மாயாவிலாசம்!

செல்பேசியில் தமிழ் தட்டச்சிடுவது மாபெரும் பண்பாட்டுச் சீரழிவு என்பதுபோன்ற மனநிலையில் இருந்தேன் என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும் சுரேஷ் பிரதீப் போன்றவர்கள் முழுநாவலையும் செல்பேசியிலேயே எழுதுகிறார்கள் என்று தெரியவந்தபோது. ஏனென்றால் எனக்கு செல்பேசியில் தமிழ் தட்டச்சிடத் தெரியாது. அதற்கான மென்பொருள் என்னிடமில்லை. ஒருமுறை தரவிறக்கம் செய்திருந்தேன். அதில் தமிழும் தட்டச்சிட முடியவில்லை. ஆங்கிலத்துக்கு மாறவும் மறுத்துவிட்டது. ஒட்டுமொத்தமாக வேரோடு பிழுது எடுத்தேன். “நெஜம்மாவா? பிடிங்கிடப்போறீங்களா? யோசிச்சீங்களா” என்றெல்லாம் கெஞ்சியது. “தயவு பண்ணுங்க எஜமான், வந்திட்டேன்ல” என மன்றாடியது. விடவில்லை.

இரண்டுவிரலால் இலக்கியத்தைக் கையாள்வது எவ்வகையிலும் சரியல்ல என்றே தோன்றிக் கொண்டிருந்தது. இன்னொரு இளம் எழுத்தாளர் வலதுகை கட்டைவிரலை மட்டுமே நாவல் கட்டுரை வம்புச்சண்டை அனைத்துக்கும் பயன்படுத்துகிறார் என அறிந்தபோது உளமுடைந்து “இது உனக்கே நல்லா இருக்கா” என்று கேட்டேன் “வாசிக்கிறது செல்போனிலேதானே? நான்லாம் பேப்பர் புக்கை தொட்டே பல வருஷமாச்சு” என்றார். அந்த வினோத தர்க்கம் ஒருமாதிரி ஏற்றுக் கொள்ளும்படியாகவும் இருந்தது.

தாக்குதலை காவல்நிலையத்தில் எழுதிக்கொடுத்துவிட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்குச் சென்றேன். கீறல்கள் தடிப்புகள் வலிகள்தான் உடனே தெரிந்தன. ஆகவே உடனே திரும்பிவிடலாம் என்பதுதான் என் எண்ணம். அங்கே சென்று மருத்துவர் சோதன செய்தபோதுதான் தாடை வீக்கம் இருப்பது தெரிந்தது. கழுத்திலிருந்த காயங்களும். ரத்த அழுத்தமும் உச்சத்திலிருந்தது. ஏற்கனவே செர்விக்கல் ஸ்பாண்டிலிட்டிஸ் உண்டு. கணிப்பொறி முறைப்பர்களுக்குரிய வழக்கமான நோய். அடிபட்டமையால் நிற்கவியலாதபடி நிலையழிவு. படுத்து மறுநாள் எலும்புமுறிவு மற்றும் –காது மருத்துவர் பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் ஆவது நல்லது என்றார் இரவுப்பணி டாக்டர்.

லக்ஷ்மி மணிவண்ணனை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பினேன். அருண்மொழியிடம் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன், மறுநாள் வா என்றேன். சூழ ஏகப்பட்ட அழுகைகள் கூச்சல்கள். நடுவே அமர்ந்து செல்பேசியைப் பார்த்தால் அடுக்கடுக்காக விசாரணைகள். அதன்பின்னர்தான் தினமலர்ச் செய்தியைப் பார்த்தேன். இனி இரவெல்லாம் செய்திகளும் அழைப்புகளும் வரும். செல்பேசியில் மின்னூட்டம் இல்லை. மின்னேற்றியும் இல்லை. ஒரு பதிவுபோட்டு செய்தியை விளக்கிவிடலாம் என்று முயன்றேன்.

