போதைமீள்கையும் வாசிப்பும்
அன்புள்ள ஜெ
காட்சி ஊடகங்களைப் பற்றி தொடர்ச்சியாக எதிர்மறையாகவே எழுதி வருகிறீர்கள். நான் காட்சியூடகங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். காட்சியூடகங்கள் கற்பிப்பதில்லை என நீங்கள் சொல்வதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. காட்சி ஊடகங்களை குறைவாகவும் வாசிப்பை மேலாகவும் நினைக்கும் ஒருவகையான உளவியல் பிரச்சாரம்தான் இது.
சக்திவேல் சுப்ரமணியம்
***
அன்புள்ள சக்திவேல்,
கேம் ஆப் த்ரோன்ஸ் உள்ளிட்ட தொடர்களையோ சினிமாக்களையோ பார்ப்பவர்கள் மீதோ, அவற்றை எடுப்பவர்கள் மீதோ, அவற்றை சிலாகிப்பவர்கள் கொண்டாடுபவர்கள் விழுந்துகிடப்பவர்கள் மீதோ எனக்கு எந்த விதமான புகாரும் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பிடித்தமானதைச் செய்கிறார்கள். அது பிழையே அல்ல. போதுமா?
மக்கள் அன்றாடச் சலிப்பில் சிக்கி வதைபடுகிறார்கள். உழைப்பு படைப்பூக்கத்தை இழந்து அன்றாடவாழ்க்கையில் ஒரு சுமையாக மாறி அன்னியமாகிவிட்ட இன்றைய சூழலின் விளைவு அது. அதற்கு இத்தகைய கேளிக்கைகள் தேவை. இவை இல்லையேல் மக்கள் சூதாட்டம் அல்லது அரசியல்வன்முறைகள் நோக்கியே செல்வார்கள்.
நான் பேசிக்கொண்டிருப்பது இலக்கிய நுண்ணுணர்வு, மொழிநுண்ணுணர்வு கொண்டவர்கள் அதில் ஈடுபடுவதை, விழுந்துகிடப்பதைப் பற்றி மட்டுமே. அவர்கள் உலக மக்கள்தொகையிலேயே மிகச்சிறுபான்மையினர். தமிழ்மக்கள்தொகையில் கண்ணுக்குத்தெரியாத அளவுக்குச் சிறுபான்மையினர். பல்லாயிரத்தில் ஒருவர். அவருடைய வளர்ச்சி, பங்களிப்பு பற்றி மட்டுமே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
விவாதத்தின் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்திவிடுகிறேன் காட்சியூடகம் மொழியூடகத்தைவிடக் குறைவானது என்றோ, தேவையில்லை என்றோ நான் சொல்லவில்லை. காட்சியூடகக் கலைஞர்கள் ஒருபடி தாழ்வானவர்கள் என்று சொல்லவுமில்லை. காட்சியூடகம், நிகழ்த்துகலை ஊடகம் தனக்கே உரிய அறிதல்கள் கொண்டது. அதற்கு மொழியூடகம் மாற்று அல்ல. ஆகவே இலக்கியவாதி மட்டுமல்ல தத்துவஞானி கூட காட்சியூடகம், நிகழ்த்துகலை ஊடகத்தில் அறிமுகமும் பயிற்சியும் கொண்டிருக்கவேண்டும்.
உதாரணமாக, இந்தியாவின் சிற்பக்கலையை உணராமல் இந்தியச் செவ்வியலை ஒருவன் உணரவே முடியாது. இந்தியாவின் நிகழ்த்துகலைகளை அறியாமல் இந்தியாவின் கவிதைமரபை புரிந்துகொள்ல முடியாது. சொல்லப்போனால் அறிதலோடு தொடர்பே அற்றதான தூய இசைக்குக் கூட அறிதலில் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. இசையின் தொடர்பே அற்ற தத்துவம் உணர்வுகள் அழிந்து வறண்டதாகவே ஆகும்
ஆகவே ஓவியமும் நாடகமும் அறிதலில் ஈடுபடுபவன் தவிர்க்கவே கூடாத துறைகள். இவற்றின் கலவையான சினிமா இன்றைய நவீனப் பெருங்கலை. சினிமாவில் பெரும்கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் இலக்கியவாதிகள் தத்துவஞானிகள் அளவுக்கே முக்கியமானவர்கள். அவர்களை அறிவது அறிதலின் முழுமையையே உருவாக்கும். ஆகவே நான் கூறும் இக்கருத்துக்களை எதிர்த்து ‘அப்படியென்றால் சினிமா கலை இல்லையா?” என்றெல்லாம் பேச ஆரம்பிக்கவேண்டாம்.
