’வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு –தீயின் எடை

 

வெண்முரசு இருட்கனி களம்நிறைந்த பெருந்தீயில் முடிந்தது. முடிந்த அன்றே என் மீதான தாக்குதல் நிகழ்ந்தது. நான் இன்று தற்செயல்களை நம்புபவன் அல்ல. அவை பெரிய ஒர் ஒட்டுமொத்தத்தின் பகுதியாக நிகழ்பவை என நினைப்பவன். இதையும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன். உண்மையில் நடந்தது ஒரு விபத்து போலத்தான். இன்று தமிழகத்தில் எவர் வேண்டுமென்றாலும்  குடித்துவிட்டு நின்றிருக்கும் ஒருவரால் எக்காரணமும் இன்றித் தாக்கப்படலாம். பலருக்கும் இதற்கு நிகரான அனுபவம் இருக்கும். சொந்த ஊர் என்பதனால் பாதுகாப்புணர்ச்சியும் விலக்கமும் இல்லாமலிருந்தேன் என்பது என் பக்கப்பிழை.

 

என் மீதான காழ்ப்புக்குவிப்புகளைப் பற்றி சில கடிதங்கள் வந்தன. நான் எப்போதுமே சொல்லி வருவது ஒன்றுண்டு, இவர்கள் எவரும் கருத்தியல் எதிரிகள் அல்ல. இவர்களிடமிருப்பது தனிப்பட்ட காழ்ப்புகள் மட்டுமே. உண்மையான கருத்தியல் எதிரிகள் உள்ளனர். அவர்கள்தான் செய்திகேட்டதும் முதலில் அழைத்தவர்கள். உடன் நின்றவர்கள். நாளையும் தங்கள் கருத்தில் சற்றும் சமரசம் செய்துகொள்ளாதவர்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தங்கள் கருத்துக்களில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. இந்தக் காழ்ப்புகள் ஜோடனைகள் அவதூறுகள் அனைத்துமே வெண்முரசு என்னும் பணியின் ஒட்டுமொத்தத்தின் ஒரு பகுதியே. இப்பெரும்பணியை நான் செய்யவில்லை என்றால் இந்தச் சிறுமைகள் எனக்கெதிராக எழுந்திருக்காது. என் படைப்புக்கள் தனிப்பட்டமுறையில் உருவாக்கும் கசப்பு இது. இப்படி ஒரு பணியை எவர் செய்திருந்தாலும் இத்தகைய உணர்ச்சிகளே இங்கே எழுந்திருக்கும். இவர்கள் திளைக்கும் வாழ்க்கையின் சிறுமை அத்தகையது. பெருமுயற்சிகள் செய்யும் எவருக்கும் இதுவே அனுபவமாக இருக்கும்,

 

உ.வே.சாமிநாத அய்யரின் என் சரித்திரத்தின் பிற்பகுதியில் அவர் சீவகசிந்தாமணி பதிப்புமுயற்சியை தொடங்கியபோது உருவான காழ்ப்புகள் தாக்குதல்கள் எத்தனை உச்சத்தில் இருந்தன என்பதை பார்க்கலாம். அப்பணியை நிறுத்திவிட முயன்றவர்களில் குறிப்பிடத்தக்க தமிழறிஞர்களும் உண்டு. அது வெளியானபோதுகூட அதில் சிறுபிழைகளை கண்டுபிடித்து உவேசா தமிழை அழிக்கிறார் என்பதுபோன்று உச்சகட்ட காழ்ப்புடன் எழுதப்பட்ட வசைகளே மிகுதி. உவேசா உளம் வருந்தி பின் தேறுகிறார். முதலில் மறுமொழிகள் உரைத்தவர் பின்னர் அவர்களை முற்றாக புறக்கணிக்கிறார். வாழ்நாளில் மிகப்பிற்பகுதியில், முதுமையில்தான் உவேசா சற்றேனும் பாராட்டப்பட்டார். இது மானுடகுணம். இங்கே தன்னைத் தானே மதிக்கும்படி எதையுமே செய்யாதவர்களே மிகப்பெரும்பாலானவர்கள். அர்ப்பணிப்புடன் செலவிடப்படும் ஒரு வாழ்க்கை பிறரிடம் பெரும் கசப்பையே உருவாக்குகிறது அது அவர்களுக்கு தங்கள் மீதான ஒரு விமர்சனமாகவே தோன்றுகிறது.  எனக்காவது எழுத்தாளன் என்னும் சிறிய புகழும் சிறிதளவு வாசகர்களும் உள்ளனர். அதுகூட இல்லாமல் நடுத்தெருவில் நின்று இச்சூழலை எதிர்கொள்ளும் சமூகப்பணியாளர்கள் பலர் உண்டு. என் வாழ்நாளெல்லாம் அவர்களுடன் நிலைகொண்டிருக்கிறேன்.

