அஞ்சலி: கிரீஷ் கர்நாட்

கிரிஷ் கர்நாடை நான் 1986ல் காசர்கோடு திரைப்படவிழாவில் அவர் நடித்த, இயக்கத்தில் பங்கெடுத்த வம்சவிருக்ஷா சினிமா திரையிடப்பட்டபோது சந்தித்தேன். விருந்தினராக வந்திருந்தார். அந்த சினிமா பற்றியும் அதன் பின்னணி பற்றியும் சுருக்கமாகப் பேசினார். கேள்விகளுக்குப் பதிலளித்தார். நான் அதைப்பற்றி ஒரு கேள்விகேட்க அதற்கு பதில் சொன்னார். என்ன கேள்வி என எனக்கு நினைவில்லை. ஆனால் அவர் ஜிப்பா அணிந்து தடித்த கண்ணாடிபோட்டு பேராசிரியரின் தோரணையில் இருந்தார்.

நிகழ்ச்சி முடிந்தபின் கன்னடத்தின் முக்கியமான கவிஞரும் கல்லூரி ஆசிரியருமான வேணுகோபால் காஸர்கோடு அவருடன் பேசிக்கொண்டிருக்க நான் அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்தேன். அறிமுகம் செய்துகொள்ளவில்லை. பின்னர் 1994 ல் எனக்கு சம்ஸ்கிருதி சம்மான் விருது கிடைத்து டெல்லி சென்று இண்டியா இண்டர்நேஷனல் செண்டரில் தங்கியிருந்தபோது அவரும் அங்கே தங்கியிருந்தார். அவரை வராந்தாவில் பார்த்த அருண்மொழி “ஆ! கிரீஷ் கர்னாட்!” என ஓடிப்போய் அறிமுகம் செய்துகொண்டாள். நானும் அறிமுகம் செய்துகொண்டு பேசினேன்

அதன்பின் இருமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன். இரண்டுமே டெல்லியில், இலக்கிய கருத்தரங்குகளில். அப்போது அவர் இலக்கியப் படைப்பாற்றலை இழந்து கருத்தரங்கப்பறவையாக உலகம் முழுக்கப் பறந்துகொண்டிருந்தார். வணிகசினிமாக்களில் வில்லனாகவும் அப்பாவாகவும் நடித்துக்கொண்டுமிருந்தார். மிகச்சுமாரான நடிகர். தனிப்பட்ட முறையில் மெல்லிய குரலில் பேசும் உள்ளடங்கிய பழக்கவழக்கம் கொண்ட மனிதர். பெரியமனிதத்தோரணை எப்போதும் இருக்கும்.

யூ.ஆர்.அனந்தமூர்த்தி, பி.வி.காரந்த், கிரீஷ்கர்நாட் மூவரும் ஒரு குழுவாகவே செயல்பட்டவர்கள். காங்கிரஸ் மேலிடத்துடன் அணுக்கமான உறவுடன் இருந்தனர். ஆகவே இந்தியாவில் எழுத்தாளர்கள் அடையக்கூடிய அங்கீகாரங்கள், பதவிகள் அனைத்தையும் அடைந்தனர். அரசுசார் அமைப்புகள் அனைத்தின் ஆதரவையும் பெற்றனர். இவர்களில் அனந்தமூர்த்தி இந்தியாவின் இலக்கியமேதைகளில் ஒருவர். இந்திய நவீனத்துவத்தின் கூரிய முகம். பிற இருவரும் குறிப்பிடத்தக்க படைப்பாளிகள்தான், ஆனால் அவர்களின் தகுதிக்குமீறி அங்கீகாரம் பெற்றவர்கள்.

குறிப்பாக கர்நாட் பெற்றிருக்கும் விருதுகள் [பத்மபூஷண், ஞானபீடம்] போன்றவை அவர் எழுதிய ஆக்கங்களை வாசித்திருப்பவர்களுக்குத் திகைப்பையே அளிக்கும். கர்நாட் எழுதிய நாடகங்களில் நாகமண்டலா, ஹயவதனா இரண்டும் இந்தியாவின் சிறந்த நாடகங்களின் வரிசையில் வருபவை என்பதில் ஐயமில்லை. தலதண்டே அரங்கக் கட்டமைப்பு கொண்ட நாடகம். பிறநாடகங்கள் அனைத்துமே அன்றன்றைய பிரபல அரசியல்கருத்துக்களை நாடக வடிவில் சமைத்தவை. செயற்கையானவை. டெல்லி உயர்வட்டத்தின் போலிமுற்போக்குக்கான சமையல்கள் அவை. கலைத்தன்மையோ, தரிசனமோ அற்றவை.

