ஜப்பான், ஒரு கீற்றோவியம் -6

 

ஹிரோஷிமா- நாகசாகி இரு ஊர்களும் நாம் பள்ளிப்பாடங்களிலேயே அறிந்தவை. சேர்த்துப் படித்து ஒற்றை ஊராகவே நம் மனதில் நின்றிருப்பவை. நான் ஆறாம்வகுப்பு பாடத்தில் படித்த அந்த இரண்டு பெயர்களுக்கு அப்பால் உண்மையில் அங்கு  நிகழ்ந்ததென்ன என்பதை புரிந்துகொண்டது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது வாசிக்க நேர்ந்த டாக்டர் தகாஷி நாகாயி எழுதிய த பெல்ஸ் ஆஃப் நாகசாகி என்ற புத்தகத்தின் தமிழாக்கம் வழியாக. [நாகசாகியின் மணிகள்] அந்நூல் பேர்ல் பதிப்பகம் வழியாக வெளிவந்ததா என ஓர் ஐயம். பின்னர் அந்நூலைப் பார்த்ததே இல்லை

 

டாக்டர் தகாஷி நாகாயி நாகசாகியில் வாழ்ந்தவர். அணுகுண்டு வீச்சிலிருந்து உயிர் தப்பியவர். அணுகுண்டு மையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி அவருடைய ஆய்வகம் இருந்தமையால் ஒரு வெப்ப அலையுடன் அவர் உயிர் தப்பினார். ஆனால் உயிர் பிழைத்தவர்கள்  இறந்தவர்களை விட கொடிய துயர்களை அனுபவிக்க வேண்டியிருந்ததை. பின்னர் உணர்ந்தார். கதிரியக்கத்தால் அவர் உடல் பாதிக்கப்பட்டது. அவர் உடல் முழுக்க கொப்பளங்கள் வெடித்தன. உறுப்புகள் வீங்கி பிரம்மாண்டமாகி சீழ்கட்டத் ஆரம்பித்தன. உயிருடன்  உடல்  கொஞ்சம் கொஞ்சமாக அழுகி சிதைந்து  அழிய அவர் மறைந்தார். அந்த துயர நாட்களில் அவர் எழுதிய சிறிய புத்தகம் இந்த நூல்.

 

தகாஷி நாகாயி

நோயுற்று இறக்கும்போதே தகாஷி நாகாயி எழுதிய இந்நூல் 1949ல் வெளிவந்தது. அப்போது ஜப்பானை ஆக்ரமித்திருந்த அமெரிக்க ராணுவம் இதில் பின்னடைவாக ஜப்பான் பிலிப்பைன்ஸில் செய்த போர்க்கொடுமைகளைச் சேர்த்தால்தான் பிரசுரிக்க அனுமதிப்போம் என்று சொன்னது. அவ்வாறே நூல் வெளிவந்தது. பின்னர் அப்பின்னடைவு நீக்கப்பட்டது. திரைப்படமாகவும் இந்நூல் வெளிவந்துள்ளது.

 

இதில் இன்றும் நினைவில் நிற்க கூடிய இடம் ஒன்று உண்டு அணுகுண்டு வெடிக்கும்போது அது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. பின்னர் அது தெரிய வரும்போது அவருக்கு மிகப்பெரிய ஆனந்தம்தான் முதலில் ஏற்படுகிறது. ஏனெனில் அவரும் இயற்பியலாளர். அணுகுண்டு வெடிப்பு என்பது சாத்தியம் தான் என்று நிறுவப்பட்டது, மனிதன் அணுவைப் பிளந்துவிட்டான், உலகத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய பாய்ச்சல், அறிவியலின் மிகப்பெரிய சாதனை… முதலில் அதை துள்ளிக் குதித்து கொண்டாட வேண்டுமென்று அவருக்குத் தோன்றுகிறது.