 

என் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று பலர் கேட்டிருந்தனர். செவியருகே உள்ள குருத்தெலும்பில் வலியும் வீக்கமும் உள்ளது. மெல்ல முடியாது. சற்று மெல்லத்தான் சரியாகும் என்றனர். சிகிழ்ச்சையில் இருக்கிறேன். அதோடு நமக்கு வயதாவதை நாமே உணரும் தருணம் இத்தகையது. நம் அகம் நம் வயதை குறைத்தே மதிப்பிடும். இளவயதுள்ளவனும் வன்முறைப்பின்னணிகொண்டவனுமாகிய ஒருவன் நம்மை பிடித்துச் சுழற்றி கீழே தள்ளி அடித்தால் அந்த பதற்றத்தில் ஒன்றும் தெரிவதில்லை. மறுநாள் தசைகள் வலிக்கத் தொடங்குகின்றன. ஐந்தாண்டுகளுக்குமுன்புகூட இத்தகைய வலிகளை உணர்ந்ததில்லை. மலைகளில் கயிற்றில் தொங்கிஏறிய அனுபவம்கூட உண்டு. இரண்டு வாரங்களில் சரியாகிவிடுவேன் என நினைக்கிறேன்.

 

இத்தகைய சூழல்களில் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் ‘நமக்கென்ன?” என்று எண்ணுவதே வழக்கம். நாளையும் இங்கே தங்கியிருக்கவேண்டும் என்றுதான் சாமானியர்களுக்குத் தோன்றும். என் சுற்றும் வசிப்பவர்கள் அனைவரும் சொன்னது அதையே. ஆனால் என் இயல்பு அதை எதிர்கொள்வதே. எது சட்டநடவடிக்கையோ அதைச் செய்தேன். உறுதியாக. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்றும் அறிந்திருந்தேன், கவலைப்படவில்லை.

 

விசையுடன் செல்லும் வண்டிக்கு எதிராக வரும் ஒவ்வொன்று விசைகொள்கின்றன. கூழாங்கற்கள்கூட துப்பாக்கிக்குண்டுகள் ஆகிவிடுகின்றன. இது அதில் ஓர் உச்சம் எனக் கொள்கிறேன். வெண்முரசு அளிக்கும் சவால்களில் ஒன்று இது.என் பணி எழுதுவது. எடுத்ததை முடிப்பது. அதில் எந்தச் சோர்வும் இல்லை. இதுநாள் வரை எடுத்தபணியில் சோர்வு என்பது என் இயல்பில் இல்லை.

 

இருட்கனியின் இறுதியில் வந்த எண்ணம், அங்கே எழுந்த மாபெரும் இருப்பு அனல். அங்கே எரி கொன்றவர்களே மிகுதி. ஆனால் தீ எடையற்றது. இங்கே கண்முன் நிகழ்கையிலும் தீ இங்கே உள்ளது அல்ல என்று தோன்றியது. தீயின் எடையின்மை என்பது ஒரு  திகைக்கவைக்கும் கவித்துவம். அதுவே தலைப்பு. முதல் பகுதியைத் தொடங்கிவிட்டேன். ஜூலை ஒன்று முதல் வெளிவரும்

 

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைநினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்
அடுத்த கட்டுரைவாசிப்புச் சவால் -கடிதம்