[ I ]
நான்தான் முட்டாள் கிம்பெல். நான் என்னை முட்டாளாக நினைக்கவில்லை. ஆனால் மக்கள் என்னை அழைப்பது அவ்வாறுதான். பள்ளியில் இருக்கும்போதே எனக்கு அப்பெயரை அளித்துவிட்டனர். மொத்தம் எனக்கு ஏழு பெயர்கள் இருந்தன: க்ராக்கு, கழுதை, சணல்மண்டையன், லாகிரி, சிடுமூஞ்சி, மடையன் மற்றும் முட்டாள். இறுதிப் பெயர் நிலைத்துவிட்டது. என் முட்டாள்தனம் என்னவாக இருந்தது? என்னை எவரும் எளிதில் நம்பவைத்து விடலாம். அவர்கள் சொன்னார்கள், ”கிம்பெல், ரப்பியின்1 மனைவியை ஈற்றறைக்குக் கொண்டுவந்துள்ளனர், செய்தி தெரியுமா?” எனவே நான் பள்ளிக்குச் செல்லவில்லை. கடைசியில் அதுவொரு பொய் என்று ஆனது. நான் எப்படி அறிந்திருக்க முடியும்? அவள் வயிறு பெரிதாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவள் வயிற்றை ஒருபோதும் நான் நோக்கியதில்லையே. இதெல்லாம் பெரிய முட்டாள்தனமா என்ன? அந்த கும்பல் பலமாக என்னை கேலிசெய்து சிரித்து ஆடிப்பாடிவிட்டு ஒரு இரவு வணக்கப் பாடலை பாடியது. மேலும் வழக்கமாக ஒரு பெண் ஈற்றறைக்குச் செல்கையில் அவர்கள் அளிக்கும் உலர் திராட்சைகளுக்குப் பதிலாக என் கைநிறைய ஆட்டுப் புழுக்கைகளை திணித்தனர். நான் பலவீனமானவனல்ல. நான் யாரையாவது அறைந்தால் அவன் நேராக க்ராக்கோவில் சென்று விழுவான். ஆனால் நானோ சண்டையிடும் இயல்புடையவன் அல்ல. எனக்குள் நினைத்துக் கொள்வேன்: பராவாயில்லை போகட்டும். எனவே அவர்கள் இதை சாதகமாக எடுத்துக் கொண்டனர்.
ஒருநாள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் ஒரு நாயின் குரைப்பொலி கேட்டது. எனக்கு நாய்களைக் கண்டு பயமில்லை ஆனால் ஒருபோதும் அவற்றுடன் வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். அவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கு வெறி பிடிக்கலாம், பின்னர் அது கடித்துவிட்டால் கடவுளே வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. எனவே வேறு பாதைக்குத் திரும்பினேன். சட்டென அங்கு சுற்றிப் பார்க்கையில் மொத்த சந்தையும் சிரிப்பால் அதிர்ந்து கொண்டிருந்தது. அது நாயே அல்ல, ஓநாய்த்தோல் போர்த்திய திருடன். அது அவன்தான் என்று நான் எப்படி அறிந்திருக்க முடியும்? அந்த ஓசை ஊளையிடும் ஒரு பெட்டைநாய்போலவே இருந்தது.
ஊரில் உள்ள குறும்புக்காரர்களுக்கும் காலை வாருபவர்களுக்கும் என்னை ஏமாற்றுவது எளிது எனத் தெரிந்தவுடன் அனைவரும் தங்கள் கற்பனையை என்னிடம் முயற்சித்துப் பார்த்தனர். ”கிம்பெல், பேரரசர் ஃப்ராம்போலுக்கு வருகிறார்; கிம்பெல், டர்பீனில் நிலவு கீழே விழுந்து விட்டது; கிம்பெல், குட்டி ஃபர்பீஸ் குளியலறைக்குப் பின்னால் ஒரு புதையலை கண்டெடுத்துள்ளான்.” நான் ஒரு பூதத்தைப்போல் அனைவரையும் நம்பினேன். முதலாவதாக அடிப்படையில் அனைத்துமே சாத்தியம்தான் – தந்தையர்களின் ஞானம் எனும் நூலில் எழுதப்பட்டிருப்பதைப்போல, அது எவ்வாறு என்பதை மட்டும் மறந்துவிட்டேன். இரண்டாவதாக மொத்த நகரமும் என்மீது பாய்கையில் நான் நம்பித்தான் ஆகவேண்டும்! நான் எப்போதாவது தைரியத்துடன், “ஆ, நீங்கள் விளையாடுகிறீர்கள்!” என்று சொல்லிவிட்டால் பிரச்சனைதான். மக்கள் கோபம் கொண்டனர். “நீ என்ன சொல்கிறாய்! நாங்கள் அனைவருமே பொய்சொல்லிகள் என்கிறாயா?” என்னால் என்ன செய்ய முடியும்? நான் அவர்களை நம்பினேன், மேலும் அவ்வாறு செய்வது குறைந்தபட்சம் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என சமாதானம் கொண்டேன்.
நான் ஒரு அனாதை. என்னை வளர்த்தெடுத்த என் தாத்தா ஏற்கனவே கல்லறைக்குச் சென்றுவிட்டிருந்தார். எனவே அவர்கள் என்னை ஒரு ரொட்டி தயாரிப்பவனிடம் ஒப்படைத்தனர், அங்கு சேர்ந்த நேரம் இன்னும் கொடுமையானது! அங்கு நூடுல்ஸ் வேகவைக்க வரும் ஒவ்வொரு பெண்ணும் அல்லது சிறுமியும் ஒருமுறையேனும் என்னை கேலி செய்யத் தலைப்பட்டனர். ”கிம்பெல், சொர்கத்தில் ஒரு கண்காட்சி நடக்கிறது; கிம்பெல், ரப்பி ஏழாவது மாதத்தில் ஒரு கன்றுக்குட்டியை ஈன்றெடுத்துள்ளார்; கிம்பெல், ஒரு பசு கூரைமீது பறந்து வெண்கல முட்டைகள் இட்டுள்ளது.” ஒருமுறை யேஷிவாவிலிருந்து ஒரு மாணவன் சுருளப்பம் வாங்க வந்திருந்தான், அவன் சொன்னான், “ஏ கிம்பெல், நீ இங்கு நின்று அடுமனையாளனின் கரண்டியால் சுரண்டிக் கொண்டிருக்கையில் அங்கு தீர்க்கதரிசி வந்துவிட்டார். இறந்தவர்கள் எழுந்துவிட்டனர்.” “என்ன சொல்கிறாய்?” நான் கேட்டேன், ”யாரும் செம்மறியாட்டுக் கொம்பூதுவதை நான் கேட்கவில்லையே!” அவன், “நீ என்ன செவிடா?” என்றான். உடனே அனைவரும் கூவத் தொடங்கினர், “நாங்கள் கேட்டோம், நாங்கள் கேட்டோம்!”. பின்னர் மெழுகுவர்த்தி தயாரிப்பவரான ரீட்ஸ் அங்கு வந்து தன் கரகரத்த குரலில் அழைத்தார், “கிம்பெல், உன் தந்தையும் தாயும் கல்லறையிலிருந்து எழுந்துவிட்டனர். அவர்கள் உன்னைத் தேடுகின்றனர்.”
உண்மையை சொல்லவேண்டுமெனில் அப்படி எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என நன்றாகவே அறிவேன், எனினும் ஜனங்கள் அனைவரும் அது குறித்து பேசியதால் என் கம்பளி உடையை அணிந்து வெளிவந்தேன். ஒருவேளை ஏதேனும் நடந்திருக்கலாம். சென்று காண்பதால் என்ன இழந்துவிடப் போகிறேன்? அது வழக்கம்போலவே பெரும்கேலியில் முடிந்தது. அதன்பிறகு இனி எதையும் நம்புவதில்லை என உறுதி கொண்டேன். ஆனால் அவ்வழியில் செல்லவும் இயலவில்லை. அவர்கள் என்னை குழப்பியதால் முடிவு எடுக்க முடியாமால் மனம் தடுமாறியது.
நான் ரப்பியிடம் ஏதேனும் அறிவுரை கேட்கலாம் என்று சென்றேன். அவர் சொன்னார், ”ஒருமணி நேரம் தீங்கு செய்பவனாக இருப்பதைவிட வாழ்நாள் முழுக்க முட்டாளாக இருப்பதுமேல் என்று எழுதப்பட்டுள்ளது. நீ ஒரு முட்டாளல்ல. அவர்களே முட்டாள்கள். எவன் தன் சுற்றத்தாரை இழிவுபடுத்துகிறானோ அவன் சொர்க்கத்துக்கான வாய்ப்பை தானே இழக்கிறான்.” எவ்வாறிருப்பினும், ரப்பியின் மகள் என்னை உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கு ரப்பிகளின் நீதிமன்ற வளாகத்தில் நாங்கள் தனித்திருக்கையில், ”நீ இதுவரை சுவரை முத்தமிட்டாயா?” என்றாள். ”இல்லை; எதற்காக?” என்றேன். ”அதுதான் நியதி. ஒவ்வொரு சந்திப்பிற்குப் பின்னும் அவ்வாறு முத்தமிட வேண்டும்.” சரி, அதில் ஏதும் தீங்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவளுடைய நேர்த்தியான தந்திரம் வேலை செய்ததில் வெடித்துச் சிரித்தாள். அவளும் என்மீது ஒன்றை போட்டுப் பார்த்திருக்கிறாள், ஆகட்டும்.
