அஞ்சலி : கிரேஸி மோகன்

கிரேஸி மோகனை நான் கமல் அளித்த ஒரு விருந்தில்தான் முதலில் சந்தித்தேன். முதல்நிமிடத்திலேயே உற்சாகமாகப் பேசத்தொடங்கினார். அரை மணிநேரத்திலேயே நண்பர்களாகிவிட்டோம். அவரிடம் என்னை அணுகச்செய்தது அவருக்கு இருந்த தமிழறிவு. வைணவ இலக்கியங்களில் குறிப்பிடும்படியான பயிற்சி அவருக்கு இருந்தது. பழந்தமிழ் இலக்கியங்களில் தீராத மோகமும், செய்யுள் இயற்றும் முனைப்பும் கொண்டிருந்தார். அவர் விளையாட்டாக இயற்றிய வெண்பாக்களை எனக்கு அனுப்புவதுண்டு

“நீங்க பிராப்பர் சென்னைதானா?” என்று ஒருமுறை கேட்டேன். “பிராப்பர் மைலாப்பூர். அசோக்நகர் போனாலே ஹோம்சிக்னெஸ் வந்திரும்” என்றார். அவருடைய நகைச்சுவை இது. சற்றே மிகையாக்கி, சற்றே மாறுபட்ட கோணம் அளித்து பார்ப்பது. “கே.பி.சுந்தராம்பாள் என்னா குரல். ரேடியோவை நிப்பாட்டினாகூட கேக்குமே” என்னும் வரியை நினைத்துக்கொள்கிறேன். சகட்டுமேனிக்கு வெற்றிலை போடுவார். “திடீர்னு கவலை வந்திரும். இப்டி மானாவாரியா சீவல்போடுறோமேன்னு. நடுராத்திரிலே எந்திரிச்சு ஒக்காந்திருவேன்” “அப்றம்?” என்றேன். “நடுராத்திரியிலே கவலை வந்தா என்ன பண்றது?சீவல் போடுறதுதான்” சாதாரணமாக எல்லா பேச்சிலுமே சொல்வேடிக்கைகள் வழியாகச் சென்றுகொண்டே இருப்பது அவருடைய வழக்கம். மிக இயல்பாக நாம் அணுக்கமாக உணரக்கூடிய மனிதர்

அவருடைய அப்பா நான் பார்க்கும்காலம் வரை இருந்தார். விஷ்ணுபுரம் வாசித்திருப்பதாகச் சொன்னார். மோகன் என்னைத் தன் நாடகங்களுக்கு தொடர்ந்து அழைத்திருக்கிறார். செல்லமுடியவில்லை. அவருடைய நாடகங்களை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அவற்றை நாடகங்களில் ஒருவகை எனலாம். பழைய சம்ஸ்கிருத நாடக மரபில் அதை பிரஹசனம் என்பார்கள். தமிழில் நேரடியாக மொழியாக்கம் செய்வதென்றால் கேலிக்கூத்து. ஆங்கிலத்தில் farce . நாடகம் என்னும் கலையின் ஒரு கேளிக்கை வடிவம் அது. ஒருவகையில் கீழ்நிலை வடிவம் அது என்பது என் எண்ணம். ஆனால் அத்தகைய நாடகங்கள் உலகமெங்கும் உண்டு அவற்றில் செவ்வியல் ஆக்கங்கள்கூட உண்டு. பிரெஞ்சு நாடகாசிரியர் மோலியேரின் நாடகங்கள் உதாரணம்.

இந்தப்பாணி நாடகங்கள் பலவகை. தருணங்களால் வெளிப்படும் நகைச்சுவை. உடல்நகைச்சுவை, மொழிநகைச்சுவை. கிரேஸி மோகனுடையது மொழிநகைச்சுவை. கதைமாந்தர் நின்று மாறிமாறிப் பேசிக்கொண்டிருப்பார்கள். பேச்சுநகைச்சுவை நிகழ்ச்சி [stand up comedy] யின் நாடகவடிவம் என அவற்றைச் சொல்லலாம். பேச்சுநகைச்சுவை பெரும்பாலும் சொற்களின் சாத்தியக்கூறுகளால் ஆனது. சொற்களை தவறாகபுரிந்துகொள்ளுதல், இடம் மாற்றிப் பயன்படுத்துதல். திரித்தல் ஆகியவற்றினூடாக செயல்படும் நகைச்சுவை.

இத்தகைய நகைச்சுவை அறிவார்ந்த சூழலில் பெரும்பாலும் நூல்கள் சார்ந்ததாக இருக்கும். நிகழ்த்துகலைகளில் நேரடியாகவே அதன் ரசிகர்கள் பயன்படுத்தும் மொழியை கொண்டு விளையாடுவதாக அமையும். கிரேஸி அவருடைய ரசிகர்களான சென்னை நடுத்தரவட்டாரத்தினரின் மொழியைக்கொண்டு விளையாடிய நகைச்சுவையாளர்.ஆனால் அமெரிக்க பேச்சுநகைச்சுவை நிகழ்ச்சிகளில் உள்ள ஆபாச அம்சம், நேரடியாக தாக்கும்தன்மை, மறைமுக இனவாதம் ஆகியவை அவருடைய நகைச்சுவைநிகழ்ச்சிகளில் இருக்காது. ஒப்புநோக்க அமெரிக்காவின் புகழ்பெற்ற பேச்சுநகைச்சுவையாளர்களை விட ஒருபடி மேலானவர் அவர் என்பதே என் எண்ணம். ஆயினும் அவருடைய நாடகங்கள் என் ரசனைக்கு உகந்தவை அல்ல.

அவருடைய சினிமாக்களிலும் அவர் வெளிப்படுத்தியது அந்தத் திறனைத்தான். ஆனால் சினிமாவில் அதை சரியான முகபாவனைகளுடன் நல்ல நடிகர் வெளிப்படுத்தவேண்டும். ஆகவேதான் அவர் கமலுடன் செய்த படங்களில் மட்டும் அது வெற்றிபெற்றது. கமலும் அவரும் அவ்வகையில் சரியான இணை. சாதாரணமான உரையாடல்களில்கூட மாறிமாறி ’கலாய்த்தபடியே’ செல்வார்கள். இலக்கிய உட்குறிப்புகளும் வந்துகொண்டே இருக்கும். ‘உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதைன்னா ஒப்பிக்காம ஒரிஜினலாவா சொல்ல முடியும்?’ என்பதுபோன்ற விளையாட்டை ஔவையின் கவிதையை தெரிந்தவர்களே ரசிக்க முடியும்.

கிரேஸி மோகன் ஆரோக்கியமாகவே இருந்தார். எடையெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் சொகுசானவர். கூடுமானவரை உடலை அசைக்காதவர். அவருடைய மறைவு சற்று முந்தியே நிகழ்ந்தது. அவருடைய தந்தையின் நீண்ட ஆயுளுடன் ஒப்பிடுகையில் மிக முந்தி. அவருக்கு என் அஞ்சலி.

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: கிரீஷ் கர்நாட்