‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-1

கணியரின் களத்தில் கதிரெழுகை நிகழ்ந்து நெடும்பொழுதான பின்னரும் உருக்கி விழுதென ஊற்றப்பட்டு உறைந்து கல்லானதுபோல் கருக்கிருள் குருக்ஷேத்ரத்தை முற்றாக மூடியிருந்தது. அதற்குள் பெய்துகொண்டிருந்த மென்மழையின் துளிகளால்கூட எங்கும் இருளொளியை எழுப்ப இயலவில்லை. அனைத்துச் சுடர்களும் அணைந்திருந்தமையால் களம் வான் போலவே தானும் இருண்டு இன்மையென்றாகிவிட்டிருந்தது. இருளுக்குள் யானைகளின் காதுமணிகளும் புரவிகளின் கழுத்தணிகளும் குலுங்கும் ஓசை மழையின் சீரான வருடலோசைக்குள் ஒலித்தது. மழைத்துளிகள் சொட்ட எங்கும் கூரை இருக்கவில்லை. சொட்டொலி இல்லாத மழையொலி எங்கோ பெருகியோடுவதுபோல கேட்டுக்கொண்டிருந்தது.

படைவீரர்கள் இரவில் நெடும்பொழுது துயிலின்றி மென்மழைக்கு ஒதுங்கிடம் தேடி அங்குமிங்கும் அலைந்தனர். கையில் கிடைத்தவற்றைக்கொண்டு தங்கள் உடல்களை மூடிக்கொள்ள முயன்றனர். பலகைகளும் மரவுரிகளும் தோல்களும் முற்றாக எரிந்து சாம்பலாகி மழைநீரில் கரைந்து மண்ணில் ஊறிவிட்டிருந்த அவ்வெளியில் அவர்கள் ஒருவர் உடலே பிறருக்கு கூரையென்றாக, உடல்கள் இணைந்து பேருடலென்றாகி இருளுக்குள் குவிந்திருக்க, தங்கள் உடலுக்குள் தாங்களே ஒடுங்கி அமரவே முடிந்தது. வெவ்வேறு வடிவில் உடல்குறுக்கிச் சுருண்டு அமர்ந்து முழங்கால் மடிப்புகளில் தலை வைத்து ஒருவர் உடல்சரிவை பிறிதொருவர் உடல்சரிவால் தாங்கி அமர்ந்து ஒருவர் உடல் வெம்மையை பிறிதொருவர் பெற்றுக்கொண்டு மெல்ல உளம் மயங்கி துயிலில் ஆழ்ந்தனர். அவர்களின் சித்தம் மழையை உணர்ந்து முரண்டு எழ களைத்த தசைகள் அதை இழுத்து துயிலில் மூழ்கடித்தன.

பின்னிரவிலேயே முற்றென அடங்கி இருதரப்பும் அடியிலியில் விழுந்தன. உடல் அளித்த அழைப்பை ஏற்று உரியபொழுதில் விழித்துக்கொண்ட கணியர்கள் இருளுக்குள்ளேயே மரத்தரையில் களம் வரைந்து, இருளுக்குள் சோழி அமைத்து பொழுது கணித்தனர். விண்ணில் விண்மீன்கள் என எவையும் இருக்கவில்லை. இடிமின்னல்களும் முற்றாக ஓய்ந்துவிட்டிருந்தன. இருளன்றி பிறிதெதுவும் சூழில் இல்லை. இருளோ இன்மையென தன்னை காட்டியது. ஆயினும் பொழுது எழுந்துவிட்டது என அவர்கள் கணித்தனர். அப்பொழுது தொலைவில் முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. “எழுக கதிரொளி! எழுக நாளெரி! இன்று பிறந்தெழுக புதிய உலகு!”

“அங்கர் சிதையெழுகிறார்” என்று முதுகணியரான சாரதர் தன் மாணவனிடம் சொன்னார். “அங்கர் எரிபீடம் ஏறினார். அனற்கைகள் அவரை பெற்றுக்கொண்டன. விண்ணூர்வோன் தொட்டு தன் மைந்தனை வாழ்த்தினார்” என்றது முரசு. “ஆம், அங்கு மட்டுமாவது கதிர் எழுந்தாகவேண்டும்” என்றார் சாரதர். தெற்கெல்லைக் காவல்மாடத்தில் அமர்ந்திருந்த அவர்கள் மழையின் திரைக்கு அப்பாலிருந்து மிக மெல்ல ஒலித்த அந்த அதிர்வுக்கு செவி தீட்டினர். “கதிர் எழுந்த பின்னரே சிதை மூட்ட வேண்டுமென்று நெறி உள்ளது என்றார்கள்” என்று இளைய கணியனான சீர்ஷன் சொன்னான். எவர் முகமும் தெரியவில்லையாதலால் “எங்கும் கதிர்க்கீற்றுகூட தென்படவில்லை” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