நான் வேறு நகரதுக்கு சென்றுவிட விரும்பினேன், ஆனால் அதற்குள் அனைவரும் எனக்கு இணைதேடுவதில் மும்முரமாகிவிட்டதால் என்னைச் சுற்றி ஒருகூட்டம் இருந்து கொண்டே இருந்தது. காதில் இரத்தம் வரும்வரை என்னிடம் பேசிப்பேசியே அதற்கு சம்மதிக்க வைத்தனர். அவள் மணமாகதவளோ கற்புடையவளோ அல்ல, ஆனால் அவளொரு தூய கன்னி என்றனர். அவள் நொண்டுவது குறித்து கேட்டதற்கு அது வேண்டுமென்றே நாணத்தால் ஏற்பட்டது என்றனர். அவளிடம் முறைதவறி பிறந்த ஒரு குழந்தை இருந்தது, அது அவளின் குட்டி தம்பி என்று கூறினர். நான் கதறினேன், ”உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். நான் ஒருபோதும் அந்த வேசியை மணம்புரிந்து கொள்ள மாட்டேன்.” ஆனால் அவர்களோ நான் அநீதியாக பேசியதுபோல் கோபமுற்று, ”என்ன மாதிரியான பேச்சு இது! அவளைப் பற்றித் தவறாக பேசியதற்காக உன்னை ரப்பியிடம் கூட்டிச் சென்று தண்டனை கிடைக்கச் செய்ய முடியும்” என்றனர். அவர்களிடமிருந்து என்னால் எளிதில் தப்பிக்க முடியாது என்பதால் யோசித்துப் பார்த்தேன்: அவர்களின் விளையாட்டுக்கு என்னை பலி கொடுப்பது என்று முடிவாகிவிட்டது. ஆனால் திருமணம் ஆன பின்னர் கணவனே எஜமானன், இதில் அவளுக்கு பிரச்சனையில்லை என்றால் எனக்கும் சம்மதமே. அதுமட்டுமில்லாமல் எந்த சேதாராமும் நேராமல் நீங்கள் வாழ்வை நடத்திச் சென்றுவிட முடியாது, அப்படி எதிர்பார்க்கவும் கூடாது.
நான் அவளின் களிமண் வீட்டிற்கு சென்றேன், மொத்த கும்பலும் குழுவாக சேர்ந்து உரக்க கத்திக்கொண்டு என்னை பின்தொடர்ந்தது. அவர்கள் கரடி பிடிப்பவர்கள்போல நடந்து கொண்டனர். நாங்கள் கிணற்றின் அருகே வந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் நின்றுவிட்டனர். எல்காவிடம் எவ்விதப் பேச்சை தொடங்கவும் அவர்களுக்கு அச்சமிருந்தது. அவள் கடும்சீற்றமுடைய நாவைக் கொண்டவள். நான் வீட்டினுள் நுழைந்தேன். ஒரு சுவரலிருந்து மறு சுவர்வரை கொடிகள் கட்டப்பட்டு அதில் துணிகள் காய்ந்தன. அவள் வெறும்காலுடன் தொட்டியின் அருகே நின்று கழுவிக் கொண்டிருந்தாள். ஒரு பழைய பூம்பட்டுவகை கவுன் அணிந்திருந்தாள். அவளது கூந்தல் பின்னலிடப்பட்டு தலைக்குப் பின்னால் நீண்டிருந்தது. அவ்வறையின் துர்நாற்றத்தால் கிட்டதட்ட மூச்சுத் திணறினேன்.
நான் யார் என்பதை அவள் தெளிவாகவே அறிந்திருந்தாள். என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொன்னாள், “அட யார் வந்திருப்பது எனப் பாருங்கள்! ஒருவழியாக வந்தாயிற்று, இருக்கையில் அமருங்கள்.”
நான் அவளிடம் அனைத்தையும் கூறினேன்; எதையும் மறுக்கவில்லை. ”எனக்கு உண்மையை சொல், நீ நிஜமாகவே கன்னிப்பெண் தானா, மற்றும் அந்த தொல்லைதரும் யேச்சில் உன் குட்டித் தம்பியா என்ன? நான் ஒரு அனாதை என்பதால் என்னை ஏமாற்ற நினைக்காதே.”
”நானும் ஒரு அனாதைதான்,” அவள் பதிலளித்தாள், “உங்கள் மனதை கோணலாக்க முயற்சிப்பவர்களுக்கு, அவர்களின் மூக்குநுனி கோணாலாக போகட்டும். ஆனால் அவர்கள் என்னிடம் உரிமை எடுத்துக் கொள்ள முடியும் என்று நினைக்க வேண்டாம்., எனக்கு வரதட்சணையாக ஐம்பது கில்டர்கள் பணம் வேண்டும், அவர்கள் வேண்டுமானால் மொய்வசூலை எடுத்துக் கொள்ளட்டும். இல்லையெனில் நான் யாரென்று காட்டுவேன்” அவள் வெளிப்படையாக பேசினாள். நான் கூறினேன், “பொதுவாக வரதட்சனை அளிப்பது மணப்பெண்தான், மாப்பிள்ளை அல்ல.” அவளோ, ”என்னிடம் பேரம் பேச வேண்டாம். எனக்கு வேண்டியது நேரடியான ஆம் அல்லது இல்லை. எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே செல்லலாம்” என்றாள்.
நான் சிந்தித்தேன்: இந்த மாவிலிருந்து எந்த ரொட்டியும் எப்போதும் சுடப்படப் போவதில்லை. ஆனால் எங்கள் நகரமோ ஏழ்மையான ஒன்றல்ல. அவர்கள் அனைத்திற்கும் சம்மதித்து திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். நகரில் ஒரு வயிற்றுப்போக்கு தொற்றுநோய் பரவிக் கொண்டிருந்த காலத்தில் அது நடந்தது. கல்லறைத் தோட்டத்தின் வாயிலில், சிறிய பிணம் கழுவும் குடிசையின் அருகே திருமண சடங்கு நடைபெற்றது. சகாக்கள் அனைவரும் குடித்திருந்தனர். திருமண ஒப்பந்தம் வாசிக்கையில் மிகுந்த தெய்வபக்தியுள்ள ரப்பி கேட்பது காதில் விழுந்தது, “மணப்பெண் ஒரு விதவை அல்லது விவாகரத்தானவளா?” அவள் சார்பில் செக்ஸ்டனின் மனைவி அதற்கு பதிலளித்தாள், “விதவை மற்றும் விவாகரத்தானவள், இரண்டும்.” அது எனக்கு ஒரு அதிர்ச்சியான தருணம். ஆனால் என்னால் என்ன செய்ய முடியும், திருமணக் கூடாரத்திலிருந்து ஓடிவிடுவதா?
அங்கு பாட்டும் நடனமுமாக இருந்தது. ஒரு முதிய பாட்டி எனக்கெதிரே ஒரு வெள்ளைக் கிழவனை கட்டிப்பிடித்து ஆடினாள். களியாட்டத்தின் ஊடே மணப்பெண்ணின் பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ”கடவுளின் கருணை” பாடல் பாடப்பட்டது. ரப்பியின் நிறைவுரை முடிந்ததும் நிறைய அன்பளிப்புகள் வந்தன: ஒரு நூடுல்ஸ் பலகை, ஒரு மாவு பிசையும் தொட்டி, ஒரு வாளி, துடைப்பங்கள், கரண்டிகள் மற்றும் பல வீட்டு உபயோக பொருட்கள். பின்னர் இரண்டு வாட்டசாட்டமான இளைஞர்கள் குழந்தைகளுக்கான தொட்டில் ஒன்றை தூக்கிச் செல்வதைக் கண்டேன். நான் ஆச்சர்யத்துடன் ”இப்போதே இதற்கான தேவை என்ன?” என்று கேட்டேன். அவர்கள், “இதுகுறித்து ரொம்பவும் யோசித்து மூளையை குழப்பிக் கொள்ளாதே. இது சரியான நேரத்தில் பயன்படும்” என்றனர். நான் ஏமாற்றப்படப் போகிறேன் என்பதை உணர்ந்தேன். அல்லது வேறுவழியிலும் எடுத்துக் கொள்ளலாம், என்னிடம் இழப்பதற்கு என்ன உள்ளது? இதிலிருந்து என்ன வருகிறது எனப் பார்க்கிறேன். மொத்த நகரத்திற்கும் ஒட்டுமொத்தமாக பித்துப்பிடிக்க வாய்ப்பில்லை
[ II ]
இரவில் என் மனைவி படுத்திருக்கும் அறைக்கு வருவேன், ஆனால் அவள் என்னை உள்ளேவர அனுமதிப்பதில்லை. ”இதோ பார், நாம் இதற்காகவா திருமணம் செய்துகொண்டோம்?” நான் கேட்டேன். ”என் மாதாந்திர நாட்கள் வந்துவிட்டன.” என்றாள். “ஆனால் அவர்கள் உன்னை நேற்றுதானே புனித நீராட்டுக்கு அழைத்துச் சென்றனர், மாதாந்திர நாட்களுக்குப் பிறகு நீராட செல்வதுதானே கணக்கு?” அவள் கூறினாள், “இன்று என்பது நேற்றல்ல மற்றும் நேற்று என்பதும் இன்றல்ல. உனக்கு பிடிக்கவில்லையெனில் நீ நொந்துகொள்ள வேண்டியதுதான்.” ஒட்டுமொத்தத்தில், நான் காத்திருந்தேன்.