 

பின்னர் அந்தத் துயரை அடையும்போது கூட அவர் அந்த அறிவியல் கண்டுபிடிப்பின் வெற்றியை மறுக்கவில்லை மாறாக அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றுதான் சொல்கிறார். இது மதங்கள் உருவாக்கும் மாயைக்கு நிகரானது என்று எனக்கு தோன்றியது மதங்கள் எந்த அழிவை உருவாக்கினாலும் எந்த அளவுக்கு  மனிதனை இருளில் ஆழ்த்தினாலும் அதன் நம்பிக்கையாளர்கள் அவற்றை கைவிடுவதே இல்லை. மதம் இழைத்த தவறுகள் அனைத்தும் மதத்தின் தவறுகள் அல்ல அதை கடைப்பிடித்தவர்களின் தவறுதான் என்று தவிர்த்துவிடுவார்கள். மார்க்ஸிய மதம் மிகச்சிறந்த உதாரணம்

இந்த போதைகள் மூளையிலுள்ள கருத்துக்களின் பாதிப்பால் உருவாகுபவை.போதைப்பொருட்கள் மூளையில் உருவாக்கும் பாதிப்பை விட இத்தகைய கருத்துகள் உருவாக்கும் கிளுகிளுப்பும் பாதிப்பும் மிகுதி என்று தோன்றியது  அந்த புத்தகத்தில் படங்களைக்கூட இன்று நான் நினைவுகூர்கிறேன். கறுப்புவெள்ளையில் மையாக ஊறிய படங்கள். ஆனால் அன்று புகைப்படங்களில் இருந்து உச்சகட்ட கற்பனைகளைச்ச் சென்றடைய நான் கற்றிருந்தேன்.

 

 

பின்னர் 1983ல் திருவனந்தபுரம் திரைப்பட கூட்டமைப்பில் ஒரு படம் பார்த்தேன் Hiroshima mon amour.  ஹிரோஷிமா இனி வேண்டாம் எனும் படம் அந்தப்படம் போரின் அழிவைப்பற்றி பிரிந்துசெல்லும் கணவனும் மனைவியும் அமர்ந்து பேசும் வகையில் அமைந்தது. உணர்ச்சிக்கொந்தளிப்பான உரையாடலும் நடுவே வீரியத்துடன் வந்து செல்லும் ஹிரோஷிமாவின் அழிவுக்காட்சிகளும் கொண்டது. என்னை அரங்கிலேயே கைநடுங்க உடல் நடுங்க  மனம் நடுங்க அமரச்செய்த படம் அது  மீண்டும் அந்த படத்தை  காசர்கோடு ஃபிலிம் சொசைட்டியில் பார்த்திருக்கிறேன். அந்த உணர்ச்சிக்கொந்தளிப்பு முதலில் பார்த்தபோது என் கவனத்தில் விழவில்லை. அதில் காட்டப்பட்ட அணுகுண்டுவெடிப்புக் காட்சிகளிலேயே ஆழ்ந்திருந்தேன். பின்னர் பார்த்தபோது அக்காட்சிகளுக்கு அந்த உணர்வலை பொருளூட்டம் செய்தது என புரிந்துகொண்டேன்

 

ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் என்ன நடந்தது என்பதை பின்னர் நூல்கள் ஆவணப்படங்கள் வழியாக கற்பனையை வளர்த்து அணுக்கமாகவே அறிந்திருக்கிறேன். ஆயினும் ஹிரோஷிமா எனும் எதார்த்தம் அளித்த அதிர்ச்சி கொந்தளிப்பும் முற்றிலும் வேறானது. ஹிரோஷிமா இன்று ஒரு நவீன நகரம். 1945 ஆகஸ்ட் ஆறாம் தேதி அங்கே வீசப்பட்ட அணுகுண்டால் முற்றாகவே இடிந்து பாழடைந்துவிட்ட இந்த நகரத்தை கட்டி திருப்பி எழுப்பியிருக்கிறார்கள். பழைய நகரத்தின் சாயல் ஏதுமில்லை இப்போது. இன்றைய ஹிரோஷிமா டோக்கியோ அல்லது ஜப்பானின் எந்த ஒரு நகரத்தைப்போலவே தோற்றமளிக்கிறது. அவை பெரும்பாலும் ஐரோப்பிய நகரங்களைப்போலவே உள்ளன.

