அன்பு ஜெ,
வணக்கம். “மத்துறு தயிர்” எனக்கு முதல் வாசிப்பிலேயே பிடிபடவில்லை. பொறுமையாக இரண்டாம் முறை வாசித்தேன். நான் பல விஷயங்களைத் தவற விட்டிருக்கிறேன் என அப்போதுதான் புரிந்தது. பல நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது கதை.
கம்ப ராமாயணப் பாடல்களில் இவ்வளவு சுவை ஆழமாய்ப் பொருந்தி இருக்கிறதா ? என எண்ணம் வந்து கொண்டேயிருந்தது. படிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதை அது உணர்த்தியது. மத்துறு தயிர் என்கிற உவமையைப் பேராசிரியர் விளக்க விளக்க அந்த மாபெரும் கவிஞனை எண்ணிக் கர்வம் வந்தது. துன்பத்தில் உழலும் வாழ்வை இதைத்தவிர்த்து வேறு ஒரு பொருத்தமான உவமை கொண்டு விளக்கவியலாதென்றே எண்ணுகிறேன்.
“உலோகத்தில்“ இரத்தம் தரையில் விரவுவதை தாங்கள் விவரித்த விதம் மனதில் பதிந்து விட்டது. ”அழுத பிள்ளைக்கு மிட்டாய் கிடைத்தவுடன் அது கண்ணீரோடு சிரிப்பதைப் போன்ற ” என்ற இக்கதையில் வரும் உவமையும் Excellent J. ஒரு கதையைப் படிக்கும் போதே அந்த கதையின் ஓட்டம் பற்றிய எண்ணங்களோடு, அந்தக் கதையின் அணிகலன்களைப் பற்றி இப்படிப்பட்ட எண்ணங்களும் இணையாக மனதில் ஓடுகிறதே… இது சரிதானா? உங்களின் ஆலோசனை தேவை. சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு கேமரா கோணம் வெகு சிறப்பாக இருக்கிறதே என்று சிலாகிக்கப் பட்டால் அது கேமரா கலைஞனின் தோல்வி என்றொரு கருத்துச் சொல்லப்படுகிறதே அதனால் இந்தக் கேள்வி எழுகிறது ஜெ.
குருவின் தேவையை வாழ்வின் இறக்கக் காலங்களிலேயே நாம் உணர இயலும். நான் இன்று அப்படிப்பட்ட ஒரு கையறு நிலையில் இருக்கிறேன். எனக்குக் கிடைத்த ஒரு குருவையும் நான் இழந்து தவிக்கிறேன். அவரைப் பற்றி ஒரு முறை எழுதியது இந்த சுட்டியில் இருக்கிறது. http://nithyakumaaran.blogspot.com/2009/01/blog-post_22.html. சீடன் தயாராகும் போது குரு கிடைக்கிறார் என்று எங்கோ படித்த நினைவிருக்கிறது. காத்திருக்கிறேன்.
பேராசிரியரின் கண்களில் படாமல் அவரை ஒரு தூணோரமாக மறைந்து நின்றே அண்ணாச்சி தரிசிக்கும் கடைசிக்காட்சி உணர்வுக் குவியலானது. அண்ணாச்சி திரும்ப பேராசிரியரைச் சந்திக்கப்போவதேயில்லை என உணர்கையில் அந்தச் சீடனின் கையறு நிலையின் சோகம் சொல்லி மாளாது. மனமெங்கும் பாரமேற்றி வைக்கிறது இக்கதை. ஆம் மத்துறு தயிர் தானே வாழ்க்கையும்…
பேரன்பு நித்யன்.
அன்புள்ள நித்யன்
பொதுவாக இலக்கியத்திற்கும் பிற நிகழ்த்து கலைகளுக்கு ஒரு வேறுபாடு உண்டு. நிகழ்த்துகலைகளில் ஒன்றுவதுதான் தேவை. இலக்கியத்தில் வாசகன் கொஞ்சம் விலகி நின்று படைப்புடன் ஊடாடி இடைவெளிகளை நிரப்புவது தேவை. அதாவது அவனும் ஒரு சக ஆசிரியனாகப் படைப்பைக் கற்பனைசெய்ய வேண்டும் .ஆகவே வரிகளை கவனிப்பதில் பிழை இல்லை
ஜெ
ஜெயமோகன்,
எத்தனையோ மனங்களுக்குள் புதைந்து கிடந்த ரணங்களைக் கீறி ரத்தம் காட்டிவிட்டதே சோற்றுக் கணக்கு.
ராமச்சந்திர ஷர்மா , ராஜராஜன் அனுபவங்களும் மிக அழுத்தமாய் ஒரு பதிவை ஏற்படுத்திவிட்டது. சோற்றுக் கணக்குத் தானே தூண்டுதல்.
