ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் எம்.எஸ் அவருடைய தனிப்பட்ட சில சேகரிப்புகளை எனக்குக் காட்டினார். அவற்றில் பெரும்பாலானவை நேஷனல் ஜியோஜிகிராஃபிக் நேச்சர் முதலிய பத்திரிகைகளிலிருந்து வெட்டி சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள். அன்று அந்தப்படங்களை பார்க்கும்போது ஒரு விந்தை உணர்ச்சி உருவாகியது. ஒருவகை கடந்தகால ஏக்கம். ஆனால் அப்போது என்னுடன் இருந்த இளம் நண்பர் ஒருவர் திரும்பிவரும்போதுஅந்தப்படங்களை எல்லாம் எதற்காக வெட்டி சேர்த்திருக்கிறார்?” என்று என்னிடம் கேட்டார் நான்அந்தக் காலகட்டத்தை உங்களால் உணர முடியாதுஎன்று சொன்னேன்.

இன்று காட்சி ஊடகம் பெருகி பேய்க்கூட்டங்களென நம்மைச்சூழ்ந்திருக்கிறது. தொலைக்காட்சி வந்தபோதே காட்சி ஊடகம் மலியத்தொடங்கிவிட்டது. அதற்கு முன்னால் திரைப்படங்கள்தான் அனைவரும் அறிந்த ஒரே காட்சி ஊடகம். திரைப்படங்களும் மிகக்குறைவாகவே வெளிவந்தன. ஓவியமும் காட்சி ஊடகம்தான். ஆனால் ஒர் எளிய சுவரோவியத்தைப் பார்த்திருப்பவர்களே மிக அரிதானவர்கள். அன்று திரையரங்கு இருக்கும் ஊரிலிருந்து பெரும்பாலான மக்கள் வாழும் சிற்றூர்கள் ஒருசில நாட்கள் பயணத்தொலைவில் இருந்தன. வாழ்நாள் முழுக்க ஒரு படம்கூட பார்க்காதவர்களே மிகுதி.

அச்சூழலில் நாகர்கோவில் போன்ற ஒருசிறிய ஊரில், உலகத்தின் ஒருமூலையில், வாழும் ஒருவருக்கு உலகம் எனும் வார்த்தையே எண்ண எண்ண பரவசமூட்டுவது. பிரம்மாண்டமான கனவு அது. உலகம் என்பதை அறிய நேர்ந்தவர் உலகைப்பார்க்கும் வாய்ப்பிற்காக ஒவ்வொருவரும் தவித்துக்கொண்டிருந்தனர். மெக்கனாஸ் கோல்டு என்னும் திரைப்படம் நாகர்கோவில் நகரில் மட்டும் நூறு நாட்கள் ஓடியிருக்கிறது. மீண்டும் திரையிடப்படும்போது அது மீண்டும் பலநாட்கள் ஓடும். பார்த்தவர்களே மீண்டும் வருவார்கள். காரணம் அதில் காட்டப்படும் கிராண்ட் கான்யன் காட்சிகள். விரிந்த நிலக்காட்சிகள் கொண்ட கௌபாய் படங்கள், நகரங்களைக் காட்டும் படங்கள்,போர்க்களப் படங்கள், இங்கே பெரிய அளவில் வெற்றி பெற்றன. கிரிகரி பெக் நடித்த ரோமன்ஹாலிடே என்ற காதல் படம் நாகர்கோவிலில் ஒரு மாதம் ஓடியிருக்கிறதென்றால் அது இன்னும் வியப்பிற்குரியது. காரணம் ரோம் அதில் காட்டப்பட்டது.

இப்படங்கள் அனைத்தும் ஆங்கிலம் ஒருவார்த்தை கூட புரியாத பெரும்பான்மையினரால் பார்க்கப்பட்டவை. அந்த வாழ்க்கை, அந்தச் சிக்கல்கள் எதுவுமே அவர்களுக்குப் பிடிபடவில்லை. அதில் காட்டப்பட்ட போர் அதைவிட அந்நியமாக இருந்தது. பெரும்பாலானவர்கள் அதை கூட்டாலுமூடு பகவதி கோயிலில் நிகழும் வாணவேடிக்கையைப் போலவேதான் ரசித்திருக்கிறார்கள். அதையும்தாண்டி அப்படங்களில் அவர்களை ஈர்த்தது உலகம் என விரிந்திருக்கும் இந்த பூமி. அவர்கள் திரையரங்கில் அமர்ந்து உலகமெங்கும் பயணம் செய்தனர்.