சாரதர் கண்களைச் சுருக்கி இருளுக்குள் கூர்ந்து விழியோட்டி “ஆம்” என்றார். “ஆனால் இங்குள்ள அருமணிகளில் உறைவது கதிர் விட்டுச்சென்ற ஒளியே. கதிரவனுக்கு மாற்றாக அருமணியை வைத்து அதன் ஒளியை வெயில் எனக் கருதுவது அதர்வத்தின் வழக்கங்களில் ஒன்று.” சீர்ஷன் நீள்மூச்செறிந்து “இப்பொழுது ஆவது என்ன? பொழுதெழுகையில் போர் என வகுக்கப்பட்டுள்ளது. இந்தப் புலர்பொழுது பன்னிரு களத்தில் எழுந்துள்ளது, போர்க்களத்தில் எழவில்லை” என்றான். “நேர்க்களத்தை ஆள்பவர்கள் அல்ல நாம். நமது கோள்களும் மீன்களும் கதிர்களும் காலமும் திகழ்வது நமது கணிக்களத்தில் மட்டுமே” என்று சாரதர் சொன்னார். “நமது அறிவிப்பை அளிப்போம். முடிவெடுக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு.”

அவர் தன்னைச் சுற்றி உடல் குறுக்கி துயின்றுகொண்டிருந்த முரசுக்காவலர்களை பார்த்தார். முரசுத்தோற்பரப்புகள் ஏற்கெனவே பொசுங்கி அழிந்திருக்க, வெற்று வட்டங்களாக அவை காவல் மாடத்தில் விரிந்தமர்ந்து இளமழையின் நீரை தேக்கி வைத்திருந்தன. “முரசொலி எழுப்ப இயலுமென்று தோன்றவில்லை. சேகண்டிகளையும் சேமக்கலங்களையும்தான் இசைக்க வேண்டும். கொம்புகள்கூட முறையாக ஒலிக்காது” என்றார் சாரதர். சீர்ஷன் தலைமை முரசுக்காவலன் வஜ்ரனை அணுகி அவன் தோளைத் தொட்டு உலுக்கி “காவலர்தலைவரே! காவலர்தலைவரே!” என்றான். அவன் அடியிலியின் செறிவிருளுக்குள் துளியென தன்னை உணர்ந்தான். அங்கிருந்து மெல்ல கிளம்பி மேலெழுந்து வந்து சித்தம் திரட்டிக்கொண்டு விழித்து இருளில் விழியின்மை கொண்டு குழறலாக “யார்?” என்றான்.

சீர்ஷன் அவன் தோளை உலுக்கி “விழித்தெழுக! பொழுதாகிவிட்டது!” என்றான். “யார்?” என்று அவன் மீண்டும் கேட்டான். பின்னர் சூழல் உணர்ந்து வாயைத் துடைத்தபடி எழுந்து “என்ன சொல்கிறீர்கள், கணியரே?” என்றான். “களத்தில் பொழுது எழுந்துவிட்டது. இது எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி போர் தொடங்குவதற்கான தருணம். இதை முறைப்படி அறிவிக்க வேண்டியது உங்கள் கடமை” என்றான். அவன் இருளை நோக்கி “இவ்விருளிலா?” என்றான். “இருள் மழைமுகிலால் உருவாக்கப்படுவது. அதற்கப்பால் வானம் ஒளிகொண்டிருக்கிறது” என்றான் சீர்ஷன். சாரதர் சிரித்து “இங்கே ஒளிநிறைந்திருக்கையில் கடுவெளி இருள் மூடி விரிந்திருப்பதுபோல” என்றார். வஜ்ரன் குழப்பத்துடன் அவர்களை நோக்கியபின் “என்ன செய்யவேண்டும்?” என்றான். “பொழுது எழுந்துவிட்டதை அறிவிப்பது உம் கடமை” என்றான் சீர்ஷன்.

“இப்பொழுதா? கதிரெழும்பொழுதா?” என்றபின் அவன் கிழக்கே பார்த்தான். “திசைகளே இல்லையென்று தெரிகிறது” என்றான். “ஆம். ஆனால் கணிக்களத்தில் இத்தருணத்தில் கதிர் எழுந்துவிட்டது. வானின் முகில்பாதையில் கதிரவனின் புரவிக்குளம்படிகள் சென்றுகொண்டிருக்கின்றன” என்றான் சீர்ஷன். “அறிவிப்பை முழக்கலாம்தான். ஆனால் எவரை எழுப்புவது? எழுந்து எவர் படைக்கு ஒருங்குவது? இருப்பவர்கள் மிகச் சிலர். அவர்கள் சற்று முன்னர்தான் துயிலுக்குள் சென்றிருப்பார்கள். எங்கும் பந்தங்கள் இல்லை. சுடரேற்றுவதற்கு அரணிக்கட்டைகளோ உரசுகற்களோ இருக்குமென்றுகூட தோன்றவில்லை” என்று வஜ்ரன் சொன்னான். “அது நமது பொறுப்பல்ல. நாம் நமது கடமையை செய்வோம்” என்று சீர்ஷன் சொன்னான்.

