சில தற்செயல்கள் வேடிக்கையானவை. டாக்டர் முகம்மது மீரான் அவர்களிடம் தாடையை காட்டுவதற்காகச் சென்றிருந்தேன். சீட்டு கொடுத்த நர்ஸுக்குப் பின்பக்கம் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமான ஒரு நீர்யானை வாயை அகலகலகலமாக திறந்து டபாரென்று மூடியது. “இதுக்கு ஈஎன்டி பிரச்சினை ஒண்ணுமில்லைன்னு நினைக்கிறேன்” என்றேன். நர்ஸ் புன்னகைத்துக் கொண்டார். நீர்யானைகள் தாடைகளாலேயே சண்டைபோட்டுக்கொண்டன. கோட்டாவிப்போர்!
தாடையின் குருத்தெலும்பு ஒரு அதிர்வுதாங்கி. தாடையில் விழும் அடிகள் அங்கேதான் பதிகின்றன. ஆனால் அதற்கு கட்டுபோட முடியாது. பிறந்தநாள் முதல் கடைசிச்சொல் வரை செயல்பட்டாகவேண்டும். தேய்மானம் வரக்கூடாது. ஆகவே வளர்ந்துகொண்டே இருக்கிறது. பேசாமலேயே இருந்தால் கூடுதலாக வளர்ந்து எலியின் பல் போல வெளியே நீட்டிவிடுமா என்று தெரியவில்லை.
தாடையை நோக்க ஏன் என் உயரமெல்லாம் கணக்கிட்டார்கள் என்று புரியவில்லை. தாடையின் அளவுக்கும் உயரத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? குத்துச்சண்டையில் தாடையிலேயே குத்து குத்து என குத்துகிறார்கள். தாடையை எவர்சில்வரில் செய்து பொருத்திக்கொள்வார்களா? இந்திரா பார்த்தசாரதி மூட்டு அறுவைச் சிகிழ்ச்சைக்குப்பின் என்னிடம் சொன்னார் “Churchil had nerves of steel, I have knees of steel” ஜேம்ஸ் பாண்ட் படத்தின் இரும்புப் பல்லனை நினைவுகூர்ந்து கொண்டிருந்தபோது என்னை அழைத்துவிட்டார்கள்.
டாக்டர் மீரான் என் மதிப்பிற்குரிய ஈரோடு டாக்டர் வி.ஜீவானந்தம் அவர்களை நினைவூட்டினார்.. “என்ன செய்யுது?” என்று அவர் கேட்டார், “மலினமான கையால் மகாபாரதம் எழுதியதற்கு கிடைத்த தண்டனை இது” என ஓருவர் ஃபேஸ்புக்கில் எழுதி அதை எனக்கு ஸ்கிரீன்ஷாட் அனுப்பியிருந்தார். அதைச் சொல்லலாமா என்று தோன்றியது. பீதியாகிவிடுவார். ஆகவே அடக்கிக்கொண்டு நடந்ததைச் சொன்னேன்
மருந்து தந்தபின் ஒரு கார்ட் தந்தார். தாடைப் பாதுகாப்புக்கு செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை. அச்சிட்டே வைத்திருக்கிறார். அதிலொன்று அகலமாக கொட்டாவி விடக்கூடாது. நான் பிஎஸ்என்எல் வேலையில் வாயை அதிகமாக பயன்படுத்தியதே அதற்காகத்தான். கடினமான பொருட்களை கடிக்கக் கூடாது. கரும்பு, எலும்பு, பட்டாணிக்கடலை. செய்யக்கூடாதனவற்றில் மகாபாரதம் எழுதுவது உண்டா என்று பார்த்தேன், இல்லை.
சில பயிற்சிகளை நர்ஸ் சொல்லித்தருவார் என்றார் டாக்டர். பக்கத்து அறையில் ஒரு தொலைக்காட்சியில் தாடைக்கான பயிற்சியைக் காட்டினார்கள். மிக எளிமையான பயிற்சிகள்தான். மூளைக்கான பயிற்சிகள் மட்டும்தான் இங்கே கடினமானவை போல. கையால் கீழ்த்தாடையை தாங்கி அழுத்திக்கொண்டு மேல்தாடையை மட்டும் அசைப்பதன் மூன்று வகைகள். பார்த்தபோது உள்ளிருந்து பீரிட்டு வரும் பேச்சை கையால் தடுப்பதுபோல தோன்றியது.
அது செய்முறையின் கூடவே விளக்கமும் ஒலிக்கும் காணொளி. அருகே அறையில் டாக்டர் இருந்தமையால் ஒலியில்லாமல் வைத்திருந்தார். ஆகவே ஒவ்வொரு பயிற்சியை காட்டியபின்னரும் அதில் நடித்திருந்த பெண்மணி பெரிய புன்னகையுடன் சற்றுநேரம் தென்பட்டார். நர்ஸ் என்னிடம் “எக்ஸஸைஸ் மட்டும் பண்ணினாப்போரும். இப்டி சிரிக்கணும்னு இல்லை” என்றார். சிரித்துவிட்டேன். நர்ஸும் சிரித்துவிட்டார். சிரிக்கும் நர்ஸ்களை அரிதாகவே கண்டிருக்கிறேன்.
ராபர்ட் ஃப்ரோஸ்டின் கவிதை நினைவுக்கு வந்தது. புன்னகையுடன் குளிர்ந்த காற்று நிறைந்திருந்த நாகர்கோயில் வழியாகத் திரும்பினேன்.
The way a crow
shook down on me
The dust of snow
From a hemlock tree
Has given my heart
A change of mood
And saved some part
Of a day I had rued.