அன்று புகைப்படங்களே மிக அரிதானவை தமிழில் எந்த இதழிலும் தரமான ஒரு புகைப்படத்தை பார்க்க இயலாது. ஆங்கில இதழ்களில் வரும் புகைப்படங்கள் உலகம் எனும் மகத்தான கனவை விதைக்கக்கூடியவையாக இருந்தன. நேஷனல் ஜியோகிராஃபிக் நேச்சர் முதலிய இதழ்களை வாங்க முடியாதவர்கள் கூட ரஷ்ய வெளியீடுகளான ஸ்புட்னிக். சோவியத் லேண்ட் முதலிய பத்திரிக்கைகளை வாங்கினார்கள். பின்னர் குறைந்த விலையில் யுனெஸ்கோ கூரியர் வந்தது. அவற்றை அவர்கள் எதிர்கால சந்ததியினருக்காகத் தொகுத்து வைத்தார்கள். இணையான ஆர்வமுள்ள நண்பர்கள் சந்திப்பில் கூடி அமர்ந்து அந்த புகைப்படங்களை பார்த்தார்கள். வரலாற்றில் எப்போதேனும் புகைப்படங்கள் அப்படி கூர்ந்து பார்க்கப்பட்டிருக்குமா, இனி அதற்கான வாய்ப்புண்டா என்பதே சந்தேகம் தான்.

நானே புகைப்படப்பித்து எடுத்து அலைந்திருக்கிறேன். ஒரு புகைப்படத்தை நினைவுகூர்கிறேன். ஆர்க்டிக்கின் பனிவெளியில் எஸ்கிமோ ஒருவர் தன்னந்தனியாக நடந்துசெல்கிறார் .பனிச்சரிவின் கீழே ஒரு கரடி மூன்று குட்டிகளுடன் சென்று கொண்டிருக்கிறது .இந்த ஒரு புகைப்படத்திலிருந்து நான் உருவாக்கிக்கொண்ட கனவுகளை இன்று எந்த திரைப்படமும், எனக்குத்தரமுடியும் என்று தோன்றவில்லை. குமுதம் அட்டையில் துறவி ஒருவர் எடுத்த புகைப்படத்தில் ஒரு காட்டுமாடு [யாக்] குட்டி அமர்ந்திருக்கும் காட்சியை இப்போதும் நேரில் எனக் காண்கிறேன்.

இன்று உலகம் திடீரென்று சுருங்கிவிட்டது. உலகத்தின் அனைத்து மூலைகளையும் காட்டும் ஒரு சாளரமாக தொலைக்காட்சி மாறிவிட்டது .பயணத்திற்கென்றே தொலைக்காட்சி நிலையங்கள் இருக்கின்றன. உலகத்தின் அனைத்து பகுதிகளும் மிக விரைவாக தங்கள் மர்மங்களை இழந்து கொண்டிருக்கின்றன. திடீரென அகன்றிருந்த உலகம் அணுகிவந்து மூச்சுமுட்ட நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது.

இதற்கிணையான இன்னொரு சூழ்கை என்று தகவல்களை சொல்லவேண்டும் என்னுடைய கல்லூரியில் ஒரு கலைக்களஞ்சியத்தொகுதி இருந்தது. அன்றெல்லாம் தரமான பெரிய நூலகம் என்றால் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா வரிசை கீழ்த்தட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றை நூலகரிடம் அனுமதி பெற்று எடுத்து அங்கிருந்தே பார்க்கவேண்டும் .பெரும்பாலானவர்கள் அவற்றை படிப்பதில்லை. கட்டுரைகள் எழுதவேண்டுமெனில் மட்டும் அதற்கான சிலதகவல்களை அதிலிருந்து எடுப்பார்கள். நான் கலைக்களஞ்சியங்களின் மிகப்பெரிய வாசகனாக இருந்தேன். கலைக்களஞ்சிய அடுக்குகளின் கீழேயே தரையில் அமர்ந்து அகன்ற அதன் பக்கங்களை விரித்துப்போட்டு கைபோன போக்கில் புரட்டி படித்துக்கொண்டிருப்பேன்.