வஜ்ரன் அருகே நிழலுருவாகக் கிடந்த மூன்று காவலர்களை மாறிமாறிப் பார்த்தபின் அவர்களின் தோள்களை தட்டி எழுப்பினான். முனகலோசையுடன் புரண்டு படுத்து வெவ்வேறு ஒலிகளை எழுப்பியபடி அவர்கள் விழிப்பு கொண்டனர். ஒருவன் “பூதங்கள்! கரிய பூதங்கள்!” என்றான். இன்னொருவன் அவனைப் பார்த்து “என்ன? நான் வேறு!” என்றான். “இது எந்த இடம்?” என்று எழுந்து அமர்ந்த ஒருவன் கேட்டான். “ஆம்” என அவனே சொன்னபடி மீண்டும் படுத்துக்கொண்டான். காவலர்தலைவன் ஓங்கி அவனை உதைத்து “எழுந்திரு, கீழ்பிறப்பே! காவல்மாடத்தில் துயில்வதற்கு தண்டனையாக உன் தலை கொய்யப்படவேண்டும்!” என்றான். “ஆம்” என அவன் சொல்லி மீண்டும் துயிலில் தழைய ஓங்கி இருமுறை உதைத்தான். “எழு! எழு! எழு!” என்றான்.

அவன் எழுந்து “கொடுங்கனவுகள்! நான் பசித்து வாய் திறந்த பெரும்பூதங்களை கண்டு கொண்டிருந்தேன்” என்றான். இன்னொருவன் ஆடையை சீரமைத்து எழுந்து “நான் ஓநாய்களின் ஊளையை கேட்டேன்” என்றான். “அங்கே அங்கர் சிதையெழுந்துவிட்டார். அவ்வாறெனில் அரசரும் பிறரும் திரும்பி வரப்போகிறார்கள். பொழுது எழுந்துவிட்டது என்பதை கணியர் சொல்ல அரசர் ஏற்றுக்கொண்டார் என்பதே அதற்குப் பொருள். இங்கும் கணியர்கள் பொழுதை அறிவிக்கிறார்கள். நமது கடமையை செய்வோம்” என்றான் வஜ்ரன்.

எண்ணியிராத கணத்தில் இளைய முரசுக்காவலன் உரக்க நகைக்க “ஏன் சிரிக்கிறாய்? அறிவிலி!” என்று கையை ஓங்கினான் வஜ்ரன். “முற்றிருளுக்குள் நின்று பொழுது எழுவதை அறிவிப்பது இதற்கு முன் எங்காவது நடந்திருக்கிறதா என்று எண்ணிப்பார்த்தேன்” என்றான் அவன். ஒருகணம் உச்ச சினம் கொண்டாலும் வஜ்ரன் தானும் வெடித்து நகைத்துவிட்டான். பிற காவலர்களும் நகைக்கத் தொடங்க சீர்ஷனும் நகைத்தான். முதுகணியர் சாரதர் “நகைப்பதற்கான இடம் அல்ல இது” என்றார். பின்னர் முகத்தசைகளின் இறுக்கம் தானே தளர அவரும் புன்னகைத்தார். வஜ்ரன் “நன்று, அதுவும் ஒரு நல்வாய்ப்பே. நமது கடமையை செய்வோம். இருட்புலரி எழுக! இருட்கதிரவனின் ஒளி மண்ணில் விழுக! மானுடர் தங்கள் இருள் விழிகளால் இருளுருக்களைக் கண்டு இருளுலகு சமைத்து அங்கு நின்று போராடுக!” என்றான்.

சாரதர் “உமது தந்தை ஒரு சூதராக இருக்க வாய்ப்புண்டு” என்றார். வஜ்ரன் வெடித்துச் சிரித்தான். அவன் நகைப்பு சற்று பித்து கலந்திருந்தது. அத்தருணத்திற்கு உரியது நகைப்பே என அவன் முடிவு செய்ததுபோல், நகைத்தே அதை கடக்க விரும்புவதுபோல். “ஆம், எனது அன்னை என் தந்தையைப் பற்றி சொல்வதுண்டு. அவருடைய தந்தையின் குருதியில் சூதர்கள் எவரோ கலந்துவிட்டிருக்கிறார்கள் என்பாள். இளவயதிலேயே மறைந்தார். பெரும்பாலான நாட்கள் காவல்பணியில் பாடியபடியும் நூல்நவின்றபடியும் பொழுதுநீக்கினார்” என்றபின் “கொம்புகளும் சேகண்டிகளும் சேமக்கலங்களும் எழுக!” என்றான்.

