ஜப்பான், ஒரு கீற்றோவியம் -2

 

ஜப்பானைப்பற்றிய எனது நினைவுகள் தொடங்குவது எங்கள் இல்லத்தில் இருந்த ஒரு சிறிய பொருளில் இருந்து. அது ஒரு மூக்குக்கண்ணாடி. அந்த கண்ணாடியை எனது அப்பாவின் சிறிய தந்தையார் பயன்படுத்தியிருந்தார். வெள்ளி விளிம்பு கட்டியது. இன்றைய கணக்குக்கு எடை மிக்கது. அன்று அதை தொட்டு எடுக்கையில் குளிர்ந்த தளிர்க்கொடியால் ஆன ஒன்று என தோன்றியது. அதை போட்டு வைப்பதற்கு அரக்கில் செய்த கூடும் இருந்த்து. அது கட்டெறும்பு நிறமானது . மெழுகென குன்றிமணி என மின்னுவது. அப்பா அதை ஒர் அரிய நினைவுப்பொருளாக பாதுகாத்து வந்தார். அவருக்கு இளமையிலேயே மறைந்த தன் தந்தையின் இடத்தில் இருந்தவர் அந்தச் சிறிய தந்தை

அந்த கண்ணாடி அப்பாவின் சித்தப்பாவின் பார்வையென்றே ஆகிவிட்டது. உள அழுத்தங்கள் உருவாகும்போது அப்பா அந்த மூக்குக்கண்ணாடியை மேஜையில் வைத்து சிறிய தந்தையின் கண்களைப்பார்ப்பது போல் அவற்றை பார்த்துக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மேஜையில் அவற்றை கழற்றி வைத்தாலும் அப்பாலிருக்கும் ஜன்னலின் துளிச் சித்திரங்கள் அவற்றில் வளைந்து தெரியும். மிக அருகே மேஜை மேல் இரு நுண்ணிய ஜன்னல்கள் ஒளி வடிவாக நீண்டு வழிந்திருக்கும். அந்தக்கண்ணாடி ஜப்பானில் செய்யப்பட்டது. அப்பா அதை ஜப்பான்கண்ணாடி என்றுதான் சொல்வார்.

ஹக்யுன் எஸாகு
பாஷோ

அன்றெல்லாம் தரமான கண்ணாடிகள் பெல்ஜியத்திலும் ஜெர்மனியிலும் செய்யப்படுபவை. அவற்றை வாங்குவது நெடுங்கால சேமிப்புக்குப் பின்னரே இயல்வது. வாழ்நாள் முழுக்க ஒரு கண்ணாடியைத்தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தியிருந்தார்கள். விலைமதிப்பு மிக்க கலைப்பொருள் ஒன்றை பேணுவது போல் அவற்றை பாதுகாத்தனர். அப்பாவின் பேனா லண்டனில் செய்யப்பட்டது. கைக்கடிகாரம் சுவிட்ஸர்லாந்தில். எழுப்பு கடிகாரம் ஜெர்மனியில். அப்பா அவற்றினூடாக உலகக்குடிமகனாகத் திகழ்ந்தார்.

ஆனால் அன்று .ஜப்பானிய பொருள்கள் மிக மலிவானவை. அதேசமயம் உறுதியானவை. சாதாரண மக்களுக்கு வேறுபாடு தெரியாது. ஆகவே அன்றெல்லாம் சந்தையில் ஜப்பானியப் பொருள் வந்தால் சொல்லி வைத்து வாங்குவார்கள். அவற்றை விற்க திருவனந்தபுரத்தில் சில கடைகள் இருந்தன. ஜப்பானிய மூக்குக்கண்ணாடி தரத்தில் எந்த வகையிலும் ஜெர்மானிய, பெல்ஜிய கண்ணாடிகளுக்கு குறைந்ததல்ல. ஒரு படி மேலானதென்று கூட சொல்லலாம் .ஆனால் ஐந்தில் ஒரு பங்கு விலையே இருக்கும். முதலாளிகள் பெல்ஜிய கண்ணாடி போட்டபோது என் தாத்தாவைப் போன்ற பள்ளி ஆசிரியர்கள் ஜப்பானிய கண்ணாடியை அணிந்தார்கள் திருவனந்தபுரம் சாலை பஜாரில் வாங்கிய அந்தக்கண்ணாடி ஒருமுறை கூட பழுது பார்க்கப்பட்டதில்லை என்று என் தந்தை சொல்வார்.