 

அணுகுண்டு விழுந்த கருமையத்தில் உண்மையில் பேரழிவு நிகழவில்லை. வெடிப்பின் அழிவு மட்டும்தான் அங்கே உருவானது. அந்த அதிர்வும் வெப்பமும் கதிர்வீச்சும் பரவப் பரவத்தான் அழிவுகள் மிகுந்துகொண்டே சென்றிருக்கின்றன. அணுகுண்டு விழுந்த இடத்தில்  இருந்த ஒரு கட்டிடம் பெரும்பாலும் இடிபாடாக அப்படியே நின்றுகொண்டிருக்கிறது. அதை மட்டும் நினைவுச்சின்னமாக அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள். அதை சுற்றி அமைந்திருக்கும் பூங்காவிலும் சாலையிலுமாக சுற்றிவந்து அதை பார்க்க முடியும். அதன் கட்டிட அமைப்பை தூண்கள் நாட்டி நிலைநிறுத்தியிருக்கிறார்கள்.  குவைக்கூம்பு வடிவக் கூரை கொண்ட பழைய பிரிட்டிஷ் பாணி கட்டிடம் அது.

 

ஹிரோஷிமா ஹிரோஷிமாவை திரும்ப கட்ட் அமெரிக்க அரசு பெருமளவு நிதி அளித்திருக்கிறது. ஒரு வகை வெறியுடன் ஜப்பான் ஹிரோஷிமாவை மீண்டும் கட்டி எழுப்பியிருக்கிறது. இன்று மனிதனின் எல்லையில்லா அழிவுவெறிக்கும் எல்லையில்லா ஆக்கவிசைக்கும் சான்றாக நின்றுகொண்டிருக்கிறது இந்நகரம்

ஹிரோஷிமாவின் அணுகுண்டு அருங்காட்சியகம் நம் எண்ணங்களை பதற வைக்கக்கூடியது. பழைய பழைய ஹிரோஷிமாவின் கருப்பு வெள்ளை புகைப்படங்களிலிருந்து தொடங்குகிறது அருங்காட்சியகம். தொடர்ந்து ஹிரோஷிமா குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மனிதர்க்ளுடைய அழிவுச் சித்திரங்கள். என்ன ஏது என அறியாமலேயே வெந்து உருகி மறைந்தவர்கள். உடல்வெந்த குழந்தைகளின் கதறல். எரிந்து தோல் வழிந்துகொண்டிருக்க அலறி அலையும் மனிதர்கள்.அணுகுண்டுவிழுந்த ஹிரோஷிமாவிலேயே  நின்றிருப்பது போலவே அதிர்வூட்டும் சித்திரங்கள்.

 

வெவ்வேறு குரல்பதிவுகள், ஆவணப்பதிவுகள் அங்கே வைக்கப்பட்டுள்ளன. முதலில் அங்கே என்ன நிகழ்ந்தது என்றே எவருக்கும் தெரியவில்லை. ஆனால் உயிருடன் எரிந்துகொண்டிருந்தார்கள். அந்நிலையிலும் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனை நோக்கி “உதவி! உதவி!” என்று கூவுவதுதான் என்னை நடுங்கச்செய்தது. மனிதன் மனிதனுக்கு இழைத்த பேரழிவு, ஆனால் அக்களத்தில்தான் மாபெரும் மனிதாபிமானமும் சேவையும் வெளிப்பட்டன. கதிரியக்க எல்லைக்குள் அறிந்தே புகுந்து சிகிழ்ச்சை அளித்து உயிரிழந்த மருத்துவர்கள் பலநூறுபேர்.

 

இந்தப் புகைப்படங்கள் வழியாக கடந்து செல்கையில் இன்று ஒரு விஷயத்தை கவனித்தேன் .புகைப்படங்கள் நம் கற்பனையை தூண்டிய காலம் இன்றில்லை. காட்சி ஊடகம் மிகக்குறைவாக இருந்த காலத்தில், புகைப்படங்களே அரிதாக கிடைத்த காலத்தில், ஒரு புகைப்படம் நம்மை கொந்தளிக்க வைத்தது. காட்சி ஊடகம் மிகுந்து தொலைக்காட்சி ஒவ்வொரு நிமிடமும் காட்சியை நமக்கு அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இணையம்  காட்சிகளின் வெளி.

