ஆசிரியன் குரல்

நான் எந்தக் கொள்கைக்கும்,எந்தக் கூட்டத்துக்கும் எப்போதும் தாலிகட்டிக்கொண்டதில்லை.இந்தக் கதையினால் சோஷலிசத்துக்கு என்ன லாபம் என்று கேட்கிறார்கள்.எத்தனையோ சமுதாயப் பிரச்சனைகள் இருக்க,இதை ஏன்  எழுதவேண்டும் என்கிறார்கள். கீழ்வெண்மணியில் உயிரோடு கொளுத்தப்பட்ட நாற்பத்திஐந்து ஹரிஜன விவசாயிகளைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்கிறார்கள். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள குமுறல்களைப் பற்றி எழுதியிருக்கலாமே என்கிறார்கள்.

இவர்களது யோசனைக்கு மிக்க நன்றி என்று சொல்வதைத் தவிர, இவற்றுக்கு என்னிடம் இலக்கியரீதியான வேறு பதில் இல்லை.நான் எழுதியதைப்பற்றி விமர்சனம் செய்ய வந்தவர்கள், நான் எழுதாததைப்பற்றி கேள்விகள் எழுப்புவது, என்ன விமர்சன ஞானம் என்று எனக்குப் புரியவில்லை.என் கதைகளைத் தாண்டி என்னை கணிக்க முற்படுகிற காரியத்தில் பலர் முனைந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட விமர்சனத்தைச் செய்ய வருகிற அனைவருமே தாங்கள் யார் என்பதைத்தான் எனக்கு காட்டிக்கொள்கிறார்கள். தங்கள் அரைவேக்காட்டுப் படிப்பாற்றலையும், தாங்கள் தழுவி இருக்கும் கொள்கைகளின் மேல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறிமயக்கத்தையும்,தமுக்கடித்து ஊரறியச்செய்யவேண்டும் என்று நினைக்கிறவர்கள் தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு தமுக்கு இல்லாததனால் ஜெயகாந்தன் என்ற முரசை ஓங்கி முழக்குகிறார்கள். எனக்கு இதில் மகிழ்ச்சியே.

மேலும் இந்த முரட்டு விமர்சகர்களில் பலர் கொட்டி முழக்குவது, தங்களது குருட்டுத்தனத்தைத்தான். அதற்கு மேல் எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கட்டிவிடவேண்டும் என்ற இவர்களது ஆத்திரமும் தெரிகிறது. ‘சமுதாயம் உன்னைத் தூக்கி எறிந்துவிடும்’ என்று எச்சரிக்கை விடுக்கிற,[ black mailing ] மிரட்டும் தோரணையும் தெரிகிறது. இந்தத் தவறுகளை இவர்கள் தெரியாமல் செய்கிறார்கள் எனில், இவர்கள் தெளிவு பெறுவதற்காகச் சில விஷயங்களை இங்கே சொல்வதற்கு, எனது பெருந்தன்மை இடந்தருகிறது. ஏனெனில் இப்படிப்பட்ட விமர்சனங்களில் இறங்கிய அத்தனைபேருமே என்னைப் பற்றிய தப்பபிராயத்துக்கு இரையாகியிருக்கிறாகள்.

நான் சமுதாயத்தை உயர்த்துவதற்காக இலக்கியம் படைக்கிறேன், சோஷலிசமே எனது  லட்சியம், புரட்சி ஓங்குக, தொழிலாளி வர்க்கம் ஜிந்தாபாத், நான் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் மக்களுக்காகவே. என்றெல்லாம் எனக்கு நானே கட்டியம் கூறிக்கொண்டு, ராஜநடை போட்டு வருவது என்னைப் பொறுத்தவரை ஒரு கோமாளித்தனமே. இதற்குப் பொருள், அவ்வாறு நடைபோட்டு வருகிறவர்களை நான் கோமாளிகள் என்று கருதுகிறேன் என்பதல்ல. அவர்கள் ராஜபார்ட்டுகளாகவே இருக்கலாம். ‘நான்’ எந்தப் பார்ட்டுமல்ல ‘நான்’ நான்தான்.