அகுதாகவா
யசுநாரி கவபத்தா
யூகியோ மிஷிமா

கோபோ ஆப்

அதன் பின் ஜப்பான் தொடர்ந்து வெவ்வேறு பொருட்களாகவே என்னை வந்தடைந்தது. எழுபதுகளில் துபாய்க்கு சென்று மீண்டவர்கள் பேனாசோனிக் டேப் ரிக்கார்டுகளுடன் வந்தார்கள். தொண்ணூறுகளில் மிட்சுபிஷி யமஹா சுஷுகி டொயோட்டோ என வண்டிகள் இங்கு பெருகின. இன்று ஒரு சராசரி தமிழன் அவனுக்கு தெரிந்த ஜப்பானிய வார்த்தைகளை பட்டியலிடப் புகுந்தால் ஐம்பது சொற்களையாவது சொல்லிவிட முடியும். இறுதியாக தமிழர்களின் நாவில் மறக்க முடியாதபடி நிலை கொண்ட சொல் சுனாமி.

நான் பள்ளியில் படிக்கும்போதே தி.ஜானகிராமனின்உதயசூரியனின் நாட்டில்’ என்ற பயணக்கட்டுரை நூலை ஆர்வக்கொந்தளிப்புடன் படித்திருக்கிறேன். பயணக்கட்டுரைகள் புனைவுகளை விட உளஎழுச்சியை உருவாக்கிய காலம் அது. மலையாளத்தில் எஸ் கே பொற்றைகாடும் தமிழில் மணியனும் சென்ற பயணக்கட்டுரைகள் .அப்பயணக்கட்டுரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தன தி.ஜானகிராமனின் பயணக்கட்டுரைகள் .இடங்களைவிடவும் மனிதர்களையும் அவர்களின் இயல்புகளில் இருக்கும் நுட்பமான பொதுமைகளையும் வேறுபாடுகளையும் கவனிப்பது ஜானகிராமனின் வழக்கம். அவர் எழுதுவது பெரும்பாலும் உரையாடி அறிந்த ஊர்களைத்தான். மணியனின் பயணக்கட்டுரைகளினூடாகச் செல்பவர்கள் அமெரிக்காவிலோ அலாஸ்காவிலோ தமிழர்கள் வாழ்வதை தெரிந்து கொள்வார்கள் .எஸ் கே பொற்றைக்காடின் பயணக்கட்டுரைகள் வழியாக செல்பவர்கள் மனிதர்கள் குரலற்றவர்களாக நிறைந்திருக்கும் மாபெரும் நிலவெளியின் சித்திரங்களை அடைவார்கள்.. ஜானகிராமன் அங்கிருந்து சில மனிதர்களை இங்கு அழைத்துக்கொண்டுவந்து விட்டவர் போல் தோன்றுவார்.

யாசுஜிரோ ஒஸு

 

அகிரா குரசோவா
மஸாகி கோபயாஷி

ஜப்பான் என்றும் எனக்கு ஒரு கனவை ஊட்டிய நிலமாகவே இருந்தது ஏனெனில் இருபதாம் நூற்றாண்டு உலக கலை இலக்கியத்தை உருவாக்கியதில் ஐரோப்பாவுக்கு அடுத்த படியான இடம் ஜப்பானுக்கு உண்டு நம் சிந்தனையை, நுண்ணுணர்வை வடிவமைத்தவர்களில் மாபெரும் ஐரோப்பிய சிம்ந்தனையாளர்கள் மற்றும் கலையாசான்கள் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர், கீட்ஸ், ஷெல்லி என ஒரு வரிசை. வால்டேர், ரூசோ, ஹெகல், நீட்சே, மார்க்ஸ், ஃப்ராய்ட் என ஒரு வரிசை கதே . டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி, செக்காவ்,மாப்பசான் ரோமன் ரோலண்ட், விக்டர் ஹியூகோ என ஒரு வரிசை. வின்சென்ட் வான்கோ, கிளாட் மோனே, பிக்காஸோ என இன்னொரு வரிசை. இங்மார் பர்க்மான், பாஸ்பைண்டர், தர்கோவ்ஸ்கி, என இன்னொரு வரிசை மேலும் வரலாற்றுக்குள் பின்னகர்கையில் பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், மைக்கேல் ஏஞ்சலோ, ரூபன்ஸ் என நாம் அடுத்த அடுக்கை காண்கிறோம்.மலைமுடிகள் சூழ் பள்ளத்தாக்கில் நின்றிருப்பவர்களை போல் உணர்கிறோம்.