வலைத்தளம் ஒன்று தமிழில் தட்டச்சிட உதவியது. http://www.easynepalityping.com/type-tamil ஆனால் நான் எழுதுவதற்கு முன்னரே அது “இதானே எழுதப்போறே? நீ அப்டி  பெரிசா என்னத்த எழுதிருவே?” என அதுவே எழுதியது. ஆனால் அது நான் உத்தேசித்த சொல் அல்ல. அதை நான் மாற்ற முயன்றபோது சலிப்புடன் “சரி, இதானே?” என இன்னொரு சம்பந்தமில்லாத சொல்லை காட்டியது. நான் நினைத்த சொல்லை கொண்டு வந்ததும் ஒரு கல்லை நகர்த்தி சுவரில் அமைத்து சாந்துபூசி நிறுத்திய நிறைவை அடைந்தேன். அப்போதும் அது என் உரைநடை அல்ல. உரைநடையில் நம்மை அறியாமலேயே நமது கை தெரிவுசெய்யும் சொற்களுக்கு ஓர் இடம் உண்டு. அவை எழாமல் இந்த செயலி தடுத்துவிட்டது. இது பாதிநானும் மீதி அச்செயலியும் சேர்ந்து எழுதிய நடை. ஒரு தப்பு நடந்து நாய் பூனைக்குட்டியை பெற்றுவிட்டதென்றால் அடையும் திகைப்பு ஏற்பட்டது. என் வேகத்திற்கு கடைசியில் அதுவே சிறுகதை, நாவல் என எழுத ஆரம்பித்துவிடுமோ என்று தோன்றிவிட்டது.

உண்மையில் இச்செயலிகள் மிகமிகத் திறமையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைச் சொற்கள் ஒரு நல்ல ஏற்பாடுதான். ஆனால் எப்படியோ நம் சொற்தெரிவுக்கு அது ஓர் எல்லையை அமைக்கிறது. சொற்றொடர்த் தெரிவையும் வகுக்கிறது. மெல்ல மெல்ல அது நம் உளமொழியை ஆளும். அது வகுத்த களத்திற்குள் நாம் விளையாடுவோம். ஆஸ்திரேலியாவில் பெரிய புல்வெளிகளில் மின்கம்பியால் வேலியிட்டு முதல்தலைமுறை பசுக்களை வளர்ப்பார்கள். பசுக்களின் உள்ளுணர்வில் மின்கம்பிவேலி பதிந்தபின் மின்சாரத்தை நிறுத்திவிடலாம். பலதலைமுறைக் காலம் அவை அந்த கம்பியை மீறிச்செல்ல முயலாது.

இந்த பரிந்துரை நாம் பொதுவாகப் பயன்படுத்தும் மொழியிலிருந்து வருகிறது. அந்தமொழி ஒரு மாபெரும் சராசரி. சராசரி உரைநடைக்கு அப்பால் செல்லும் உரைநடை மட்டுமே உண்மையில் வலுவான தொடர்புறுத்தலை நிகழ்த்துகிறது. ஏனென்றால் அதைத்தான் நாம் கவனிக்கிறோம். வழக்கமான எதையும் கவனிக்காமலிருக்கவே நம் மூளை பழகியிருக்கிறது. இல்லையேல் நாம் வாழமுடியாது. எண்ணி நோக்குங்கள் வழக்கமான சொற்றொடர்களில் அமைந்த தொழில்முறை கடிதங்களை நீங்கள் முழுக்க வாசிப்பதுண்டா, எல்லா சொற்களும் உங்கள் கண்ணில் படுவதுண்டா? ஆங்கிலத்தில் எம்.எஸ் வேர்ட் என்னும் மென்பொருள் மொழியை வகுக்கத் தொடங்கிவிட்டபின் உடைந்த சொற்றொடர்கள், உதிரிச்சொற்றொடர்கள் இன்றில்லை. ஆனால் அந்த சீர்மொழி கவனமின்மையையும் உருவாக்குகிறது.

வடிவேலு பாயைவிரிக்கும் காட்சி போல அல்லாடினேன். கல்லைக் கண்டால் நாயைக்காணோம் வகை போராட்டம். ஒருவழியாக தட்டச்சிட்டு முடித்தேன். எழுத்துப் பிழைகளைச் சீரமைக்க முடியவில்லை. ஒரு சொல்லை சீரமைத்தால் இரண்டு பிழைகள் தாமாகவே உருவாகிக்கொண்டன. எங்களூரில் அந்தக்காலத்தைய விளையாட்டு ஒன்று உண்டு ஒரு தீப்பெட்டியில் குச்சிகளை மொத்தமாகக் கொட்டவேண்டும். இன்னொரு குச்சி அசையாமல் ஒவ்வொன்றாக எடுத்து அகற்றவேண்டும். உச்சகட்டப் பொறுமை தேவைப்படும் ஆட்டம் அது. அதை மீண்டும் விளையாடினேன். ஒரு கட்டத்தில் சலிப்புற்று விட்டுவிட்டேன். அப்படியே செல்பேசியிலிருந்தே வலையேற்றினேன்.

