ஜெ
நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். இந்த அஞ்சலை நிறையத் தடவை எழுதி அழித்திருக்கிறேன். இந்த முறை அனுப்பி விட வேண்டும் என்ற உத்தேசத்தில் ஆரம்பிக்கின்றேன்.
எவ்வளவோ முன்னேற்றங்கள் அடைந்தாலும் இன்னும் இந்தியா ஓரினசேர்க்கை என்ற கருத்தில் பின் தங்கியுள்ளதாகவே நினைக்கின்றேன். இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒரு சதவிகிதம் ?) முகமூடி அணிந்து கொண்டே வாழ்கின்றார்கள், அல்லது அப்படித்தான் வாழ வேண்டியுள்ளது. நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகின்றேன் என்று இன்னும் புலப்பட வில்லை. ஒருவேளை என் மனதின் பாரம் குறைந்தாலும் குறையலாம் (இதன் நிகழ்தகவு குறைவு தான் என்றாலும்).
இப்பொழுது நான் ஓர் ஓரின சேர்க்கையாளன் என்று அறிவித்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன நேரும்?
௧. என் நண்பர்களை இழக்க வேண்டி இருக்கும்.
௨. பெற்றோருக்கு புரிய வைப்பதே பெரும் பாடாக இருக்கும். நிறையக் கண்ணீர் காண நேரிடும். நீங்களே சொல்லுங்கள், எப்படி ஐம்பது வயதை தாண்டிய நபருக்கு, பெற்றோருக்கு, இதை புரிய வைப்பது !
௩. கல்லூரியில், அலுவலகத்தில் எல்லோரும் ‘ஒரு மாதிரி’ காண்பார்கள். விலகி விடுவார்கள். மதிய உணவையும், இரவு உணவையும் தனியே வெறித்துச் சாப்பிட வேண்டி இருக்கும்.
௪. உறவினர் பக்கம் தலை வைத்து படுக்க முடியாது.
௫. அல்லது இது மன நோய், உடற் நோய், என்று சரியாக புரிந்து கொள்ளாத நண்பர்களிடமிருந்தோ பெற்றோரிடமிருந்தோ ‘சிகிச்சைகள்’ பெற வேண்டி இருக்கும்.
இவ்வளவு இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதால் எப்படி ஒருவன் பகிரங்கமாக வெளிப் படுத்த முடியும்.
கண்டிப்பாக இன்னும் குறைந்தது பத்து வருடம் ஆகும், ஒருவன் தமிழ்நாட்டில் தான் ஓர் ஓரினன் என்று அறிவிப்பதற்கு.
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மிகவும் இடர்க்கையான ஒன்று, வாழ்க்கையில் திருமண வயதை எட்டுவது தான். பெற்றோர் உறவினர் எல்லோரும் தொடர்ந்து திருமணத்தை வற்புறுத்திக் கொண்டே இருப்பார்கள். மிகவும் சிக்கலான தீர்மானம் எடுக்க வேண்டிய சமயம்.
௧. திருமணம் செய்து கொண்டு சகித்துக் கொண்டு வாழ்தல்,
௨. திருமணம் செய்யாமல் தனியே, தன்னந்தனியே என்றிருத்தல்,
௩. திருமணம் செய்யாமல், தனக்குப் பிடித்த நபரோடு வாழ்தல்.
இதில் மூன்றாவதாக இருப்பது சற்றுக் கடினம் தான்.
முதலாவது மனதளவில் மிகக் கடினம். விஷத்தை தொண்டையில் வைத்துக் கொண்டு நீலகண்டனைப் போல் வாழ்வது.
இரண்டாவது, முதலில் சற்று பயமாக, கடினமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடும் (என்று நினைக்கின்றேன்). ஆனால் இந்த முடிவில் என்ன நெருடல் என்றால், மற்றவரை, பெற்றோரை நண்பர்களை, வருத்தப் பட அல்லது இழக்கவும் நேரலாம்.