நான்கு மாதங்கள் முடிவடைவதற்குள் அவள் ஈற்றறையில் இருந்தாள். நகர்மக்கள் அனைவரும் கைமுட்டிகளால் தங்கள் சிரிப்பை மறைத்துக் கொண்டனர். ஆனால் நான் என்ன செய்ய இயலும்? அவள் தாங்க முடியாத வலியில் நகத்தால் சுவரைக் கீறினாள். “கிம்பெல்,” அவள் துடித்தாள், “நான் போகிறேன். மன்னித்து விடு!” வீடு பெண்களால் நிறைந்தது. பாத்திரங்களில் நீரைக் கொதிக்க வைத்தனர். அலறல்களின் ஓசை விண்ணை நிறைத்தது.
வீட்டிற்குச் சென்று கடவுளின் துதிப் பாடல்கள் பாடுவதொன்றே அப்போது மிச்சமிருக்கும் வாய்ப்பாக இருந்தது, நான் அதையே செய்தேன்.
நகர்மக்களுக்கு இந்த செயல்பாடு பிடித்திருந்தது. ஒரு மூலையில் நின்று துதிப்பாடல்களும் பிரார்த்தனைகளும் சொல்லிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து தலையசைத்தனர். ”பிரார்த்தனை செய், பிரார்த்தனை செய்!” அவர்கள் கூறினர். ”பிரார்த்தனைகளால் எந்தப் பெண்ணும் கர்ப்பமாவதில்லை” கூட்டத்தில் இருந்த ஒருவன் என் வாயில் ஒரு வைக்கோலை திணித்து சொன்னான், ”மாடுகளுக்கான வைக்கோல்.” கடவுள் அதற்கும் சிலவற்றை படைத்துள்ளார்!
அவள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். வெள்ளிக்கிழமை ஜெப கூட்டத்தின்போது மேசையில் விரிக்கப்பட்ட புனிதநூலின் முன் எழுந்துநின்று செக்ஸ்டன் அறிவித்தாள், “நம் வளமிக்க ரெப் கிம்பெல் ஒரு மகன் பிறந்ததை ஒட்டி இந்த கூட்டத்தை ஒரு விருந்துக்கு அழைக்கிறார்.” மொத்த வழிபாட்டு கூடமும் சிரிப்பொலியால் அதிர்ந்தது. என் முகம் கோபத்தில் கனன்றாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. மொத்தத்தில் எப்படியிருப்பினும் விருத்த சேதன (சுன்னத்) சடங்குகள் மற்றும் முறைமைகள் செய்வதற்கு நானே பொறுப்பு.
பாதி நகரமே விருந்துக்கு வந்துவிட்டிருந்தது. உங்களால் அங்கு இன்னொரு ஆத்மாவை உள்நுழைக்க முடியாது. பெண்கள் கொண்டைக்கடலை சுண்டல் எடுத்து வந்திருந்தனர், மேலும் சத்திரத்திலிருந்து சிறிய பீப்பாய் நிறைய கள் வந்திருந்தது. ஒருவனால் இயன்ற அளவு உண்டும் குடித்தும் அவர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டேன். பின்னர் விருத்த சேதன சடங்கு நிகழ்ந்தது, நான் பையனுக்கு என் தந்தை பெயரைச் சூட்டினேன், அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். அனைவரும் சென்றுவிட்ட பிறகு நானும் என் மனைவியும் தனித்து விடப்பட்டோம், அவள் போர்வைக்குள்ளிருந்து தலையை வெளிநீட்டி என்னை அழைத்தாள்.
”கிம்பெல், நீ ஏன் கப்பல் கவிழ்ந்தது போல அமைதியாக இருக்கிறாய்?”
”நான் என்ன சொல்ல முடியும். நீ எனக்கு சிறப்பான ஒன்றை ஆற்றியுள்ளாய்! இதைக் காண என் அம்மா உயிருடன் இருந்திருந்தால் அவள் இரண்டாம் முறையாக இறந்திருப்பாள்”
“உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்றாள் அவள்.
”உனக்கு கடவுளாகவும் எஜமானனாகவும் இருக்க வேண்டியவனை நீ எப்படி ஏமாற்றலாம்”
”உனக்கு என்னதான் பிரச்சனை?” அவள் கேட்டாள். ”உன் தலையில் என்ன கற்பனை ஓடுகிறது என்று சொல்லித்தொலை?”
நான் வெளிப்படையாகப் பேசியாக வேண்டும் என்பதை கண்டுகொண்டேன். ”ஒரு அனாதையை இப்படித்தான் நீ பயன்படுத்த நினைக்கிறாயா? தந்தைபெயர் தெரியாத ஒரு குழந்தையை நீ பெற்றெடுத்துள்ளாய்.”
அவள் பதிலளித்தாள், “இந்த முட்டாள்தனத்தை உன் மண்டையிலிருந்து அகற்று. குழந்தை உன்னுடையதுதான்.”
நான் வாதிட்டேன், “எப்படி என்னுடையதாய் இருக்க முடியும்? திருமணம் முடிந்து ஏழு வாரங்களில் அவன் பிறந்துள்ளான்.”
குழந்தை குறைமாதத்தில் பிறந்துள்ளதாக அவள் கூறினாள். நான் கேட்டேன், “அவன் ரொம்பவும் குறைமாதத்தில் பிறந்துள்ளதாகத் தெரியவில்லையா?” அவள் தனக்கு ஒரு பாட்டி இருந்ததாகவும் அவளும் இதே அளவு குறுகிய காலமே எடுத்துக் கொண்டாளென்றும், தான் தன் பாட்டியை ஒத்திருப்பதால் இது சாத்தியமே என்றாள். அவள் சத்தியம் செய்த சொற்களை சந்தையில் ஒரு பண்பற்ற முரடன் பயன்படுத்தியிருந்தால்கூட நீங்கள் நம்பியிருப்பீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் அவளை நம்பவில்லை; ஆனால் அடுத்தநாள் இதுகுறித்து நான் பள்ளிக்கூட வாத்தியாரிடம் உரையாடியபோது அவர் இதே விஷயம் ஆதாம் ஏவாளுக்கும் நடந்திருப்பதாகக் கூறினார். இரண்டாக அவர்கள் படுக்கைக்கு சென்று நான்காக இறங்கி வந்தனர்.
”ஏவாளின் கொள்ளுப்பேத்தியாக அல்லாத ஒரு பெண்ணும் இவ்வுலகத்தில் இல்லை,” அவர் சொன்னார்.
அது அவ்வாறு நடந்து முடிந்தது; அவர்கள் என் சந்தேகம் அசட்டுத்தனமானது என வாதிட்டனர். ஆனால் இதுபோன்ற விஷயங்களில் யாரால்தான் உண்மையை அறிய இயலும்?
