குமரகுருபரன் விஷ்ணுபுரம் விழா -கடிதங்கள்

சென்னை குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா

 

அன்புள்ள ஜெ..

 

குமரகுருபரன் விழா நிகழ்வில் தக்கர் பாபா.அரங்கு குறித்த உங்கள் கோபம் புரிகிறது..மரங்கள் சூழந்த அந்த அரங்கை அவர்கள் சரியாக நிர்வாகம் செய்து இருந்தால் , அல்லது இதே நிகழ்ச்சி , ஒரு குளிர்காலத்தில் நடந்து இருந்தால் ,சென்னையிலேயே உங்களுக்கு பிடித்த அரங்கமாக இதை சொல்லி இருப்பீர்கள்.. கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு வாகன இரைச்சல் இல்லாமல் , இயற்கையான காற்றுடன் நிகழ்ச்சி நடத்த இயலக்க்கூடிய சென்னையின் ஒரே அரங்கம் என நீங்கள் சொல்லி இருக்ககூடும்.. அப்படி நிகழாமல் செய்த ஊழ் வாழ்க..

இதில் இன்னொரு சுவாரஸ்யத்தை பகிர விரும்புகிறேன்..

 

கூட்டத்தில் ஒரு சிறு நண்பர்கள் ஒன்று இருந்தது.. அதில் இருந்து ஒருவர் என்னிடம் வந்து , கண்ணாடி அணிந்துள்ள அந்த பிரமுகம்ர் யார் என்றார்.. உங்கள் பக்கத்தில் இருக்கும் யாரையோ கேட்கிறார் போல என நினைத்து , யாரை கேட்கிறீர்கள் என்றேன்.

 

ஊதா சட்டை அணிந்திருக்கிறாரே அவர் யார் என உங்களை சுட்டிக்காட்டி கேட்டார்ஒரு நிமிடம் பிரமித்து விட்டேன்.. யாராவது நம்மை கலாய்க்கிறார்களா என்ற குழப்பம்..  ஆனால் அவர்களை வெகு நேரம் கவனித்து வந்ததில் , அவர்கள் வெகுஜன எழுத்தின் வாசகர்கள் என்பதும் தற்செயலாக இங்கு வந்து இருப்பதும் தெரிந்தது

 

அவர்களுக்கு புரிவது போல விளக்கினேன்..அவர் பெயர் ஜெயமோகன்.. பெரிய ரைட்டர்… ரஜினி கமல் விஜய் படங்களுக்கெல்லாம் எழுதி இருக்கிறார்.. பல நூல்கள் எழுதி இருக்கிறார்.. பிரமாண்டமான ஒரு நாவல் எழுதி வருகிறார்.. அதன் ஒவ்வொரு அத்தியாமும் பொன்னியின் செல்வன் அளவில் இருக்கும் என்றேன்

விரிந்த விழுகளுடன் கேட்ட அவர் தன் நண்பர்களிடம் சென்றார்.. அபாரமான தன்னம்ப்பிகையுடன் , நான் அவருக்கு சொன்னதை , அவரே கண்டு பிடித்தது போல , அவர்களுக்கு விளக்கினார்.சார் பேரு ஜெயமோகன்.. பெரிய எழுத்தாளர்.. வாங்க போய் பேசலாம் என்றார்

அவ்ர்கள் சற்று கம்பீரமாக , இப்பதானே முதல் முறையாக பார்க்கிறோம்.. அடுத்த முறை பேசுவோம் என பெருந்தன்மையாக முடிவெடுத்தனர்இதில் என்ன விஷ்யம் என்றால் , அவர்கள் விஷ்யம் தெரியாமல் வந்தவர்கள் என்றாலும் , கடைசி வரை அரங்கில் இருந்தனர்.. உன்னிப்பாக நிகழ்ச்சிகளை கவனித்தனர்..