ஐரோப்பிய சிந்தனை, ஐரோப்பியக் கலை வழியாகவே நாம் கீழைத்தேயமான ஜப்பானைச் சென்றடைகிறோம் என்பது ஒரு விந்தை. பொதுவாக ஐரோப்பிய எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டு, ஐரோப்பிய விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டு, ஆங்கில மொழியாக்கம் வழியாக நாம் ஜப்பானிய இலக்கியம் கலை ஆகியவற்றைக் கண்டடைகிறோம். ஐரோப்பிய நுண்ணுணர்வால் பிரதிபலிக்கப்பட்ட பிம்பம் என்றாலும்கூட  ஜப்பானிய கலையும் இலக்கியமும் தத்துவமும் நமக்கு முற்றிலும் வேறாக தெரிகின்றன. இந்த வேறுபாடே விலக்கத்தையும் பின் தீவிர ஆர்வத்தையும் உருவாக்குகிறது. சிற்றிதழ்ச்சூழலில் ,ஐரோப்பிய எழுத்தாளர்களையோ கலைஞர்களையோ பேசிக்கொண்டிருக்கும் ஓர் அரங்கில் ,ஒரு ஜப்பானிய எழுத்தாளனையோ கலைஞனையோ பற்றி பேசத்தொடங்குகையில் நமக்கொரு தனி மதிப்பு உருவாவதைக்காண்கிறோம்.

குஷி

 

புகுவோகா

 

யாமகுச்சி

ஜப்பானிய இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நூறாண்டு ஆகிறது. ஐரோப்பிய இலக்கியம் நோக்கி தமிழின் சாளரத்தைத் திறந்த பாரதியே ஜப்பானியக் கவிதையையும் இங்கே அறிமுகம் செய்திருக்கிறார். ஜப்பானிய கவிதை வடிவான ஹைகூ இங்கே ஒரு வெகுஜனக் கவிதைவடிவம். ஜப்பானிய தத்துவமான ஜென் ஒரு நூறுநகல்களால் போற்றப்படுவது. ஆனால் இன்னமும் கூட ஓர் ஐரோப்பியக் கலைஞனுக்கு ஜப்பானியக் கலைஞனுக்குமான அடிப்படை வேறுபாடென்ன என்பதை தன் வாசிப்பை, அனுபவத்தைக் கொண்டு வகுத்துச் சொல்லும் தகுதி கொண்ட வாசகர்கள் எழுத்தாளர்கள் மிகச்சிலரே எவ்வண்ணமோ அதை உணராதவர்களோ எவருமிருக்க மாட்டார்கள்.

ஒற்றை உதாரணம் கொண்டு அதை நான் விளக்குவதுண்டு. மசானபு ஃபுகுவோகா அவருடைய ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற மகத்தான நூலில் ஐன்ஸ்டீனை நிராகரிக்கிறார். ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை பிழையான ஒரு பிரபஞ்சப் பார்வை கொண்டது என்கிறார். அது முரணியக்கத்திலிருந்து சென்று ஒருமையைக்கண்டடைவது .இப்பிரப்ஞ்சம் முரண்பாடுகளால் அல்ல ஒத்திசைவால் இயங்குகிறது .முரணியக்கம் என்பதே இல்லை என்கிறார்.முற்றிலும் கீழைத்தேய தத்துவப் பார்வையில் நின்று அதை சொல்கிறார். ஐன்ஸ்டீனுக்கும் ஃபுகுவோகோவுக்குமான தொலைவுதான் ஐரோப்பாவுக்கும் ஜப்பானுக்குமான தொலைவு. இயற்கையுடன் போராடுவது வெல்வது  ஐரோப்பாவை இன்றும் ஆட்டிப்படைக்கிறது முரண் கொள்வது என்பதே இன்றி இயற்கையுடன் முற்றிசைவதே வெற்றி என கொள்ளும் ஃபுகுவோகாகோவின் ஸென் பார்வை அதிலிருந்து தனித்து நிற்கிறது.