நான் சொல்லவருவது மூன்று தொடக்கப்புள்ளிகளில் இருந்து. முந்தைய கட்டுரையில் அதைச் சொல்லிவிட்டேன்.
ஒன்று, இன்று காட்சியூடகம் பேருருக்கொண்டு மொழியூடகத்தை முற்றாக அழிக்கும்நிலையில் இருக்கிறது. வாசிப்பை விட்டுவிட்டு காட்சியூடகத்தை மட்டுமே கைக்கொள்பவர் உறுதியாக எதையும் அறிந்துகொள்ள இயலாது. ஆகவே காட்சியூடகம் உருவாக்கும் அலைகளில் அடித்துச்செல்லப்படும் அறிவுச்செயல்பாட்டாளர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.
இரண்டு இன்று காட்சியூடகம் கொண்டுள்ள பேருரு வணிகநோக்குடன் செயற்கையாக உருவாக்கப்பட்டது. உலகம் முழுக்க ஒற்றைரசனை, ஒற்றைச் சிந்தனையை அது நிபந்தனையாக்குகிறது. அது சராசரிகளைக் கட்டமைக்கிறது.அதில் மூழ்குபவர்கள் தங்கள் தனித்த தேடலை இழக்கிறார்கள் தங்களுக்கான கண்டடைதல்களை இழக்கிறார்கள். அவர்களால் அறிவுத்துறையில் செயல்பட இயலாது.
மூன்று, மிகையான காட்சியூடக ஈடுபாடு கற்பனைத்திறனை பாதிக்கிறது. மொழிவழி அறிதலுக்கு இன்றியமையாத பயிற்சிகளை இல்லாமலாக்குகிறது. மொழிவழி அறிதலை இழப்பவன் இதுகாறும் மானுடன் உருவாக்கிக்கொண்ட அறிதல்கள் அனைத்தையும் இழப்பவன் ஆகிறான். இன்றும் கலை இலக்கியம் அறிவியல் அனைத்தும் மொழிவழியால் கற்கப்படுவனவே.
*
இன்றல்ல, என்றும் உலகம் காட்சிவழி, நிகழ்த்துகலைவழி ஊடகங்களையே பெரிதாகக் கொண்டாடியிருக்கிறது. சினிமா இரண்டின் கலவை. நூறாண்டுகளுக்கு முன் தமிழகத்தின் நாடகங்களுக்காக சிறப்புரயில்கள் விடப்பட்டிருக்கின்றன. உவேசா காலகட்டத்தில் மக்கள் தெருக்கூத்தில் பித்தெடுத்து இருந்ததைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். நாட்டியங்கள், நாடகங்கள், கூத்துக்கள் வழியாகவே பெரும் மக்களியக்கங்கள் உருவாயின. பக்தி இயக்கம் போன்றவை உருவாகி பெருமதங்களை நிறுவின.
நூல்வாசிப்பு ஒரு சிறுவட்டத்திற்குரியது. அறிஞர்களுக்குரியது, அறிவுசார் கலைகளுக்குரியது. அந்த இடம் ஒருபோதும் காட்சிக்கலை –நிகழ்த்துகலைகளால் உருவாகாது. இன்றுவரை காட்சிக்கலை வழியாக மட்டுமே உருவாகிவந்த ஒரு சராசரி அறிஞன் கூட உலகில் கண்டடையப்பட்டதில்லை. அப்படி ஒருவன் உருவாகி ஆவணப்படுத்தப்பட்டபின் உங்கள் கருத்தைப் பரிசீலிக்கலாம், சரியா?