முரசுக்காவலர்கள் தங்கள் ஓசைக்கலங்களை எடுத்துக்கொண்டனர். தலைமை முரசுக்காவலன் வஜ்ரன் முன்னணியில் சென்று இசைநடத்தும்பொருட்டு நின்று ஒருகணம் திகைத்தான். பின்னர் கணியரிடம் “வழக்கமாக என் கையசைவுக்கே இவ்விசை முழங்கும். இருளில் என்றால் ஒளிவிடும் சிறு சுடர்களை ஏந்தியிருப்பேன். இப்போது என்ன செய்வது?” என்றான். “ஓசையிலேயே அவ்வசைவுகளை எழுப்புக!” என்றார் முதுகணியர். “ஓசையிலா?” என்றபின் அவன் மீண்டும் நகைத்தான். இசைக்கலமேந்திய முரசுக்காவலர்களும் நகைத்துக்கொண்டிருந்தனர். வஜ்ரன் முன்னால் நின்று “என் இரு கைகளையும் கழுகுச்சிறகென வீசுகிறேன்” என்றான். “ஆம், வீசுகிறீர்கள்!” என்று சிரித்தபடியே பிறர் கூவினார்கள். அவ்வசைவுக்கேற்ப கொம்புகளையும் சேகண்டிகளையும் சேமக்கலங்களையும் முழக்கினர்.

“என் கைகள் இணைந்து தொழுவதுபோல் முன் நீள்கின்றன! தலைக்கு மேல் உயர்கின்றன! இருபுறமும் சுழல்கின்றன! மீண்டும் சிறகாகின்றன” என்று வஜ்ரன் தொடர்ந்து கூவ அவற்றை ஏற்று சிரித்தபடி திரும்பக்கூவியபடி அவர்கள் இசைக்கலங்களை முழக்கினர். புலரியின் ஓசை கூரிய உலோக ஓசையாக இருளுக்குள் அலையலையென எழுந்து பரவியது. பித்தர்கள்போல் சிரித்துக்கொண்டும் உடலை உலைத்து ஆட்டியபடியும் அவர்கள் முழக்கிய அவ்விசையே விந்தையான சிரிப்பு போலிருந்தது. இருளுக்குள் ஒரு கொடுந்தெய்வம் எழுந்து சிரிக்கத்தொடங்கியதுபோல. அது அவர்களை முதற்கணம் அச்சுறுத்தியது. அந்த உறைநிலையில் அச்சமேகூட நல்லுணர்வு எனத் தோன்ற அவர்கள் மேலும் கூவிச் சிரித்தார்கள்.

ஆனால் அந்த ஓசையிலிருந்து பிற முரசுமாடங்களில் ஓசைகள் பற்றிக்கொள்ளவில்லை. இருளுக்குள் நீட்டிய ஓசைக்கரங்கள் துழாவித் துழாவி விரல் தவித்தன. பின்னர் ஓய்ந்து மெல்ல அமைந்தன. படைகளிலிருந்து எந்த ஓசையும் எழவில்லை. வஜ்ரன் “ஒருவர் கூட செவி கொள்ளவில்லை என்று தோன்றுகிறது” என்றான். “அது நன்று. செவி கொண்டு சிலர் எழுந்து இங்கு வந்து என்ன என்று கேட்கக்கூடும். அவர்களிடம் கூற நம்மிடம் மறுமொழி இல்லை. நமது கடமையை செய்துவிட்டோம். ஆனால் அது அளிக்கும் இடர்கள் அனைத்தையும் கடந்தும் விட்டோம்” என்றார் கணியர். “இனி என்ன செய்வது?” என்று இளைய முரசுக்காவலன் கேட்டான். “அமர்ந்துகொள்வோம். எவரிடமேனும் வாய்மணம் இருக்குமெனில் மெல்வோம்” என்றார் சாரதர். இளம் முரசுக்காவலன் “வாய்மணமா? நேற்று அந்தியிலேயே அது முற்றாக தீர்ந்துவிட்டது” என்றான்.