நாகமண்டலா இந்திய நாடகங்களில் ஒரு முன்னோடி முயற்சி. உருவகரீதியாக கவித்துவமானது. நாடகத்தின் மொழியும் கட்டமைப்பும் செறிவானவை. நாட்டார் கதை ஒன்றை மறுஅமைப்பு செய்யும் கர்நாட் அதனூடாக காமத்தின் வெவ்வேறு உளவிளையாட்டுக்களைச் சென்று தொடுகிறார். பாம்பு பெண்ணைப் புணர்ந்துவிட்டுச்செல்வது இந்தியாவெங்கும் உள்ள தொன்மம். அதை இந்தியாவின் தொன்மமாகவும் ஃப்ராய்டியக் குறியீடாகவும் தொடச்சியாக விரித்துச்செல்கிறது நாகமண்டலா

ஒப்புநோக்க நாகமண்டலாவை விட சிக்கலானதும் நுட்பமானதும் என ஹயவதனாவைச் சொல்லலாம். இந்தியாவின் எப்போதைக்குமுரிய முரண்வினாவான உடல் – உள்ளம் என்னும் சிக்கலைப் பேசியது இது. தாமஸ் மன்னின் மாற்றிவைக்கப்பட்ட தலைகளின் செல்வாக்குகொண்டது. எனக்கு ஹயவதனாவே கர்நாடின் சிறந்த ஆக்கம் என்னும் எண்ணம் இருந்தது. சுந்தர ராமசாமி ஹயவதனா தேவையற்ற அறிவார்ந்த பாவனைகொண்டது, நாகமண்டலாவே சிறந்தது என கூறினார்.

இந்த இரு நாடகங்களால் மட்டும் இந்தியாவின் மாபெரும் இலக்கிய ஆசிரியர்களின் நிரையில் கர்நாடை வைக்க முடியாது. கர்நாடகத்தின் இலக்கியமேதைகளான கோகாக், குவெம்பு, சிவராம காரந்த், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் , யூ.ஆர். அனந்தமூர்த்தி, [ஞானபீடம் அளிக்கப்படாத] எஸ்.எல்.பைரப்பா ஆகியோரின் வரிசையிலும் அவரை வைக்கலாகாது.அவர் பலபடிகள் கீழே நிற்பவர். இந்நாடகங்களின் இலக்கியமதிப்பையே நான் மதிப்பிடுகிறேன், ஏனென்றால் அவர் இலக்கியத்திற்கான ஞானபீடப்பரிசையே அந்நாடகங்களுக்காகப் பெற்றார். ஹயவதனா, நாகமண்டலா ஆகியவை தமிழில் வெளிவந்துள்ளன.

கிரீஷ் கர்நாட் கன்னட கலைப்பட இயக்கத்தின் தொடக்கத்தில் செயல்பட்டவர். இன்று நோக்குகையில் அவருடைய தனிப்பட்ட சாதனை என கலைப்படங்களில் எஞ்சுவது காடு மட்டுமே. அதுவும் யதார்த்த சினிமாவே ஒழிய ஆழமான வாழ்க்கை வினாக்களோ அதைச்சார்ந்த காட்சிப்படிமங்களோ கொண்டது அல்ல. வம்சவிருக்ஷா அவர் பி.வி.காரந்துடன் இணைந்து இயக்கியது. அதிலிருப்பது பி.வி.காரந்தின் பாணிதான்.

தபலியு நீனாடே மகனே அன்று கவர்ந்த படம். ஆனால் இன்று அது அன்றைய நவீனத்துவ கன்னட எழுத்தாளர்களின் பொதுக்கரு என படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய மனைவி. அல்லது அங்கு சென்று மீளும் மனைவி. ஒப்புநோக்க அந்த கருவை அவஸ்தேயில் அனந்தமூர்த்தி உள்ளுணர்வுடனும் கலையழகுடனும் கையாண்டிருக்கிறார். கர்நாட் அதை வெறுமே சமூக விமர்சன வாய்ப்பாகவே கருதுகிறார்.கர்நாட் இயக்கிய பிற படங்கள் செயற்கையான சோதனைமுயற்சிகள், உள்ளீடற்றவை. மிகப்பரிதாபகரமான உதாரணம் பெரும்செலவில் எடுக்கப்பட்ட ‘உத்ஸவ்’.

கிரீஷ் கர்நாட் கலைசினிமா, செவ்வியல் நாடகம் இரண்டிலும் தொடர்ந்து ஈடுபட்டவர் என்றவகையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர். கர்நாடகத்தின் கலைப்பட இயக்கம், நாடக இயக்கம் ஆகிய இரண்டிலும் அவருடைய பங்களிப்பு முக்கியமானது. ஹயவதனா, நாகமண்டலா ஆகியவை முதன்மையான ஆக்கங்கள். ஆனால் தன் கலையில் முழுமூச்சாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டவரோ தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் நோன்பு கொண்டவரோ அல்ல. கலை கோரும் அர்ப்பணிப்பை அவர் அளிக்கவில்லை. அதிகாரத்தொடர்புகளிலும் பதவிகளிலும் இருந்த நாட்டம், வணிகசினிமாவின் உலகியல் லாபங்களை நோக்கிச் சென்றமை ஆகியவை அவரைச் சிதறடித்தன. ஆகவே மிகப்பெரிய அங்கீகாரங்களைப் பெற்றாலும் அந்த அடையாளங்களுக்கு பலபடிகள் கீழே நிற்கும் ஒரு படைப்பாளியாகவே எஞ்சினார்.

கிரீஷ் கர்நாடுக்கு அஞ்சலி.

அனந்தமூர்த்தியின் அரசியல்

முந்தைய கட்டுரைஅஞ்சலி : கிரேஸி மோகன்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65