இன்றைய சூழலில் காட்சிக்கலையை, நிகழ்த்துகலையை உயர்தளத்தில் ஒருவன் நிகழ்த்தக் கற்றுக்கொள்ளவேண்டுமென்றால், முறையாக ரசிக்கவேண்டுமென்றால்கூட அதற்கும் வாசிக்கத்தான் வேண்டும். மானுட அறிவின் அனைத்து தளங்களும் முறையான நீண்டநாள் வாசிப்பினூடாக மட்டுமே அடையத்தக்கவை. எந்தக் குறுக்குவழியும் இல்லை. ஆகவே சினிமா, தொலைத்தொடர் பிடித்தால் பாருங்கள். அறிஞர், அறிவுசார்கலைஞர் என்னும் இடங்களில் வந்து வரிசையில் நிற்காதீர்கள். அவ்வளவுதான் நான் சொல்லவிரும்புவது.
அறிவுத்துறைகளில் அறிவுசார் கலைகளில் ஈடுபடுபவர் ஏன் இத்தகைய தொடர்களில் மிதமிஞ்சிய ஈடுபாடுகள் கொள்ளலாகாது என நான் கருதுகிறேன்?
அ. இவற்றின் பொதுத்தன்மை விளம்பரம் மூலம், மக்கள்தொடர்பு மூலம் உலகளாவ உருவாக்கப்படுகிறது. இந்தப்பொதுத்தன்மை என்பது உலகளாவிய சராசரியால் கணிக்கப்பட்டு சமைக்கப்படுவது. தமிழகச் சராசரி எப்படி கணிக்கப்பட்டு சமைக்கப்படுகிறது என நான் அறிவேன். அப்படி சமைப்பவர்களில் ஒருவன். இப்படி ஒரு பெரும்பொதுமையில் ஒரு பகுதியாக இருப்பதுபோல் ஒருவனை சராசரியாக ஆக்குவது பிறிதில்லை. அறிஞர்கள், அறிவுசார் கலைஞர்கள் எப்போதும் தங்கள் வழிகளில் தனித்தவர்கள். தங்களுக்குரிய கேள்விகளும் அதற்கான பயணங்களும் கொண்டவர்கள்.
சொல்லப்போனால் சராசரித்தன்மைக்கு எதிரான எதிர்நிலையே அறிஞனை, கலைஞனை உருவாக்குகிறது. அதுவே அவனுடைய தனித்தன்மையை அவனுக்குக் காட்டுகிறது. தனக்கான களத்தை அவனுக்கு அளிக்கிறது. அங்கே முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்போதுதான் அவன் அறிஞனும் கலைஞனும் ஆகிறான். பத்திலொன்றாக இருப்பவனேகூட நல்ல அறிஞனும் கலைஞனும் அல்ல. பத்துகோடியில் ஒருவன் வெறுமொரு கூழாங்கல்
ஆ.மொழி என்பது உண்மையில் குறியீடுகளின் நிரை மட்டுமே. ஒலிக்குறியீடு விழிக்குறியீடு. வாசிப்பு என்பது அந்தக் குறியீட்டுத்தொகையில் இருந்து அர்த்தங்களை முழுக்கமுழுக்க வாசகனே உருவாக்கிக் கொள்ளும் ஒரு நிகழ்வு. அதற்கு வாசகனுக்கு கற்பனையும், பயிற்சியும் தேவை. கூடவே இயல்பான மொழிநுண்ணுணர்வும் தேவை. இவை காட்சியூடகத்தின் பார்வையாளனுக்குத் தேவையில்லை. ஆகவேதான் வாசிப்பு ஊடகம் என்றுமே சிறுபான்மையினருக்குரியதாக உள்ளது.
வாசிப்பை ஒரு பயிற்சியாக செய்து முன்னேறி வருபவனுக்கு உரியது வாசிப்பு. அந்தப் பயிற்சி சற்றே குறைந்தாலும், அந்தக் கவனம் சற்று இல்லாமலானாலும் மேற்கொண்டு வாசிக்கமுடியாமலாகிறது. அரைக்கவனமாக நீங்கள் சினிமா பார்க்கமுடியும். கொஞ்சம் கவனம் நின்றாலும் வாசிப்பு அறுந்து நின்றுவிடுவதைக் காண்பீர்கள். ஓராண்டு வாசிப்பை நிறுத்தினால் மீண்டும் தொடங்குவது மிகமிகக் கடினம். சினிமா பார்ப்பதுபோல அல்ல அது.
