற்களுடன் சுற்றிச்சுற்றி சொல்வதாகவே இந்தவகையான விமர்சனங்கள் இருக்கும். நான் விமர்சனங்களை அதிகமாக வாசிக்காமலிருப்பதற்கான காரணம் இதுவே. மாறாக இந்தக்கட்டுரைகளில் விரிவான நுட்பான பல கருத்துக்கள் உள்ளன. நாம் ஏற்கனவே தெரிந்துவைத்திருப்பவற்றை வேறு ஒரு தளத்தில் தொகுத்துக்கொள்ள இக்கட்டுரைகள் உதவுகின்றன.

இரண்டு எழுத்தாளர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமானவர்கள். அதை சுனில் கிருஷ்ணன் அவருடைய கட்டுரையில் சொல்கிறார். யுவன் சந்திரசேகரை சுரேஷ்குமார இந்திரஜித்தின் தொடர்ச்சி என்று நான் நினைக்கிறேன். இருவருமே கதையில் வாசகனுடன் விளையாடுகிறார்கள். விதவிதமாகச் சொல்லிப்பார்க்கலாமே என்றுதான் நினைக்கிறார்கள். இது முக்கியமான விஷயம் என நினைக்கிறேன். இரண்டு கட்டுரைகளுமே ஒரே கட்டுரையின் இரண்டு பகுதிகள் போல இருந்தன.

சிவராம்

***

ஜெ,

சுரேஷ்குமார இந்திரஜித் பற்றிய கட்டுரையில் சுனீல்கிருஷ்ணன் இவ்வாறு எழுதுகிறார்சுரேஷ்குமார இந்திரஜித் உண்மை, பொய், புனைவு, எனும் பிரிவினையை அழித்து வாசகனுடன் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துகிறார். ஒரு வகையில் காலம்காலமாக இலக்கியம் வலியுறுத்தும் சத்தியம், தரிசனம் போன்றவற்றை தலைகீழாக்குகிறது என இவ்வகை கதைகளை சொல்லலாம்.

இது உண்மை. இக்கதைகளை ஆரம்பத்தில் படிக்கும்போது ஏற்பட்ட இரு சிக்கல்கள் இவர் என்ன சொல்லவருகிறார் என்று யோசித்து ஒன்றும் பிடிகிடைக்காமல்போனது. இன்னொன்று இவை உண்மையை சொல்கின்றனவா என்று பார்த்து யதார்த்தமான வார்த்தைகளில் இருந்தாலும் இது யதார்த்தவாதமே அல்ல என்று ஆனது. அதை கடந்து இவற்றை புனைவுவிளையாட்டுக்கள் என்று நினைத்தால் சிறப்பான வாசிப்பாக அமைகிறது

எஸ்.ஆனந்த்

***

அன்புள்ள ஜெமோ

சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளின் சிறப்புகளாகச் சொல்லப்பட்டிருப்பதையே அவற்றின் பிரச்சினைகளாகவும் சொல்லலாம். அவர் மினிமலிஸ்ட் வகை எழுத்துநடை கொண்டவர் எந்த ஆப்சர்வேஷனும் இல்லை. மனமோ புறவுலகமோ நுட்பமாகச் சொல்லப்படவில்லை. நகைச்சுவையும் இல்லை. ஒரு விஷயத்தை வேறு ஒருவகையிலும் சொல்லலாமே என்றுதான் அவருடைய கதைகள் முயல்கின்றன. இது ஒரு இடத்தில் பிடிகிடைத்ததுமே நமக்கு மேலதிகமாகத் தேவையாகிறது. அது ஏமாற்றமாகிவிடுகிறது. இது என்னுடைய அனுபவம். இவருடைய கதைகளில் எங்கெல்லாம் குற்றம் வன்முறை கொஞ்சம் இருக்கிறதோ அங்குமட்டுமே ஆழம் இருக்கிறது. மற்றபடி வரலாறு தத்துவார்த்தமான தன்மை எல்லாமே கொஞ்சம் சல்லிசாகவே உள்ளது

சதீஷ்குமார்

***

முந்தைய கட்டுரைதாது உகு சோலை
அடுத்த கட்டுரைஅறிவடைந்த குரங்கின் கதை- ராகவேந்திரன்