[சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய வெளிச்சமும் வெயிலும் நூல் குறித்து காளிப்பிரசாத் பேசியது. குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு 9-6-2019]
வெளிச்சமும் வெயிலும் வாங்க
அனைத்துப் படைப்புகளுக்கும் பாணி என்று ஒன்று உண்டு. அவ்வழியாக படைப்புகளை அறியும்போது அவற்றை இன்னும் நெருக்கமாக அறியமுடிகிறது. இப்பொழுது தொடர்ச்சியாக சில திரைப்படங்களைக் கண்டு, எங்க வீட்டுப் பிள்ளை பாணி மற்றும் ஆங்ரி யங்மேன் பாணி என்று கூறுவதைப் போல ஒரு சிறுகதைத் தொகுப்பை அணுகுவது சரியான ஒன்றா என்றால் அது கொஞ்சம் வசதியாகத்தான் இருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சிவாகிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுப்பை சரியான முறையில் உள்வாங்க அதன் முதல்கதையாக இருக்கும் ’யாகவாராயினும் நாகாக்க’ என்னும் கதையின் நாயகனான சம்பத்தையே ஆதர்சமாகக் கொண்டு அந்த பாணிக்கு சம்பத் பாணி என்று பெயரிட்டுக்கொண்டது வசதியாக இருந்தது. அடிப்படையில் சம்பத் என்பவர் யார்? ஒருவகையில், அவர் அனைத்தையும் சோதனைக்கு உள்ளாக்குபவர். அதன் மூலம் மற்ற தரப்பை உணர்பவர். எப்பொழுதும் ஐயத்துடன் விளங்கும் ஒரு தாமஸ். மற்றொருவகையில் சம்பத் ஒரு முந்திரிக் கொட்டை. அவ்வகையில் மொத்தத் தொகுப்பினையும் மூன்றாக வகுக்கலாம். முதல்வகையை ’சம்பத் கதைகள்’ என்று பிரித்துவைக்கலாம். இரண்டாவது ’சுஜாதா-வண்ணதாசன் ( பாதிப்பின்) கதைகள்’, மூன்றாவது ’சிவாகிருஷ்ணமூர்த்தி’ கதைகள். அனைத்து கதைகளுமே இந்த மூவியல்புகளும் கலந்துதான் இருக்கின்றன. அதில் தூக்கலாக தெரிவதை வைத்தே இவ்வாறு பகுத்திருக்கிறேன்.
சம்பத் கதைகளாக, தொகுப்பின் முதல்கதையான யாகவாராயினும் நாகாக்க துவங்கி யாவரும் கேளீர், வெளிச்சமும் வெயிலும், what a wonderful world ஆகியவற்றை வைக்கலாம்.
பொதுவாகவே மனிதர்களுக்கு, தாம் இந்த உலகத்திற்கு எவ்வாறு பொருள் படுகிறோம் என்னும் அச்சம் இருப்பதுண்டுதான். அது தமிழர்களான நமக்குச் சற்று தூக்கலாக இருக்கிறதோ என்ற ஐயம் உண்டு. சில நேரங்களில் பொதுச் சமூகத்தை ஊடகங்கள் வாயிலாகவோ சமூக வலைதளங்கள் வாயிலாகவோ அணுகுகையில் தன்னை எவ்வாறூ காண்பித்துக்கொள்ளவேண்டும் என்பதில் மேலும் முனைப்பு கொண்டவர்களாகவே இருக்கிறோம். அதன்காரணமாக பொதுவெளியில் தனக்கான ஒரு பிம்பத்தை காத்துக்கொள்வதில் ஒரு தனிக் கவனம் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. இவர்களில் சிலர் நாளாக நாளாக தன் இயல்பிறகு முற்றிலும் எதிர்நிலையை எடுத்து அதைக் காத்துவரவும் தயங்குவதில்லை. அதுவே, பிறகு ஒரு சமயத்தில் ஒரு