வெவ்வேறு வகையில் ஜப்பானிய எழுத்தாளர்கள் கலைஞர்கள் அனைவரிடமும் இந்த அடிப்படை வேறுபாடு உண்டு உண்மை முடிவிலாத பக்கங்கள் கொள்வது என்பதும், உண்மை X பொய் என்று இப்புவி மெய்மையை எவரும் பகுத்துவிட முடியாதென்றும் கீழைத்தேயவியல் நம்புகிறது. ஜப்பான் கீழைத்தேய பண்பாட்டின் கூர்முனை. மாக்ரோபயாட்டிக்ஸ் போன்ற ஒரு கீழைத்தேய வாழ்க்கைநோக்கு மிஷியோ குஷி போன்ற  ஞானியால் முன்வைக்கப்படுவது இவ்வாறுதான். இவை அனைத்துக்கும் அடியில் ஜப்பானிய ஆன்மிக நோக்கான ஜென் உள்ளது.

ஒகுரா யூரி
ரயோஹி கொய்சொ
ககாகு முரகாமி

ஜப்பானிய எழுத்தாளர்கள் சிலர் என் இலக்கிய வாசிப்பின் தொடக்க காலத்திலேயே கவர்ந்தவர்கள் . ஜப்பானிய தொல்நாவலான செஞ்சி கதை கா.அப்பாத்துரை அவர்களின் மொழியாக்கத்தில் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே தமிழில் வெளிவந்துள்ளது. நான் படித்த முதல் ஜப்பானிய படைப்பு அது. யஸுநாரி கவபத்தா என்னை முதன்மையாக கவர்ந்த ஜப்பானியப் படைப்பாளி. அதன்பின் யூகியோ, மிஷிமா, கோபோ ஆப் வரை ஒரு படைப்பாளிகளின் நிரையை சொல்லமுடியும். [அகுதாகவா என்னை கவராதவர்] தமிழில் ஜென் கவிதைகளை அறிமுகம் செய்தவர்களில் சி.மணி, ஆனந்த் இருவரும் முக்கியமானவர்கள். பாஷோ ஒரு தமிழ்க் கவிஞர் அளவுக்கே பிரபலமாகி போலி பாஷோக்கள் கூட உருவாகிவிட்டிருக்கின்றனர். யுவன் சந்திரசேகர் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளஜென் கவிதைகள் முக்கியமான ஒரு மொழியாக்க நூல்.

எண்பதுகளில் சினிமாக் கூட்டமைப்புக்கள் வழியாக கலைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிய போது முதலில் அகிரா குரசேவா கவர்ந்தார். வசந்தகுமார் [தமிழினி] வழியாக கோபயாஷியையும் ஒசுவையும் அறிமுகம் செய்து கொண்டேன். மிகப்பிந்தி ஊட்டி குருகுலம் வழியாகவே ஜப்பானிய ஜென் ஞானிகளையும் ஓவியர்களையும் அறிமுகம் செய்துகொண்டேன் ஜப்பானிய இளம் ஓவியர் ஒருவர் தான் வரைந்த நீர்வண்ண ஓவியத்தின் மீது நீரை மென்மையாகப் பீய்ச்சியடித்து கடற்பஞ்சால் மென்மையாக ஒற்றி எடுப்பதை ஒருமுறை கண்டேன். அவர்கள் படங்களை மென்மையான வண்ணங்களுடன் அமைப்பதற்குக் கையாளும் வழி அது. கழுவுதல் ஜப்பானிய ஓவியமரபின் தனித்தன்மை. என்னை குறியீடாகவும் பெரிதும் கவர்ந்தது அது.