அவர்களுக்கு நடப்பவை எல்லாம் புதிதாகவும் அற்புதங்களாகவும் தோன்றினஅந்த அனல் சூளையில் , யாரும் எழுந்து செல்லாமல் கருத்தரங்களை கவனித்தனர் என நீங்கள் குறிப்பிட்டவர்களுள் அவர்களும் அடக்கம்

அனலோ ., ஏசி இனமையோ அவர்கள் மனதில் இல்லை.. இத்தனைக்கும் அவர்கள் உங்கள் வாசகர்களும் இல்லை.. இலக்கிய பரிச்சயம் கொனடவர்களும் அல்லர்.

அந்த அளவுக்கு இலக்கியம அவர்களை தன்னுள் இழுத்துக்கொண்டு விட்டது.. தே நீர் இடவேளையோடு கிளம்பி விடுவார்கள் போல நினைத்தேன்.. போகவில்லை… சீட் போட்டு வைத்து விட்டு , தேனீர் அருந்தி  விட்டு , மீண்டும் அமர்ந்து கடைசி வரை இருந்தனர

 

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

அன்புள்ள ஜெயமோகன்

 

குமரகுருபரன் விஷ்ணுபுரம் அரங்கு ஆழமானதாக இருந்தது. ஏறத்தாழ எல்லாருமே நன்றாகப் பேசினார்கள். அருணாச்சலம் மகராஜன் அவர்களை நான் இப்போதுதான் கேட்கிறேன். புல்டோசர் போல இலக்கியத்தின் மையத்தில் இறங்கி சுற்றிலும் சுழல்பவர் என்று ராஜகோபாலன் சொன்னார் முக்கியமான பேச்சு அவருடையது

 

பி.ராமன் அவர்களின் பேச்சுதான் உச்சம். மிகச்சிறப்பான பேச்சு. பலவிஷயங்களைத் தொட்டுச்சென்ற பேச்சு அது. இன்றைய கவிதை சந்திக்கும் அறைகூவல் என்பது செறிவாக இருப்பது. தமிழ்க்கவிதை யாப்பை உதறி அதை அடைந்தது. மலையாளம் யாப்பு வழியாக  அதை அடைந்தது என்றார் அற்புதமான ஒரு கோணம் அது. தமிழ்க்கவிதையின் பகடிகளைக்கூட அவர் மிகச்சரியாகப் புரிந்துகொண்டிருப்பது கவிதை ஓர் உலகமொழி என்பதைக் காட்டியது

 

சிவராமன்

 

அன்புள்ள ஜெ

 

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விழா பற்றி எழுதியிருந்தீர்கள். நான் சென்னையில் நிகழும் பெரும்பாலான இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொள்பவன். அவர்களில் உங்கள் நிகழ்ச்சிக்கு வராதவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஒரு குழுதான். மேலதிகமாகக் கொஞ்சபேர் உயிர்மை, சாரு கூட்டங்களுக்குச் செல்வார்கள். அவர்கள் வேறு கூட்டங்ககளுக்குச் செல்வதில்லை. மற்றபடி இலக்கியக்கூட்டங்களுக்கு வருபவர்களில் பலர் அரசியல்சார்ந்த கண்ணோட்டம் கொண்டவர்கள். நண்பர்களின் குழுவாகச் செயல்படுபவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உங்கள்மேல் காரணம் புரியாத காழ்ப்புதான்.

 

அதற்கான காரணம் என்னவென்று என்னைப்போன்ற வாசகர்கள் எளிதாக உணரமுடியும். அவர்கள் எல்லாருமே தங்களை இலக்கியவாதிகள் என நினைப்பவர்கள். ஆனால் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றால் பொருட்படுத்தும்படி ஏதுமிருக்காது. என்ன படித்திருக்கிறார்கள் என்றால் என்னைப்போன்ற வாசகர்கள்கூட அவர்களை மதிக்கமாட்டார்கள். உங்கள் தீவிரமும் சாதனைகளும் உங்களைச் சூழ்ந்திருக்கும் வாசகர்களின் வாசிப்புத்தீவிரமும் அவர்களை பயமுறுத்துகிறது. அவர்கள் உங்களைக் கடுமையாக திட்டுவார்கள். அதன்பின் உங்கள் விழாவுக்கெல்லாம் வர அவர்களுக்கே சரியாகப்படாது.