வஜ்ரன் “ஆம், நேற்று பின்னிரவில் எவரிடமேனும் சிறு பாக்குத்தூளேனும் இருக்குமா என்று பார்த்தோம். இவனுடைய பையில் ஒரு விரல் கிள்ளும் அளவுக்கு பாக்குப்பொடி இருந்தது. அதை என் வாயில் போட்டுக்கொண்டேன்” என்றான். அவர்கள் அமர்ந்தனர். கணியர் “இவ்விருளுக்குள் நாம் கையில் என்ன வைத்திருக்கிறோம் என்று எவர் பார்க்கப் போகிறார்கள்? நாமே கூட பார்க்க இயலாது. நாம் பார்க்காவிடில் நமது தெய்வங்களும் அதை பார்க்காது” என்றார். முரசுக்காவலன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். கணியர் சிரித்துக்கொண்டு “எனது வெற்றிலைச்செல்லத்தை இதோ நீட்டுகிறேன்” என்று வெறுங்கையை நீட்டினார். காவலன் உடனே அதை புரிந்துகொண்டு “ஆம், அதற்குள் இனிய பாக்கும் வெற்றிலையும் நறுஞ்சுண்ணமும் மிளகும் கிராம்பும் நிறைந்திருக்கின்றன. எனக்குரிய வாய்மணத்தை எடுத்து சுருட்டிக்கொள்கிறேன்” என்று சொல்லி எடுத்து கையால் நீவி சுருட்டுவதுபோல் நடித்தான்.

பிற காவலர்களும் எழுந்து முழங்கால் மடித்து ஊன்றி அருகணைந்து அந்த வெற்றிலைச்செல்லத்திலிருந்து வாய்மணத்தை எடுத்து மடித்துச் சுருட்டி வாயிலிட்டனர். “அரிய வாய்மணம்! இதற்கிணையான ஒன்றை இதற்கு முன் அறிந்ததில்லை” என்று வஜ்ரன் சொன்னான். “இதற்கு நிகரான ஒன்றை மண்ணிலிருக்கும் எந்தப் பொருளாலும் உருவாக்கிவிட முடியாது. இது இதுவரை நாம் அறிந்த வாய்மணங்களில் சிறந்தவற்றிலிருந்து நம்முள் நாம் தொகுத்துக்கொண்டதல்லவா?” என்று இளம் கணியன் சொன்னான். “சொற்களால் அதை சிதறடிக்காதே, அறிவிலி” என்று சாரதர் அவன் தோளை அடித்தார்.

வாய்மணத்தை அவர்கள் மெல்லும் ஓசை இருளுக்குள் கேட்டது. வாயிலூறிய உமிழ்நீரை மேலிருந்து கீழே துப்பினார்கள். உறிஞ்சும் ஒலிகளும் சுவைக்கும் மூச்சொலியும் மகிழும் முனகல்களும் எழுந்தன. சிலர் தலையசைத்தனர். ஒருவர் “நல்ல வாய்மணம் பெண்டிரை நினைவுறுத்துவது” என்றார். இன்னொருவர் “எனக்கு உளம் இசையும் வாய்மணம் அமைந்தால் நான் எப்போதும் தொடையில் தாளமிட்டுக் கொள்வதுண்டு” என்றார். கீழே வாய்மணத்தை நீட்டி துப்பிவிட்டு அவர்கள் உடல் நீட்டி அமர்ந்தனர். இனிய வாய்மணம் மெல்வது அளிக்கும் ஓய்வை அவர்கள் உடல்கள் அறிந்தன. உள்ளங்களும் முறுக்கவிழ்ந்து எளிதாயின. முகங்கள் மலர “இனிய காலை! நெடுங்காலமாயிற்று இப்படி ஓர் அழகிய காலையை கண்டு!” என்று வஜ்ரன் சொன்னான்.

“ஆம், இனிய காலை” என்றார் கணியர். “அனைத்து காலைகளையும் புலரொளி துலக்குகிறது. கருக்கிருள் துலக்கும் காலை ஒன்றுண்டு என்று இப்போது அறிந்தேன். ஆம், வாள் முனைபோல் கூரிய இருள். இதில் இருந்து படைக்கலங்களையே வெட்டி எடுத்துக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது” என்று இளைய கணியன் சொன்னான். “இது கடுவெளி. நாமறியும் ஒளி நமது ஆதித்யனாக அமைந்த முதற்கதிரவனுடையது. அவன் எல்லைக்கப்பால் வேறு ஆதித்யர்கள் சுழல்கின்றனர். கோடானுகோடி ஆதித்யர்கள். முடிவிலாத ஆதித்யப் பெருவெளி. ஆனால் அனைத்து ஆதித்யர்களின் ஒளியை ஒருங்கிணைத்தாலும் கடுவெளியின் பேரிருள் பரப்பில் அது ஒரு குமிழி மட்டுமே என்பார்கள். இருளே பிரம்மத்தின் பெருவடிவம். விண்ணளந்தோன் கரியோன்” என்று வஜ்ரன் சொன்னான்.