ஜப்பான் தமிழ்நாட்டில் கராத்தே வழியாகவே தொடக்கத்தில் பரவலாக அறியப்பட்டது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் 1980ல் புரூஸ் லீ நடித்த எண்டர் டிராகன் தமிழகத்தில் வெளியானது. அது கராத்தே மீது பேரார்வத்தை இங்கே உருவாக்கியது. அதையொட்டி கராத்தேயின் முதிய ஆசானாகிய யாமகுஷி [Gōgen Yamaguchi] இந்தியா வந்தார். அன்று அது பெரிய செய்தியாக பலவாரம் பேசப்பட்டது. அவர் மிக ஒல்லியாக இருந்தது இங்கே ஒரு கேலியையும் உருவாக்கியது. [ஒரு படத்தில் கராத்தே மாஸ்டர் ஆக நடித்த நரசிம்மன் தன்னை ஓமக்குச்சி என்று சொல்லிக்கொள்வார். ஓமக்குச்சி நரசிம்மன் என்று பின்னர் அறியப்பட்டார்]

சென்ற ஜூன் ஆறாம்தேதி ஜப்பானுக்குக் கிளம்பும்போது பாஷோவும் கோபயாஷியும் கவபத்தாவும் சந்தித்துக்கொள்ளும் ஒரு புள்ளி எங்கோ உள்ளது என்றும் அதைத் தேடி சென்று கொண்டிருக்கிறேன் என்றும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஒரு பயணத்தை இப்படி நாமே நம்முள் பெரிதாக்கிக் கொள்ளமுடியும். நிலப்பரப்புகளின் மேல் வரலாற்றால் நாம் பரப்பும் கனவுப்படலமே அங்குள்ள ஒவ்வொன்றையும் அர்த்தம் கொள்ள செய்கிறது. அனைத்து பொருட்களையும் படிமங்கள் என்று ஆக்குகிறது.

கா. அப்பாத்துரை

ஊட்டி நாராயண குருகுலத்தில் குருநித்யா ஆய்வரங்கு முடிந்தபின் அங்கிருந்து கோவை வந்து சென்னை சென்றோம். சென்னையிலிருந்து நானும் அருண்மொழியும் டோக்கியோவுக்குக் கிளம்பினோம். நண்பர்கள் விமான நிலையம் வந்து வழியனுப்பிவிட்டார்கள் டோக்கியோவில் வசிக்கும் நண்பர் செந்தில் இப்பயணத்தை ஒழுங்கமைத்திருந்தார். செந்தில் முழுமதி அறக்கட்டளை என்னும் பேரில் ஓர் இலக்கிய- பொதுச்சேவை அமைப்பை நடத்தி வருகிறார். ஆனால் இவ்வழைப்பு அவர் தனிப்பட்ட முறையில் வகுத்தது .ஆகவே இதை ஒரு முறையான இலக்கிய பயணம் என்று சொல்ல இயலாது.

சென்னையிலிருந்து கோலாலம்பூர் சென்று மூன்று மணி நேர இடைவெளிக்குப்பின் விமானத்திலேறி மறுநாள் மாலை ஜப்பானில் நரித்தா விமானநிலையம் சென்றடைந்தோம். விமான நிலையத்திற்கு செந்திலும் அவர் நண்பரும் வந்திருந்தார்கள். டொக்கியோவில் நிசி கசாய் என்னும் ஊரில் இருக்கும் செந்திலின் வீட்டுக்கு சென்று அன்று ஓய்வெடுத்தோம். டோக்கியோவில் இறங்கி கார்களினூடாக செந்திலின் இல்லத்தை சென்றடையும் வரை இரு பக்கச் சாளரங்களினூடாக விரிந்த நகரத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