இந்த சூழ்நிலைக்கான காரணம்,
௧. சரியாக புரிந்து கொள்ளாமலிருத்தல், மனநோய் என்று மருத்துவரிடம் காட்டல்.
௨. திருமணம் என்ற அமைப்பு தமிழ் நாட்டில் இன்றியமையாது இருத்தல்.
௩. ‘குடும்ப மரம்’ வளர வேண்டுதல்.
௪. ஓரினன் என்றால் ‘தப்பானவன்’ என்று முத்திரை குத்தல். (“ஓரின சேர்க்கையாளன் என்மனார் தவறெனக் கருதே” என்று தொல்காப்பியன் சொல்லி விட்டானா என்று தெரியவில்லை)
ஓரின சேர்க்கையில் என்ன தவறு என்று இது வரை எனக்குப் புலப்படவில்லை. தங்களுக்குப் புலப்பட்டால் பகிரவும்.
காலம் தந்து படித்ததற்கு,
நன்றி
விஜய்.
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் அனுப்பிய சென்ற அஞ்சலைப் படித்தீர்களா என்று தெரியவில்லை. நான் மிகவும் தன்னலமாக ஆதங்கப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. I lost the big picture.
இந்தியாவில், தமிழகத்தில் ஓரின சேர்க்கைக்கு இன்றைய நிலைமை என்ன ?
ஒரு பெட்டிக்குள் அடைந்து வாழ வேண்டிய வாழ்க்கை. உண்மையை மறைத்து வாழ வேண்டிய வாழ்க்கை. பொய்யான வாழ்க்கை. Living and crying inside a cupboard.
எல்லாரிடமும் ஒரு தப்பான அபிப்ராயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்போது கூட section 377 அமுல் பட்ட போது என்ன நேர்ந்தது ? எவ்வளவு சர்ச்சை. இதை ஏதோ கலவிக்காக மட்டும் தான் என்று பார்க்கிறார்கள். காதலாகக் கண்டு கொள்வதே இல்லை. அனுமதித்தால் ஏதோ சாலையெல்லாம் முத்தம் கொடுத்து அசிங்கப் படுத்தி விடுவார்கள் என்பதுபோல் பேசுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?
தங்களின் கருத்து என்ன ?
நன்றி,
விஜய்.
***
அன்புள்ள விஜய்,
1996ல் நித்ய சைதன்ய யதியைப் பார்க்கவந்த ஒருவர் அவரது பேச்சுக்கு முன் கேள்வி வேளையில் கிட்டத்தட்ட இந்த கேள்விகளைக் கேட்டதை நினைவுறுகிறேன். அவரது பதிலை ஒட்டியே நான் இப்போது யோசிக்கிறேன். அன்று அவர் கேட்ட முதன்மையான கேள்வியே ‘ஓரினச்சேர்க்கை’யை இந்துமதம் குற்றமாக கருதுகிறதா, விலக்குகிறதா என்றுதான்.
நித்யா அதற்குச் சொன்னார். இந்து மரபைப்பொறுத்தவரை ஒழுக்கம் என்பது புனிதமானது அல்ல. இறைவனால் உருவாக்கப்பட்டதும் அல்ல. அது கால இடத்துக்குக் கட்டுப்பட்டது. ஆகவே மாறக்கூடியது. அது ஒரு சமூக நெறி மட்டுமே. அது அறம் அல்ல, ஒரு காலஇடத்தில் அறத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஒருசில விதிகள் மட்டுமே
ஆகவே, ஒழுக்கத்தைப்பற்றிப் பேசும் நூல்கள் ஸ்மிருதி எனப்பட்டன. அவை நிரந்தரமானவை அல்ல. அழியாத தரிசனங்களையும் தத்துவங்களையும் பற்றி பேசும் நூல்களே ஸ்ருதிகள். ஸ்மிருதிகள் காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன. நாம் இப்போது அம்பேத்கார் ஸ்மிருதியை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
ஆக இதை அறப்பிரச்சினையாக எண்ணுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அதாவது இதை தப்பா சரியா என்று எப்போதைக்குமாக வகுத்துக்கொள்ளும் விவாதத்துக்கே இந்திய சூழலில் இடமில்லை. இங்கே இது மதத்தின் பிரச்சினை அல்ல.