மீண்டும் சீரமைக்கலாமென முயன்றேன். ஆனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. உண்மையில் மொழிக்கு பிழையாக  ஆகும் ஒர்  இயல்பு உண்டு. நதி கரைகளை முட்டிக் கொண்டிருப்பதுபோல. கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதுபோல மொழியை கொண்டு செல்லவேண்டும். மிகவும் பழகினால் செக்குமாடாகிவிடும்.

ஆனால் சற்றுநேரம் கழித்து உணர்ந்தேன், நானும் செல்பேசியில் எழுதத் தொடங்கிவிட்டேன். மென்பொருட்கள் நம் உள்ளத்துடன் உரையாடுபவை. ஏனென்றால் அவை புறவயமாக ஒரு கருவியில் ஏற்றப்பட்ட உள்ளத்தின் ஒரு செயல்பாடு மட்டுமே. கூட்டல் கழித்தல் மொழிதல் என அவை உள்ளம் இயற்றுவதையே செய்கின்றன. உள்ளம் ஆடியில் தன்னைக் காண்பதுபோல அவற்றைக் காண்கிறது. உள்ளத்திற்குள் அவை தொற்றிக்கொள்கின்றன. எல்லா மென்பொருட்களும் மிக எளிதாக உள்ளத்துக்குள் ’டௌன்லோட்’ ஆகித் தன்னை நிறுவிக்கொள்கின்றன. எந்த மென்பொருளை ஓரிருநாட்கள் கையாண்டாலும் நம்மையறியாமலேயே உள்ளம் பழகிவிட்டிருப்பதைக் காணலாம். இன்னும் நாலைந்து கட்டுரை போதும், இந்த மென்பொருளை என் உள்ளத்திலுள்ள மென்பொருள் கண்டுகொண்டால் வெண்முரசை செல்பேசியிலேயே எழுதலாம்.

இவ்வுலகில் இன்று பல்லாயிரம் மென்பொருட்கள் உள்ளன. சில மென்பொருட்களை மனித இனத்தில் பெரும்பான்மையினர் பயன்படுத்துகின்றனர். இவை மானுட உள்ளத்தை ஒட்டுமொத்தமாக எப்படிப் பாதிக்கின்றன என எவராவது ஆராயலாம்.  உள்ளமும் மென்பொருளும் இணைந்த மாபெரும் மென்பொருள் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. நம் சிந்தனைகளின் கட்டமைப்பும் வழிகளும் மென்பொருள்களை முன்வடிவமாகக் கொள்கின்றன. மானுட உள்ளமும் உலகமெங்கும் உள்ள மென்பொருட்களின் தொகையும் இணைந்து ஒரு விந்தையான பேரமைப்பு உருவாகிறது – ஒரு அறிவியல் புனைகதை எழுதிப் பார்க்கலாம்.

கை துறுதுறு என்றது. செல்பேசியில் ஒரு கட்டுரை  எழுதிப்பார்ப்போமே என்று. அடக்கிக்கொண்டேன். ஆனால் எழுதமாட்டேன் என்றும் உறுதி சொல்லமுடியாது. நவீனத் தொழில்நுட்பம் மீதான என் உறவு பழம்பொரியுடனான உறவுக்குச் சமானமானது. கடைசிக்கணம் வரை எதிர்த்துப் போராடிவிட்டு அப்படியே சரணடைந்து நடுமையத்திற்குள் பாய்ந்துவிடுவது. அப்பாவுக்கு இதை விளக்க ஒரு சொல் இருந்தது, மாயா விலாசம். மென்பொருள் நம் காலகட்டத்தில் பிரம்மம் கொண்ட மாயையின் வடிவம் போல.

முந்தைய கட்டுரைஇன்றைய காந்திகள்
அடுத்த கட்டுரைஉள்ளத்தின் புன்னகை