வாசிப்பு ஓர் உழைப்பு. நீங்களே நிகழ்த்தவேண்டியது, எவரும் அதை உங்கள்மேல் நிகழ்த்த இயலாது. ஆகவே வாசிப்பு வாசகனை தொடர்ந்து பயிற்றுவித்து மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது. வாசிப்பு என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இலக்கியவாசிப்பு அரசியல்வாசிப்பை பண்பாட்டுவாசிப்பை சமூகவியல்வாசிப்பை வரலாற்று வாசிப்பை உருவாக்கி வாசகனை விரியச்செய்துகொண்டே இருக்கும். காட்சியூடகக் கவனிப்பு அதையொட்டி வாசிக்காதவனுக்கு எதையும் பெரிதாக அளிப்பதில்லை. அதை அறிய சும்மா சுற்றியிருப்பவர்களைப் பார்த்தாலே போதும்.
இவ்வாறு கடைசிவரை பயிற்சிசெய்துகொண்டே இருக்கவேண்டிய வாசிப்புத்துறையில் இருக்கவேண்டிய ஒருவர் இவ்வகை காட்சியூடக அலைகளால் அடித்துச்செல்லப்படுவார் என்றால் அவர் தன் வாசிப்புத்திறனை இழப்பார். குறியீட்டுத் தொகையான மொழியில் இருந்து ஓரு முழு உலகையே கற்பனைசெய்து விரித்தெடுக்க முடியாதவராவார். எதுவும் கண்ணெதிரே காட்டப்படவேண்டும் என எண்ணத் தொடங்குவார். அது அவருடைய கற்பனையின் அழிவு.
இ. குறியீட்டுத் தொகையான மொழியை கற்பனையால் விரிக்கும் பயிற்சியை வாசகன் தன் சொந்த அனுபவங்கள் வழியாகவே அடையவேண்டும். பயணங்கள் வழியாக. நேரடி வாழ்க்கைப்பழக்கம் வழியாக. தொழில்கள் வழியாக. மாறாக உலகம் முழுக்க அனைவருக்கும் பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள காட்சியூடகம் வழியாக ஒருவன் அதை அடைந்தால் அவன் தனக்கான எதையுமே உருவாக்கிக் கொள்ளமுடியாமலாகும்.
மகாபாரதப் போர் மகாபாரத நூல்களின் சொற்களை வாசிக்கையில் ஒருவனின் அகக்கண்ணில் விரியவேண்டும். அதற்கு தூண்டுதலாக அவனுடைய பல அறிதல்களின் துளிகள் அமையலாம். மாறாக அவன் கேம் ஆஃப் த்ரோன் படங்களை அப்படியே நினைவுகூர்ந்து பார்ப்பான் என்றால் அது அவனுடைய கற்பனையின் அழிவு. ஒரே மகாபாரதத்தை நான்கு பேர் வாசித்தால் நான்குபோர்கள் அகக்கண்ணில் எழுமென்றால் அது கற்பனையின் ஆற்றல். நால்வரும் கேம் ஆஃப் த்ரோன் காட்சிகளையே காண்பார்கள் என்றால் நால்வருக்குமே கற்பனை இல்லை என்று பொருள்.
கருதுக, கேம் ஆஃப் த்ரோன்ஐ உருவாக்கியவன் மெய்யான கற்பனை கொண்டவன். அவன் பெரும் வாசகன்.
ஈ. காட்சியூடக வடிவத்திற்குப் பழகிவிட்டால் நாம் சிக்கலான அமைப்பும் விரிந்து செல்லும் போக்கும் கொண்ட நூல்களை வாசிக்க மாட்டோம். வாசித்தாலும் உள்வாங்க மாட்டோம். காட்சியூடகமாக வந்த நூல்களையே நம்மால் வாசிக்க முடியாது.