அப்படியானால் இது ஒழுக்கப்பிரச்சினை மட்டுமே. அதாவது இன்றைய காலகட்டத்தில், இன்றைய சூழலில் நடைமுறைத்தளத்தில் வைத்து மட்டுமே இதைப்பற்றி நாம் பேசவேண்டும். அதற்கான வரலாற்றுப்பின்னணியுடன் விவாதிக்கவேண்டும்.
ஒழுக்கநெறிகள் இரு அடிப்படைகளில் உருவாக்கப்படுகின்றன.
- சமூகத்தின் ஒட்டுமொத்தக் கட்டுமானத்தையும் சமூக நிறுவனங்களையும் நிலைநிறுத்துவது
- தனிநபர் உறவுகளை சீர்ப்படுத்தி மேலான சகவாழ்க்கையை நிலைநிறுத்துவது.
இந்நோக்கில் சிறிதும் பெரிதுமான ஏராளமான ஒழுக்கநெறிகளுக்கு நாம் கட்டுப்பட்டுள்ளோம். ஒரு இடத்தில் வரிசையைப் பேணுவது முதல் முன்பின் தெரியாதவரை முகம் மலர்ச்சியுடன் எதிர்கொள்வது வரை ஒழுக்கநெறிகளே. ஒழுக்க நெறிகள் பொதுவாக மனிதனின் இயல்பான குணங்களான காமம், வன்முறை, சுயநலம்,பேராசை முதலியவற்றை கட்டுப்படுத்தக்கூடியவையாக இருக்கும்
ஆனால் பாலியல் ஒழுக்கநெறிகளைப்பற்றியே நாம் அதிகமும் பேசுகிறோம். அவற்றை பாலியல் கட்டுப்பாடுகளாக மட்டுமே காணக்கூடிய ஒரு போக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா உருவாக்கி நமக்கு அளித்தது. நவீன சமூகஉயிரியல், பரிணாம உயிரியலின் கொள்கைகளின்படி அந்த கோட்பாடுகள் தூக்கி வீசபட்டுவிட்டபின்னரும் சிந்தனையில் அவை நீடிக்கின்றன.
பாலியல் ஒழுக்கநெறிகள் நம்முடைய ஆதாரமான உயிர்விசையை கட்டுப்படுத்துகின்றன. கட்டற்று செல்லும் பாலியல் விசையையே இயற்கை நமக்கு அளித்துள்ளது. எல்லா உயிர்களிலும் பாலுறவு என்பது தீவிரமான போட்டி வழியாக தகுதியானவை மட்டும் இனப்பெருக்கம் நிகழ்த்துவதாகவே உள்ளது. அதற்கான வன்முறை அங்கே நிகழ்ந்துகொண்டே உள்ளது. மனித இனம் பாலுறவு மீதான ஒழுக்கக்கட்டுப்பாடுகள் வழியாக பாலுறவில் இருக்கும் வன்முறைப்போட்டியை மெல்லமெல்ல இல்லாமலாக்கி கொண்டது.
அத்துடன் நிரந்தரமான குடும்பம் என்ற அமைப்பை மனித இனம் உருவாக்கிக் கொண்டது. இது குழந்தைகளின் இளமைப்பருவத்தை நீட்டித்தது. அதன் விளைவாக கல்விப்பருவம் நீட்டிக்கப்பட்டது. பண்புக்கூறுகள், சிந்தனைகள் முதலியவை தொகுக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட இது வழியமைத்தது.
ஒழுக்கநெறிகள் மனிதனை வெற்றிகரமாக சமூகங்களாக தொகுத்தன. அதன் மூலமே மனிதகுலத்தின் பெரும் பண்பாட்டுப்பாய்ச்சல்கள் சாத்தியமாயின. மானுட இனத்தின் பரிணாம வரலாற்றில் ஒழுக்கம் என்பது அது கண்டுபிடித்த ஒரு முக்கியமான ஒரு கருவி. அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஒழுக்கம் பெருமளவுக்கு பங்களிப்பாற்றி இருக்கிறது.