“நீங்கள் சூதரேதான். எந்த ஐயமும் இல்லை” என்று தொடையில் அறைந்து கணியர் நகைத்தார். வஜ்ரன் “அதனால்தான் போலும் எனக்கு அனைத்துப் போர்க்களங்களுமே பொருளற்ற வன்செயல்களாகவும் அனைத்து உணர்வுகளும் கேலிக்குரிய நடிப்புகளாகவும் தென்படுகின்றன. இங்கு போர் நிகழத்தொடங்கிய நாள் முதல் இந்தத் தென்னெல்லை காவல்மாடத்திலேயே அமர்ந்திருக்கிறேன். இங்கிருந்து நோக்குகையில் ஒவ்வொரு கணமும் சலிப்பையும் குழப்பத்தையும் ஊட்டும் விந்தையானதோர் கூத்தைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். “இது உண்மையில் முற்றிலும் பொருளற்றது. இதை பொருளேற்றம் செய்ய சொற்களை கொட்டவேண்டும்.” கணியர் “பெருங்காவியம் ஒன்று எழும்” என்றார். “ஒரு காவியமல்ல, நூறுநூறு காவியங்கள். யுகயுகங்களாக எழுதி இதற்கு பொருளூட்ட முயல்வார்கள்.”

இளைய கணியன் “எதையாவது உண்ணலாமே” என்றான். அனைவரும் திரும்பிப்பார்த்தனர். ஒருவன் தரையில் ஓங்கி அறைந்து “மெய்! எதற்கு தயங்க வேண்டும்?” என்றான். “இங்கு நாம் எதையும் உண்ணமுடியும். ஊனுணவுகள், இன்னுணவுகள், இனிய மது… விண்ணவரின் அமுதத்தைக்கூட எண்ணினால் உண்டுவிடலாம்” என்றான். சாரதர் கைதட்டி “அடேய், அந்த ஊன்கலத்தை இப்படி எடு” என்றார். இரு ஏவலர்கள் சிரித்தபடி சென்று எடை மிக்க ஊன்கலத்தை தூக்கி கொண்டுவந்து மெல்ல வைத்தனர். “மெதுவாக! மெதுவாக! கொதிக்கும் ஆவி எழுந்துகொண்டிருக்கிறது” என்றார் சாரதர். “மதுக்கலங்கள் எங்கே?” என்று இளைய கணியன் கேட்டான். “எத்தனை கலங்கள்?” என்றான் வஜ்ரன்.

“பன்னிரு கலங்கள், தலைவரே. இங்கு பன்னிரண்டு பேர் இருக்கிறோம்” என்ற சாரதர் “ஒரு கலம் கூடுதலாக இருக்கட்டும். இங்கு அமர்ந்திருக்கும் தெய்வங்களுக்கு படைக்க வேண்டும்” என்றார். பன்னிரண்டு கலங்களை இளைய கணியன் எடுத்து பரப்பி வைத்தான். ஒன்றை எடுத்து தென்மேற்குத்திசை நோக்கி படைத்தான். இரு ஏவலர்கள் கொதிக்கும் ஊன்சோற்றை அகப்பையால் அள்ளி தாலங்களில் வைத்தனர். “மான்கறி!” என்று ஒருவன் சொன்னான். “மான்கறி ஊன்களில் தளிர்.” வாயால் உறிஞ்சியபடி “இது இளம்கன்று” என்று ஒருவன் சொன்னான். “இளைய மான் குருதி நிறைந்தது. முதிர்ந்த மான் புல்மணம் வீசுவது” என்றார் சாரதர்.

“வரகரிசி ஊன் சோற்றுக்கு மிகவும் நல்லது” என்றான் வஜ்ரன். “உடன் தொட்டு உண்ண என்ன இருக்கிறது?” என்று ஒருவன் கேட்டான். பரிமாறிக்கொண்டிருந்த காவலன் “வழுதுணங்காய் வாட்டும், வறுத்த பலாக்கொட்டையும் புளிக்காய் ஊறுகாயும்” என்றான். “சுட்ட ஆட்டுத்தொடை இருந்திருக்கலாம்” என்று ஒருவர் சொன்னார். “அது வந்துகொண்டிருக்கிறது. முதலில் இதை உண்ணுங்கள்” என்று பரிமாறியபடியே இளைய காவலன் சொன்னான். அவர்கள் கலங்களை எடுத்துக்கொண்டு பெருத்த ஓசையுடன் மென்றும் குதப்பியும் உறிஞ்சியும் உண்ணத் தொடங்கினார்கள். ஊன்நெய் முழங்கை வரை வழிய ஒருவன் அதை நக்கினான். வழுதுணங்காய் வாட்டையும் ஊறுகாயையும் தொட்டுக்கொண்டனர். பலாக்கொட்டையை சூடாக வாயில் இட்டு நாவால் புரட்டி உண்டனர்.

