ரயிலில் வாசகர்கள்

வழக்கமாக ரயில்களில் பேசாமலேயே அமர்ந்திருப்பேன். எவர் என்ன கேட்டாலும் ஒற்றைச் சொல். பெரும்பாலும் புத்தகம் எடுத்து பிரித்துக்கொள்வேன். ஆனால் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டும் ஆட்களை வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருப்பேன். எவருக்கும் என்னை தெரியாது என்பது என் எண்ணம். நான் தொலைக்காட்சிகளில் வருவதில்லை. என் படங்கள் வெளியாவது குறைவு. இப்போதெல்லாம் இணையதளம் மட்டுமே என் எழுத்துக்களுக்கான ஊடகம். அது ஒரு தனி வட்டம்

சென்ற 10 ஆம் தேதி ரயிலில் கிளம்பும்போது மாரிராஜும் வெண்பாவும் வந்து ஏற்றிவிட்டனர். கிளம்பவிருந்த ரயிலுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எதிரில் அமர்ந்திருந்த பெரியவர் பேச்சைக்கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் சென்று ரயிலும் கிளம்பியபின் அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார். அறிமுகங்கள் செய்துகொள்ள தயங்குபவர் அல்ல. ஆகவே என்னைப் பற்றி விசாரித்தார். நான் சுருக்கமாக பதில் சொன்னபோது துருவித்துருவிக் கேட்டார். அவரும் பேச ஆரம்பித்தார்.

ஆகவே பேச்சு ஆரம்பித்தது. அவர் நான் இருக்கும் குளச்சல் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். திராவிடமுன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். 1996 ல் வென்றார். அதன்பின் தொகுதி திமுகவை விட்டுச் சென்றுவிட்டது. சி.என்.அண்ணாத்துரை காலம் முதல் திமுக காரர். அப்போதும் கட்சிப்பணிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தார். அவரைக் கேள்விப்பட்டிருந்தேன். பார்த்ததில்லை. நான் நாகர்கோயிலுக்கு 2000 த்தில்தான் குடிவந்தேன். நேர்மையான அரசியல்வாதி என்றும் மக்களின் பிரச்சினைக்கு முன்னிற்பவர் என்றும் பெயர் பெற்றவர். பல பதவிகளை வகித்திருக்கிறார்

அவர் பேசத் தொடங்கியதும் இன்னொருவர் வந்து பேசினார். முருகேஷ் காவல்துறையில் பணியாற்றி அதன்பின் தேர்வு எழுதி வென்று ரெவெனியூ அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் என் நண்பர் ரயகிரி சங்கர் பணியாற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர். என்னை வாசித்துக் கொண்டிருப்பவர். கையில் நூல் வைத்திருந்தார். பேச ஆரம்பித்தபோது நாலைந்து வாசகர்கள் அறிமுகம் செய்துகொண்டார்கள். ஒரு பெட்டிக்குள் அவ்வளவுபேர் இருந்திருக்கிறார்கள் என்பது வியப்பளித்தது.

ஒருவர் “நான் அடிக்கடி இந்த ரயிலிலே உங்களைப் பாப்பேன். பேச மாட்டீங்க. அதனால நானும் பேசலை. இப்ப பேசிட்டிருக்கிறீங்க. அதனால அறிமுகம் செஞ்சுகிட்டேன்” என்றார். டிக்கெட் பரிசோதகர் தெரிந்த முகம். அவரும் வாசகர் என்றார். வியப்பாகவே இருந்தது. நான் எண்ணுவதைவிட மிகுதியானவர்கள் என்னைப் படிக்கிறார்கள் என்று தோன்றியது. பெர்னாட் அவர்களும் அதைச் சொன்னார். “இவ்ளவுபேர் படிக்கிறாங்களா? ஆச்சரியமா இருக்கு”

பத்துமணி வரை பேசிக்கொண்டிருந்தோம். பிறர் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நான் திரு பெர்னாட் அவர்களுடன் படம் எடுத்துக்கொண்டேன்.

முருகேஷின் மகள் மூன்றாம் வகுப்பு மாணவி. நிறைய வாசிக்கிறாள் என்றார். புத்தகங்களைக் காட்டினார். குழந்தைநூல்கள் எதை வாங்குவதென்று தெரியவில்லை. எல்லாம் வழக்கமான தெனாலிராமன் கதை வகையறா. சந்தையில் அதுதான் எங்கும் கண்ணுக்குப்படுகிறது. நான் நூல்களை அனுப்புகிறேன் என்றேன். வீட்டுக்கு வந்து என் நூல்களை பரிசாக அனுப்பிவைத்தேன். இன்று கிராமக்குழந்தைகளே கொஞ்சமேனும் தமிழ் படிக்கின்றன. மூன்றாம்வகுப்பு மாணவி வாசிப்பது என்பது ஓர் அரிய நிகழ்வு. வாசகிக்கு வாழ்த்துக்கள்.

பழைய உம்மணாமூஞ்சி முகத்தை சூடிக்கொள்வதா இல்லை ரயிலை வாசகர் சந்திப்புக்கான களமாக ஆக்கிக்கொள்வதா என்று குழப்பமாக இருக்கிறது.

முந்தைய கட்டுரைஇலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்! – பாலா
அடுத்த கட்டுரைவெண்முரசு புதுவை கூடுகை – ஜுன் 2019