அகவே ஒழுக்க நெறிகளை எதிர்மறையானவையாக பார்க்காமல் பயனுள்ளவையாக, தவிர்க்கமுடியாதவையாக பார்க்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
ஆனால் ஒழுக்க நெறிகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொன்றாக உள்ளன. அவை உருவாவதற்கான சமூகப்பின்னணியும் வாழ்க்கைச்சூழலும் பல்வேறுபட்டவை. அவை சமூகத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேரூன்றச் செய்யப்படுகின்றன. அந்த சமூகப்பின்னணியும் சூழலும் மாறிய பின்னரும் அவை அவ்வளவு எளிதாக மாறுவதில்லை. இதுவே ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை
ஒரு நல்ல சமூகத்தில் ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கைகளை மாற்றுவதற்காக அந்தச் சமூகத்தின் தீவிரமான ஒரு பகுதியினர் எப்போதும் முயன்றபடியே இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் எப்போதுமே எச்சமூகத்திலும் அதன் ஒழுக்கபிரக்ஞ்ஞையில் ஒரு பகுதி காலாவதியான விஷயங்களால் ஆனதாகவே இருக்கும்.
நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பழங்குடி மனநிலை கொஞ்சம் நீடிக்கும். முதலாளித்துவ காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவ மனநிலை நீடிக்கும். அது இயல்பு. அந்த பழைய அம்சங்களை களையவும் புதிய சூழலுக்கேற்ப புதிய ஓழுக்கங்களை உருவாக்கவும் ஒரு சாரார் போராடத்தான் வேண்டும்.
இந்த பின்புலத்தில் உங்கள் கேள்விக்கு வருகிறேன்
நம்முடைய சமூகம் இன்று நடைமுறையில் முதலாளித்துவத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் நடுவே உள்ளது. நம்முடைய மனமோ பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ ஒழுக்கங்களால் ஆனதாக உள்ளது.
நிலப்பிரபுத்துவம்முதலாளித்துவம் இரண்டுக்கும் நடுவே அடிப்படையான ஒரு வேறுபாடு உள்ளது. நிலப்பிரபுத்துவம் மனிதர்களை அவர்களின் பொதுத்தன்மைகளின் அடிப்படையில் தொகுக்க முயன்றது. பொதுவான அளவுகோல்களே அனைவருக்கும் போடப்பட்டன. பொதுமைப்படுத்துவதன் மூலம் உருவாகும் ஒழுக்கவிதிகளும் நடைமுறைகளுமே அனைவருக்கும் அளிக்கப்பட்டன. மனிதனை அது சமூகத்தின் ஒரு அலகு மட்டுமாக பார்க்கிறது. தனித்தன்மைகள், தனிவிருப்புகள் பொருட்படுத்தப்படுவதில்லை.
ஊரோடு ஒத்துவாழ் என்ற சொல்லே அதன் நெறிகளின் அடிப்படை. நிலப்பிரபுத்துவத்தின் எல்லா நெறிகளுமே மிகப்பொதுவாக வகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு ஆண் இப்படி இருக்கவேண்டும், ஒரு பெண் இப்படி இருக்கவேண்டும், தந்தை இப்படி இருக்கவேண்டும், ஆசிரியர் இப்படி இருக்கவேண்டும் என அது முற்றாக வகுத்துரைக்கிறது. அதில் அடங்காத தனித்தன்மைகளை எல்லாம் அது மீறல்களாகவே பார்க்கிறது. அங்கே தனிமனிதன் இல்லை, சமூகப்பாத்திரங்களே உள்ளன.
