ஒரு பழைய மல்லு

சமீபத்தில் பழைய நூலடுக்கைத் துழாவியபோது காலச்சுவடு மலர் அகப்பட்டது. காலச்சுவடு சுந்தர ராமசாமியால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டபோது நான் அதில் உடனிருந்தேன். பெரும்பாலும் எல்லா இதழ்களிலும் எழுதினேன். திடீரென்று அதை தொடர்ந்து நடத்தமுடியாதபடி அவர் நிதிச்சிக்கலில் அகப்பட்டார். ஓர் இழப்பு ஏற்பட்டதன் விளைவு. அவர் வாழ்க்கையின் கடினமான நாட்கள் அவை.

காலச்சுவடுக்காக பெறப்பட்ட படைப்புக்கள் அனைத்தையும் ஒரே இதழாகக் கொண்டு வந்துவிடலாமென்று அவர் எண்ணினார். அதுவே காலச்சுவடு சிறப்பிதழாக ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்தது. அதில் நான் சில கவிதைகளும் திசைகளின் நடுவே என்னும் சிறுகதையும் எழுதியிருந்தேன். பரவலாக பாராட்டப்பட்ட ஒரு கதை. பின்னர் அதேபேரில் தொகுதி வெளிவந்தது. நான் எழுதிய முதல் மகாபாரதக்கதை அது.

இதழில் எழுதியிருக்கும் பெயர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மிகப்பெரும்பாலானவர்கள் தொடர்ச்சியாக எழுதவில்லை. குறிப்பாக கவிதை எழுதியவர்கள் ஆங்காங்கே நின்றுவிட்டிருக்கிறார்கள். ஆனால் அன்றைய காலச்சுவடில் கதை எழுதியவர்கள் பலர் இன்று பெயர் அறியப்பட்டவர்கள்.  இலக்கியத்திற்கு தொடர்ச்சியான தேடலும் அர்ப்பணிப்பும் தேவையாகிறது. கதை எழுதுபவர்கள் அந்த நடையை அடைய கொஞ்சம் உழைத்தாகவேண்டும் என்பதனால் எளிதில் நின்றுவிடுவதில்லை. கவிதை எழுதுபவர்கள் ஒரு தற்காலிய விசையால் எழுதவந்து பின் ஓய்கிறார்கள் என நினைக்கிறேன்.

என் கதையுடன் வெளிவந்திருந்த படம் அன்று அருண்மொழி மிக விரும்பிய ஒன்று. இப்போது அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. நான்தானா அது? ஆளே வேறுமாதிரி இருக்கிறேன். 1989 ல் எடுத்தபடம். எனக்கு 27 வயது. மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் திருமணம் செய்துகொண்டேன். இன்று என் முகத்தில் மலையாளத்தனம் சற்றுமில்லை. பேச ஆரம்பித்தால் குமரிமாவட்டத்தனம் கொஞ்சம் தெரியும். ஆனால் இந்தமுகம் சரியான மலையாள முகமாக இருக்கிறது. எண்ணுவதும் எழுதுவதும் என உடனுறையும் மொழி முகத்தையும் மாற்றிவிடுமா என்ன?

என்ன ஒரு முகம். இது பழம்பொரியையும் ‘தாஸேட்டன்’ குரலையும் ‘நசீரிக்கா’வின் சிரிப்பையும் விரும்புவது என்பது தெள்ளத்தெளிவு. விகேஎன் நகைச்சுவையை சொல்லி வெடித்துச் சிரிப்பது.  ‘பஷீரியன்’ சொல்லாட்சிகளை பயன்படுத்துவது. கலாமண்டலம் கிருஷ்ணன்நாயரின் கதகளி முத்திரைகள் அறியாமல் தன் கைகளிலும் பேச்சினூடாக எழப்பெறுவது. ஓய்ந்திருக்கையில் நாற்காலி விளிம்பில்  மானசீக செண்டையில் ‘கலாசம்’ கொட்டி நிறுத்துவது. நிகராகுவாவில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக விவாதித்துவிட்டு முந்தையநாள் முச்சந்தியில் நிகழ்ந்ததை நாளிதழில் வாசித்து அறிவது.

இந்த முகத்துடன் எங்கெங்கோ சென்றிருக்கலாம். துபாயில் சேட்டுகளுக்குக் கார் ஓட்டியிருக்கலாம். அமெரிக்காவில் ஆண்நர்ஸாக பணியாற்றியிருக்கலாம். சென்னையில் எம்.ஆர்.எஃப் டயர்களுக்கு ஆர்டர் பிடித்திருக்கலாம். நிதிநிறுவனம் நடத்தியிருக்கலாம். மீசை அதற்கெல்லாம் உரியது. ஏன் மும்பையில் நிழல் உலகில்கூட விளையாடியிருக்கலாம்.

இந்நேரம் ஏதாவது கட்டைக்குரல் மல்லு மாமிக்கு கணவனாகி சட்டையிலா மயிர்மார்பில் தங்கச்சங்கிலியுடன், பூப்போட்ட லுங்கியுடன், முக்கால்வாசி கட்டிய வீட்டின் போர்ட்டிகோவில் அமர்ந்திருக்கலாம். காலையுணவாக மாட்டிறைச்சியும் பரோட்டாவும் சாப்பிட்டு அந்தியில் ‘ரண்டெண்ணம்  வீசி’ விட்டு அமர்ந்து “சுமங்கலீ நீ ஓர்மிக்குமோ ஸ்வப்னத்திலெங்கிலும் ஈ கானம்!” என்று பாடி கண்ணீர் சிந்தி நிகழாதுபோன காதல்தோல்விக்காக உளம் உருகியிருக்கலாம்.

எவ்வளவோ வாய்ப்புக்கள். தமிழில் எழுத ஆரம்பித்து, சகலவசைகளையும் வாங்கிக்கொண்டு, தி.ஜானகிராமனால் வழிநடத்தப்பட்டு தஞ்சாவூர்ப் பெண்ணை மணந்துகொண்டு, தவடையில் அடிவாங்கி… ஆனால் முகத்தைப் பார்த்தால் அடிவாங்கும் சாத்தியக்கூறு கொஞ்சம் தென்படுகிறதோ? மலையாளத்தில் இதை ‘தல்லுகொள்ளித்தனம்’ என்பார்கள். அடிவாங்கித்தனம் இருவகை. தப்புசெய்து அடிவாங்குவது. சரியாக இருப்பதனாலேயே அடிவாங்குவது. சரியாக இருப்பதை இத்தனை சிக்கலாக ஆக்குவது இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை, பாமரர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதனாலேயே.

மாயாவிலாசம்!
தாடை!
முந்தைய கட்டுரைமுட்டாள் கிம்பெல்: ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் – டி.ஏ.பாரி
அடுத்த கட்டுரைமூன்று சிறுகதை தொகுதிகள்- கடிதங்கள்