ஆல்பா -கடிதம்

அய்யா!

 

இனிய ஜெயம்

 

 

தொலைகாட்சி முன் அமர்ந்து வருடம் கடந்து விட்டது.  உங்கள் கட்டுரை வழியே ஆல்பா தரவிறக்கினேன். தொகா ரிமோட் இயக்கும் விதமே மறந்து விட்டிருந்தது :)  அது ஒரு ஜேம்ஸ் பாண்ட் டிவி .காணும் எதையும் அதன்  வழியே முப்பரிமாணமாக மாற்றிக் கொண்டு பார்க்க முடியும் [சன் டிவி சீரியலைக் கூட] . தங்கை மகள் உதவியுடன் ரிமோட் இயக்கி முப்பரிமாணத்தில் ஆல்பா [துணை உரை இன்றி]  படம் பார்த்தேன்.

 

 

உடனடியாக நினைவில் எழுந்த படம் கெவின் காஸ்னர் இயக்கி நடித்த  டான்சிங் வித் ஒல்வ்ஸ்  படம்.   செவ்விந்தியக் குடி கொஞ்சம் கொஞ்சமாக கெவினுடன் இணங்குவதை, ஓநாய் ஒன்று கெவினுடன் கொஞ்சம் கொஞ்சமாக நட்பாவதை குறியீடாக்கி காட்சிப் படுத்தப் பட்டிருக்கும். இரண்டாவது படம் ஒல்ப் டோடம். ஜியாங் ரோங் நாவலை மையமாகக் கொண்டு உருவான படம். அதில் ஒரு ஓநாயை டொமெஸ்டிக்கேட் செய்ய முயன்று, அதற்கு இணங்காமல் இறுதிவரை அந்த ஓநாய் போராடி சாகும் காட்சி ஒன்று உண்டு .

 

 

இந்த இரண்டு படங்களின் ஊடே இந்த ஆல்பா படத்தை பொருத்தி யோசிக்கையில், ஓநாய்க் கூட்டத்தில் ஏதோ ஒரு தலைமை ஓநாய், பாவம் பயலுக, நம்ம நிழல்ல வாழ வேண்டிய பயலுக என முடிவெடுத்து, அதுவே முன் வந்து டொமெஸ்டிக்கேட் ஆகி மானுடனுடன் இணைந்து கொண்டு விட்டதோ என நகைச்சுவையாக தோன்றியது.

 

 

லக்சாஸ் குகையில் கண்டெடுத்த தொல்லெச்சங்களில், இளைஞனை விட சற்றே வயது குறைந்த பாலகன் மற்றும் ஒருஓநாயின் எலும்புகள் சில கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மானுடக் குடியுடன் இணைந்த நாய்களின் முதல் ஐயமற்ற எச்சம் சிரியாவில் கிடைத்திருக்கிறது. அதன் காலம் இன்றிலிருந்து பத்தாயிரம் வருடம் முன்பு.  சில ஆய்வுகள் இன்றிலிருந்து இருபதாயிரம் வருடங்கள் முன்பு ஐரோப்பிய நிலத்தில்  ஓநாய் மனிதனுடன் இணங்கியது. பனியுக முடிவில் இன்றிலிருந்து பத்தாயிரம் வருடம் முன்பு  மத்திய ஆசியா பகுதியில் ஓநாயில் இருந்தது கிளைத்த நாய்கள்  மனிதனுடன் இணங்கியது. நாய்களில் நிகழ்ந்த இந்த இரண்டு பண்படுதலுக்குப் பிறகே நாய்களை மனிதகுலம் வேட்டைக்கும் காவலுக்கும் பழக்கத் துவங்கியது என்கிறது.

 

 

இந்தத் திரைப்படம் இருபதாயிரம் வருடம் முன்பு ஓநாயும் மனிதனும் கொண்ட முதல் தொடர்பை உணர்சிகரமான சித்திரமாக உருவாக்கிக் காட்டுகிறது. கெடா வேட்டையாடும் சமத்து சற்றே குறைந்தவன் என்பது அவன் தாயின் கவலை. அந்த சமத்து இன்றி அவன் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறான். ஓநாய் கூட்டத்தால் தாக்கப் படுகிறான்.கூட்டத்தில் ஓநாய் ஒன்றை காயமாக்குகிறான். தன்னைப் போலவே காயம்பட்டு, கூட்டத்தினின்றும் தனிமைப்பட்டுக் கிடக்கும் ஓநாயைக் காப்பாற்றுகிறான்.  அங்கே துவங்கும் அனைத்தும் என்னை அப்படியே உணர்சிகரமாக சுழற்றி அடித்து விட்டது. உங்கள் வசனம் ஒன்றைப்  போல, சிவாஜி படம் பார்த்தல்ல சிவாஜி எனும் பெயரைக் கேட்டாலே அழுது விடும் அளவு ஆள் நான்.என்னவாகி இருப்பேன் என யூகித்துக் கொள்ளுங்கள்.