வெவ்வேறு வாழ்க்கை முறைகள் இலக்கியங்கள், சிந்தனை அலைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள். , உலகமெனும் வெளி. இன்று இணையம் பலமடங்கு பெரிய கலைக்களஞ்சியங்களை நமக்குச் சுற்றும் பரப்பி விரல் தொடுகையில் வந்து நின்றிருக்கச் செய்கிறது. கணிப்பொறி வந்த காலத்திலேயே கூட என்கார்ட்டா என்ற பெயரில் ஒரு கலைக்களஞ்சியக் குறுவட்டு என்னிடம் இருந்தது. அதை ஒவ்வொரு நாளும் அமர்ந்து மணிக்கணக்காக படிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன். அதிலிருந்த முக்கியமான செய்திகளை தாளில் குறிப்புகளாக எடுத்துக்கொள்வேன் .அக்குறிப்புகள் மட்டும்தான் எனக்கு நினைவில் நிற்கும் என்பதனால். இன்று ஒரு நாளில் பத்து முறையாவது விக்கிபீடியா பக்கத்திற்கு செல்கிறேன்.

இவ்வாறு காட்சிகளும் செய்திகளும் திரண்டு நம்மை சூழ்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் பயணக்கட்டுரைகளுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? சென்ற சில ஆண்டுகளாக கூகிள் எர்த் காட்சிகளையும் தகவல்களையும் இணைத்து ஒரு மெய்நிகர் புவியைப் படைத்துக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பயணங்களுக்கு கிளம்புவதற்கு முன் ஒவ்வொருமுறையும் ஊர்களுக்கு இடையே இருக்கும் சாலையையும் நிலக்காட்சிகளையும் கூகிள் எர்த்தில் பார்த்த பிறகே கிளம்புகிறோம். இரண்டாயிரத்து பத்தில் எங்கள் இந்தியப் பயணத்தின் போது அச்சிடப்பட்ட வரைபடம் ஒன்றையே துணைகொண்டிருந்தோம் .அதை விரித்து வைத்து சுட்டு விரலால் தொட்டு அடையாளப்படுத்தியபடி அதை சாலைகளாக உள்ளத்துள் விரித்தபடி தேடிச் செல்வோம்.

வரைபடத்தில் இருக்கும் இடங்களின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும் அங்கிருக்கும் உண்மைப்பெயர்களுடன் ஒத்துப்போவதில்லை .வாரங்கல் என்று பத்துமுறை கேட்டபின்னரே அது வரங்கல் அதாவது ஒற்றைக்கல் என்று தெரிந்துகொண்டோம். மிகச்சிறிய இடைவெளியில் அதாவது ஒரு மில்லிமீட்டர் வேறுபாட்டில் வழியைத் தவறவிட்டு ஒருநாள் முழுக்க சுற்றியலைந்த அனுபவமும் உண்டு. தவறாகப் புரிந்துகொண்டு பெல்லாரி அருகே ஒருமுறை காரை கடப்பைக்கல் அகழும் மாபெரும் குவாரிக்குள் இறக்கி சுழன்று சுழன்று கீழே சென்று ஒரு பெரிய குளத்தை அடைந்து திகைத்து நின்றிருக்கிறோம். இன்று நாம் இரண்டு பயணங்களை மேற்கொள்கிறோம். ஒன்று மெய்ப்பயணம், கூடவே கூகிள் எர்த்தில் ஒரு மெய்நிகர் பயணம்.

ஆகவே இன்றைய ஒரு பயணக்கட்டுரையில் தகவல்கள் பெரிய அளவில் முக்கியமானவை அல்ல. நானே கூட பெரும்பாலான தகவல்களை இணையத்திலிருந்து தான் எடுத்துக்கொள்கிறேன். அங்கு நேரில் சென்றால் எழுதி வைக்கப்பட்டிருக்கும் அதே தகவல்கள், சுற்றுலா வெளியீடுகளில் உள்ள அதே செய்திகள் அப்படியே நமக்கு விக்கிபீடியாவிலே கிடைக்கின்றன. அவற்றுக்கும் அப்பால் பயணத்தை உள்ளத்தை ஈர்க்கும் அழைப்பாக, உள்ளம்விரியச் செய்யும் பேரனுபவமாக ஆக்குவது எது?. அங்கு நாம் நேரில் செல்கிறோம் என்பதுதான். இத்தனை செய்திகளுக்குப் பின்னரும், இத்தனை விரிவான காட்சிகளுக்குப் பின்னரும், மெய்நிகர் உலகில் அங்கு நின்று சென்று நின்றிருக்க முடியும் என்பதற்குப் பின்னரும் மெய்யாகச் சென்று நின்றிருப்பது முற்றிலும் புதிய ஓர் அனுபவமாகவே இருக்கிறது