சமுதாயம் என்னைத் தூக்கி எறிந்துவிடும் என்ற பயம் எனக்கு இல்லை. என்னை எதிர்த்து வருகிற கூக்குரல்களில், தூக்கி எறியப்படப்போகிற ஒரு சமுதாயத்தின் மூர்க்கமான அலறலையே நான் கேட்கிறேன்.

என்னுடைய எழுத்து அனைத்துமே சமுதாயப்பிரச்னைகளின்பாற்பட்டதன்றி வேறில்லை. சமுதாயத்துக்கும் எனக்கும் இருக்கிற உறவின் மேல், ‘மனிதனும் சமுதாயமும்’ என்கிற ஒரு முத்திரையைத்தவிர வேறெந்த முத்திரையும் குத்தப்படுவதை நான் சம்மதியேன். இந்த சமுதாயத்தோடு எனக்கு உறவும் உண்டு பகையும் உண்டு. இது வளர்ந்துகொண்டும் இருக்கிறது.அழிந்துகொண்டும் இருக்கிறது.

நான் தனிமனித சுதந்திரத்துக்காக வாதாடுகிறேன் என்பது என்னைப்பற்றிய பிறிதொரு விமர்சனம். தனிமனிதவாதிகள் எல்லாம் சமுதாயத்தின் எதிரிகள் என்று கருதுவது பேதைமை ஆகும். ஓர் அழிகின்ற சமுதாயத்தில், அத்துடன் சேர்ந்தது அழியாமல், நாளை வருகின்ற சமுதாயத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஒருசிலர் தனிமனிதர்களாகவே நிற்பர். சிறந்த தனிமனிதர்கள் உருவாக வாய்ப்பற்ற சமுதாயம் சிறந்த சமுதாயம் ஆகாது.  ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காகப் போராடுகிறதன்மை இல்லாத மனிதத்துவத்துக்கு அர்த்தமில்லை. செக்குமாடுகளை உற்பத்தி செய்கிற சமுதாயம்,தேங்கி அழியும் சமுதாயம் ஆகும்.

ஒரு இலக்கியவாதி என்ற முறையில், இந்த இயக்கங்களையெல்லாம் கடந்த, அல்லது இவற்றோடு சம்பந்தமில்லாத, சம்பந்தமிருந்தாலும் அந்தச் சம்பந்தங்களுக்குச் சம்பந்தமில்லாத, ஒரு அறிவுஜீவி என்கிற தரத்தில் மட்டுமே சில தனிமனிதர்களோடு என்னால் ஓருமைகாண முடிகிறது. இந்தக் காலத்தில் நானோ இவர்களோ தனிமனிதர்களாக இருப்பது தவிர்க்கமுடியாதது. இந்தத் தனிமனிதர்கள்தான் நாளை நிகழவிருக்கும் ஓர் அறிவியக்கத்தின் முன்னோடிகள் என்று நம்புகிறேன்.

ஆகையால் இந்தக் காலச் சூழ்நிலையில், இந்த தனிமனிதத்துவம் காப்பாற்றப்படவேண்டும் என்ற பிரக்ஞ்ஞையுடன் நான் வாழ்கிறேன். இந்தத் தனிமனிதத்துவம் தனிமனிதத்துவத்துக்காக அல்ல, இந்தத் தனிமனிதத்துவமும் சமுதாயத்துக்காகவே. நான் சமுதாயக் கண்ணோட்டமுடைய ஆனால் சமுதாயம் என்கிற பேரில் காட்டுகிற சலசலப்புக்கு அஞ்சாத தனிமனிதன்.

