ராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்தது, அனேகமாக ’ஹிமகிரிதனயே ஹேமலதே’. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன் நிறுத்திவிட்டு ‘சரி, விடுங்க’ என்று சிரித்தார். ’இல்ல, நான் சிலசமயம் நினைக்கறதுண்டு, உங்க விரலை சும்மா ஒரு கிராமபோனிலே கனெக்ட் பண்ணி விட்டா அது நல்ல சுத்த சங்கீதமா கொட்டுமேன்னு…’. ‘தெரியறது. வெரலிலே சங்கீதம் இருக்கு, நாக்கிலே இல்லேங்கிறீங்க’ பாலசுப்ரமணியன் மீண்டும் புன்னகை செய்தார்.
’நான் சாந்திமுகூர்த்தம் அன்னிக்கு சாரதா கிட்டே முதல்ல என்ன கேட்டேன் தெரியுமோ’ என்றார் ராமன். ‘ஒரு பாட்டு பாடறேன், கேக்கறியான்னு. சரின்னா. அதோட சரி. அதுக்குமேலே பாடறேன்னு சொன்னா ஒருமாதிரி முகத்தைக் காட்டுவா பாருங்க. எவ்ளோ பெரிய மேதைக்கும் தொண்டை அடைச்சுண்டுரும்’ ராமன் சிரிக்க பாலசுப்ரமணியன் சேர்ந்துகொண்டார்.
‘ஆனா நான் சின்ன வயசிலே பாடுவேன்’ என்றார் ராமன் ‘மறுபடியும் ஸ்மைல் பண்றேள். பாடத்தெரியாதவ எல்லாரும் அப்டித்தான் சொல்லுவா,என்ன?’ என்றார். ‘என்னதான் சிரிப்போ அப்டி…அதைப்பாக்கறச்ச பயம்மா இருக்கு. எங்க அரசியல் கிரசியலுக்கு போயி டெல்லிக்குவந்து ஒக்காந்துண்டுவீங்களோன்னு…’ பாலசுப்ரமணியன் அதற்கு வாய்விட்டு சிரித்தார். கடல்காற்றில் அவரது முன்மயிர் பறந்தது. அவரது நீளமான கல்கத்தா ஜிப்பாவும் வேட்டியும் படபடக்க அவர் பறக்கத்துடிப்பதுபோல தோன்றியது. ராமன் பின்னால் எழுந்து பறந்த தன் மேல்துண்டை இழுத்து அக்குளில் செருகிக்கொண்டார்.
மதியநேரம் காந்திமண்டபத்தில் சில வடநாட்டு காதல் ஜோடிகளைத்தவிர எவருமில்லை. ராமன் சற்று எம்பி கைப்பிடிச்சுவரில் கடலுக்கு பக்கவாட்டை காட்டியதுபோல அமர்ந்து சுவரில் சாய்ந்து காலை மேலே தூக்கி வைத்துக்கொண்டார். பாலசுப்ரமணியன் சுவரைப்பற்றியபடி நின்று கீழே பார்த்தார். கடல் கண்கூசும் வெளிச்சமாக அலையடித்துக்கொண்டிருந்தது. சூரிய பரப்பில் தெரியும் புள்ளிகள் போல நாலைந்து பெரிய மீன்பிடிப்படகுகள் சென்றுகொண்டிருந்தன.
‘அந்த பாறையிலயா விவேகானந்த மண்டபம் வரப்போறது?’ என்றார் ராமன் கைகளை நெற்றிமேல் வைத்து ஒளியில் மிதந்து அலைபாய்வதுபோல தெரிந்த இரட்டைப்பாறைகளை நோக்கியபடி. ‘ஆமா… அந்தப்பக்கம் இருக்கிற உயரமான பாறையிலே.. சாங்ஷன் ஆயிட்டுதுன்னு கேள்விப்பட்டேன். இங்க காந்தி மண்டபம் வந்ததே நேக்கு பிடிக்கலை. கட்டிண்டே இருக்காங்க. கடற்கரைன்னா அது ஏன் கடற்கரையா இருக்கக்கூடாது? ஏன் அதை யாருமே யோசிக்கிறதில்லை’
‘ஏன் நல்லாத்தானே கட்டியிருக்கா?’ என்றார் ராமன். ’அங்க ஒரு கோயில் இருந்தா நல்லாத்தான் இருக்கும். நீங்க கல்கத்தா போகணும். பேலூர் மடத்திலே விவேகானந்தர் இருந்த ரூமுக்குபோறச்ச நான் கண்ணுலே தண்ணி விட்டுட்டேன். என்ன ஒரு மனுஷர். அந்த மொகமிருக்கே…. அதிலே தெரியற கம்பீரத்துக்கு அவரு உலகத்துக்கே ராஜாவா இருந்தாலும் பத்தாது..’ ராமன் சொன்னார். ‘இப்ப அந்தப் பாறையிலே என்ன இருக்கு?’