இன்று தமிழகத்தில் வீட்டுமனை விற்பனையாளர்களிடம் கேட்டால் ஒன்றைச் சொல்வார்கள். கிராமங்களுக்குள் உள்ள நிலங்களுக்கு விலை இல்லை. கிராமத்துக்கு வெளியே பொட்டல்களில் உருவாக்கப்படும் மனைகளுக்கே மதிப்பு. ஏன்? கிராமங்களுக்குள் வாழ்ந்தோமென்றால் கிராமக்கட்டுப்பாடுகளுக்கு அடங்கிச்செல்லவேண்டியிருக்கும். அங்கே தனிமனித ரசனைக்கும் சுதந்திரத்துக்கும் இடமே இல்லை. அதாவது அங்கே நிலப்பிரபுத்துவம் உள்ளது. வெளியே உள்ள ‘நகர்’களில் முதலாளித்துவம் உருவாக்கிக் கொள்ளப்படுகிறது.
முதலாளித்துவம் அந்த பொதுமைப்படுத்தலுக்குள் உள்ள தனிக்கூறுகளை கணக்கில் கொள்கிறது. அதில் தனிமனிதன் இருக்கிறான். அவனுடைய தனித்தன்மை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தனித்தன்மைக்குரிய சுதந்திரத்தை அவன் பொதுவான சமூக அமைப்புக்கு ஊறு விளைவிக்காமல் அடையலாம் என்று அது அனுமதிக்கிறது.
இந்த எண்ணங்களும் , இந்த உரிமைகளும் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை வெறும் ஐம்பது வருடங்களில் அடையப்பெற்றவை என்பதை நாம் இப்போது உணர்வதில்லை. புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரையிலான எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்துக்களில் இந்த உரிமைகளுக்காக வேகத்துடன் பேசியிருக்கிறார்கள். கல்யாணி என்ற புதுமைப்பித்தன் கதையை இன்று வாசித்தால் அந்த சிக்கலே ஆச்சரியமூட்டும். ஒரு சுதந்திர வாழ்க்கையை ஏன் கல்யாணி உதறுகிறள்? அவள் ஒரு தனி ஆளுமை, அவளுக்கென ஒரு மனமும் வாழ்க்கையும் இருக்கலாமென அவளுக்கே தெரியாது. சமூகம் பற்றித்தான் அவளுக்கு கவலை.
ஜெயகாந்தனின் முழுப் போராட்டமும் தனிமனித ஆளுமைக்காகவே என்றால் அது மிகையல்ல. ‘அந்தரங்கம் புனிதமானது’ ‘சமூகம் என்பது நாலுபேர்’ போன்ற அவரது தலைப்புகள் வழியாக சென்றாலே போதும், ஒரு சித்திரம் கிடைத்துவிடும்
முதலில் சமூகத்தில் உள்ள அத்தனைபேருக்கும் அவர்களின் தனித்தன்மையை அவர்களே உணரச்செய்வதாக, அவர்களை தனிமனிதர்களாக அறியச்செய்வதாக இச்சிந்தனைகள் செயல்பட்டன. அதன் பின்னரே அச்சமூகத்தின் சற்றே வித்தியாசமான உறுப்பினர்களின் உரிமைகள் பற்றிய பிரக்ஞை உருவாகியது
நம் சமூகத்தில் ஐம்பதுகள் வரைக்கும்கூட பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதை வலியுறுத்திப் பேசிக்கொண்டிருந்தோம். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளைப்பற்றிய பிரக்ஞை வந்து இருபது வருடங்கள்கூட ஆகவில்லை. திருநங்கைகளுக்கான உரிமைகள் பற்றிய பேச்சுக்கள் உருவாகி பத்து வருடங்கள்கூட ஆகவில்லை.
இன்னமும் கூட இந்த உரிமைப்பிரக்ஞைகள் நம் கிராமங்களுக்குச் சென்று சேரவில்லை. ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியான பண்பாட்டுச் செயல்பாடுகள் மூலம் மெல்லமெல்லத்தான் அது சென்று சேரும். சமூகமாற்றங்கள் எப்போதும் பலபடிகளாக மெதுவாகவே நிகழமுடியும். ஏனென்றால் அவை பல லட்சம் மனிதர்களின் சிந்தனைகள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்களுடன் தொடர்புள்ளவை.