காவலர் இருவர் மரக்கூடைகளில் சுட்ட ஆட்டுத்தொடைகளை எடுத்துவந்தனர். “எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஒவ்வொருவரிடமாக நீட்டினார்கள். சாரதர் “கருகாமல் சுட்டிருக்கிறான். எவனாயினும் அடுமனையாளன் சிறந்தவன்” என்றார். “ஆடு தன்னை அனலுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் நன்றாகச் சுட முடியும். இறந்த பின்னரும் ஆடு அனலுடன் முரண் பிடித்தால் ஒருபக்கம் கருகும் மறுபக்கம் ஊன்செம்மை தெரியும்” என்றான் ஒருவன். ஆட்டுத்தொடைகளை கடித்துக்கொண்டு அன்னத்தை அவர்கள் உண்டனர். “மது என்ன இருக்கிறது?” என்றார் சாரதர். “புளித்த கள், யவன பழமது, பீதர்நாட்டு எரிமதுவும் உண்டு” என்றான் ஒருவன். “பீதர் மதுவே இந்தக் குளிருக்கு பொருத்தமானது” என்று சாரதர் சொன்னார். வஜ்ரன் “இத்தனை ஊன் நெய் உடலுக்குள் சென்ற பின்னர் புளித்த கள்ளே உகந்தது. வெற்று ஏப்பத்தை தடுக்கும்” என்றபின் “எனக்கு ஒரு குடம் கள் எடு” என்றான்.

கள்குடத்தை வாங்கி இரு கைகளையும் கொண்டு தூக்கி அண்ணாந்து குடத்தில் நீர் நிறையும் ஒலியுடன் வஜ்ரன் குடித்தான். சாரதர் பீதர்நாட்டு மதுவை வாங்கி ஒரு கையால் மூக்கை பற்றியபின் வாய்திறந்து உள்நாக்குக்குள் விட்டு விழுங்கி உடலை உலுக்கி முகம் சுளித்தபடி “பீதர்கள் இந்த மதுவை எதிலிருந்து எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அனலை நேரடியாக விழுங்கியதுபோல் எரிந்து இறங்குகிறது” என்றார். “உடலுக்குள் உள்ள அனைத்து அனல்களும் எழுந்து வந்து புது அனலை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வை வயிற்றுக்குள் உணர்கிறேன். பீதர் மது உடலில் அனைத்து உறுப்புகளையும் பற்றிக்கொள்ள வைக்கும். எண்ணங்கள் பற்றிக்கொள்கின்றன. நினைவுகள் பற்றிக்கொள்கின்றன” என்று இளைய கணியன் சொன்னான்.

உண்டும் குடித்தும் அவர்கள் உடலும் உள்ளமும் நிறைந்துகொண்டிருந்தனர். நிறையும் கலங்களுக்குரிய எடையும் ஓசையின்மையும் அவர்களில் கூடின. வஜ்ரன் தொய்ந்து சரியும் விழிகளுடன் “கலங்களை எடுத்து அப்பால் வை. கைகால் பட்டுவிடப்போகிறது. இத்தருணத்தில் உலோக ஒலிபோல் ஒவ்வாதது பிறிதில்லை” என்றான். “ஆணை!” என்றபின் அவர்கள் கலங்களைத் தூக்கி அப்பால் வைக்கத்தொடங்கினர். சாரதர் “இனிய காலை! இத்தகைய பேருணவுக்குப் பின் சிறு துயில்போல் இனியது பிறிதில்லை” என்றார். “துயில்க! இங்கு நாம் ஆற்றவேண்டியது எதுவும் இல்லை” என்றான் வஜ்ரன். சாரதர் கைகால்களை நீட்டி உடலை எளிதாக்கிய பின் விழிகள் சரிய “உள்ளத்தில் புகை மூடுகிறது. நல்லுணவுக்குப் பின் வரும் இத்துயிலிலேயே இருத்தல் எத்தனை இனிதென்று உணர்கிறோம். எண்ணங்கள் நினைவுகள் அனைத்துமே இனிக்கத் தொடங்குகின்றன. எத்தனை இனிப்பு என்று எண்ணியே உளம் நெகிழ்கிறது” என்றார்.