’அங்கயா? அதில ஒரு சின்ன கோயில் மாதிரி ஒண்ணு இருக்கு. வருஷத்துக்கு நாலுவாட்டி அம்மன் கோயிலிலே இருந்து போயி பூஜைசெய்வாங்க’ ‘என்ன மூர்த்தி?’ ‘மூர்த்தின்னு ஒண்ணும் இல்லே. பாறையிலே காலடித்தடம் மாதிரி ஒண்ணு இருக்கு. சும்மா ஓவல் சைஸிலே ஒண்ணரைசாண் நீளத்திலே ஒரு சின்ன பள்ளம். அது கன்யாகுமரி தேவி சுசீந்திரம் தாணுமாலயனை கல்யாணம்பண்ணிக்கணும்னு ஒத்தைக்காலிலே நின்னதோட தடம்னு நம்பறாங்க. அங்க போயி பொங்கல் போட்டு படைச்சு கும்பிட்டுட்டு வருவாங்க. பௌர்ணமி தோறும் படகிலே போயி வெளக்கு வைக்கிறதுண்டு’
’அப்டியா?’ என்றார் ராமன் ஆவலாக ‘போய்ப்பாக்க முடியுமா? ‘போகலாம்’ என்று பாலசுப்ரமணியன் இழுத்தார்.’கட்டுமரத்திலே போகணும். உங்களுக்கு அதெல்லாம் சரிப்படாது’ . ’கொமட்டும் இல்ல?’ என்று உடனே அந்த யோசனையை கைவிட்டார் ராமன் ’கேக்கவே நல்லா இருக்கு. ஒரு கன்னிப்பொண்ணு ஒத்தக்காலிலே யுகயுகமா தபஸ் பண்றா… அவளோட தபஸோட சின்னமா அந்த காலடித்தடம் மட்டும் அங்கியே பதிஞ்சிருக்கு’ ’அதுமாதிரி எல்லா பாறைகளிலேயும் விதவிதமா தடங்கள் இருக்கு. பாறையிலே உள்ள சாஃப்டான மெட்டீரியல்ஸ் மழையிலயும் காத்திலயும் கரைஞ்சு போறதனால வர்ர தடம்..’என்றார் பாலசுப்ரமணியன்
ராமன் அதைக் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. பின்னர் ‘எதுக்கு அப்டி ஒரு தவம் பண்ணினா? வெறும் ஒரு புருஷனுக்காகவா? காலாகாலமா அவன் பொறந்து வந்து அவளை கட்டிண்டுதானே இருக்கான். அப்றம் எதுக்கு தவம்?’ அவர் உள்ளூர சமன் குலைந்து விட்டதை பாலசுப்ரமணியன் உணர்ந்தார். ‘ஏன் பாலு, எதுக்கு ஒத்தைக்காலிலே நிக்கணும்?’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அதானே கஷ்டம்…’ என்றார். ‘இல்ல அவளோட மத்தக்காலு அந்தரத்திலே நின்னுட்டிருந்தது. நடராஜனோட எடுத்த பொற்பாதத்தை விட இதுதான் உக்கிரமா இருக்கு. காத்தில தூக்கி நிக்கிற ஒத்தைக்கால். எங்கியும் அதை வைக்க எடமில்லாதது மாதிரி…அத எங்கியாவது செலையா செஞ்சிருக்காங்களா?’
‘இல்லேன்னு நினைக்கறேன்’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன்‘நடராஜரோட ஒத்தைக்கால் திரும்ப தரையிலே பட்டுதுன்னா ஒரு ஊழி முடிஞ்சு அண்டசராசரங்களும் அழிஞ்சிரும்னு கதை…. அம்பாளோட எடுத்தபாதம் பட்டா என்ன ஆகும்?’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல? ‘ என்றார் ராமன். தனக்குள் ஆழ்ந்து கடலையும் பாறையையும் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னையறியாமலேயே ‘ஹிமகிரி தனயே’ என்று முனகி தன்னுணர்வு கொண்டு ‘மன்னிச்சுக்கங்கோ. தெரியாம வந்துடுத்து’ என்றார். பின்பு ‘நேரா கழுகுமலைக்கு போலாமா, வரேளா? சுப்பு அண்ணா அங்க பாடறார். வர்ரியாடான்னு காயிதம் போட்டிருக்கர்’ என்றார். ‘பாத்துட்டு சொல்றேன்’ என்றார் பாலசுப்ரமணியன்