 

விளைவாக காட்சிகள் உட்பொருள் அளிப்பது மிகமிகக் குறைந்துவிட்டிருக்கிறது. எந்த அரிய புகைப்படமும் அரைக்கணம் மட்டுமே நோக்கப்படுகிறது. அதன் வேறுபாட்டை மட்டுமே நாம் காண்கிறோம். கூர்ந்து நோக்கி அதன் குறியீட்டுத் தளம்நோக்கிச் செல்வதில்லை. அது நம் ஆழ்மனதை ஊடுருவ விடுவதில்லை. நம்மை மீறி அது நம் கனவுக்குள் நுழைந்தால்தான் உண்டு. ஆகவேதான் இன்றும்கூட நவீனப் புகைப்படமேதைகள் இணையத்தில் புகைப்படங்களை ஏற்றுவதில்லை. அவை இன்றும் அச்சுநூல்களாகவே வந்துகொண்டிருக்கின்றன

 

நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஹிரோஷிமாவுக்கு வந்திருந்தால் அந்த புகைப்படங்கள் என்னை கொந்தளிக்க வைத்திருக்கும் .இப்போது அவற்றின் மீதாக என் சித்தம் சற்று எளிதாக கடந்து செல்கிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் நேரில் பார்க்க நேர்ந்த பொருட்கள் அளித்த பதற்றம் தீவிரமானது. கருகிய குழந்தைகளின் ஆடைகள் .இரும்புப்பொருட்கள் உருகி மெழுகு போல் மாறிவிட்டிருக்கின்றன. ஓர் ஆஸ்பத்திரியில் வைக்கபப்ட்டிருந்த மருந்து சீசாக்க்கள் உருகி ஒன்றுடன் ஒன்று ஒட்டி ஒரு பளிங்குத்துண்டாக மாறியிருக்கின்றன. அந்த வெப்பம் காதுகளை அனல்கொள்ளச் செய்வதுபோலிருந்தது.

 

பொருட்கள்தான் இன்னமும் குறியீட்டுத்தன்மையுடன் உள்ளன. ஒருவேளை நாளை இவ்வாறு எந்தப்பொருளை வேண்டுமானாலும் மெய்நகல் எடுக்க முடிந்தால், அவற்றையும் சாதாரணமாக எங்கு பார்க்க முடிந்த வகையில் பரப்பிவ்ட்டால், பொருட்களும் நமக்கு ஆழமன அதிர்வுகளை கொடுக்காமலாகிவிடக்கூடும். பொருள் உள்ளாழம் கொள்வது படிமமாகும்போதே. அதனூடாகவே உண்மையில் தொடர்புறுத்துகிறது, செய்தியாக அல்ல. ஒரு பொருள் படிமமாக வேண்டுமென்றால் அது நம் சித்தத்தில் சற்று நேரம் நிற்க வேண்டும். அதைப்பார்த்தவுடன் முதல் அதிர்வு ஏற்படவேண்டும். அதாவது அதை முன் நிறுத்த வேண்டும். Fore fronting என்று கலையில் அதை சொல்கிறார்கள். பொருள் மிகையாகக் கிடைப்பதும் அடிக்கடி கண்ணில்படுவதும். அந்த முன்னிறுத்தலை இல்லாமலாக்கிவிடுகிறது. அதன் சித்தம் குவியாமல் ஆக்கிவிடும். அந்நிலையில் அது படிமமாவதில்லை. வெறும் பொருளாகவோ செய்தியாகவோ நின்றுவிடுகிறது.

