இல்லாத மணிமுடி

வெண்முரசின் அடுத்தநாவலின் மிகப்பெரிய சிக்கலாக இருந்தது அது ஏற்கனவே உச்சத்தில் இருந்தது என்பதே. உச்சத்திலிருந்து மேலும் உச்சத்திற்குச் செல்லமுடியாது. பதினேழாம்நாள் போர் என்பது ஒரு பெரும் எரிபரந்தெடுத்தலாக, எரிகொடையாக நிகழ்ந்து முடிந்தபின் இனி பதினெட்டாம்நாள் போரின் அழிவை எப்படி ஆரம்பிப்பது? கீழிறங்கியே ஆகவேண்டும், மேலெழுவதற்காக.

இந்த அடிபடுதல், காவல்நிலையம் செல்லல், மருத்துவமனை, சிகிழ்ச்சை, நலம் விசாரிப்புகள் நடுவே அது இயல்பாக உருவாகி வந்தது. முழுக்க முழுக்க கரிய நகைச்சுவை கொண்ட முதல் பகுதியை எழுதி முடித்ததும் இதன் வடிவம் கண்ணுக்குமுன் வந்துவிட்டது. நானே புன்னகையுடன் எழுதிக்கொண்டிருந்தேன் என எழுதிமுடித்தபின் என் முகத்தசைகளை உணர்ந்தபோதுதான் தெரிந்தது.

ஆனால் தட்டச்சிட கைகளில் ஒரு பிரச்சினை. இடதுகையின் மோதிரவிரலில் வீக்கம். தாடை அடிபட்டபோது அதுவும் அடிபட்டிருக்கிறது. அதற்குரிய கவனம் கிடைக்கவில்லை. வீக்கம் வடியவில்லை, வலியும் நீடிக்கிறது.

ஆனால் தட்டச்சிடும்போது பிரச்சினை இல்லை. அந்தவிரல் சும்மாதான் இருக்கிறது. நான் முறைப்படி தட்டச்சு கற்றுக்கொண்டவன் அல்ல. ஆகவே பெரும்பாலும் இருகைகளிலும் இரு விரல்களைத்தான் பயன்படுத்துகிறேன். ஆனாலும் மற்றவிரல்கள் வேலை செய்கையில் இதுவலிக்கிறது. சும்மா இருக்கையிலேயே இந்த வலி.

ஆனால் அதுதான் மோதிரவிரல். பத்துவிரல்களில் பெரும்பாலும் எதற்கும் பயன்படாத விரல் அது. சிறுவிரலைக் கொண்டு காதுகுடையவாவது செய்யலாம். அவ்வப்போது கட்டைவிரலுடன் இணைந்து அது சில வேலைகளைச் செய்வதுமுண்டு. கைகள் செய்யும் எந்த வேலையிலும் பெரும்பாலும் மோதிரவிரல் பங்கெடுப்பதில்லை. தேர் இழுக்கையில் பெரிய மனிதர்கள் வடம்தொட்டு இழுப்பதுபோலத்தான் கைகளின் பணிகளில் அதுவும் ஈடுபடுகிறது.

ஒருவேளை விரல்களில் அதுதான் முதலாளிபோலும். ஆகவேதான் அதற்கு மோதிரம் போடுகிறார்களா? மோதிரம் ஒருவகை மணிமுடியா? பெரும்பாலான மோதிரங்கள் மணிமுடிகளின் வடிவில்தான் அமைக்கப்படுகின்றன. சில கேடயங்களின் வடிவில். பலவற்றில் அருமணிகள் உண்டு. சில அரசியல்வாதிகள் பிரம்மாண்டமான மோதிரங்களைப் போட்டிருக்கிறார்கள்.