நான் என் துக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் துவங்கினேன். குழந்தையை உளப்பூர்வமாக நேசித்தேன், அவனும் என்னை நேசித்தான். என்னைக் கண்டதும் அவன் தன்னை தூக்கிக் கொள்ள வேண்டுமென்று தன் சிறிய கரங்களை ஆட்டுவான், மேலும் அவன் வயிற்றுவலியால் அழ ஆரம்பித்தால் என்னால் மட்டுமே அவனை சமாதானம் செய்ய முடிந்தது. நான் அவனுக்கு ஒரு பல்முளைக்கும் வளையமும் ஒரு பொன்முலாம் பூசப்பட்ட தொப்பியும் வாங்கிவந்தேன். அவன் எப்போதும் யாரோ ஒருவரின் தீய பார்வைக்கு ஆளானான், பின்னர் நான் ஓடிப்போய் ஆப்ரகாடாப்ராக்களுள்2 ஒன்றைக் கொண்டு வந்து அவனை மீட்க வேண்டியிருக்கும். நான் ஒரு எருதைப்போல உழைத்தேன். வீட்டில் ஒரு கைக்குழந்தை இருக்கையில் செலவுகள் எவ்வாறு உயரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுகுறித்து பொய்சொல்ல விரும்பவில்லை; இந்த விஷயத்தில் நான் எல்காவையும் குறைசொல்ல முடியாது. அவள் என்னை திட்டி சாபமிட்டாலும் அவளுக்கு வேண்டியதை என்னால் கொண்டுவர இயலவில்லை. அவள் என்ன மாதிரி ஆற்றல் கொண்டிருந்தாள்! அவளது ஒரு பார்வையே உங்கள் பேச்சை நிறுத்திவிடும். மற்றும் அவளது சொற்பொழிவுகள்! அவை ஏற்ற இறக்கங்களுடனும் கடுமையாகவும் இருந்த அதே சமயத்தில் ஏதோ ஓர் விதத்தில் முற்றிலும் வசீகரமாகவும் இருந்தது. அவளின் ஒவ்வொரு சொல்லையும் நான் வழிபட்டேன். எனினும் அவள் எனக்குத் தீவிரமான காயங்களையே அளித்தாள்.
மாலையில் அவளுக்கு வெள்ளை மற்றும் பழுப்புநிற ரொட்டித்துண்டுகள் மற்றும் நானே தயாரித்த கசகசா சுருள்கள் ஆகியவற்றை வாங்கிவந்தேன். அவளுக்காக திருடத் துவங்கிய நான் என்னால் முடிந்த அனைத்து பொருட்களிலும் கைவைத்தேன்: மக்ரூன்கள், உலர் திராட்சைகள், பாதாம் மற்றும் கேக்குகள். சனிக்கிழமைகளில் சமையல்காரப்பெண் உலையடுப்பில் விட்டுசெல்லும் கொதிக்கும் பானையிலிருந்து திருடுவது மன்னிக்கபடலாம் என நம்பினேன். இறைச்சித் துணுக்குகள், ஒரு ரொட்டித்துண்டு, ஒரு கோழிக்கால் அல்லது தலை, ஒரு குடலிறைச்சியின் பாகம் என குறுகிய நேரத்தில் என்னால் திருட முடிந்த அனைத்தையும் எடுத்து வந்தேன். அவள் இந்த உணவுகளால் பெருத்து தோற்றம் பொலியப் பெற்றாள்.
வாரநாட்கள் முழுவதும் நான் வீட்டிலிருந்து அகன்று வெதுப்பகத்திலேயே தூங்க நேர்ந்தது. வெள்ளிக்கிழமை இரவுகளில் வீட்டிற்கு வருகையில் அவள் எப்போதும் ஏதாவதொரு சாக்கு சொன்னாள். ஒன்று அவளுக்கு நெஞ்சு எரிச்சலோ அல்லது ஏதேனும் வெட்டுக்காயமோ விக்கலோ அல்லது தலைவலியோ வந்துவிடும். பெண்களின் சமாளிப்புகள் என்னவென்று நீங்கள் அறியாததல்ல. நான் அந்த கசப்பான காலகட்டத்தின் துயரத்தை அனுபவித்தேன். இதுபோதாதென்று அவளுடைய குட்டித் தம்பி, முறைதவறி பிறந்தவன் வேறு வளர்ந்து கொண்டிருந்தான். அவன் என்மீது எடைமிக்க பொருட்களை தூக்கி எறிந்தான், நான் திருப்பி அடிக்க முற்பட்டபோது அவள் வாயிலிருந்து புறப்பட்ட ஆற்றல்மிக்க வசைசொற்களால் நான் நிலைகுலைந்தேன், கண்முன்னே ஒரு கலங்கலான பனிமூட்டத்தில் தொலைந்தவன்போல உணர்ந்தேன். ஒருநாளில் பத்துமுறையேனும் என்னை விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டினாள். என் நிலையில் வேறொருவன் இருந்திருந்தால் பிரெஞ்சு விடுப்பு3 எடுத்துக் கொண்டு மறைந்திருப்பான். ஆனால் நான் இவற்றை பொறுத்துக் கொள்ளும் வகையைச் சேர்ந்தவன், ஏதும் சொல்லவில்லை. ஒருவன் என்ன செய்ய முடியும்? தோள்கள் கடவுள் கொடுத்தது, எனில் சுமைகளும் தான்.
ஒருநாள் இரவு வெதுப்பகத்தில் ஒரு விபத்து; உலைஅடுப்பு வெடித்ததில் கிட்டத்தட்ட தீபற்றிக் கொண்டது. வேலை ஏதும் இல்லாததால் வீட்டுக்கு செல்வதைத் தவிர எனக்கு வேறுவழி இருக்கவில்லை. வாரநாட்களில் படுக்கையில் தூங்கும் சுகத்தை அனுபவிக்கலாமே என்ற நினைப்புடன் புறப்பட்டேன். உறங்கும் குழந்தை எழுந்துவிடக் கூடாது என்பதால் ஒலி எழாத வகையில் கால்விரல் நுனியால் நடந்து வீட்டினுள் நுழைந்தேன். உள்ளே வந்ததும் ஒன்றல்ல, இரண்டு குறட்டை ஒலிகள் கேட்பதாகத் தோன்றியது, ஒன்று மெல்லிய குறட்டைஒலி மற்றொன்றோ வெட்டப்பட்ட எருதின் ஒலியைப்போல் பலமாகக் கேட்டது. ஆ, அது எனக்கு பிடிக்கவில்லை! சுத்தமாகப் பிடிக்கவில்லை. படுக்கையின் அருகே சென்று பார்த்ததும் எனக்கு எல்லாம் இருண்டது. எல்காவின் அருகில் ஓர் ஆண் உரு படுத்திருந்தது. என்னிடத்தில் வேறொருவன் இருந்திருந்தால் ஊரையே எழுப்பும் அளவுக்கு பலமாக கூச்சலிட்டிருப்பான், ஆனால் எனக்கோ குழந்தை எழுந்துவிடக் கூடும் எனும் நினைவு வந்துசென்றது. நான் நினைத்தேன் – இதுபோன்ற சிறிய விஷயத்திற்காக ஏன் ஒரு இளம்பிஞ்சை திகிலுற செய்ய வேண்டும். சரி போகட்டும், நான் வெதுப்பகத்திற்குத் திரும்பி வந்து ஒரு மாவு மூட்டையின் விரிப்பில் கால்களை நீட்டி படுத்துக் கொண்டேன், விடியும்வரை கண்கள் மூடவில்லை. என் உடல் மலேரிய வந்தவன்போல் நடுங்கிக் கொண்டிருந்தது. “ஒரு கழுதையாக வாழ்ந்தது போதும்,” எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். “கிம்பெல் வாழ்நாள் முழுக்க ஒரு ஏமாளியாக இருக்கப் போவதில்லை. கிம்பெல் போன்ற ஒரு முட்டாளின் முட்டாள்தனத்திற்கும் ஓர் எல்லை உண்டு.”
காலையில் நான் ரப்பியிடம் அறிவுரை கேட்கச் சென்றேன், அது நகரத்தில் பெரும் சலசலப்பாக மாறியது. அவர் உடனடியாக எல்காவை அழைத்துவர ஒரு காவல் பணியாளரை அனுப்பினார். அவள் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தாள். என்ன செய்திருப்பாள் என நினைக்கிறீர்கள்? அவள் அதை மறுத்தாள், எல்லாவற்றையும், இரத்தமும் சதையுமாக நான் கண்ட அனைத்தையும்! “அவருடைய மூளை குழம்பிவிட்டது. இந்தக் கற்பனைகள் மற்றும் கனவுகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது,” என்றாள். அவர்கள் அவளைத் திட்டியும் எச்சரித்தும் மேசையில் அடித்தும் பார்த்தனர், ஆனால் அவள் தன் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தாள்: இதுவொரு பொய் குற்றச்சாட்டு, என்றாள்.
கசாப்புக்காரர்களும் குதிரை வணிகர்களும் அவள் தரப்பை எடுத்தனர். இறைச்சிக் கொட்டிலை சேர்ந்த ஒருவன் என் காதருகே வந்து சொன்னான், “உன்மீது எங்கள் கண்கள் உள்ளது, நீ ஒரு கண்காணிக்கபடும் நபர்.” அதற்குள்ளாக குழந்தை தரையில் அமர்ந்து அழத் துவங்கியது. ரப்பிகளின் நீதிமன்றத்தில் பத்து கட்டளைகள் கொண்ட புனித உடன்படிக்கை பெட்டி இருப்பதால் அவர்களால் இதை அனுமதிக்க முடியாது, எனவே எல்காவை குழந்தையுடன் வெளியேறச் செய்தனர்.