சடாக்கோ சசாக்கி சிலை

ஹிரோஷிமாவின் அந்த விரிந்த காட்சியினூடாக ஒரு நாள் முழுக்க அலைந்துகொண்டிருந்தோம். ஒட்டுமொத்தமாக அந்த இடம் ஓர் அறச்சிக்கலை உருவாக்குகிறது. முதலில் நாம் அழிக்கப்பட்டவர்களுடன் நம்மை அடையாளம் கண்டுகொள்கிறோம். பின்னர் நம் ஆழம் அழித்தவர்களுடனும் அடையாளம்கண்டுகொள்ளத் தொடங்குகிறது. வெவ்வேறு தருணங்களில் நாம் அடைந்த போர்வெறியை, எதிரியை முற்றழிக்கத்தக்கவனாக எண்ணியதை நினைவூட்டுகிறது. அது அங்கிருந்து கிளம்பினால்போதும் என எண்ணச் செய்கிறது. அங்கே வெவ்வேறு தலைவர்கள் அங்குவந்தபோது சொன்னவை ஒளிபரப்பப் படுகின்றன. அச்சொற்கள் அனைத்துமே பொய் என தோன்றத்தொடங்குகின்றன

 

இன்னொன்றும் தோன்றியது , ஒரேநாளில் நிகழ்ந்தமையால் ஹிரோஷிமா பேரழிவு என கருதப்படுகிறது – கீழைநாட்டில் நிகழ்ந்தமையால் ஐரோப்பிய மனசாட்சி பெரிதாகச் சீண்டப்படுவதுமில்லை. வென்றநாட்டின் மாபெரும் பிரச்சார வல்லமையால் அது ஒரு போர்முறை மட்டுமே என சொல்லி நிறுவப்படுகிறது. அதை நியாயப்படுத்த ஜப்பான் இழைத்த நான்கிங் படுகொலைகள் போன்ற போர்க்கொடுமைகள் விரித்தெழுதப்படுகின்றன

 

இதைவிட பலமடங்கு எண்ணிக்கையில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தைய இந்தியாவில் பஞ்சங்களில் மக்கள் கொல்லப்பட்டனர். அவை செயற்கைப் பஞ்சங்கள் என இன்று ஐயம்திரிபற நிறுவப்பட்டுள்ளது. அவை எவ்வகையிலும் உலகமனசாட்சியை உலுக்கவில்லை. எவ்வகையிலும் அவை ஆவணப்படுத்தப்படவில்லை. ஏன் இந்தியாவில் எங்கும் இங்கே நிகழ்ந்த பஞ்சங்களுக்கான ஓர் அருங்காட்சியகம், ஓர் ஆவணக்காப்பகம் இல்லை. நம் பாடத்திட்டங்களில் ஒரு வரிகூட இல்லை.

 

சடாக்கோ சசாக்கி

அருங்காட்சியகத்திற்கு வெளியே ஒரு சிலை உள்ளது. சிறுமியான சடாக்கோ சசாக்கி கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டார். நோயுற்று இறந்துகொண்டிருந்தபோது அவளுக்கு ஓர் நம்பிக்கை சொல்லப்பட்டது. லட்சம் காகிதமடிப்பு அன்னங்களைச் செய்தால் உயிர்பிழைக்கலாம் என்று. ஆயிரம் செய்வதற்குள் அவள் உயிர்பிரிந்தது. அவள் நினைவாக அங்கே ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. உலகமெங்குமிருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இன்றும் அங்கே காகித அன்னங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு வெற்றுச் சடங்காக ஆகிவிட்டிருக்கூடும். மானுடம் தீயவற்றை மறக்கவே நினைக்கிறது. ஆகவே தீயவற்றை உருமாற்றிச் சடங்காக ஆக்கிக்கொள்கிறது. மனசாட்சிப் பிரச்சினைகளை எல்லாம் மானுடம் சுருக்கி எளிய ஒற்றை உணர்ச்சியாக ஆக்கிக்கொள்கிறது.

ஹிரோஷிமாவின் அணுநினைவகத்தில் ஏராளமான ஜப்பானியக் குழந்தைகள். திரள் திரளாக்ச் சீனப்பயணிகள். அவர்கள் படமெடுத்துக்கொண்டும் ஓசையெழாமல் சிரித்துக்கொண்டும் சுற்றுலா மகிழ்வில் திளைத்துக்கொண்டிருந்தனர். வெண்ணிறமான உப்பிய கன்னங்கள். சின்னஞ்சிறு கண்கள். சுருளற்ற மயிர்த்தோகைகள். அவர்களின் உலகில் நேற்று இல்லை. அந்தத் துயரின் துளிகூட எவரிடமும் இல்லை. அவர்கள் வாழும் உலகம் முற்றிலும் வேறு. அது டொயோட்டோ ஜப்பான்.