‘நான்’ என்று சொல்வதே எனது தன்னகங்காரத்தைக் காட்டுகிறது என்று சொல்ல வருகிறவர்கள், தங்கள்மீதே மரியாதை அற்றவர்கள் என்று நான் கருதுகிறேன். ‘நான்’ பற்றி எத்தனை விமர்சனங்கள்! ”நான்’ என்பது ஈகோ என்பாரும், அநித்தியம் என்பாரும். என்னைப்பொருத்தவரை ‘நான்’ என்பது ஈகோ எனின், இந்த ஈகோதான் மாயை எனின், இந்த மாயைதான் பொய் எனின், இந்தப் பொய்தான் அநித்தியம் எனின், இந்த அநித்யம்தான்  சாஸ்வதமான, மெய்யான, உன்னதமான வாழ்கையின் அர்த்தம் ஆகும்.

”அஹம் பிரம்மாஸ்மி” நான்தான் பிரம்மம்.”நான்” என்று பேசும்போது நான் உன்னையோ நம்மையோ மறக்கவில்லை. நான் உன்னில் ஓர் அங்கம்தான்.ஆனால் நான் உன்னோடு அழிகிற அங்கம் அல்ல. உன்னை அழிக்கிற அங்கம். நான் உன்னை அழித்து,இன்னொன்றை உருவாக்குகிற அங்கத்தின் அம்சம்.  இருக்கும் உன்னோடு எனக்கிருக்கும் உறவை விட, இனி உருவாகப்போகிற அதற்கும்,  எனக்கும் இருக்கும் நெருக்கம் அதிகம். நான் அப்போது இல்லாமல் போகலாம். ஆனால் நான் பிரதிநிதித்துவம் கொள்கிற அந்த ‘நான்’ அதில் ஓர் அங்கமாக இருக்கும். எனவே நீ என்னைத் தூக்கி எறிந்துவிடுவாய் எனும் அச்சுறுத்தலுக்கு நான் பயப்பட மாட்டேன். நீ தூக்கி எறிந்தவர்கள் எல்லாம் ‘சிறப்பான எதிர்காலம்’ என்ற தூரத்திலே போய் விழுந்து ‘சிரஞ்சீவியாய்’ நிற்கிறார்கள். உன்னோடு சேர்ந்து உன்பேரால் ஆடியவர்கள் எல்லாம், உன்னோடு சேர்ந்தே காலப்புழுதியில் கரைந்தார்கள். எனவே என்னிடம் யாரும் சமுதாயப் பூச்சாண்டி காட்டவேண்டாம்….

[ அறுபத்தி ஒன்பதில் அவரது ரிஷிமூலம் தொகுதிக்கு, ஜெயகாந்தன் எழுதிய நெடிய முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்ட  பத்தி  ]

இனிய ஜெயம்,

ஜெயகாந்தன் இன்றும் இருக்கிறார். என்றும் இருப்பார். அவர்  மலை. மலைக்குத்  திணிவும், பொருண்மையும், சாரமும், இடமும்,இருப்பும்,வரலாறும் உண்டு, காலப் புழுதி கரைத்தழித்த  அந்த பரிதாபதுக்குரியவர்களின்  முகவரி யாருக்கு இங்கே தெரியும்? ஜெயகாந்தன் எனும் பெயருக்கு பதில் இன்று அந்த பத்திக்குக் கீழே ஜெயமோகன் என்று போட்டுக் கொள்ளலாம். ஜெயகாந்தன் அன்று  எந்தச் சிகரமாக நின்று எதை சொல்லிக் கொண்டிருந்தாரோ, அதையே இன்று அதே சிகரமாக நின்று ஜெயமோகனும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அரை நூற்றாண்டு கடந்த பின்னாலும், காலத்தின் முன்னால்  ‘நான்’ என்ற படைப்பாளியின் தன்னிலை நிமிர்வு, காலம் கடந்தபின்னும் வாழும் அத்தகு எழுத்தாளனின் சொல், இதற்கு எதிராக எழும் ஓலம், அந்த ஓலத்தைக் கரைத்தழிக்கக் காத்திருக்கும் காலப்புழுதி,…. எதுவுமே மாறவில்லை .  :)

கடலூர் சீனு.

முந்தைய கட்டுரைகரடி பற்றி…
அடுத்த கட்டுரைநிகரற்ற மலர்த்தோட்டம்