போலி மனிதாபிமானத்தை, போலி தன்னிரக்கத்தை, போலி சமதர்மத்தை சுமக்க வைக்கிறது. சம்பத் பெரும்பாலும் அவர்களுடனே உரசித் தன்னை சரிபார்த்துக் கொள்கிறார். ஒருவித பகடியாக அக்கதைகள் நிலைகொள்கின்றன. யாவரும் கேளீர் கதை நாயகர், தான் ஐரோப்பா வந்த சமயத்தில் ஒரு இந்தியன் என்பதால் எப்படியெல்லாம் வெள்ளையர்கள் தன்னை நிறவெறி கொண்டு விலகியிருந்தனர் என்று ஆற்றாமையுடன் உரைத்து வருவார். இறுதியில் தன் மகனின் காதல்கதை தெரிய வரும்போது அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது அதன் முடிச்சு. தமிழர்களைப் பொறுத்த மட்டில் இலங்கைத் தமிழர்கள் மீது இருப்பது ஒரு கரிசனம் அல்லது பரிதாபம். ஆகவே அவரிடம் அரசியல் சார்ந்து மட்டுமே பேசவ்ண்டும். ஆனால், what a wonderful world சிறுகதையில் வரும் நபரின் பிரச்சனை வேறு. அவர் தன் அபிமான நாயகரின் படம் அடுத்து ஓடுமா என்ற கவலையில் இருக்கிறார். அந்தக் கதையில் இறுதியிலும் வெளிப்படுவது சம்பத்தின் பகடிதான்.
ஒருமுறை எழுத்தாளர் ஜெயமோகனிடம், ஆஸ்திரேலியாவில் இந்தியர்களை அடிக்கிறார்களே என்று ஒருவர் கேட்டபோது தான் அங்கே இருந்திருந்தால் தானுமே அவர்களை அடித்திருப்பேன் என்று அவர் பதிலளித்திருந்தார். ஒருவகையில் பார்த்தால் சிவாகிருஷ்ணமூர்த்தியுமே தன் சம்பத் கதைகளில் வாயிலாக அதையேதான் செய்து கொண்டிருக்கிறார். வைத்தி என்று சொல்லும்போதே தில்லானா மோகனாம்பாள் நினைவிற்கு வருவது போல, முல்லைக்கல் மாதவன் நாயர் என்றாலே ஒரு உருவம் நிலைபெற்றூவிட்டதைப் போல சம்பத்தையும் ஒரு குறியீடாக்க சிவாகிருஷ்ணமூர்த்தி துணிந்து களமிறங்கவேண்டும்.
இரண்டாவது வகையான ’சுஜாதா-வண்ணதாசன் கதைகள்’ வரிசையில், மணியம் செல்வன், நீர் வழிப்படுஉம் புணை மற்றும் குணமும் குடிமையும் குற்றமும் கதைகளை வைக்கலாம். மணியம் செல்வனில் சுஜாதாவும் நீர் வழிப்படுஉம் புணையில் வண்ணதாசனும் முந்தியிருக்கிறார்கள். நம் எழுத்தாளர்களில், சுஜாதாவின் சாயல் இல்லாதவர்கள் குறைவுதான் என்றாலும், சுஜாதா உருவாக்கிய சொற்றொடர்களை அவ்வண்ணமே உபயோகிக்கும் கட்டுரைகளும் கதைகளும் சலிப்பைத் தருகின்றன. ஆனால், சுஜாதாவின் பாணியை மட்டும் கைகொண்டு, அவரைப் போலவே சுருங்கக் கூறி ஒரு புன்னகையையோ, பெரு நகைப்பையோ வரவழைக்கும் பல வரிகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. முதன் முறையாக விமானத்தில் மேகங்களுக்கிடையே செல்கையில் எங்காவது நாரதர் தென்படுகிறாரா என்று கதாபாத்திரம் தேடுவது ஒரு உதாரணம். ( மணியம் செல்வன்). வண்னதாசன் போல மனவோட்டம் மனஉளைச்சல் போன்றவற்றை துரிதமாக நமக்குக் கடத்தும் உத்தியும் அவ்வண்ணமே