 

[உலகமெங்குமிருந்தும் வந்துகொண்டிருக்கும் காகித அன்னங்கள்]

ஹிரோஷிமா பற்றி ஜப்பானியத் திரைப்படங்கள் மிகக்குறைவு. ஜெர்மானிய கொலைமுகாம்களைப் பற்றிய அமெரிக்க சினிமாக்களுடன் ஒப்பிடுகையில் மிகமிக அரிது. அதாவது என்னைப்போன்ற பொதுவான சினிமாரசிகன் வரை வந்துசேரும் படங்கள் ஓரிரண்டுகூட இல்லை.  விதிவிலக்காகச் சொல்லவேண்டும் என்றால் ஷோகேயி இமாமுராவின் Black Rain. அது எண்பதுகளில் இங்கே திரைப்பட அமைப்புக்களால் திரையிடப்பட்டது. உலக அளவில் பெரிதாகக் கவனிக்கப்படவோ பேசப்படவோ இல்லை.பிற ஜப்பானிய மேதைகளுக்கு அணுகுண்டுவெடிப்பு ஒரு பெரிய பேசுபொருளாக இருக்கவில்லை – ருஷ்ய திரைப்பட ஆசிரியர் தர்கோவ்ஸ்கி அளவுக்குக் கூட.[சாக்ரிஃபைஸ் போன்ற படங்கள்]

 

ஏனென்றால் ஜப்பான் அணுகுண்டு பற்றிய படங்களை எடுப்பதை ஐரோப்பா விரும்பவில்லை.  ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஜப்பானிய இலக்கியமும் சினிமாவும் ஜப்பானியக் கலாச்சாரத் தனித்தன்மைகளான ஜென், கராத்தே, தேனீர்ச்சரங்கு, சமுராய்கள் ஆகியவற்றை சித்தரிப்பதையே விரும்பின. அத்தகைய படங்களே ஐரோப்பாவில் கொண்டாடப்பட்டன.ஜப்பானிய பெருங்கலைஞர்கள்கூட இந்த கட்டாயத்திற்கு ஆட்பட்டவர்களே. அவர்களுக்கு அளிக்கப்பட்டது நிபந்தனை கொண்ட உலகப்புகழ்.

 

ஏனென்றால் ஜப்பானிய இலக்கியமும் சினிமாவும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் அளிக்கும் ஆதரவைச் சார்ந்தே இயங்கியவை, இயங்குபவை. ஐரோப்பாவும் அமெரிக்காவும் தங்கள் போர்க்குற்றங்களை மறக்கவே விரும்பின. தங்கள் முன்னோர்கள் ஆதிக்கத்துக்காகப் போராடிய காலனியவாதிகள் அல்ல, நீதிக்காகப் போராடிய உலகக்காவலர்கள் என்பதே அவர்களின் பாடம். அதை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியும். எந்தத் தேசியமும் அதைத்தான் சொல்லும். ஜப்பானிய சினிமா ஜப்பானில் பெரிய நிதியை வசூலிக்க முடியாது. அது ஐரோப்பிய அமெரிக்க – ஐரோப்பியச் சந்தையை வென்றாகவேண்டும். ஆகவே வேறுவழியில்லாமல் அவர்களுக்குமான கலையையும் இலக்கியத்தையுமே அவர்கள் படைத்தார்கள்.

 

’உலகளாவிய அங்கீகாரம்’ என்பது எவ்வளவுபெரிய சுமை.ஒரு பண்பாடு தன்னைத்தானே பேசிக்கொள்வதை, தன்னைத்தானே உருவாக்கிக்கொள்வதையே அது இல்லாமலாக்கிவிடும் என்பதற்கான சான்று இது. உலகம் விரும்பியபடி தன்னை உருவாக்கிக் கொள்ளும் பண்பாடு காலப்போக்கில் பண்பாடுக்குப் பதிலாக பண்பாட்டுநடிப்பு கொண்டதாக ஆகிவிடும். இன்று ஜப்பானிய இலக்கியமும் சினிமாவும் அடைந்துள்ள மாபெரும் தேக்கத்தையும் இதைக்கொண்டே புரிந்துகொள்ளவேண்டும். இன்றைய இந்திய இலக்கியமும் அத்திசை நோக்கிச் செல்கின்றன.

