பெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- கடிதங்கள்

பெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்

அன்புள்ள ஜெ,

பெங்களூரில் நிகழும் இலக்கியச் சந்திப்புகள் குறித்து வாசகர் ஒருவர் கேட்டிருந்ததைக் கவனித்தேன். இதுவரை நான் பங்குபெற்ற/ பங்குபெறும் இலக்கியச் சந்திப்புகள் பற்றிய குறிப்பை அளிக்கவிரும்புகிறேன்.

பெங்களுரில் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் நடத்திவந்த கம்பராமாயண வாசிப்பு பற்றி அறிவீர்கள். அதுபற்றி உங்கள் தளத்திலும் முன்னர் வெளிவந்திருக்கிறது (https://www.jeyamohan.in/71291#.XQsvmMgzaUk , https://www.jeyamohan.in/72048#.XQsvZcgzaUk  ). மொத்தம் 139 வகுப்புகளாக கம்பராமயணத்தின் முதல் பாடலிலிருந்து இறுதிப்பாடல் வரை நிகழ்ந்த வாசிப்பு அது. ஒவ்வொரு வாரமும் 2013 ஏப்ரல் முதல் 2015 அக்டோபர் வரை நிகழ்ந்தது. கம்பராமாயணம் முடிந்தபிறகு சிலப்பதிகாரமும் பாஞ்சாலி சபதமும் அதேபோல் முழுமையாக வாசித்து முடித்தோம். தற்போது பெரியபுராணம் பாதிக்குமேல் முடித்திருக்கிறோம். பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர்கள் இச்சந்திப்புகளில் பங்குபெறலாம்.

நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை ஜடாயு நடத்திவந்த பெங்களூரு வாசகர் வட்டம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடந்துகொண்டிருந்தது. சில சிறுகதை அமர்வுகளில் நான் கலந்துகொண்டேன். இப்போது நிகழ்வதில்லை. இறுதியாக இரண்டாண்டுகளுக்கு முன்னால் அசோகமித்திரன் நினைவுக்கூட்டம் தான் இவ்வட்டம் சார்பில் நிகழ்ந்த கடைசிக் கூட்டம் என நினைவு.

வேறு அமைப்புகள் குறித்து எனக்குத் தெரியவில்லை. வாசகசாலைச் சந்திப்புகளும் அண்மையில் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. கடிதம் எழுதிய நண்பருக்குப் பழந்தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் இருந்தால் ஹரிகிருஷ்ணன் சார் நடத்திவரும் சந்திப்பில் பங்கேற்கலாம்.

அன்புடன்,
த.திருமூலநாதன்.

 

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

 

நினேஷ் அவர்களின் கடிதம் கண்டேன்.

 

வாசகசாலை அமைப்பு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆல்சூர் ஏரி அருகில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் வைத்து சிறுகதை விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

 

அவர்களின் முகநூல் பக்கத்தில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகின்றன.

 

நன்றி

பலராம கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைநிகரற்ற மலர்த்தோட்டம்
அடுத்த கட்டுரைவிமர்சனக் கட்டுரைகள் – கடிதங்கள்