கைவருகிறது. ஐரோப்பிய அலுவலகத்தின் பூங்காவும் அதன் இளவெயிலுடன் கூடிய அந்த இடம் சார்ந்த வர்ணனையைத் தொடர்ந்து உடனே அங்கிருந்து தந்தையிடம் தொலைபேசியில் பேசுகிறார். அப்பொழுது அவர் கீழப்பாவூர் பசங்களோட பேசாதே என்று சொல்லும் போது உணரும் ஒரு விலக்கம் பொருந்தி வருகிறது. ( வெளிச்சமும் வெயிலும் ) அதன்பின், அதைத் தொடர்ந்து அதையே தன் மேலதிகாரியிடம் காணும் போது அவருக்கு வெயில் உரைப்பதை உணர்ச்சிவசப்படாமல் சீராக சொல்லி வாசகனுக்குத் தான் சொல்ல விழைவதைக் கடத்துவதில் உள்ள நேர்த்தியையும் குறிப்பிடவேண்டும். இன்னுமே பொதுவெளியில், எழுதப்படும் கதைகளில் சுஜாதா வண்ணதாசன் தாக்கம் அதிகம் இருந்தாலும் அவை வாசிக்கையில் ஒருவித அயற்சியை அளிக்கின்றன. இங்கு நான் அவ்வகையாக வகுத்திருக்கும் கதைகள் வாசிப்பில் எவ்வித தடையும் ஏற்படுத்தவில்லை என்பதே அவற்றின் பலம். ஆனால், அக்கதைகள் அந்த எழுத்தாளர்களை ஞாபகப்படுத்துகின்றன என்பதே அவற்றின் பலவீனம் எனக் கருதுகிறேன்.
மூன்றாவதான, ’சிவாகிருஷ்ணமூர்த்தி கதைகள்’ வரிசையில் வெகுளாமை, விக்டோரியன் மறவோம் ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம். நம் சிறுகதைகளில் மற்ற தொழில்களில் உள்ளவர்களின் சிக்கல்கள் எழுதப்பட்ட அளவிற்கு கணினித்துறை எழுதப்பட்டதில்லை. அது அதிகம் அதன் வெளியில் இருப்பவர்களால் ஒருவித ஒவ்வாமையுடன் அல்லது ஆர்வத்துடன் அணுகப்படுகிறது. அவை பெரும்பாலும் கோபமாகவே வெளிப்படுகின்றன. நாப்பதாயிரத்துக்கு பேர மாத்தின.. நாலு லட்சம் கொடுத்தா அம்மாவை மாத்துவியா என்ற திரைப்படக் கேள்வியின் வெவ்வேறு வடிவங்கள். அப்படியிருகையில் கணினித் தொழில்நுட்பத்துறையில் உள்ள சில நாடகத் தருணங்களை எழுதியதில் இரா.முருகன் கதைகள் (சிலிக்கான் வாசல் ) வரிசையில் வைக்கத்தக்க ஒரு கதை வெகுளாமை. ஒரு திட்ட மேலாளர் தன் வாடிக்கையாளருக்கு, மென்பொருளின் மாதிரியை சோதனைக்குத் தரும் ஒரு நாளின் அவஸ்தையை மிக லாவகவ்மாக வெளிப்படுத்தியிருக்கிறது. அடுத்து இந்தத் தொகுப்பின் நட்சத்திரக் கதையான மறவோம் சிறுகதை. உலகயுத்தங்கள் நிகழ்கையில் போர்க்களத்தில் நிகழ்ந்த கவிதைகளை சொல்லும் கதையாக தோன்றி, பின் அதில் இளமைந்தர்கள் பலியானதும், அதில் உள்ள இயலாமைகளும் கவிதையினூடாகவே விரிந்து மறவோம் என்று கவித்துவமாகவே முடிகின்ற ஒரு சிறுகதை. போர் என்பது எவ்வண்ணம் மகத்தான ஒன்றாக மக்கள் முன் நம்பவைக்கப்படுகிறது மற்றும் அதை நினைவுச்சின்னங்கள் மூலம் மக்கள் இன்னும் மகத்தானதாக எப்படியெல்லாம் மாற்றுகிறார்கள் என்றும் அது உரைக்கிறது. அனைத்திற்கும் மேலாக போரின் அபத்தத்தையும் சுட்டுகிறது.
சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் அனைத்தையும் நான் அவை வெளிவந்த காலங்களில் படித்திருக்கிறேன். இப்பொழுது ஒரு தொகுப்பாக வந்திருக்கும்போது அவற்றில் காலவரிசைகள் மாறி வந்து அது அவர் கதைகளில் கூடிவந்திருக்கும் ஒரு ஒழுங்கைக் குலைக்கின்றன என்று தோன்றுகிறது. அவரது கதைகளை ஸ்குரில் துவங்கி யாவரும் கேளீர் வழியாக, வெளிச்சமும் வெயிலும், what a wonderful world மறவோம் என்று முடிக்கையில் அவரது அகப்பயணம் அதில் துலங்கி வருகிறது. அதில் ஒரு மாற்றம் கண்முன் உள்ளது. உதாரணமாக யாவரும் கேளீரில் அவர் இந்தியர்களின் உள்ளத்த்தில் உள்ள சாதீய பாவத்தை கடக்கையில், வெளிச்சமும் வெயிலும் கதையில் வெள்ளையர்களுக்குள்ளான ஒரு நுட்பமான இதே சாதியத்திற்கிணையான மனநிலையக் காண்கிறார். what a wonderful world கதையை ஒரு ’சம்பத்’ கதையாக வைத்தாலும் அது புலம் பெயர்ந்த மக்களுக்கும் அங்கே பிறந்து வளர்ந்த சிறார்களுக்குமான மனநிலையையும் காட்டுகிறது. அவ்வகையில் அதை மறவோம் க்கு இணையாகவே வைக்கலாம். ஆனால் தொகுப்பில் மாறி மாறி வரும் இந்தக் கதைகளினால் நூலாக படிக்கும் வாசகர் இந்தத் தொடர்ச்சியைத் தவறவிட்டுவிடக்கூடும்.
சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதைகளின் தொகுப்பு என்று அறிந்த போது நான் வாசித்த கதைகளை நினைவூட்டிப் பார்த்தேன். ‘சம்பத்’ படிமம்(!) நினைவில் இருந்தது. வெகுளாமை, யாவரும் கேளீர், what a wonderful world மறவோம் ஆகிய கதைகள் நினைவிலிருந்தன. மற்ற கதைகளை மீண்டும் படித்து நினைவூட்டிக்கொண்டேன். தொகுப்பை ஒட்டுமொத்தமாக படித்தபின், அயல் நாட்டிலிருந்து எழுதுபவர்கள் வரிசையில் ஒருவகை நாஸ்டால்ஜியாவுடனோ அல்லது அறிவுரையுடனோ தன் படைப்புகளை எழுதுவதைத் தவிர்த்த ஒருவராக இவர் இருக்கிறார் என்று தோன்றியது. தான் புழங்கும் சூழலையும் தன் வாழும் மண்ணின் இயல்புகளையும், தனக்குப்பழக்கமான இந்தியச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டுக் பார்த்துப் புரிந்துகொள்ள அவர் செய்த முயற்சிகள்தான் இந்தத் தொகுப்பு என்றும் சொல்லிவிடலாம். அதை அப்படியே வாசகனுக்குக் கடத்தியதில் ஒரு சிறுகதை எழுத்தாளராக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.