அதை அவர்கள் அனைவருமே உணர்ந்தவர்கள்போல் அவரை நோக்கி அமர்ந்திருந்தனர். “எவரேனும் பாடுங்கள்” என்றார் சாரதர். “யார் பாடுவது?” என்று இளைய கணியன் திரும்பிக்கேட்டான். “இங்கு காவல்மேடையில் சிறந்த பாடகர் சூதர்மைந்தரேதான்” என்றான் இளைய காவலன். “அடேய்!” என்று அவனை செல்லமாக அடிக்க கையோங்கிய பின் வஜ்ரன் “நான் பாடுவதுண்டு, ஏனென்றால் எந்தையும் பாடகர்” என்றான். “எங்கள் ஊரில் காளிஆலயத்தில் பூசனை செய்யும் சூதரிடம் இசை கற்றிருக்கிறேன்” என்றான். “அவர் உங்களுக்கு இசை கற்றுக்கொடுத்தாரா?” என்று இளைய கணியன் கேட்டான். “ஆம், பல ஆண்டுகள்” என்றான் வஜ்ரன். “நான் அங்குதான் பெரும்பொழுதை கழிப்பேன். எந்தைக்கும் இசை அவரே கற்றுக்கொடுத்தார். முதியவர்.”

இளைய கணியன் உரக்க நகைத்து “நன்று, முதுதந்தை யாரென்றும் தெரிந்துவிட்டது” என்றான். “அடேய்!” என்று அவனை எட்டி மெல்ல அறைந்த பின் “இருக்கலாம். இம்மண்ணில் மகிழ்வின் பொருட்டும் அன்பின் பொருட்டும் செய்பவை அனைத்தும் உயர்ந்தவையே என இக்களத்தில் அமர்ந்திருக்கையில் உணர்கிறேன். பிற எதற்கும் பொருள் என ஏதுமில்லை” என்றான் வஜ்ரன். “பாடுக!” என்று சாரதர் சொன்னார். வஜ்ரன் கைகளைச் சொடுக்கி நொடித்து சீரான தாளத்தை எழுப்பினான். அதற்கேற்ப மெல்லிய முனகல் ஓசை எழுப்பி பாடத் தொடங்கினான். வண்டு முரல்வதுபோல் சொல்லில்லாது எழுந்த இசை பின்னர் சொல்கொண்டது.

இனிய காலை! ஆம் இனிய காலை!

இத்தனைக்கு அப்பாலும் தெய்வங்கள்

நம் மேல் அருளுடன் இருக்கின்றன என்பதற்கான சான்று

இனிய காலை! ஆம் இனிமையான காலை!

அனைத்திற்கு அப்பாலும் நாம் விழித்தெழ முடியும் என்னும் நம்பிக்கை!

 

இனிய காலை! தோழர்களே இனிய காலை இது

ஒவ்வொன்றும் மீண்டும் பிறந்தெழும் என்பதற்கு

ஒவ்வொன்றும் புதிதாக தொடங்கும் என்பதற்கு

நாம் பெற்றுக்கொள்ளும் உறுதி இது

இனிய காலை! எழுக இதோ இனிய காலை

 

வண்டுகளுக்காக மலர்கின்றன மலர்கள்

ஒளி கொண்டன மீன்கள் விழித்த நீரோடைகள்

குளிர்ந்தன தளிர்கள் சுடர்களாக மாறின சிற்றுயிர்கள்

இனிய காலையைப்போல் நாளும் எழும் தெய்வம் பிறிதில்லை

இனிய காலையைப்போல் நம்முன் வைக்கப்பட்ட

ஒளிர் வாள் பிறிதில்லை

வெட்டுக நேற்றை! வெட்டுக சென்றவற்றை!

இனிய காலை! இனிய காலை இது!

 

இனியகாலை ஓர் அரிய விதை

ஊன்றுக மண்ணில், ஊற்றூக அனைத்து நீர்களையும்

எழுக நாமறியாத இன்னொன்று. இன்னும் இங்கெழாத பிறிதொன்று

இங்கு எழப் போகும் நிலையில் சூழ்ந்திருப்பது

எழுக நாம் அறியாத ஒன்று

எழுக நம்மை வாழ வைக்கும் பிறிதொன்று

அவன் குரல் எழுந்து சூழ்ந்துகொண்டிருக்க ஒவ்வொருவராக இமை கனத்து உடல் தளர்ந்து மெல்லிய குறட்டை ஒலியுடன் துயில்கொள்ளத் தொடங்கினர். பாட்டை நிறுத்திவிட்டு கைகளை மார்பில் கட்டியபடி அவர்களை நோக்கி அமர்ந்திருந்தான் வஜ்ரன். பின்னர் நீள்மூச்சுடன் கண்களை மூடி உடலை தளர்த்தி தானும் துயில்கொள்ளத் தொடங்கினான்.

முந்தைய கட்டுரைஎப்படி இருக்கிறேன்?
அடுத்த கட்டுரைஎழுத்தாளனுக்கு வாசகனே உறவு- லக்ஷ்மி மணிவண்ணன்