பிளாக் ரெயின் படம்

 

ஐரோப்பிய அமெரிக்க ரசனைக்காக சமரசம் செய்துகொண்ட ஜப்பானிய சினிமாவும் இலக்கியமும் திரும்பத்திரும்ப ஜப்பானிய அடையாளங்கள் சிலவற்றையே பேசி விரைவிலேயே ஜப்பானியர்களுக்குச் சலிப்பூட்டுவனவாக மாறின. அடுத்த தலைமுறையினர் ஜப்பானிய கலையிலக்கியத்தை உதறி ஐரோப்பிய ,அமெரிக்க சினிமாவுக்கும் இலக்கியத்திற்கும் சென்றனர். இன்று உலகளாவ அறியப்படும் ஜப்பானிய பெருங்கலைஞர்கள் எவரும் சினிமாவிலோ இலக்கியத்திலோ இல்லை. ஹாருகி முரகாமி போன்று தொண்ணூறுசதவீதம் அமெரிக்கத்தனம் கொண்ட, ஜப்பானிய இடங்களையும் ஜப்பானிய பெயர்களையும் மட்டும் பயன்படுத்தும், மேலோட்டமான எழுத்தாளர்கள் இன்று உருவாகியிருக்கிறார்கள். அவர்களே ஜப்பானிய எழுத்தாளர்களாக அறியவும்படுகிறார்கள். ஜப்பானிய இலக்கியமே ஹாருகி முரகாமி ஆக முயல்கிறது. ஆகவே அசலாக ஏதுமில்லை என்றே தோன்றுகிறது.

 

ஆனால் ஜப்பானிய மாங்கா வரைகலை கதைகளில் அணுகுண்டுவெடிப்பு இன்றும் ஒரு மாறாத கருவாக உள்ளது. ஏனென்றால் ஜப்பானிய மக்கள் அதை வாசிக்க, நினைவில் நிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். அந்த நூல்கள் குடிசைத்தொழில்போல வெளியாகக்கூடியவை. அவற்றுக்கு ஐரோப்பிய அங்கீகாரம் ஒரு பொருட்டே அல்ல. மாங்கா வரைகலையில் அணுகுண்டுவெடிப்பு ஆக்ரோஷமான கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளது. ஜப்பானிய வரைகலை சினிமாவான் பேர் ஃபூட் ஜெனெரல் அணுகுண்டு வெடிப்புச் சூழலை காட்டுவது. ஆனால் இன்றைய வரைகலை படங்களைப் பார்ப்பவர்களுக்கு பெரிதாக தெரியாது. எண்பதுகளின் இறுதியில் திரைச்சங்கங்களில் பெரும்புகழுடன் இருந்த படம் அது.

 

ஜப்பானிய காமிக்ஸின் அணுகுண்டு வெடிப்பு

 

ஹிரோஷிமா நினைவகத்தில் இருந்து வெளியேறும்போது மிக எளிதாக அதிலிருந்து தப்பிவந்துவிட்டேன் என்று எனக்குத்தோன்றியது. கற்பனையில் விரித்து விரித்து அந்த அழிவைப் பார்க்க நேர்ந்தாலும் கூட உள்ளம் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏன் தகாஷி நாகாயியின் அந்த நூல் அளித்த அதிர்வு ஏன் இப்போது ஏற்படவில்லை?

 

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின் செந்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பிடித்து உலுக்கப்பட்டது போல் ஒரு கனவால் எழுப்பப்பட்டேன். அப்போது குண்டு விழுந்து தீப்பற்றிக்கொண்டிருந்த ஹிரோஷிமாவில் உடல் வெந்து தசை உருக வெள்ளெலும்புகள் வெளித்தெரியும் கைகால்களுடன் அலைந்துகொண்டிருந்தேன்.

 

[மேலும்]

முந்தைய கட்டுரைமல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா?-சரவண ராஜா
அடுத்த கட்டுரைஎப்படி இருக்கிறேன்?