விமர்சனக் கட்டுரைகள் – கடிதங்கள்

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்

உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

 

சமீபத்தில் உங்கள் தளத்தில் வெளிவந்த இரு விமர்சனக்கட்டுரைகள் முக்கியமானவை. சுரேஷ்குமார இந்திரஜித் பற்றிய சுனில் கிருஷ்ணனின் விமர்சனக் கட்டுரை. யுவன் சந்திரசேகர் பற்றிய சுரேஷ் பிரதீப்பின் விமர்சனக் கட்டுரை

 

இப்படைப்பாளிகளைப் பற்றிப் பொதுவாக விமர்சனங்கள் வருவதில்லை. அதிகம்பேர் படிப்பதும் இல்லை. இந்நிலையில் உங்கள் தளத்தில் உங்கள் சக எழுத்தாளர்களைப் பற்றி வந்துள்ள இந்த விரிவான ஆய்வு மதிப்பீடு முக்கியமானது

 

இரு விமர்சனக்கட்டுரைகளுமே மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் அப்படைப்பாளிகளின் எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு எழுதப்பட்டுள்ளன. நான் விமர்சகன் அல்ல. ஆகவே என்னால் அவற்றிலுள்ள நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட முடியாது. ஒரு வாசகனாக அந்தப்படைப்பாளிகளை அணுக எனக்கு அவை உதவியாக இருந்தன என்று மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்

 

எஸ்.சோமசுந்தரம்

 

அன்புள்ள ஜெ

 

நினைவுகளைத் தொடுத்து எழுதும் வரலாறு என யுவன் சந்திரசேகர் கதைகளைப்பற்றி சுரேஷ் பிரதீப் எழுதியிருக்கும் கட்டுரை மிக முக்கியமானது. யுவன் கதைகளை நான் படித்திருக்கிறேன். இந்தக்கோணத்தில் யோசித்ததே இல்லை. ஆமாம், யுவனின் எல்லா கதைகளுமே இப்படி நினைவுகளைச் சொல்லும் வகையில்தான் அமைந்துள்ளன என எண்ணிக்கொண்டேன். நினைவுகளைத் தொடுத்து எழுதும்போது ஊடாக அவர் ஃபாண்டஸியையும் கலந்துகொள்கிறார். ஆகவே அவை சொல்லப்படாத மாற்று வரலாறாக மாறிவிடுகின்றன.

 

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெ

யுவன் சந்திரசேகர் பற்றிய கட்டுரையில் சுரேஷ் பிரதீப் ஜேஜே சில குறிப்புகள் போன்ற நவீனத்துவக் கதைகளில் உள்ள மொழியின் இறுக்கம் மற்றும் பார்வையின் இறுக்கம் ஆகியவற்றைப்பற்றிச் சொல்லியிருந்தார்

ஜே ஜே சில குறிப்புகள் நாவலில் வரும் ஜோசப் ஜேம்ஸ் மீது சில இடங்களில் ஆழ்ந்த பரிதாபம் தோன்றுகிறது. மீட்சிக்கு ஒருவழி தான் இருக்க முடியும் என்ற அவனது இறுக்கமான மூடநம்பிக்கையை தளர்த்தத் தோன்றுகிறது அந்த நாவலை வாசிக்கும் போது. ஒரு வகையில் அக்கால நவீனத்துவ இலக்கியம் அன்றைய கேளிக்கை எழுத்துக்களுக்கு எதிராக நின்றாக வேண்டிய தேவையை ஒட்டி மேலும் தன்னை இறுக்கமாக வைத்திருந்தது என ஊகிக்கலாம்

என்று அவர் சொல்கிறார். ஆனால் யுவன் சந்திரசேகரின் கதைகளின் பிரச்சினை என்று எனக்குத்தோன்றுவது அவற்றிலுள்ள விளையாட்டுத்தனம்தான். நம்மிடம் கதைசொல்லி அரட்டையடிப்பதுபோல அவை உள்ளன. சில கதைகளுக்கு அவை பொருத்தமானவை. ஆனால் பலசமயம் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர் முன்வைக்க நினைக்கும் மாற்றுமெய்மை எனப்படும் மாயாஜாலம் ஒரு விளையாட்டுத்தானோ என நினைக்கவைக்கின்றன. அந்தக்கதைகளில் இருந்து உணர்ச்சிகளோ வாழ்க்கைப்பார்வைகளோ உருவாகாமல் அழுத்தமில்லாமல் ஆக்கிவிடுகின்றன. கவித்துவமே கூட ஆழமாக மலராமல் ஆகிவிடுகிறது

 

செந்தில்குமார்

 

முந்தைய கட்டுரைபெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசல்வா ஜூடும் -சா. திருவாசகம்- ஒரு கடிதம்