இந்த உரிமைக்குரல்களை சம்பந்தப்பட்டவர்கள் எழுப்புவதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே இலக்கியத்தில் அவை அழுத்தமாக பதிவாகியிருப்பதை காணலாம். உதாரணமாக தமிழிலக்கியத்தில் திருநங்கைகளின் உணர்ச்சிகளை உண்மையின் தீவிரத்துடன் பதிவுசெய்து அதை ஒரு மானுடப்பிரச்சினையாக காணச்செய்தவர் கி.ராஜநாராயணன்.[கோமதி]
இந்த வகையில்தான் ஓரினப்புனர்ச்சியாளர்களின் உரிமைகளைப்பற்றிய பிரக்ஞையும் வருகிறது. அவர்கள் சமூகத்தில் தனித்தன்மை கொண்ட பிரிவினர். அவர்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்ற கருத்து உருவாகி பண்பாட்டுத்தளங்களில் வலுப்பெற்று மக்கள்மனத்தில் நிலைபெற்று சமூகமாற்றமாக ஆக கொஞ்ச காலம் பிடிக்கும். இங்கே இன்னும் அது ஆரம்பிக்கப்படவே இல்லை.
இங்கே அதற்குச் சாதகமாக உள்ள அம்சம் என்னவென்றால் சாராம்சத்தில் இந்து மதம் அதற்கு எதிரானது அல்ல என்பதே. அதன் பல்வேறு பிரிவினர் தனிப்பட்ட எதிர்ப்புகளை தெரிவிக்கலாம். ஆனால் அந்த எதிர்ப்புகளை வெல்வதற்கான எல்லா ஆதாரங்களையும் இந்துமதமே அளிக்கிறது. நிறுவன மதத்தின் எதிர்ப்பு இவ்விஷயத்தில் நிகழாது. திருநங்கைகளின் விஷயத்தில் இன்று உலகிலுள்ள பல நாடுகளில் நிறுவன மதங்கள் அளிக்கும் எதிர்ப்பை பார்க்கையில் இந்தியாவில் அந்த மாற்றம் சுமுகமாக நிகழ்வதை எவரும் காணமுடியும்.
ஒருபால்புணர்ச்சியாளர்களைப்பற்றிய உங்கள் வருத்தங்களைப்பற்றி என் கருத்தைச் சொல்கிறேன்….
பழங்குடிச்சமூகங்களிலும் அவற்றில் இருந்து நிலப்பிரபுத்துவச் சமூகங்களிலும் வேரூன்றிய ஒரு கருத்துநிலை ஆண்மை என்பது. வீரம் என்பதுடன் அது நேரடியாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. நம் பண்டைய இலக்கியங்களில் ஆண்மை என்ற சொல் எப்படியெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பதைக் கண்டால் அது விளங்கும். அச்சொல்லுக்கு , கௌரவம், நிமிர்வு என பல அர்த்தங்கள்.
போராலேயே நிறுவபப்ட்டு வளர்ந்த அச்சமூகங்கள் உடல்சார்ந்த, வன்முறைசார்ந்த வீரத்தை மைய விழுமியமாக போற்றியதில் ஆச்சரியமில்லை. அப்படி ஒருவிழுமியம் இருந்தால்தான் வீரர்கள் உருவாவார்கள். சமூகத்துக்காக போர்முனைகளில் சாவார்கள். இன்றும் நம் மொழியிலும் ஆழ்மனதிலும் அவ்விழுமியம் இருக்கத்தான் செய்கிறது. இன்று வீரர்கள் விளையாடுகிறர்கள், சினிமாவில் நடிக்கிறார்கள்.
ஆண்மைக்கு எதிரானவை, ஒவ்வாதவை என்பதனாலேயே ஓரினச்சேர்க்கை, மூன்றாம்பாலினம் போன்றவற்றின் மேல் சமூகம் இழிவான நோக்கை உருவாக்கிக் கொண்டது. போர்ச்சமூகங்களில் அந்த துருவப்படுத்தல் இன்னும் தீவிரமாக இருக்கும். பேடி, பொண்ணன் போன்ற சொற்கள் வசைச்சொற்களாகவே சமூக மனதில் ஊறின.
