மூன்று சிறுகதை தொகுதிகள்- கடிதங்கள்

 

சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் – காளிப்பிரசாத்

அச்செடுக்கமுடியாத இடைவெளிகள்- விஷால் ராஜா

 

அன்புள்ள ஜெ

 

மூன்று சிறுகதைத் தொகுதிகள் பற்றிய கருத்தரங்கும் அதில் பேசப்பட்ட விமர்சனக்கருத்துக்களும் அருமையாக அமைந்திருந்தன. நீங்களும் உங்கள் நண்பர்களும் மூன்று சிறுகதையாசிரியர்களைக் கவனப்படுத்த விரும்புகிறீர்கள். ஆனால் அவர்களை சம்பிரதாயமாகப் போற்றிப் புகழவில்லை. மிகவும் அடர்த்தியானதும் கொஞ்சம்கூட சமரசமில்லாததுமான விமர்சனங்களே அங்கே முன்வைக்கப்பட்டன. இது இன்றைய சூழலில் மிகமிக அபூர்வமான ஒன்று.

 

அதோடு அங்கே விவாதத்தில் எழுந்து கேள்விகேட்டவர்களும் மிகக்கூர்மையாகவே விவாதித்தார்கள். ஒருவர் மேடையில் முன்வைத்த கருத்தை தன்னுடைய வாசிப்பின் அடிப்படையில் முழுக்க மறுத்தார். இவ்வாறு அரங்கிலும் பலர் நூல்களை முழுமையாக படித்துக்கொண்டு வருவது இங்கே மிகமிக அபூர்வமானது. இந்த நேர்த்தியும் உண்மையும்தான் அந்த எரியும் வெக்கையிலும் வாசகர்களை அரங்கிலே அமரச்செய்கிறது என நினைக்கிறேன்

 

டி.வேங்கடராமன்

அன்புள்ள ஜெ

 

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் விஷால்ராஜா பேசியது மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. மிகவிரிவான அடித்தளத்தை அமைத்துக்கொண்டு நிதானமாக பேசினார். விமர்சனங்களை விரிவாக விளக்கினார். நல்ல விமர்சகர்

 

செந்தில்ராஜ்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

உங்கள் தளத்தில் என்னுடைய ‘பாகேஸ்ரீ’ சிறுகதை தொகுப்பை விஷால் ராஜா விமர்சித்திருப்பதை படித்தேன். நல்ல காத்திரமான விமர்சனம். என் போன்றவர்களுக்கு இது போல் ‘feedback’ கிடைப்பது அரிது. அதனால் விஷாலுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிடுக்கிறேன். அவருக்கு என் நன்றியை தெரிவித்துவிடவும்.

 

இதை பிரசுரித்த உங்களுக்கும் என் நன்றி. அடுத்து எழுத போகும் கதைகளில் என்ன மாற்றலாம் என்பதற்கு இந்த விமர்சனம் உதவும்.

 

நன்றி,

 

எஸ். சுரேஷ்

முந்தைய கட்டுரைஒரு பழைய மல்லு
அடுத்த கட்டுரைகரடி பற்றி…