ஐயமிருந்தால் ஒன்று செய்க. ஜுராஸிக் பார்த்திருப்பீர்கள். தோராயமாக நினைவு கொள்வீர்கள். அதன் மூலமான அதே பேரில் அமைந்த மைக்கேல் கிரைட்டனின் நாவலை வாசித்துப் பாருங்கள். உலகையே ஆட்டிவைத்ததும் ஒரு ’டிரெண்ட்செட்டர்’ ஆக கருதப்படுவதுமானஅந்தச் சினிமாவை விட அந்த சாதாரண வணிகக்கேளிக்கை நாவல் எவ்வளவு படிகள் மேலே நிற்கிறது என்பதைக் காண்பீர்கள் ஒழுங்கின்மைக் கோட்பாடு மற்றும் நிகழ்தகவுக் கோட்பாடு பற்றி விரிவாக விளக்கிச் செல்கிறது அந்நாவல். டாவின்ஸிகோட் நாவல் ஒரு பண்பாட்டுச் சித்திரத்தை அளிப்பது. அந்தச் சினிமா வெறும் காட்சிகளைத்தான் அளிக்கும். குழந்தைக்கதையான லார்ட் ஆஃப் ரிங்ஸ் கூட டோல்கினின் மூலநாவலின் ஒரு சிறுபகுதியையே சினிமாவாகக் காட்டுகிறது.
A Song of Ice and Fire என்றபேரில், George R. R. Martin எழுதிய நாவல்தொடரே கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆக எடுக்கப்பட்டுள்ளது. நான் அதை வாசிக்கவில்லை. ஆனால் காட்சிவடிவம் நாவலின் ஒரு துளியாகவே இருக்கும் என ஐயமில்லாமல் சொல்வேன்
உ . உலகமெங்கும் இன்று ஊடகவல்லமையால் , பெருவணிகமாக மாறிவிட்டிருப்பதனால் காட்சி ஊடகம் மாபெரும் மையப்பெருக்காக மாறிவிட்டிருக்கிறது. இன்று அது இயல்பாக நம்மை கவர்வது அல்ல. நம்மைக் கவரும்பொருட்டு உருவாக்கப்பட்டது.
இந்த வணிகப்பெருக்கால் அறிவார்ந்த செயல்பாடுகளுக்கான இடம் குறுகி வருகிறது. புறவுலக வாசல்களை மூடிக்கொண்டு செய்யவேண்டிய நோன்பாக, தவமாக எல்லா அறிவுத்துறைச் செயல்பாடுகளும் இன்று மாறிக்கொண்டிருக்கின்றன. காட்சியூடக தாக்குதலுக்கு எதிராக இன்று அறிவுத்துறைகள் போராடிக்கொண்டிருக்கின்றன. ஆகவே இன்றைய அறிவுச்செயல்பாடு என்பது மையப்போக்கான காட்சியூடகங்களுக்கு எதிரான நிலைபாடாகவே இருக்கமுடியும். அதை அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் உணர்ந்துவிட்டனர். நாம் அவர்களின் நுகர்வோராக மாறி மேலும் மேலும் அந்த காட்சியூடக பேரலையில் அழுந்துகிறோம்.
நமக்கு மிகச்சிறிய ஓர் அறிவியக்கமே உள்ளது. ஆனால் நம் அறிவுச்செயல்பாட்டுக்கான களங்கள் பல்லாயிரக்கணக்கில் திறந்து கிடக்கின்றன. எவருமே நுழையாத அறிவுவெளிகளாக அவை காத்திருக்கின்றன. வரலாறு, பண்பாடு, சமூகவியல் ஆய்வுக்களங்களில் இன்று நமக்கு ஓரிரு பெயர்கள்கூட இல்லை. தீவிர இலக்கியச் செயல்பாட்டுத் தளத்திலும் மிகக்குறைவானவர்களே உள்ளனர். ஓர் ஆண்டில் எந்த துறையிலானாலும் ஓர் அசலான நூல் வருவது அரிதாக உள்ளது. எதிலுமே நீண்டகால அர்ப்பணிப்புள்ள செயல்பாடு இன்றில்லை. சாதனைகளும் இல்லை.
