தாக்குதல் பற்றி…

அன்புள்ள நண்பர்களுக்கு,

நான் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். தாடையிலும் தோள்பட்டையிலும் வலியும் ரத்தகீறல்களும் உள்ளன. கீழே விழுந்தமையால் உடல் வலியும். ஆனால் ஆஸ்பத்திரி வார்டில் இருந்த பிற நோயாளிகளின்  துன்பங்கள் அழுகைகள்  நடுவே தூங்க முடியவில்லை. ஆகவே வந்துவிட்டேன். தனியார் மருத்துவமனையில் சற்று மருத்துவம் செய்ய வேண்டியிருக்கலாம்.

சில செய்திகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தாக்கியவர் திமுகவின் அடிமட்டப் பொறுப்பில் இருப்பவர். ஆனால் முழுக்கமுழுக்க குடிவெறியால் நிகழ்ந்த தாக்குதல் இது. ஏற்கனவே பகல்முழுக்க குடிவெறியில் கலாட்டா செய்து கொண்டிருந்திருக்கிறார். அவர் கடையை கவனிக்கவில்லை என குற்றம்சாட்டி அவர் மனைவி கடையில் அமர்ந்திருக்கிறார். அவர்கள் முன்னரே சண்டையிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். என்ன ஏது என தெரியாமல் நான் நடுவே புகுந்து மாவு பற்றிக் கூறினேன். அது கூட தெரிந்தவர் என்பதனால் “ஏன் இதையெல்லாம் பார்க்கமாட்டீர்களா?” என்ற அர்த்ததில்தான். இவன் தாக்க ஆரம்பித்துவிட்டான். ஏன் என்று அவனுக்கே தெரிந்திருக்காது.

இப்போதுகூட  “குடிவெறியில் தெரியாமல் செய்துவிட்டான்” என்பதே அவர்களின் பதிலாக இருக்கிறது. ஆனால் சற்று அதிகமான தாக்குதல்தான். இளவயதினனான, குற்றப்பிண்ணணி உடைய ஒருவனின் அடிகள் எளியவை அல்ல. அவனுடன் இருந்தவர்களும் குடித்திருந்தமையால் சற்றுநேரம் எவருமே பிடித்துவிலக்கவில்லை. அதன்பின்னரும் புகார்செய்யவேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் இது என் நிலம் , இந்தமக்கள் இப்படி இருப்பதை நான் நன்கறிவேன். அதன்பின் அவன் வீட்டுக்கு வந்து மனைவியையும் மகளையும் வசைபாடி தாக்க முற்பட்டமையால்தான் இரண்டு மணிநேஎரம் கடந்து காவலரிடம் செல்ல வேண்டியிருந்தது. அதன்பின்னர் காவலர்கள் கைதுசெய்து ரிமாண்ட் செய்திருக்கிறார்கள்.

இதில் இதுவரை கட்சி அரசியல் இல்லை. திமுகவின் வழக்கறிஞர் மகேஷ் காவல்நிலையம் வந்து அவன் இருந்த நிலையை பார்த்ததுமே என்னிடம் மன்னிப்புகோரிவிட்டு  சென்றுவிட்டார். திமுக மிகமிக பண்பட்ட ரீதியில்தான் நடந்துகொண்டிருக்கிறது. அடிப்படையில் திமுக ஒர் அறிவுத்தளம் கொண்ட கட்சி என்ற எண்ணமே எப்போதும் என்னிடம் இருக்கிறது. நான் மு.கருணாநிதி அவர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த காலகட்டத்திலும் கூட அவர் மேல் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொண்டிருந்தேன். என் பாதுகாப்பு பற்றி ஐயம் கொண்டதே இல்லை. இன்றும் திமுக மேல் எனக்கு அந்நம்பிக்கை உண்டு.

இன்று இதில் தலையிட்டு தொடர்ந்து அழுத்தம் அளிப்பவர்கள் சில தனிப்பட்ட அரசியல்வாதிகள். அந்த அரசியல்வாதிகளுடைய குற்றச்செயல்களுக்கான கருவி இவனும் இவன் உடன்பிறந்தவர்களும். அதில் உண்மையில் கட்சிச்சார்புகள் இல்லை. விரிவாக பின்னர் எழுதுவேன். எல்லா பெயர்களுடனும். எதையும் மறைக்கப் போவதில்லை.

பொதுவாக சிற்றூர்களை ஒட்டி உருவாகும் புறநகர்களில் உள்ள பிரச்சினை இது. பார்வதிபுரத்திற்கும் சாரதாநகருக்கும் சம்பந்தமே இல்லை. இங்குள்ள எவரும் பார்வதிபுரம் சந்திப்புக்கு அந்தியில் செல்ல மாட்டார்கள். இங்குள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மாட்டார்கள். இங்குள்ளவர்களிடம் தொடர்பும் வைத்திருக்க மாட்டார்கள். இவர்கள் அவர்களின் வழக்கமான சச்சரவுகள், குடிக்கொண்டாட்டம், கோயில்விழாக்களில் அடிதடி என வேறு உலகில் வாழ்பவர்கள். இங்கு மட்டும் அல்ல தமிழகம் முழுக்கவே அந்திக்குப்பின் குடி ஒரு பெரும் சமூகச் சிக்கலாக மாறிவிட்டிருக்கிறது. இதே நிலை எவருக்கும் இன்று வரக்கூடியதே.