 

 

அவன் உடன் இணைந்து அவனால் இயலாமை கொண்ட இடங்களில் ஜஸ்ட் லைக் தட் வேட்டையாடி உணவைக் கொண்டு வந்து அவனுக்கு அளிப்பது, அவன் தனக்கிடும் பெயரை அது தனது பெயர் என அறிந்துகொள்வது என உடல்மொழி பாவனைகள் வழியே  [ கணிப்பொறி வரைகலையே எனினும்] சிறப்பாகவே நடித்திருக்கிறது ஆல்பா.

 

 

படம் அளித்த உணர்வு நிலைகளில் முக்கியமானது க்ளைமாக்ஸ் வழியே நான் அடைந்தது. ஆல்பா குட்டி போடும் போதே அட அது பொண்ணா என மனதில் தோன்றியது. அதில் அனைத்தும் தலைகீழ் ஆனது. நான் எப்படி படம் நெடுக அவனை ஆண் என நினைத்திருந்தேன் என தெரியவில்லை. [என் இயல்பால் உள்ளே நானொரு ஆணாதிக்கப் பன்றியாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்] அவள் பெண் என அறிய வருகையில், ஒரு தீவிர சிறுகதை போல அனைத்தும் முதலில் இருந்தது வேறு உணர்வுகள் கொண்டு தொடங்கியது. குறிப்பாக கெடா ஆற்றுக்குள் சிக்கித் தவிக்க,அந்த ஆற்றின் பனிக் கண்ணாடித் தளத்தின் மேல் பதறியபடி, கெடாவை தொடரும் ஆல்பாவின் சித்திரம்.

 

 

இறுதிக் காட்சியில் உதய சூரியன் ஒளியின் பொன்னிற வட்டத்தில் ஆல்பா குட்டியின் நிழல்வெட்டுத் தோற்றம் மழலைக் கூவல் எழுப்பும் தருணம் ஏதோ வானத்து தேவர் கூட்டம் மொத்தமும் வாழுங்கடா போய் என இருவரையும் ஆசிர்வாதம் அளித்தது போன்றதொரு பரவசம்.

 

 

உரை இன்றி உரையாடலை கவனிக்கக் கிடைத்தது இனிய அனுபவம். கொஞ்சம் முயன்றால் கற்றுக் கொண்டு பேசிவிடலாம் என்பது போல உணர்வு எழுந்தது. உலகின் எந்த நிலத்திலும் செல்லுபடி ஆகும் மொழி. இப்படித் தன்னியல்பாக உருவான, எழுத்து லிபி அற்ற, பேச்சில் மட்டுமே நீடிக்கும் சில மொழிகள் [முப்பது எண்ணிக்கை வரை] சில தீவுகளில் உண்டு என இணையம் சொல்கிறது. சீனாவில் பெண்கள் மட்டுமே அறிந்து, பெண்களுக்குள் மட்டுமே புழங்கிய இப்படி ஒரு மொழி இருந்தது ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் நீங்கள் சொல்வது போல, அ ய என அழைக்கப்படும் அப்பா குறித்த சொல் பிற எவரையும் விட எனக்கு அணுக்கமானது.காரணம் எனது அம்மா வழியில் கொட்டைப்பாக்கன் வகையறாவில் இப்போதும் அப்பாவை அய்யா என்றுதான் அழைப்பார்கள். சித்தப்பா பெரியப்பா எனில் சின்னைய்யா பெரியய்யா. என் தலைமுறையுடன் அது முடிவுக்கு வருகிறது. கூட்டுக் குடும்பம் முடிய, நகர வாழ்வின் அடுத்த தலைமுறைக்கு இன்று டாடிதான்.அப்பா கூட இல்லை. அம்மாவின் தாத்தா இறுதி சடங்கில், அவரது ஏழு பெண்மக்களும் சூழ நின்று அய்யா அய்யா என விளித்து அழுததை சுற்றத்தோர் தெருவோர் விநோதமாக பார்த்ததை நான் பார்த்து நின்றிருக்கிறேன். அய்யாவழி, அய்யனார் என எங்கோ இனி குடும்பத்துக்கு வெளியே மட்டுமே கேட்கப் போகிற ஒரு ஒரு சொல். இருபதாயிரம் வருடத்தைக் கடந்தது வந்த ஒரு சொல். அய்யா.

 

 

அம்மாவைக் கூட்டி அவன் அப்பாவை எப்படிக் கூப்பிடுகிறான் பாருங்கள் என்று காட்டினேன். கூர்ந்தது கேட்டவர்கள் ”நம்ம தாய்வழி மக்க” ளா இருக்குமோ என்றார்கள் குறும்பு சிரிப்புடன். சரிதான் ஆதித்தமிழன் பேசிய மொழி தமிழ். ஆதித் தமிழன் ஒரு நாடார். அதிலும் குறிப்பாக கொட்டப்பாக்கன் வகையறா.  இந்த வருட குல தெய்வ கோவில் கொடைக்கு இந்தப் படத்தை திரையிட்டு ஒரு எழுச்சிப் பேருரை ஆற்றிவிட வேண்டியதுதான்.  :)

 

 

கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரைஇடதுசாரிகள் -கடிதம்
அடுத்த கட்டுரைநினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்