அந்த வெறுப்பையும் நிராகரிப்பையும் தப்புசரி என்று பார்ப்பதை விட நேற்றைய போர்ச்சமூகத்திற்கு தேவை என்பதனால் அது உருவாக்கிக்கொண்ட ஒரு விழுமியம் என்று பார்ப்பதே சரியானது. அன்று உருவாக்கிக்கொண்ட எத்தனையோ கருவிகள் இன்று அருங்காட்சியகத்தில் உள்ளன. கருத்துக்களும் அப்படித்தான். அவை அப்படிப்பட்ட கருத்துக்கள்.
மூன்றாம்பாலினத்தை பொறுத்தவரை அது சம்பந்தப்பட்டவரின் பிழை அல்ல என்ற எண்ணம் சமூகத்தில் உள்ளது. ஒருபால்புணர்ச்சிக்கு அந்தச் சலுகை இல்லை. அது அந்தத் தனிநபரின் கோணலானரசனை என்ற எண்ணம் இருந்தது, இருக்கிறது. அது இயற்கைக்கு மாறானது என்று நம்பப்படுகிறது.
ஒருபால் புணர்ச்சிக்கான உந்துதல் என்பது இயற்கையானது, எல்லா உயிர்களிலும் காணப்படுவது என்று அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டு முப்பது வருடங்கள்கூட ஆகவில்லை. ஐரோப்பாவில் அதற்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கப்பட்டபோதுகூட அது தனிமனித உரிமை என்றுதான் பார்க்கப்பட்டதே ஒழிய அதுவும் ஒருவகையில் இயற்கையானது என்பதனால் அல்ல. எழுபதுகளில்தான் பல்வேறு விலங்கியல், சமூகஉயிரியல் ஆய்வுகள்மூலம் அதுவும் இயற்கையானதே என நிறுவப்பட்டது.
எண்பதுகளின் இறுதியில்தான் இதுசார்ந்த சில பேச்சுக்கள் இந்தியச்சூழலில் உருவாயின. எண்பத்தெட்டில் ஒரினப்புணர்ச்சி சட்டபூர்வமான, தனிமனித உரிமையாக ஆக்கப்படவேண்டும் என்று கோரி மனித உரிமைக்கழகத்துக்கு அளிக்கப்பட்ட ஒரு மாபெரும் மனுவில் நானும் கையெழுத்திட்டிருந்தேன். இந்த விஷயம் சார்ந்து பொது ஊடகங்களில் இன்னும் விரிவான விவாதங்கள் ஆரம்பிக்கப்படவில்லை.
பல்வேறு மதங்களின் கலவையாக உள்ள இந்தியா இந்த விஷயத்தில் சட்டபூர்வமாக ஒரு நிலைப்பாடு எடுக்கக் கொஞ்சம் தாமதிக்கும் என்றே நினைக்கிறேன். இஸ்லாமிய சமூகம் மன்னிக்கமுடியாத குற்றமாகக் கருதும் ஒன்றை இந்திய அரசு எளிதில் சட்டமாக ஆக்கிவிடமுடியாது. ஆனாலும் அது நிகழும் என்பதில் ஐயமில்லை.
ஓரினப்புணர்ச்சியாளர்களின் சட்டபூர்வமான உரிமைகள் பேணப்படுவதும் அவர்கள் சமூகத்தின் இயல்பான உறுப்பினர்களாக ஆவதும் படிப்படியாக சாத்தியமாகக்கூடிய ஒன்றே. சிறிதுகாலம் ஆகலாம், ஆனால் அது நிகழ்ந்தே தீரும். சுருக்கமாகச் சொன்னால் சமூகப்பொதுவான அங்கீகாரத்துக்காக சட்டபூர்வமான முடிவு தாமதமாகிறது. இது தாமதமே ஒழிய மறுப்பு அல்ல.