இந்தச் சின்ன வட்டத்திலிருந்தும் சிலர் அந்த மையப்பெருக்கால் அடித்துச் செல்லப்படுவார்கள் என்றால் அது பேரிழப்பு. கேம் ஆஃப் த்ரோன் போன்றவற்றின் கோடானுகோடி ரசிகர்களில் ஒருவனாக ஒரு நல்ல படைப்பாளி, ஆய்வாளன் மாறினான் என்றால் அது வீழ்ச்சி. அவனுடைய அரிய பொழுதை அதற்கு அவன் அளித்தான் என்றால் அது சமூக இழப்பு. நான் சுட்டுவது அதை மட்டுமே. உண்மையில் இதைப்போல பெரும்பொதுமையாக, பொதுப்போக்காக செல்லும் எதையும் தானும் தலைமேல் ஏற்றிக்கொள்வதை எதிர்த்தே பேசுவேன். அது அறிவியக்கத்தின் பாதை அல்ல
*
இந்த விவாதம் நடந்துகொண்டிருந்தபோது வீட்டுக்கு நண்பர் காட்ஸன் வந்திருந்தார். பனை என்னும் ஒற்றைக் கருவில் சுழலும் வாழ்க்கை. அது அவருடைய தவம். பனைக்கான பயணங்கள். பனைபற்றிய ஆய்வுகள். பனைமரம் சார்ந்த மக்களுடனான தொடர்புகள். பனைக்கான போராட்டம். பனை தொடர்பான ஆய்வுக்காக ஓர் அழைப்பைப் பெற்று நெதர்லாண்ட் செல்லப்போவதைப் பற்றிச் சொன்னார். மிகச்சிறிய அளவில் ஒரு சிறு கிராமத்தில் அவருடைய தேடல் தொடங்கி உலகளாவ விரிந்துள்ளது. உலகளாவிய தொடர்புகளுடன். அந்த தவம் இருந்தாலொழிய அவ்வெற்றி சாத்தியப்படாது.
நான் குக்கூ இயக்கத்துடன் தொடர்புகொண்ட அத்தகைய இளைஞர்களைப் பார்க்கிறேன். வரலாற்றாய்வில் இலக்கிய வாசிப்பில் வெறியுடன் இருப்பவர்களை எப்போதேனும் பார்ப்பதுண்டு. அவ்வாறு வெவ்வேறு தளங்களில் ஆழ்ந்து செயல்படுபவர்களே எதையேனும் செய்பவர்கள். இன்று தமிழகத்தில் அத்தகையோர் அரிதிலும் அரியவர்கள். சில ஆயிரம்பேர் கூட தேறமாட்டார்கள். நான் பேசுவதெல்லாம் அவர்களை நோக்கி, அல்லது அவர்களாக ஆக வாய்ப்புள்ளவர்களை நோக்கி மட்டுமே.
ஓர் இளைஞன் என்னிடம் வந்து கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி பேசினான் என்றால், அவன் அதில் கிடப்பவன் என்றால் நான் என்ன செய்வேன்? ஐந்து நிமிடம் அவனிடம் பேசுவேன். அதன்பின் அவன் தன் பேச்சை நிறுத்தவில்லை என்றால் “தம்பி உன் உலகம் வேறு. எனக்கு அது ஒரு பொருட்டு அல்ல. உன்னை திருத்தி எடுப்பது என் வேலை அல்ல. அதற்குச் செலவழிக்க என்னிடம் பொழுதில்லை. கிளம்பு” என்று சொல்லிவிடுவேன்.
ஜெ
*
அன்புள்ள ஜெ
கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்க்காவிட்டால் எவரும் அறிவாளி ஆகிவிடுவதில்லை
சக்திவேல்
***
அன்புள்ள சக்திவேல்,
இது உங்களுக்கான இடம் இல்லை. வேறெங்காவது போய் விளையாடலாமே
ஜெ
*
திரு ஜெ
உங்கள் நீண்ட பதிலை வாசித்தேன். வேண்டுமென்றே நீட்டி நீட்டி எழுதியிருக்கிறீர்கள். இரண்டு பத்தியில் சொல்லவேண்டியதை இப்படி எழுதுவதுதான் இலக்கியமா? இது எவருக்கு தேவை? இந்தவகையில் வாசித்துக்கொண்டிருக்கும் காலம் மாறிவிட்டது. இது அவசரக்காலகட்டம். இங்கே ஒரு காட்சியில் சொல்வதுதான் தேவை. வளவளப்புக்கு இடமில்லை.
சக்திவேல் சுப்ரமணியம்