டோக்கியோ விமான நிலையம் உலகெங்கும் பெருநகர்களில் உள்ள பிரம்மாண்டமான விமான நிலையங்கள் அனைத்தையும் போலவே தெரிந்தது. வெளியே உள்ள கார் நிறுத்துமிடம் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ எந்த நகரத்திலும் இருப்பதாக ஒரு திரைப்படத்தில் காட்டிவிடமுடியும். வெளியே சென்று நகரத்தின் இல்லங்களையும் ஓங்கிய கட்டிடங்களையும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தெருக்களையும், ஓசையின்றிச் செல்லும் கார்களையும் பார்க்கும்போதும் எந்த வேறுபாடும் தென்படவில்லை. உலகெங்கும் சாலைக்ளில் ஓடும் கார்கள் பெரும்பாலானவை டொயொட்டோ கார்கள் தான் .மஞ்சள் இனத்தை சார்ந்த மக்கள் அன்றி எவ்வகையிலும் டோக்கியோ ஐரோப்பிய அமெரிக்க நகரங்களிலிருந்து வேறுபடவில்லை என்ற எண்ணமே எழுந்தது.

இந்த வளர்ந்த நாடுகள் அனைத்தும் நகரக் கட்டமைப்பில் பல பொதுக்கூறுகளை கொண்டுள்ளன. இவை கட்டுமானமாக பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலானவை சீனாவிலிருந்து இங்கு வரவழைக்கப்படுபவை. அவை ஒரேவகையான காட்சியமைப்பையே அளிக்கின்றன.  ஐரோப்பாவின் தொன்மையான சில நகரங்கள் தவிர பெரும்பாலானவை இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட கட்டிடங்களினாலானவை, அல்லது பல முறை புதுப்பிக்கப்பட்டவை .ஆகவே நாம் செல்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்னர் தான் அந்நகரங்கள் கட்டி முடிக்கப்பட்டு குறை தீர்ந்திருக்கும் என்ற எண்ணம் ஏற்படும். கூரைகள் சாம்பல் நிற கூரையோடு வேயப்பட்டவை. இளவெயிலில் யானை முதுகென மின்னுபவை. கண்ணாடிகள் நிறைந்த முகப்பு, அடுக்கடுக்காக மேலே செல்லும் உப்பரிகைகள்…

என்ன வேறுபாடு என என் உள்ளம் துழாவிக்கொண்டே இருந்தது. செந்திலின் இல்லத்தை சென்றடைந்தோம். ஒருகணத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் சென்ற தங்கிய ஒரு வீடென்றே தோன்றியது. நன்கு வடிவமைக்கப்பட்ட சிறிய இல்லம். ஒழுங்கான நடைபாதை .பிசிறில்லாத தூய்மை. அமைதி. என்ன வேறுபாடு? நிமிர்ந்து பார்த்தால் ஒன்றுடன் ஒன்று பின்னி சிக்கி இருக்கும் பல நூறு உறையிடப்பட்ட கம்பிகளின் தொகுதி நான் சற்று ஐயத்துடன் செந்திலிடம் கேட்டேன் “இத்தனை சிறப்பாக வடிவமைக்கபப்ட்டிருந்தும் நகரங்களில் இன்னும் மின்சாரம் தலைக்குமேல் கம்பிகள் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது? நிலத்தடி மின்குழாய்கள் இல்லையா?”

செந்தில் நிமிர்ந்து பார்த்துவிட்டு ”ஆம் பிற நாடுகளில் மண்ணுக்கடியில் அமைக்கிறார்கள். இங்கு பூகம்ப அபாயமிருப்பதால் பெரும்பாலும் தலைக்குமேல்தான் மின்கம்பிகள் செல்கின்றன”. முதல் வேறுபாடு என்று சொல்லிக்கொண்டேன். இது பூகம்பங்களின் நாடு. சுனாமிகளால் அறையும் கடலால் சூழப்பட்ட சிறிய நிலம். நிலையற்ற மண்மேல் எழுந்த பண்பாடு. இதன் ஆழத்தில் எப்போதும் உள்ளன எரிமலைகள்.

[மேலும்]

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1

***

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

மணல்மேடுகள் நடுவே ஒரு பெண்

வாசிப்பு: யுகியோ மிஷிமா எழுதிய Confessions of a Mask

முரகாமி, சராசரி வாசிப்பு

***

 

முந்தைய கட்டுரைசெல்பேசி எழுத்து -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமாயாவிலாசம் -கடிதங்கள்