*
கடைசியாக உங்கள் தனிப்பட்ட பிரச்சினை பற்றி..
ஒரு அற்பமான விஷயத்தைச் சொல்கிறேனே. நான் இப்போது முழுநேர எழுத்தாளன். நாள்முழுக்க வீட்டில் இருக்கிறேன். என் மனைவி வேலைக்குச் செல்கிறாள். இது என் சூழலில் உருவாக்கும் குழப்பத்தையும் சங்கடத்தையும் கிண்டலையும் சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
நான் வீட்டில் எரிவாயு வாங்கி வைக்கிறேன். பால் வாங்கி வைக்கிறேன். வீட்டை கூட்டுகிறேன். துணி துவைக்கிறேன். என் மகளுக்கு ஏதாவது சமைக்கிறேன். இவை பெண்களுக்குரிய செயல்கள். ஆகவே என்னை ஆணுக்கு உகக்காத ஒன்றைச் செய்பவனாக நினைக்கிறார்கள். கிண்டலுக்கும் கேலிக்கும் உரிய ஒன்றாக நினைக்கிறார்கள்.
தெருவில் துணி இஸ்திரி போடுபவர், நாளிதழ் போடுபவர் முதல் பக்கத்து வீட்டுக்காரர் வரை கிண்டலாக ஏதேனும் சொல்கிறார்கள். நான் என் மனைவியை விட ஐந்து மடங்கு சம்பாதிப்பவன் என்று தெரிந்தவர்களுக்கும்கூட இது சங்கடமாக இருக்கிறது. இன்றும்கூட துணி துவைக்கும், வீட்டில் இருக்கும் கணவனைப்பறிய நகைச்சுவைத்துணுக்குகள் ஆனந்தவிகடனில் வந்துகொண்டுதான் உள்ளன.
என் மனைவிக்கே சங்கடம். நான் ஒருமாதமாக வீட்டில் இருந்தால் எங்காவது கிளம்பிப்போ, வேலைக்கு போயிருக்கிறார் என்று பக்கத்துவீட்டில் சொல்கிறேன் என்கிறாள்.
இந்த விஷயத்திலேயே இப்படி என்றால் உங்கள் விஷயத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கும். அப்பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ள இரு வழிகள் உள்ளன. ஒன்று அதை வெளிப்படையாக வைப்பது. அந்த உரிமைகளுக்காக போராடுவது. உங்கள் வாழ்க்கையை உங்களைப்போன்றவர்களின் உரிமைக்கான போராட்டமாக ஆக்கிக் கொள்வது. அப்படி ஆக்கிக்கொள்பவர்களே சமூகத்தை முன்னெடுக்கிறார்கள்.
ஆனால் அந்த வாழ்க்கையில் தியாகம் மட்டுமே உண்டு. அபாரமான மனபலம் இல்லாமல் அதைத் தேர்ந்தெடுக்க முடியாது. இழப்புகளுக்காகத் தயாராக இல்லாமல் அவ்வழி செல்லமுடியாது
எஞ்சும் ஒரேவழி இந்தச்சூழல் உங்களுக்காக மாறும் வரை உங்கள் தனி வாழ்க்கையை ரகசியமாக வைத்திருப்பதே. எப்போதும் நம் சமூகத்தில் உங்களைப்போன்றவர்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். வேறு வழியே இல்லை
நம் சமூகத்தில் ஏதேனும் வகையில் தனித்தன்மை உள்ள மனிதர்கள் தங்களைப்போன்றவர்களுடன் இணைந்து ஒரு உபசமூகமாக ஆகித் தங்களுக்குள் வாழ ஆரம்பிக்கிறார்கள். அதையே உங்களுக்கும் சொல்வேன். அதை ஒரு இழிநிலையாக, தண்டனையாக அல்லாமல் ஒரு வாய்ப்பாக, தவிர்க்கமுடியாத ஒரு வழியாக நினைத்தால் போதுமானது
ஜெ
***
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Mar 28, 2011