சௌந்தர்

அதோடு உங்கள் வாசகர்களை மடையர்கள் என்பார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியும் அங்கே வரும் வாசகர்களிடம் இருக்கும் இருக்கும் இலக்கிய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் தங்களிடமில்லை என்று. இவர்கள் பெரும்பாலும் குடிக்க்கும்பொருட்டு கும்பல் சேர்பவர்கள். சினிமாவில் நுழைய விரும்பி இலக்கியம் பேசுபவர்கள். பலர் சினிமாவிலோ இலக்கியத்திலோ ஒன்றுமே சாதிக்கமுடியாதவர்கள். ஆகவே பேசிப்பேசி வீணாய்ப்போகிறவர்கள்.

 

உங்கள் இந்த நிகழ்ச்சியில் வாசகர்களிடமிருந்து எழுந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவர்கள் எவ்வளவு படித்திருக்கிறார்கள், எவ்வளவு யோசித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டின. மேடையிலிருந்தவர்கள் அளவுக்கே விஷயம்தெரிந்தவர்கள் அரங்கில் இருந்தார்கள். இது மற்ற கூட்டங்களில் இருப்பதில்லை. இதையெல்லாம் இழிவுசெய்து பேசுபவர்கள் அங்கே உங்கள் கூட்டங்களில் வந்து அமரமுடியாது. அவர்களுக்கே அவர்கள் முன்வைக்கும் வார்த்தைகளில் நம்பிக்கை போய்விடும். ஆகவே தங்கள் பிரமைகளை காத்துக்கொள்ளவே முயல்கிறார்கள்.

 

சும்மா மாறுவேஷம் போட்டுக்கொண்டு சென்னையில் சில இலக்கியக்கூட்டங்களுக்கு வாருங்கள் உண்மை தெரியும்

 

அருண்

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் குமரகுருபரன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். உங்களிடம் நூலில் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். நிகழ்ச்சி அறிவாந்த அலைகளை உருவாக்குவதாக இருந்தது. அங்கே பேசப்பட்டவற்றை எல்லாம் என்னால் யோசித்து அடுக்கிக்கொள்ள ரொம்பநாள் ஆகும். ஒரு வருஷத்திற்கான இலக்கியவிவாதம் அங்கேயே நிகழ்ந்ததுபோல் இருந்தது

 

நான் யோசித்துக்கொண்டு வந்தேன். யதார்த்தவாதம் அசோகமித்திரனில் ஓர் உச்சத்தை அடைந்தது. ஆனால் அதுதான் அவருடைய லிமிட்டேஷன். அவர் பெரிய உருவகங்களையோ பெரிய கனவுகளையோ உருவாக்கவில்லை. அசோகமித்திரனை முன்னுதாரணமாகக் கொள்பவர் மைனர் அசோகமித்திரனாகவே ஆகமுடியும். அவரைக் கடந்துசெல்பவரே உருப்படியாக எழுதமுடியும். விஷால்ராஜாவின் பேச்சும் பதில்களும் மிக ஆழமானவையாக இருந்தன

 

ராஜேந்திரன்

 

 

அன்புள்ள ஜெ,
இத்துடன் 2019ம் ஆண்டு விஷ்ணுபுரம் குமரகுருபரன்  விருது விழா புகைப்பட தொகுப்பை இணைத்துள்ளேன்

https://photos.app.goo.gl/oJLp6pB7xbrjMjGt5

அறிவழகன்
சென்னை.

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது விழா 2019 லஓஸி

ஜெவுடன் ஒரு நாள்! லஓசி

 

முந்தைய கட்டுரைவெண்முரசு புதுவை கூடுகை – ஜுன் 2019
அடுத்த கட்டுரைஇடதுசாரிகள் -கடிதம்