ஏனெனில் அங்கு சென்று நின்றிருப்பது தகவல்களின் தொகுதியால் ஆன ஒரு மூளை அல்ல. அதற்கப்பால் உள்ள ஒரு பண்பாட்டு தன்னிலை. நுண்ணுணர்வுகளின் தொகுப்பு. அறிந்தும் உணர்ந்தும் அது உள்வாங்கிக்கொள்வது முற்றிலும் வேறொன்று. இப்படி சொல்கிறேன், ஒரே ஊருக்கு ஒவ்வொரு நாளும் தமிழிலிருந்து ஒருவர் சென்று ஒரு பயணக்கட்டுரை வீதம் எழுதுகிறார் எனக்கொள்வோம். அப்படி ஆயிரம் முறை எழுதப்பட்ட பின்னரும் கூட ஆயிரத்தொன்றாவது முறை செல்லும் ஒருவர் நுண்ணுணர்வும் மொழியுணர்வும் கொண்டவராக இருப்பார் என்றால் முற்றிலும் புதிய ஒரு நிலத்தை, வாழ்க்கையை, பண்பாட்டை சுட்டிக் காட்டி எழுத முடியும். இதுவே பயணக்கட்டுரைகளின் பொருளாக இருக்கிறது. பயணம்செய்பவர் ஒரு மென்பொருள் அல்ல, உணர்வும் நுண்ணுணர்வும் கொண்ட மனிதர் என்பதே காரணம்.

இதற்கப்பால் பயணக்கட்டுரை என்பது ஒரு நிலைத்த விந்தை.. காலம் கணமொழியாது ஒழுகிக்கொண்டிருக்கிறது. நாம் பார்க்கும் எதுவும் அந்நிலையில் இல்லை. நான் காலை நடை செல்லும் நிலம் சென்ற மூன்று மாதங்களில் முற்றிலும் மாறி பிறிதொன்றாக ஆகிவிட்டது .ஒவ்வொரு முறை செல்லும்போதும் நாம் பார்ப்பது முற்றிலும் புதிய கன்னியாகுமரியை. சிறிது காலம் கடக்கையிலேயே பயணக்கட்டுரைகள் மிகப்பெரிய ஆவணப் பதிவாக மாறிவிடுகின்றன. பகடாலு ராமானுஜுலு நாயுடு கன்னியாகுமரிக்கு நாகர்கோவிலிலிருந்து மாட்டுவண்டியில் சென்ற சித்திரத்தை அங்கிருக்கும் நான்கு பூசாரி இல்லங்களில் ஒன்றில்தான் தங்க வேண்டும் அவர்கள் அளிக்கும் சட்டி பானைகளை வாங்கி நாமே தான் சமையல் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் எழுதியிருக்கும் காட்சியை இன்றைய கன்னியாகுமரியுடன் பொருத்தி பார்ப்பதென்பது கிளர்ச்சியூட்டும் ஓர் அனுபவம்

நான் இந்திய விரிநிலத்தில் அலைந்து கட்டுரைகள் எழுதி அவற்றை நூல்களாக வெளியிடத்தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. இரண்டாயிரத்து எட்டில் நாங்கள் சென்ற இந்தியா இன்று இல்லை. காட்சிகள் முற்றாக மாறிவிட்டன.. வாழ்க்கைச் சூழல் இன்னொன்றாக ஆகிவிட்டது .அன்றிருந்த பத்து வயதுச் சிறுவர்கள் இன்று இளைஞர்களாக நின்றிருப்பார்கள் .எழுதும்போதே மாறிக்கொண்டிருக்கும் இந்த விந்தையை அறிவதற்காகவே இப்பயணக்கட்டுரைகளை மீண்டும் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இனி நான் செல்லவிருக்கும் நிலம் எப்படி இன்னும் உருவாகாமல் இருக்கிறதோ அப்படியே சென்ற நிலம் காலத்தில் கரைந்துவிட்டிருக்கிறது.