நான் ரப்பியிடம் கேட்டேன், “நான் என்ன செய்யட்டும்?”
”நீ இப்பொழுதே அவளை விவாகரத்து செய்துவிடு,” அவர் சொன்னார்.
”அவள் மறுத்தால் என்ன செய்வது?”
”விவாகரத்துப் பத்திரங்களை அளிக்க வேண்டும். நீ செய்ய வேண்டியது அதுமட்டுமே.”
”தங்கள் அறிவுரைக்கு நன்றி ரப்பி, நான் இதுகுறித்து சிந்தித்துப் பார்க்கிறேன்.”
”இதில் சிந்திப்பதற்கு ஏதுமில்லை. நீ அவளுடன் இனி ஒரேகூரையின் கீழ் இருக்கக் கூடாது”
”குழந்தையைக் காண வேண்டுமெனில் என்ன செய்வது?”
”அந்த வேசியை மறந்துவிடு, அவளுடன் சேர்ந்து அந்த வேசி மக்களையும் மறந்துவிடுவதே நன்று.”
அவர் அளித்த தீர்ப்பு என்னவெனில் நான் அவளது பாதையில் இனி எப்போதும் குறுக்கிட கூடாது – நான் உயிருடன் வாழும்வரை.
பகலில் இது என்னை பெரிதாகப் பாதிக்கவில்லை. நான் சிந்தித்தேன்: இது என்றேனும் நடந்தாக வேண்டியதே, சீழ்கட்டி ஒருநாள் வெடித்தாக வேண்டும். ஆனால் இரவுகளில் சாக்கு விரிப்பில் கால்நீட்டுகையில் அனைத்தும் கசப்பதாக உணர்ந்தேன். அவள் மற்றும் குழந்தைக்கான ஏக்கம் என்னுள் வளர்ந்தது. கோபத்தால் இதை கடக்க விரும்பினேன், ஆனால் என் துரதிர்ஷ்டமே அதுதான், உண்மையில் நான் கோபமுறும் மனம் கொண்டவனல்ல. என் சிந்தனை இவ்வாறு சென்றது – முதலாவதாக சிலசமயங்களில் சறுக்கல்கள் ஏற்படுவது இயல்பானதே. நீங்கள் பிழைகளின்றி வாழ்ந்துவிட முடியாது. அநேகமாக கட்டிலில் படுத்திருந்த அந்தப் பையன் அவளை மயக்கி சில பரிசுகளையும் கொடுத்திருப்பான், வேறென்ன வேண்டும், பொதுவாகவே பெண்கள் நீண்ட கூந்தலும் குறைந்த புத்தியும் உடையவர்கள் என்பதால் அவன் அவளை வளைத்து விட்டான். மேலும் அவள் இவற்றையெல்லாம் மறுத்தாள், ஒருவேளை நான்தான் கற்பனை செய்து கொள்கிறேனா? பிரமைகள் தோன்றுவதுண்டு. சிலநேரங்களில் நீங்கள் ஒரு குள்ள மனிதனையோ அல்லது அதுபோன்ற ஒரு உருவத்தையோ காண்பீர்கள், ஆனால் அருகில் சென்று பார்த்தால் அங்கு எதுவுமே இருக்காது. அப்படியிருந்தால் நான் அவளுக்கு பெரும் அநீதி இழைக்கிறேன். இவ்வாறு என் சிந்தனை சென்றுகொண்டே இருந்ததில் அழத் துவங்கிவிட்டேன். விம்மி அழுததில் நான் படுத்திருந்த தரைப்பரப்பு ஈரமானது. காலையில் ரப்பியிடம் சென்று நான் ஒரு தவறிழைத்துவிட்டதாக தெரிவித்தேன். அவர் தன் பறவை இறகால் அதை எழுதி குறித்துக் கொண்டு அவ்வாறெனில் மொத்த வழக்கையும் மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனக் கூறினார். வழக்கு முடியும்வரை என் மனைவியின் அருகே செல்லக் கூடாது, ஆனால் ஒரு தூதுவன் வழியாக அவளுக்கு ரொட்டியும் பணமும் அனுப்பலாம்.
Wedding Of Gimpel The Fool Ink Drawing By Melita Kraus _ absolutearts.com
[ III ]
அனைத்து ரப்பிகளும் இணைந்து ஒரு முடிவிற்கு வருவதற்குள் ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டன. கடிதங்கள் முன்னும் பின்னும் பறந்தன. இம்மாதிரி விஷயங்கள் இவ்வளவு சிக்கலான நடைமுறைகள் கொண்டிருக்கும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
இதற்குள் எல்கா இன்னொரு குழந்தையை பெற்றெடுத்தாள், இம்முறை ஒரு பெண்குழந்தை. சனிக்கிழமை நான் கோயிலுக்குச் சென்று அவளை ஆசிர்வதித்து வேண்டிக் கொண்டேன். அவர்கள் என்னை புனிதநூலின் முன்னிலையில் அழைத்தனர், நான் குழந்தைக்கு என் மாமியரின் பெயரை சூட்டினேன் – அவள் ஆத்மா சாந்தி அடையட்டும். நகரில் உள்ள காட்டான்களும் வம்புபேசுபவர்களும் வெதுப்பகத்திற்கு வந்து என்னை தலைசுற்ற வைத்தனர். மொத்த ஃப்ராம்போலின் ஆன்மாவும் என் பிரச்சனை மற்றும் துன்பத்தால் புத்துணர்ச்சி கொண்டது. எவ்வாறிருப்பினும் எந்நிலையிலும் எனக்கு சொல்லப்படுவதை நம்புவதாக நான் உறுதியேற்றிருந்தேன். நம்பாமல் இருப்பதில் என்ன நன்மை உள்ளது? இன்றைக்கு உங்கள் மனைவியை நம்பாமல் போகலாம்; நாளை கடவுளையே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவீர்கள்.
அவள் வீட்டருகே இருந்த ஒரு பணிபயில்பவன் மூலம் தினமும் ஒரு கோதுமை ரொட்டி, சோளம் அல்லது ஒரு துண்டு இனிப்பு அப்பம், சுருள்கள் அல்லது வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் ஒரு துண்டு தேனப்பம் அல்லது விசேஷமான திருமண பழகேக்குகள் என என் வழியில் எதிரிட்ட அனைத்தையும் கொடுத்தனுப்பினேன். பணிபயில்பவன் ஒரு நல்லுள்ளம் கொண்ட பையன், ஒன்றுக்கும் மேற்பட்ட தருணங்களில் அவனே சிலவற்றை சேர்த்து கொண்டுசென்றான். அவன் இதற்கு முன்னர் எனக்கு நிறைய தொந்தரவு கொடுத்துள்ளான், மூக்கை பிடித்து இழுப்பதும் இடுப்பில் குத்துவதும் என, ஆனால் என் வீட்டுக்கு செல்லும் பார்வையாயாளனாக ஆகியவுடன் கணிவும் நட்பும் மிக்கவனாக மாறிவிட்டான். ”ஹே கிம்பெல்,” அவன் என்னிடம் சொன்னான், “உனக்கு மிகவும் பண்பார்ந்த ஒரு மனைவியும் அருமையான இரு குழந்தைகளும் உள்ளன. நீ அவர்களுக்குத் தகுதியானவன் அல்ல.”
”ஆனால் மக்கள் அவள் குறித்து சொல்லும் விஷயங்கள்,” நான் சொன்னேன்.
”ஆம், அவர்களின் நாக்கு நீண்டது,” அவன் தொடர்ந்தான், ”அதை வைத்து உளறுவதைத் தவிர எதுவும் செய்வதற்கில்லை. கடந்த பனிக்காலத்தின் குளிரை மறந்துவிடுவதுபோல நீ அவற்றை பொருட்படுத்தாமல் விட்டுவிடு.”
ஒருநாள் ரப்பி எனக்கு ஆளனுப்பி அழைத்துக் கேட்டார், “உறுதியாக சொல்கிறாயா கிம்பெல், உன் மனைவி குறித்து கூறியது தவறென்று?”
நான் சொன்னேன், “உறுதியாகக் கூறுகிறேன்.”
”ஏன், ஆனால் இங்கே பார்! நீயே உன் கண்களால் பார்த்திருக்கிறாய்.”
”அது ஒரு நிழலாக இருந்திருக்க வேண்டும்,” நான் சொன்னேன்.
”எதனுடைய நிழல்?”
”வீட்டு உத்தரத்தின் நிழலாக இருக்கலாம்.”
”எனில் நீ வீட்டுக்கு செல்லலாம். யானோவர் ரப்பிக்கு நீ நன்றிக்கடன் பட்டுள்ளாய். அவர் கண்டுபிடித்த மைமோனைட்ஸின்* ஒரு குழப்பமான மேற்கோளே உனக்கு சாதகமாக அமைந்தது.”