இதேபோன்ற தலைப்புக்கள் நண்பர்களுடன் வெட்டிப்பேச்சு பேச மிக உகந்தவை. விவாதிக்கையில் ஒரு நண்பர் சொன்னார் “மோதிரவிரல் சும்மா இருக்கிறதனால அதில மோதிரம் போட்டா அங்க இங்க உரசி தங்கம் சேதாரம் ஆகாது. சுட்டுவிரலிலே போட்டா உருவித் தொலைஞ்சு போயிரும். பாம்புவிரலிலே போட்டா அதிகமா எல்லாத்திலயும் அதான் படும். சிறுவிரலிலே போட்டா கௌரவமா இருக்காது. கட்டை விரல்ல போட்டா உள்ளங்கையிலே உரசிட்டு தொந்தரவு… அதான் மோதிரவிரல்”

அப்படியென்றால் அது ஒரு காப்பாளர். பொன்னை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டும்தான் பொன்னை வைத்திருப்பதற்கான தகுதி போல. இருசக்கரவண்டி ஓட்டும் பலர் மோதிரம் போடுவது எங்காவது முட்டி சிக்கல் ஆனால் அபராதமாகவோ இழப்பீடாகவோ உருவிக் கொடுத்துவிட்டு நடையைக் கட்ட.  அப்படியென்றால் ஏன் அதில் அடிபட்டது? ”அது எப்பமும் அப்படித்தானே? ஒண்ணும் செய்யலேன்னா நாம கூட்டத்திலே இருந்து வெலகில்லா நிப்போம்? அப்பம் தனியா அடிபடும்ல? நல்லா பாருங்க, பெரும்பாலானவங்களுக்கு சுட்டுவிரலை விட்டா அப்றம் மோதிரவிரலிலேதான் அடிபட்டிருக்கும்.”

மோதிரம் போடுவதற்கான தகுதியே அடிபடுவதற்கான காரணமும் ஆகிறது. ஆனால் ஒரு அடி கூட வாங்குவது சுட்டுவிரல். அது சுட்டிக் காட்டுவதனாலாக இருக்குமோ? குனிந்து கையைப் பார்க்கையில் தோன்றியது, ஒரு மோதிரத்தையாவது போட்டு வைத்திருக்கலாமோ? நான் பொன்னகைகள் அணிவதில்லை. திருமணத்தன்று அணிவிக்கப்பட்ட மோதிரத்தை சடங்கு முடிந்ததும் கழற்றிவிட்டேன். கிரீடமில்லாமல், ஆனால் கிரீடம் அணியும் வாய்ப்பு இருந்தமையால் அடிவாங்குவதென்றால் பாவம்தான்.

ஆனால் அது மோதிரவிரல் என அதற்குத் தெரியும். அது மணிமுடி அணிந்திருக்கவில்லை என்றால் என்ன? அணியக்கூடுவது, அணிவதற்குரியது. அதன் நடத்தையில் எப்போதும் அவ்வெண்ணம் இருக்கிறது. அது அணியப்படாத மணிமுடி கொண்டது.

ஓர் அத்தியாயம் அடிப்பதற்குள் வலியின் வடிவம் பழகிவிட்டது. ஒன்று சீராக நிகழ்ந்தால் அதை நம் உள்ளம் பழகிக்கொண்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்கிறது. வலியும் எழுத்தினூடாக சகஜமாக ஓடிச்செல்கிறது. இந்த பகுதிகளில் இந்த வலி  எவ்வகையான நுண்ணிய மாற்றத்தை உருவாக்குகிறது என்று எப்போதாவது பிரித்துப் பார்க்கமுடியுமா என்ன?

தட்டச்சிடுகையில் அந்த விரல் மட்டும் சற்றே எழுந்து நின்றிருக்கிறது. வரிகளுக்கு மேல் மணிமுடி அணியாத ஒர் அரசன் தலைதூக்கி நின்று பார்வையிடுவதுபோல.

மாயாவிலாசம்!
தாடை!
முந்தைய கட்டுரைசெங்கோட்டை ஆவுடையக்கா -கடிதம்
அடுத்த கட்டுரைகவிஞனின் புன்னகை