ஆகவே செல்லவிருக்கும் பயணங்கள் என்னை கவர்ந்திழுப்பது போலவே சென்ற பயணங்களும் கவர்ந்திழுக்கின்றன. சில தனி இரவுகளில் முந்தைய பயணங்களை இணையத்தில் சென்று பார்த்து தாளா ஏக்கம் கொள்வதுண்டு .அப்பயணத்தில் உடன் வந்த கிருஷ்ணனையோ பிற நண்பர்களையோ அழைத்து அவற்றை பகிர்ந்துகொள்கையில் அவர்களும் நினைவுகளால் நெகிழ்ந்துருகுவதைக்காண முடியும். பயணம் போல் வாழ்க்கையை நிறைவு செய்வது பிறிதொன்றில்லை என்று அப்போது தோன்றுகிறது. பயணம் என்பது நம்மை நாமே பலநூறு இடங்களில் பல நூறு வகைகளில் நிகழ்த்திக்கொள்வது.

ஆனால் கற்பனை அற்ற ஒருவரின் பயணம் தன் வாழ்விடத்தை செல்லுமிடமெல்லாம் கொண்டு செல்வதுதான். அவர் அங்கு பார்ப்பதெல்லாம் வேறுபாடுகளை மட்டுமே. ‘அங்கு இட்லி கிடைக்குமா ? அங்கு நம்மைப்போல் மக்கள் அன்பாக இருப்பார்களா?’ என்றெல்லாம் பயணம் செய்யாதவர் கேட்கும் அனைத்து கேள்விகளும் தங்கள் வாழ்நிலத்தை கொண்டு பொருத்தி பார்க்கும்முயற்சியின் விளைவுகளே. கற்பனை உடையவனுக்கு பயணம் என்பது தன் வாழ்விடத்தை உதறிவிட்டு செல்லுதல். இங்கு இவ்வண்ணம் நிகழ்ந்த தன்னிலையை பிறிதொரு இடத்தில் பிறிதொரு வண்ணம் நிகழ்த்தி பார்த்தல். ஒரு வாழ்வில் ஆயிரம் வாழ்க்கைகளை நடத்துதல்.

சமீபத்தில் நான் சென்ற பல பயணங்களை கட்டுரைகளாக எழுத முடியவில்லை. என் உள்ளத்தில் மிகப்பெரிய அனுபவமாக இருந்த கம்போடிய பயணத்தை நான் எழுதமுடியாமல் ஆகிவிட்டது. என்னை நான் மீள மீள கண்டடைந்த இரு பயணங்கள் ஐரோப்பாவில் நிகழ்த்தியவை. அவற்றை எழுதுவதென்பது நான் என்னை மறுவரையறை செய்து கொள்வது .கலையினூடாக பண்பாட்டினூடாக சென்ற கனவுப்பயணங்கள் அவை. ஐரோப்பாவும் பிரிட்டனும் நம்மை ஆட்கொண்ட நிலங்கள். நமது தொல் மரபு நம் உருவாக்கத்தில் எந்த பங்கு வகிக்கிறதோ அப்பங்கை பிரிட்டனும் ஐரோப்பாவும் வகிக்கின்றன.

ஐரோப்பாவை விரிவாக எழுத வேண்டுமென்ற கனவு இன்னும் எனக்குள்ளது. நீண்ட பயணங்களின்போது எழுத முடியாமல் ஆகிவிடுகிறது .திரும்பி வரும்போது எழுதியாகவேண்டியவை குன்றென குவிந்து கிடக்கின்றன. இப்பொறுப்புகள் என்னை எழுதவிடாமல் செய்துவிடுகின்றன. அக்குறை இன்னும் என்னில் உள்ளது .ஜப்பானை பார்த்துவிட்டு திரும்பும்போது அதை எழுதவேண்டுமென்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் நான் ஜப்பானில் பார்த்தவற்றை மேலும் பலர் இங்கு எழுதியிருக்கக்கூடும். மிக எளிதில் அச்செய்திகளை எவரும் அடையக்கூடும். மீண்டும் அவற்றை எழுதுவதா என்ற தயக்கம் எழுந்த போது தோன்றியது, அனைவரும் பார்ப்பதற்கப்பால் நான் பார்த்த ஒன்றுண்டு .மிகச்சிறு காட்சிகள். அதைவிடச்சிறிய அனுபவங்க்ள். சிறியவற்றினூடாக ஜப்பானை கண்டடையலாம் என்று தோன்றியது. ஜப்பானிய பண்பாடென்பதே நுண்மைக்குள் விரிவு காணும் தன்மை கொண்டதுதான்

(மேலும்)

 

முந்தைய கட்டுரைபனிமனிதன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாரி மொழியாக்கம் செய்த கதைகள் – கடிதங்கள்