நான் ரப்பியின் கைகளை எடுத்து முத்தமிட்டேன்.
உடனடியாக வீட்டிற்கு ஓட விரும்பினேன். மனைவி மற்றும் குழந்தைடமிருந்து அத்தனை காலம் பிரிந்திருப்பது சிறிய விஷயமல்ல. பின்னர் சுதாரித்தேன்: இப்போது திரும்பி பணிக்குச் செல்வதே நல்லது, மாலையில் வீட்டிற்கு போகலாம். நான் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை, ஆனால் என் இதயத்தைப் பொறுத்தவரை ஒரு புனித நாளைப்போன்று உற்சாகத்துடன் இருந்தது. பெண்கள் ஒவ்வொரு நாளும் போலவே என்னை கேலி செய்தனர், ஆனால் என் சிந்தனை இவ்வாறு ஓடியது: உங்கள் உளறல்கள் தொடரட்டும். நீர்மேல் எண்ணெய்போல உண்மை வெளிவந்துவிட்டது. மைமோனைட்ஸ் இதை சரி என்கிறார், எனவே இது கட்டாயம் சரிதான்!
பிசைந்த மாவை இரவில் உப்புவதற்காக மூடி வைத்துவிட்டு, என் பங்கு ரொட்டியையும் ஒரு கோணிப்பையில் சிறிது மாவையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன். அன்றைய முழுநிலவும் ஒளிரும் நட்சத்திரங்களும் மனதை ஏதோ கிளர்ச்சியுற செய்தன. நான் வேகமாக நடந்தேன், என்முன்னே ஒரு நீண்ட நிழல் தொடர்ந்தது. அது பனிக்காலம் என்பதால் புதிய வெண்பனி பெய்திருந்தது. நான் பாடும் மனநிலையில் இருந்தேன், எனினும் நேரம் கடந்துவிட்டதால் தெருவாசிகளை எழுப்ப விரும்பவில்லை. பின்னர் எனக்கு விசிலடிக்கத் தோன்றியது, ஆனால் இரவில் விசிலடித்தால் பேய்கள் வெளிவரும் என்பது நினைவிற்கு வந்ததால் அதையும் செய்யவில்லை. எனவே அமைதியாக முடிந்தளவு வேகத்துடன் நடந்தேன்.
கிருஸ்தவ தெருக்களை கடந்து செல்கையில் அங்கிருந்த நாய்கள் என்னை நோக்கி குரைத்தன, ஆனால் நான் எண்ணினேன்: உங்கள் பற்கள் தெறிக்கும்வரை குரையுங்கள்! நீங்கள் அற்ப நாய்கள் தவிர வேறென்ன? ஆனால் நானோ ஒரு மனிதன், ஒரு நேர்த்தியான மனைவிக்கு கணவன், நம்பகமான குழந்தைகளின் தகப்பன்.
வீட்டை நெருங்குகையில் என் இதயம் ஒரு குற்றவாளியின் இதயத்தைபோல கணக்கத் துவங்கியது. நான் எவ்வித அச்சத்தையும் உணரவில்லை என்றாலும் இதயதுடிப்பு அதிகரித்தது! இனி திரும்ப வழியில்லை. நான் அமைதியாக தாழ்ப்பாளை உயர்த்தி உள்நுழைந்த்தேன். எல்கா உறங்கிவிட்டாள். நான் கைக்குழந்தையின் தொட்டிலை நோக்கினேன். அதன் மேல்பகுதி மூடியிருந்தாலும் ஓட்டைகள் வழியாக நிலவொளி தன் பாதையை கண்டுகொண்டது. புதிதாக பிறந்த அக்குழந்தையின் முகத்தை பார்த்தவுடனே எனக்கு பிடித்துவிட்டது, அதன் ஒவ்வொரு பிஞ்சு விரலையும் நேசித்தேன்.
பின்னர் கட்டிலருகே வந்து பார்த்ததில் எல்காவின் அருகே பணிபயில்பவன் படுத்திருப்பதைக் கண்டேன். உடனடியாக நிலவு முழுவதுமாக மறைந்தது. அந்த முழு இருட்டில் நான் நடுங்கினேன், பற்கள் கிட்டித்தன. என் கைகளிலிருந்து ரோட்டி கீழே விழுந்ததில் என் மனைவி விழித்துக் கொண்டு கேட்டாள், “யாரது, ஆஹ்?”
நான் முணுமுணுத்தேன், “நான் தான்.”
”கிம்பெல்?” அவள் கேட்டாள். ”நீ எப்படி இங்கே? இங்கு வருவது தடைசெய்யப்பட்டது என நினைத்தேன்.”
”ரப்பி சொன்னார்,” நான் பதிலளித்துவிட்டு காய்ச்சல் வந்தவன்போல தலையசைத்தேன்.
”நான் சொல்வதை கவனி கிம்பெல்,” அவள் சொன்னாள், “வெளியே சென்று கொட்டிலில் ஆடு நலமாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வா. அவள் நோயுற்றதுபோல் தெரிந்தது.” எங்களுக்கு ஒரு ஆடு இருந்ததை சொல்ல மறந்துவிட்டேன். அவளுக்கு நலமில்லை எனக் கேட்டவுடன் நான் முற்றத்துக்கு விரைந்தேன். அந்த மூதன்னை ஆடு ஒரு சிறிய நல்லுயிர். எனக்கு அவள்மீது மனிதர்கள் அளவுக்கே நேசமிருந்தது.
தயங்கிய காலடிகளுடன் கொட்டிலுக்குச் சென்று கதவை திறந்தேன். ஆடு நான்கு கால்களில் நின்று கொண்டிருந்தது. நான் அவளை முழுவதுமாக தடவிப் பார்த்தேன், கொம்புகளை இழுத்தும் மடிகளை சோதித்தும் பார்த்ததில் எந்த பிரச்சனையும் தென்படவில்லை. அவள் ஒருவேளை நிறைய தழைகளை உண்டிருக்க வேண்டும். “இனிய இரவு, சிறிய ஆடே,” நான் கூறினேன். “நலமாக இரு.” அந்த சிறிய விலங்கு எனக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தன் குரலில் “மே” என்று பதிலளித்தது.
நான் திரும்பி சென்றபோது பணிபயில்பவன் மறைந்துவிட்டிருந்தான்.
”எங்கே, அந்த பையன்?” நான் கேட்டேன்.
”எந்த பையன்?” என் மனைவி பதிலளித்தாள்.
”நீ என்ன சொல்கிறாய்? அந்த பணிபயில்பவன், நீ அவனுடன் படுத்திருந்தாய்”
”இந்த இரவும் முந்தைய இரவுகளிலும் எத்தனை கனவு கண்டிருப்பேன், அவையெல்லாம் உண்மையென்றாகி உன் ஆன்மா மற்றும் உடலை வீழ்த்தட்டும்! ஒரு தீய ஆவி உன்னுள் புகுந்துகொண்டு உன் பார்வையை குழப்புகிறது.” அவள் கூச்சலிட்டாள், “வெறுக்கதக்கப் பிறவியே! பிறவிமூடனே! இழி பிசாசே! அருவருப்பானவனே! வெளியே செல், இல்லையெனில் கூச்சலிட்டு மொத்த ஃப்ராம்போலையும் படுக்கையிலிருந்து எழுப்பிவிடுவேன்!”
நான் நகர்வதற்குள் அவள் தம்பி அடுப்புக்கு பின்னிருந்து திடீரெனத் தோன்றி என் பின்னந்தலையில் பலமாக அடித்தான். அவன் என் கழுத்தை முறித்துவிட்டதாக நினைத்தேன். பின்னர் என்னுள் ஆழமாக எதையோ தவறாக உணர்ந்ததால் அவளிடம் மன்றாடினேன், ”இதை ஒரு அவதூறாக கிளப்பாதே. ஊர்மக்கள் என்மீது ஆவிகளையும் பேய்களையும் எழுப்புபவன் என்று குற்றம் சாட்ட இதுவே போதும், அதன்பின் நான் சுடும் ரொட்டிகளை எவரும் தொடமாட்டார்கள்.”
சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், ஒருவழியாக அவளை சமாதானம் செய்தேன்.
”சரி,” அவள் சொன்னாள், “இது போதும். கீழே படுத்துக்கொள், எதுவும் பேசாதே.”
அடுத்தநாள் காலை பணிபயில்பவனை தனியாக அழைத்தேன். “தம்பி நான் சொல்வதைக் கேள்” என் ஐயத்தைக் கேட்டேன். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” கூரையிலிருந்து விழுந்துவிட்டவனை பார்ப்பதுபோல அவன் என்னை வெறித்துப் பார்த்தான்.