இங்கிருந்து தொடர்ச்சியாக அவர்களிடம் புழங்குபவர்களில் ஒருவன் நான். பெரிய பழக்கம் ஏதும் இல்லை என்றாலும் அவர்களை கவனித்துக்கொண்டே இருக்கிறேன் என்னை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது, நான் அன்னியமாகிவிடக்கூடாது என்பதனால் என் முகம் தொலைக்காட்சியில் வருவதை தவிர்த்துவிடுகிறேன். சினிமா பிரமோக்களில்கூட தோன்றுவதில்லை. உண்மையில் அன்று நான் தாக்கப்பட்டபோது பார்வதிபுரத்தில் எவருமே தலையிடவில்லை. எவரும் வீட்டுக்கு வரவில்லை. காரணம் இதுவே. என்னை எவருக்கும் தெரியாது, தாக்கியவன்மேல் அச்சம் உண்டு

குற்றவாளி தொடர்ந்தும் பார்வதிபுரம் சந்திப்பில் கலாட்டா செய்து கொண்டிருந்தமையால் அங்கிருந்துதான் காவலர்களால் கைது செய்யப்பட்டிருக்கிறார். நண்பர் லக்ஷ்மி மணிவண்ணனுடன் நான் தனியாகவே காவல்நிலையம் சென்றேன். அங்கே நான் செல்வதற்கு முன்னரே ஏழு கார்களில் அவனுடைய ஆதரவாளர்களான அரசியல்வாதிகள் வந்து அவனுக்காகப் பேசிக் கொண்டிருந்தனர். காவலர் எவருக்கும் என்னை தெரியவில்லை. லக்ஷ்மி மணிவண்ணன் என்னை எழுத்தாளர் என்று திரும்பத் திரும்பச் சொன்ன பின்னரும் ”எந்த ஆபீஸில் எழுத்தாளர்?” என்றுதான் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

காவல்நிலையத்திலேயே அவன் கலவரம் செய்து கொண்டிருந்தான். செய்திகள் வெளிவந்த பின்னரே நான் எவர் என அவர்களுக்கு புரிந்து வழக்கு பதிவாகியது. அதுவும் மிக நீர்த்த ஒரு வடிவில். அவ்வளவு அழுத்தம் இருந்தது, இப்போதும் உள்ளது. அதன்பின்னர்தான் அவர்களின் வழக்கறிஞர்கள் வெவ்வேறு வகையில் நிகழ்ச்சியை ஜோடனை செய்ய தொடங்கினர். அந்தப்பெண்மணியை ஆஸ்பத்திரியில் படுக்கச்செய்தனர். அவனை ஆஸ்பத்திர்யில் சேர்க்க முயன்றனர். ஆனால் அந்தப் பெண்மணியும்சரி தாக்கியவனும்சரி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, முற்றிலும் சாதாரணநிலையில் இருக்கிறார்கள் என மருத்துவக் கல்லூரியின் டாக்டர்கள் கூறிவிட்டனர்.

நான் இந்நிலத்தை என்னுடையது என நினைப்பவன். ஆகவே எந்த சச்சரவின் நடுவிலும் நான்  சாதாரணமாக புழங்கிக்கொண்டிருப்பேன். நள்ளிரவில்கூட  நடை செல்வேன். இதைப்பற்றி பலர் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அந்த எச்சரிக்கையை நான் கவனித்ததில்லை. . ஆகவே இது எதிர்பார்த்திருக்கவேண்டியதுதான். பார்வதிபுரம் பகுதியே ஏழுமணிக்குமேல் குடிகாரர்களின் உலகமாகத்தான் இருக்கிறது. எல்லாரும் தெரிந்த முகங்கள்தானே என்பது என் எண்ணம். குடிகாரர்களுக்கு அப்படி கணக்கெல்லாம் இல்லை போலிருக்கிறது.

இத்தனைக்கும் அப்பால் இது என் நிலம். இங்கிருந்தே நான் என் வாழ்க்கையை கண்டடையமுடியும். எழுத முடியும். இவர்களிடமிருந்து விலகினால் எழுத முடியாது. ஆனால் முன்பு போல நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு தன்னந்தனியாக  நடக்கச்செல்வேனா என்று தெரியவில்லை.

முந்தைய கட்டுரைமண்ணென வருவது…
அடுத்த கட்டுரைசயந்தனின் ‘பூரணம்’