மண்ணென வருவது…

இரண்டுவாரம் முன்பு காலைநடை சென்றிருந்தேன். மழைக்குக் காத்துக்கிடக்கும் வயல்கள். அவற்றில் மண்ணின் அலைகள். கொக்குகள் பாய்விரித்த படகுகள் என அந்த மண்கடல்மேல் அமைந்து எழுந்தன. எதிரில் ஒருவர் வந்தார். தோளில் வாழையிலைக் கொத்து. சூழ இரு நாய்கள். நான் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னை கடந்துசென்றபோது “அதாக்கும் இப்பம்” என்றார்.

நான் திடுக்கிட்டு “ஆமா” என்றேன். அதன்பின்னரே அது என்ன என்று மண்டை ஓடியது. “என்னவாக்கும்?” என்றேன். அதற்குள் அப்பால் சென்றுவிட்டிருந்தார். ஆனால் தொடர்ந்து பேசினார். “மண்ணு வெந்தா மளே வரணும்னாக்கும் கணக்கு. வெந்த மண்ணுக்காக்கும் மழை விளுகது. அல்லாம மனுசப்பயலுகளுக்காக இல்ல…” எவரிடம் பேசுகிறார்? நான் மெல்ல பின்னால் சென்றேன். “ஒரு ஆழ்ச்சைக்குள்ள வந்துபோடும்…. இப்பம் இப்டி வெளுத்து கெடக்குதத பாக்காண்டாம்”

அவர் நாய்களுடன் பேசிக்கொண்டு செல்கிறார் என்பதை அதன்பின்னர்தான் புரிந்துகொண்டேன். நாய்களின் மெய்ப்பாடுகளிலிருந்து அது தெரிந்தது. அது அவர் வழக்கம்போலும். நாய்கள் வாலாட்டின. ஒரு நாய் சற்றே ஆர்வம் குறைந்து முன்னால் சென்றது. நான் பின்னால் செல்ல மற்ற நாய் என்னை ஐயத்துடன் பார்த்தது.அவர் என்னை உணரவே இல்லை.

“தெங்கிலே மூணு ஓலை தாளுகது கணக்கு. அதுக்குமேலே தாந்தாக்க தெங்கு கூம்பு வாடிப்போயிரும். பின்ன வெள்ளம் கிட்டினாலும் பட்டுபோவும்… மூணு ஓலைன்னா மூணு மாசம். பங்குனி சித்திர வைகாசி. வைகாசி ஒடுக்கம் மளை கேறீரும். எடவப்பாதீன்னாக்கும் பண்டு சொல்லுகது. மளையடிச்சா வெந்தமண்ணு மணக்கும்லா. ஊறி நிக்கப்பட்ட பெண்ணு மாதிரி…என்னான்னா…”

ஒருநாய் கறுப்பு. ஒன்று வெண்மை. மண்ணின் இரு நிறங்கள். ரகுவம்சத்தில் காளிதாசன் திலீபனும் சுதக்ஷிணையும் காமதேனுவை காட்டுக்கு மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றபின் திரும்புவதை வர்ணிக்கையில் வெண்ணிறமான சுதக்ஷிணைக்கும் கரியநிறமான திலீபனுக்கும் நடுவே அந்திபோல செந்நிறமான காமதேனு வந்தது என்று சொல்வார்.

நாய்கள் அவற்றுடன் நாம் பேசுகையில் உற்சாகமாகிவிடுகின்றன. துள்ளிக்குதிக்கின்றன. வாலாட்டி கொப்பளிக்கின்றன. ஆனால் தொடர்ந்து உரையாடலில் இருந்தால் நம்மிடம் பேச அவை மொழியைக் கண்டடைகின்றன. புருவம் உயர்த்தி நோக்குவது, செவிமடக்குவதுகூட சொல்லாக அமையும். என் அப்பா நாயிடம் பேசிக்கொண்டே இருப்பார். நான் ரொம்பவும் தனியாக உணர்கையில் பேசுவதுண்டு. லாப்ரடார் கூர்ந்து கேட்கும். டாபர்மான் நிலைகொள்ளமால் இருக்கும்.

என்னைப்பார்த்துவிட்டார். புன்னகைத்து திரும்பிக்கொண்டார். ஒரு சொல்லும் பேசவில்லை. நான் நின்றுவிட்டேன். நாய்கள் தொடர்ந்து சென்றன. உள்ளம் தெளிந்த மனிதர்தான். விவசாயி. அவருக்கு என்னிடம் ஒன்றும் பேசத்தோன்றவில்லை. ஏனென்றால் நான் மண்ணுக்கு அன்னியமானவன். அந்த நாய்கள் இந்த மண்ணுக்குரியவை.

இன்னும் சொல்லப்போனால் அந்த மண் உயிர்கொண்டு நாய்கள் என ஆகி அவரைத் தொடர்ந்துசென்று வாலாட்டி அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. “பின்னெ அல்லாம? மளை வந்தாகணும்லா” என ஆறுதல் சொல்கிறது. அதை என்னால் சொல்லமுடியாது

முந்தைய கட்டுரைநிலவின் தொலைவு – இடாலோ கால்வினோ – டி.ஏ.பாரி
அடுத்த கட்டுரைதாக்குதல் பற்றி…