”நான் சத்தியமாக சொல்கிறேன்,“ அவன் கூறினான், ”நீங்கள் ஒரு பச்சிலை மருத்துவரிடமோ அல்லது மாந்திரீகரிடமோ செல்வது நல்லது. உங்கள் மூளை பிசகிவிட்டது என்று நினைக்கிறேன், ஆனால் அதை சரிசெய்ய நான் உங்களுக்கு உதவுகிறேன்.” நிலைமை இவ்வாறு இருந்தது.
நீண்ட கதையை சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் நான் அவளுடன் இருபது ஆண்டுகள் வாழ்ந்தேன். அவள் எனக்கு ஆறு குழந்தைகள் பெற்றெடுத்தாள், நான்கு பெண்கள் மற்றும் இரு பையன்கள். பலவித சமாச்சாரங்கள் நடந்தன, ஆனால் நான் எதையும் காணவோ கேட்கவோ இல்லை. நான் நம்பினேன், அவ்வளவுதான். சமீபத்தில் ரப்பி என்னிடம் சொன்னார், “நம்பிக்கை தன்னளவிலேயே பயனளிப்பது. ஒரு நல்ல மனிதன் தன் பற்றுறுதிகளாலேயே வாழ்கிறான் என்று எழுதப்பட்டுள்ளது.”
திடீரென என் மனைவி நோயுற்றாள். மார்பின்மேல் ஏற்பட்ட ஒரு அற்ப கட்டியின் வளர்ச்சியில் அது தொடங்கியது. அவள் நீண்டநாள் வாழ விதிக்கப்படவில்லை என்பது விரைவிலேயே தெளிவாயிற்று; அவள்முன் வருடங்கள் இருக்கவில்லை. நான் அவளுக்காக பெரும்பணம் செலவழித்தேன். ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன், இதற்குள் ஃப்ரம்போல் நகரில் எனக்கென சொந்தமாக ஒரு வெதுப்பகம் இருந்தது, நான் ஓரளவு பணக்காரனாக கருதப்பட்டேன். தினமும் வைத்தியர் வந்தார், மேலும் அருகிலிருந்த ஒவ்வொரு மாந்திரீக மருத்துவரும் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அட்டைகளைப் பயன்படுத்த முடிவெடுத்தனர், பின்னர் உறிஞ்சு கிண்ணங்களை முயற்சித்தனர். லுப்லினிலிருந்துகூட ஒரு மருத்துவரை வரவழைத்தனர், ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. அவள் இறப்பதற்குமுன் என்னை படுக்கையின் அருகே அழைத்துக் கூறினாள், “என்னை மன்னித்துவிடு, கிம்பெல்.”
நான் சொன்னேன், “மன்னிப்பதற்கு என்ன உள்ளது? நீ ஒரு நல்ல, நம்பகமான மனைவியாய் வாழ்ந்து வந்துள்ளாய்.”
”ஓ, கிம்பெல்!” அவள் கூறினாள், “இத்தனை வருடங்களாக நான் உன்னை ஏமாற்றியவிதம் ஆபாசமானது. படைத்தவனிடம் பரிசுத்தமாக செல்ல விரும்புகிறேன், எனவே நம் குழந்தைகள் உன்னுடையதல்ல என்பதை நான் சொல்லியாக வேண்டும்.”
ஒரு மரத்துண்டால் என் தலையில் ஆணி அடித்திருந்தால்கூட அது என்னை அந்தளவு பாதித்திருக்காது.
”அவர்கள் யாருடையவை?” நான் கேட்டேன்.
”எனக்குத் தெரியவில்லை,” அவள் சொன்னாள். “நிறைய நபர்கள்… ஆனால் அவர்கள் உன் குழந்தைகளல்ல.” இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளின் தலை பக்கவாட்டில் சரிந்து கண்கள் உயிரற்றவையாக மாறின, எல்காவின் வாழ்வு முடிவடைந்தது. அவளது வெளிறிய உதடுகளில் ஒரு புன்னகை மிஞ்சியிருந்தது.
இறந்தபின் அவள் இப்படிச் சொல்வதாக கற்பனை செய்து கொண்டேன், “நான் கிம்பெலை ஏமாற்றினேன். என் குறுகிய வாழ்வின் பொருள் அதுமட்டுமே.”
[ IV ]
இறுதிசடங்கு நடந்து முடிந்தன்று இரவு, நான் சாக்கு விரிப்பில் படுத்து கனவு கொண்டிருக்கையில் தீமைகளின் ஆவி அதுவே நேரடியாகத் தோன்றி என்னிடம் சொன்னது, “கிம்பெல், ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறாய்?”
நான் கேட்டேன், “வேறென்ன செய்ய வேண்டும்? சுண்டல் சாப்பிடுவதா?”
”மொத்த உலகமும் உன்னை ஏமாற்றுகிறது,” அவன் கூறினான், “தற்போது உன்னுடைய முறை, நீ உலகை ஏமாற்ற வேண்டும்.”
”நான் எப்படி மொத்த உலகையும் ஏமாற்ற முடியும்?” அவனிடம் கேட்டேன்.
அவன் பதிலளித்தான், “நீ ஒரு வாளிநிறைய சிறுநீரை சேகரித்து அதை இரவில் பிசைந்த மாவினுள் ஊற்றிவிடு. ஃப்ராம்போலின் முனிவர்கள் இழிந்ததை உண்ணட்டும்.”
”வரப்போகும் உலகின் தீர்ப்பு நாளில் என்ன செய்வது?” நான் சொன்னேன்.
”எந்த உலகமும் வரப்போவதில்லை,” அவன் சொன்னான். ”அவர்கள் உன்னிடம் ஏதேதோ பொய்களை விற்றுள்ளனர், பேசிப்பேசி உன் வயிற்றில் ஒரு பூனை உள்ளது என்றாலும் நம்பிவிடுவாய். சுத்த அபத்தம்!”
”அவ்வாறெனில்,” நான் கேட்டேன், “கடவுள் என்றொருவர் உள்ளாரா?”
“கடவுளும் கிடையாது.”
”என்ன! பிறகு என்னதான் உள்ளது?”
”ஒரு அடர்த்தியான புதைசேறு.”
அவன் என் கண்முன்னே ஆட்டுத்தாடியுடனும் கொம்புடனும் நின்றான், நீண்ட பற்களும் ஒரு வாலும் இருந்தது. இம்மாதிரி சொற்களைக் கேட்டவுடன் அவன் வாலைப்பிடித்து சிறைபிடிக்க விரும்பினேன், ஆனால் அதற்குள் சாக்கு விரிப்பிலிருந்து நான் உருண்டு விழுந்ததில் விலா எழும்பில் பலத்த அடிவிழுந்தது. பின்னர் இயற்கை உபாதை அழைத்ததில் சிறுநீர் கழிக்க எழுந்தேன். ஊறவைத்த மாவைக் கண்டதும் அது என்னிடம் சொல்வதுபோல் தோன்றியது, “அதை செய்!” இறுதியில், அவ்வெண்ணம் என்னை வசப்படுத்த அனுமதித்தேன்.
விடியற்காலையில் உதவியாளன் வந்தான். நாங்கள் ரொட்டிக்கான வடிவில் மாவை சமன்செய்து அதன்மீது கேரவர்* விதைகளைத் தூவி வேகவைப்பதற்கு தயார் செய்தோம். பின்னர் உதவியாளன் வெளியே சென்றுவிட்டான், நான் அடுப்பின் அருகே இருந்த வாசலில் கந்தல் துணிகளின் குவியல்மேல் அமர்ந்திருந்தேன். நான் நினைத்தேன், கிம்பெல், அவர்கள் உனக்கிழைத்த அவமானங்களுக்கெல்லாம் நீ பழிவாங்கிவிட்டாய். வெளியே உறைபனி மிளிர்ந்தாலும் அடுப்பின் அருகே வெம்மை இருந்தது. தழல்கள் என் முகத்தை சூடாக்கின. தலையை சாய்த்து அப்படியே தூங்கிவிட்டேன்.
கனவில் எடுத்தவுடன் எல்காவை அவளின் புதைக்கப்பட்ட உடையில் கண்டேன். அவள் என்னை அழைத்தாள், “நீ என்ன செய்துள்ளாய் கிம்பெல்?”
நான் அவளிடம் சொன்னேன், ”எல்லாம் உன் தவறுதான்,” உடனே அழத் துவங்கினேன்.
”முட்டாள்!” அவள் கூறினாள். “நீ ஒரு முட்டாள்! நான் தவறு செய்ததால் அனைத்துமே தவறென்று ஆகிவிடுமா? நான் இதுவரை யாரையும் ஏமாற்றவில்லை, நான் ஏமாற்றியது என்னையே. அதற்கெல்லாம் தற்போது அனுபவிக்கிறேன், கிம்பெல். இங்கு அவர்கள் எதையும் விட்டுவைப்பதில்லை.”