உடைகள் என்னையும் எப்பொழுதும் அழுத்திய விஷயம் தான். நான் கல்லூரிக்குச் செல்லும் வரை நான் உடுத்திய உடைகள் என் பெரியம்மா பிள்ளைகள் உடுத்திக் கழித்தவைகள். ஒற்றைச் சீருடை தான் என்னிடம் இருந்தது. கல்லூரிக்குச் சென்ற பின்னர் அவர்கள் pant எனக்கு போதாமையால் அவற்றை உபயோகிப்பதைத் தவிர்த்தேன். இவற்றை யாருடனும் பகிர்ந்து கொண்டதில்லை. அவமான உணர்வு தடுத்துக் கொண்டிருந்தது.
இன்று என்னால் எனக்குத் தேவையான உடைகளை வாங்க இயலும் நிலையில்தான் இருக்கிறேன். இருப்பினும் ஒவ்வொரு முறை ஆடையகங்களுக்குள் நுழைந்த உடன் எந்த ஆடையினைப் பார்த்தாலும் அவை என் தகுதிக்கு மீறியவையாகவே தோன்றுகின்றன. சிலவற்றை வாங்கிவிட்டு திரும்பிய பின்னும் குற்ற உணர்வில் மனம் கசங்கிபோகும் ஏதோ தேவையற்றதைச் செய்து விட்டதைப் போல. என் உடையின் விலையை யாரேனும் கேட்டுவிட்டால் அதை விட என்னை ரணப் படுத்தும் ஒரு கேள்வியில்லை. இந்த ஆடைக்கு இந்த விலை அதிகம் என்று கூறிவிடுவாரோ என்று பயம். அந்த விதம் கூறிவிட்டால் அது ஒன்று போதும் அன்று முழுமைக்கும் கவலைப்பட.
நண்பர்களோடு city center, spencer plaza என்று போய்விட்டு எவை எவற்றையோ நினைத்துக்கொண்டு மனம் சுருங்கிப் போயிருக்கிறேன்.
கல்லூரி வரை என் குடும்பத்தின் வருமானம் மிகக்குறைவு. நாலு பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாத்திய படவில்லை. இரு வேளை உணவு தான். இன்றும் அந்தப் பழக்கம் தான். முழுமையாகப் பேச இயலவில்லை ஜெயன். தயக்கம்.
நேற்றே இவற்றை எழுத விரும்பினேன். மன நிலை அனுமதிக்கவில்லை. சோற்றுக்கணக்கைப் போல் என்னை இந்த மட்டும் அசைத்துப்போட்டவை வெகு சிலவே ஜெயன்.
இதுவரையும் தங்களை ஜெயமோகன் என்றே அழைத்துவந்தேன். இன்று ஜெயன் என்று விளிக்கத் தோன்றியது மிக அருகில் இருக்கும் ஒரு நண்பனை அழைப்பதைப் போல.
நன்றி,
சுந்தர்.
எல்லா அனுபவங்களுமே சொத்துக்கள். அனுபவம் குரு என்று ஒரு சொல்லாட்சி உண்டு
அனுபவங்கள் இல்லாத ஒருவர் இந்த அனுபவங்கள் தனக்கு இல்லையே, இப்படி ஏழ்மைப்பட்டு போய்விட்டேனே என்று புலம்பி ஃபோனை வைத்து பத்துநிமிடம் ஆகிறது
ஜெ
அன்புள்ள ஜெ,
பேராசிரியர், குமார், ராஜம் ஆகியோர் பற்றி நீங்கள் பல தடவை எழுதியுள்ளதை படித்திருந்ததினால் இந்தக் கதை எனக்கு மிகவும் நெருக்கமான நெகிழ்ச்சியான வாசிப்பு அளித்தது. பேராசிரியரின் குரு பக்தியையும் அவரின் கம்ப ராமாயணப் புலமையையும் பற்றி நீங்கள் நிறைய எழுதியிருக்கிறீர்கள். பேராசிரியர் மனதில் கர்த்தருடன் கம்பனும், அவர் குருவும் போட்டியிடாமல் நிறைந்திருந்தது அவர் ஆளுமையை இன்னமும் சிறிது புரிந்து கொள்ள உதவியது.
கம்பனின் “மத்துறு தயிர்” கதைக்கு முத்தாய்ப்பு. ஆனால் “மருந்து போட்டாலும் ராஜபிளவை ஆறாது” என்னும் வரி தான் என்னை மிகவும் பாதித்தது. அறம், சோற்றுக் கணக்கு இப்போது மத்தறு தயிர் – என்ன ஜெ, கடந்த ஒரு வாரமாக வாசகர்களை விடாமல் அழ வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ளீர்கள் போலிருக்கிறதே!
அன்புடன்
சிவா
சிவா
ராஜபிளவை என்றால் கான்ஸர்
அது அடிப்படையான ஒரு சிக்கலால் வருவது. உயிர் எதனால் நிகழ்கிறதோ அதுவே இதற்கும் காரணம்
உள்ளத்து ராஜபிளவையும்தான்
ஜெ