அவள் முகத்தைப் பார்த்தேன். அது இருண்டிருந்தது; நான் திடுக்கிட்டு விழித்தெழுந்து சிறிதுநேரம் ஊமையாக அமர்ந்திருந்தேன். அனைத்தும் தன் சமநிலையிழந்து ஊசலாடுவதாகப் பட்டது. தற்போது ஒரு தவறான அடியை எடுத்து வைத்தால் என் விண்ணுலக வாழ்வை இழந்துவிடுவேன். ஆனால் கடவுள் தன் உதவியை எனக்கு நல்கியுள்ளார். நான் நீண்ட கரண்டியால் ரொட்டிகளை வெளியெடுத்து அவற்றை தொழுவத்திற்கு கொண்டு சென்று அங்கு உறைந்த நிலத்தில் ஒரு குழிதோண்டத் துவங்கினேன்.
இதை செய்து கொண்டிருக்கையில் என் உதவியாளன் வந்து சேர்ந்தான். ”என்ன செய்கிறீர்கள் முதலாளி?” வெளிறிய முகத்துடன் அவன் கேட்டான்.
”நான் என்ன செய்கிறேன் என எனக்குத் தெரியும்,” என்றுகூறி அவன் கண்ணெதிர்லேயே அவையனைத்தையும் புதைத்தேன்.
பிறகு வீட்டிற்குச் சென்று மறைவிடத்திலிருந்த என் சேகரிப்புப் பெட்டியை எடுத்து குழந்தைகள் அனைவருக்கும் பகிர்ந்ததளித்தேன். ”இன்றிரவு உங்கள் அன்னையைக் கண்டேன்,” நான் சொன்னேன். “அவள் இருண்டு வருகிறாள், பாவம் எளியவள்.”
அதிர்ச்சியில் உறைந்த அவர்களால் ஒரு சொல்லும் பேச இயலவில்லை.
”நலமாக இருங்கள்,” நான் கூறினேன், “மேலும் கிம்பெல் என்றொருவன் இருந்ததை மறந்துவிடுங்கள்.” நான் என் சிறிய மேலங்கியையும் காலணிகளையும் அணிந்துகொண்டேன். பிரார்த்தனை சால்வை உள்ள பையை ஒருகையிலும் பிறவற்றை இன்னொரு கையிலும் எடுத்துக் கொண்டு மெஸுசாவை4 முத்தமிட்டேன். வீதியில் இறங்கியவுடன் மக்கள் என்னைக் கண்டு மிகவும் ஆச்சர்யமுற்றனர்.
”எங்கே செல்கிறாய்?” அவர்கள் கேட்டனர்.
நான் பதலளித்தேன், ”உலகத்துக்கு.” அவ்வாறு ஃப்ராம்போலை விட்டு வெளியேறினேன்.
பல்வேறு நிலங்களில் சுற்றி அலைந்ததில், நல்லுள்ளம் கொண்டவர்கள் என்னை நிராகரிக்கவில்லை. பலவருடங்களில் முதுமையும் வெண்மையும் அடைந்தேன்; நான் நிறைய செவியுற்றேன், பல பொய்கள் மற்றும் திரிபுகள், ஆனால் நான் எந்தளவு நீண்டு வாழ்ந்தேனோ அந்தளவு பொய்கள் என்பதே இல்லை என்பதை புரிந்துகொண்டேன். நிஜத்தில் நிகழாதவை இரவில் கனவு காணப்படுகிறது. ஒருவருக்கு நிகழவில்லையெனில் மற்றொருவருக்கு நிகழ்கிறது, இன்றில்லையேல் நாளை, அல்லது அடுத்த வருடம் இல்லையேல் ஒரு நூற்றாண்டு கழித்து. இதனால் என்ன மாறுபாடு வந்துவிடும்? நான் கேட்கும் சில கதைகளுக்கு அடிக்கடி இவ்வாறு சொல்லியிருக்கிறேன், “தற்போது இம்மாதிரி விஷயங்கள் நடக்க வாய்ப்பில்லை.” ஆனால் ஒருவருடம் முடிவதற்குள் அது எங்கேனும் உண்மையில் நடந்துவிட்டதை கேள்வியுறுவேன்.
இடம் விட்டு இடம் சென்றுகொண்டே, அறிமுகமில்லாத மேசைகளில் உண்டு, அடிக்கடி நான் நூல் நூற்பதாக அமையும் – ஒருகாலத்திலும் நடந்திருக்க வாய்ப்பில்லாத விஷயங்கள் நிகழ்ந்தன – பேய்கள், மந்திரவாதிகள், காற்றாலைகள் மற்றும் இதுபோன்ற பலவிஷயங்கள். குழந்தைகள் என்னிடம் ஓடிவந்து, “தாத்தா, ஒரு கதை சொல்லுங்கள்” என்றனர். சிலசமயம் அவர்கள் குறிப்பிட்ட கதைகளை கேட்டனர், நான் அவர்களை திருப்திபடுத்த முயல்வேன். ஒரு குண்டான இளம் பையன் ஒருமுறை சொன்னான், “தாத்தா, இது நீங்கள் முன்னர் சொன்ன அதே கதை.” அந்த குட்டிப் பயல் சொன்னது சரியே.
கனவுகளும் அதுபோலத்தான். நான் ஃப்ராம்போலை விட்டுவந்து பல வருடங்கள் கடந்துவிட்டன, ஆனால் கண்களை மூடியவுடன் அங்கு சென்றுவிடுவேன். அங்கு யாரைக் காண்பேன் என எண்ணுகிறீர்கள்? எல்கா. எங்கள் முதல் சந்திப்பைப் போலவே கழுவும் தொட்டியினருகில் நின்றிருந்தாள், ஆனால் அவள் முகம் பொலிவுடனும் கண்கள் ஒரு துறவியின் கண்கள்போல பிரகாசமாக இருந்தது, அவள் என்னிடம் அபூர்வமான சொற்களை பேசினாள், வினோதமானவை. துயிலெழுகையில் அனைத்தையும் மறந்துவிட்டிருப்பேன். ஆனால் கனவு நீடிக்கும்வரை சுகமாக உணர்ந்தேன். என் அனைத்து கேள்விகளுக்கும் அவள் பதிலளித்தாள், என்ன சொல்கிறாளோ அது சரியாக இருக்கும். நான் அழுது மன்றாடினேன், “உன்னிடம் வந்துவிடுகிறேன்.” அவள் என்னை பொறுமையாக இருக்குமாறு சமாதானப்படுத்துவாள். இன்னும் வெகுகாலம் அல்ல, நேரம் நெருங்கிவிட்டது. சிலசமயம் அவள் என்னை முத்தமிட்டு முகத்தில் சாய்ந்து அழுதாள். விழித்தெழுகையில் அவள் இதழ்களின் சுவையையும் கண்ணீரின் உப்பையும் உணர்வேன்.
இவ்வுலகம் ஒரு கற்பனையான உலகம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை, ஆனால் ஒருமுறை மட்டுமே நிஜ உலகிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இறந்தவர்களை எடுத்துச் செல்லும் சிறுகுடிசையின் வாயிலில் நான் கிடக்கிறேன். புதைகுழி தோண்டும் யூதர் தன் மண்வெட்டியை தயாராக வைத்துள்ளார். புதைகுழி காத்திருக்க புழுக்கள் பசியுடன் உள்ளன; சவப்போர்வைகள் ஆயுத்தமாகி விட்டன – நான் அவற்றை என் கோணிப்பையில் சுமந்து வந்தேன். என்னுடைய வைக்கோல் படுக்கையை எடுத்துக் கொள்ள இன்னொரு பிச்சைகாரர் காத்துள்ளார். நேரம் வந்ததும் நான் மகிழ்ச்சியாகப் புறப்படுவேன். அங்கு என்ன இருப்பினும், அது உண்மையாக இருக்கும், எந்த சிக்கலுமின்றி, பரிகாசமின்றி, மோசடியின்றி. கடவுளைப் போற்றுவோம்: அங்கு கிம்பெலும் ஏமாற்றப்பட முடியாது.
***
ரப்பி1 – Rabbi – யூத மதகுரு
ஆப்ரகாடாப்ரா2 – Abracadabra – இந்த மந்திரச்சொல் பொறிக்கப்பட்ட தாயத்துகளுக்கு குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக நம்பப்படுகிறது.
பிரெஞ்சு விடுப்பு3 – French Leave – ஓரிடத்திலிருந்து எந்த தகவலும் இல்லாமல் மறைந்துவிடுவது.
மெஸுசா4 – Mezuzah – யூதர்களின் வீட்டில் இருக்கும் தோரா வசனங்கள் பொறிக்கப்பட்ட புனித தோல்சுருள்.
***
தமிழ் மொழியாக்கம் : பாரி பெருந்துறை
ஆங்கில மொழியாக்கம்: சால் பெல்லோ
மூலம்: Gimple the Fool (1953)
http://www.101bananas.com/library2/gimpel.html