‘சுப்பு அண்ணா எனக்கு குருவழியிலே நெருக்கம் தெரியுமோ? நெருக்கம்னா ஒண்ணுவிட்டு ரெண்டுவிட்டு அப்டி பலது விட்டு ஒரு சொந்தம்னு வைங்கோ. அதாவது அவரோட குருவோட குரு என்னோட தாத்தாவுக்கு குரு. அவரு பேரு விளாக்குடி கிட்டாவய்யர். மகாஞானின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அவரு தியாகையர் கிட்டயே சங்கீதம் கத்துண்டவர்னு சொல்வா. அதைப்பத்தி தெரியலை. மன்னார்குடி திருவையாறு திருவாரூர் பக்கம் எல்லா குருபரம்ரையையும் நேரா கொண்டுபோயி அங்க இணைச்சுக்கிடறதுண்டு’
‘அப்டியா?’என்றார் பாலசுப்ரமணியன் பொதுவாக. பேச்சை இசையை நோக்கிக் கொண்டுசெல்வது அவருக்கு அப்போது உகக்கவில்லை. ஆனால் பிறரது பேச்சை தடுக்கவோ திருப்பவோ கூடியவர் அல்ல அவர். ‘தாத்தாபேரு சேஷய்யர். அவர்தான் எனக்கு முதல் குருன்னு சொல்லணும். அவரு பெரிய கடல். சங்கீதஞானசாகரம்னே அவருக்கு பட்டப்பேரு இருந்தது. அப்பல்லாம் சங்கீதவித்வான்களுக்கு பெரிசா ஒண்ணும் பணம் கெடைக்காது. மடத்திலே கூப்பிட்டு இந்தாடான்னு ஏதவது குடுத்தா உண்டு. ஆனா சிருங்கேரி வரை போய்வர்ர செலவே டபுள் ஆயிடும். மத்தபடி எங்கயும் கதாகாலட்சேபம்தான். அதுல இருக்கிறவாளுக்குத்தான் துட்டு. வருஷத்திலே எரநூறு கதை வரை நடத்தறவா உண்டு. தெரியுமே எங்கப்பாகூட கதாகாலட்சேபம்தான் பண்ணிண்டிருந்தர்…’
‘ஆனா எங்க தாத்தா சங்கீத வித்வானா மட்டும்தான் இருந்தர். கையிலே கொஞ்சம் நெலமிருந்தது. குடியானவங்க ஒழுங்கா குத்தகை அளந்தகாலம்ங்கிறதனால பஞ்சமில்லை. ஒண்ணையும்பத்தி கவலைப்படாம காவேரியிலே மூணுவேளை குளிச்சுட்டு சந்தியாவந்தனம் சாதகம்னு பண்றது, கோயிலிலே கொஞ்சநேரம் சாயங்காலம் அவருகேக்க அவரே பாடிக்கறதுன்னு நெறைவா இருந்தார். எப்பவாச்சும் தஞ்சாவூர் கும்மோணம்னு கச்சேரிக்கு கூப்பிடுவா. வில்வண்டியிலே கூட்டிண்டுபோய்ட்டு கொண்டாந்து விட்டிருவா. பெரும்பாலும் ஒரு சால்வை. ரொம்ப பெரிய எடம்னா ஒருபவுன்ல ஒரு தங்கக் காசு… அடுத்த கச்சேரி வரை அதைப்பத்தியே பேசிண்டிருப்பர். அங்க இப்டி பாடினேன் , இப்டி எடுத்தேன்னு திருப்பித்திருப்பி பாடிக்காட்டுவர்.
’அவர நான் பாக்கறச்ச அவருக்கு எழுபது தாண்டியிருக்கும். அவரோட ஏழு குழந்தைகளிலே எங்கப்பாதான் கடைக்குட்டி. அப்பா பொறக்கறச்ச தாத்தாவுக்கு நாப்பத்தெட்டு வயசாம். என்னோட ஞாபகத்திலே எப்பவும் அவரு திண்ணையிலே ஜமக்காளத்தை போட்டு சாய்ஞ்சு ஒக்காந்திண்டிருப்பர். பக்கத்திலே கூஜாலே ஜலம், பெரிய தாம்பாளத்திலே தளிர்வெத்தலை, இன்னொரு சம்புடத்திலே சீவல். கிளிமாதரி ஒரு பச்சைநெறமான மரச்செப்புலே கலர் சுண்ணாம்பு. புகையில வைக்கறதுக்கு ஒரு தகரடப்பா. பக்கத்திலே எப்பவும் தம்பூரா வச்சிருப்பர். எந்நேரமும் அவர் பக்கத்திலே ஒத்தர் ஒக்காந்திண்டிருக்கிற மாதிரி தம்புரா இருக்கும். சின்னவயசிலே மாநிறமா ஒரு சின்னப்பொண்ணு அவர் பக்கத்திலே இருந்துண்டிருக்கிற மாதிரின்னு நினைச்சுக்குவேன்
பாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார். ‘சிரிக்கவேணாம். நெஜம்மாவே தம்புரா வெக்கப்பட்டுண்டு அதிகம் பேசாத பொண்ணு மாதிரித்தான் இருக்கும். அவரு எந்நேரமும் அதிலே சுதிபாத்தூண்டே இருப்பர். சரியா அமைஞ்சதும் அதோட சேந்து மெல்ல பாடுவார். பாட்டு எப்பவுமே அவருக்காகத்தான். இப்ப சொன்னேளே, சங்கீதம் உடம்பிலே இருக்கு, கனெக்ஷன் குடுத்திடலாம்னு. அது அவருதான். அப்பல்லாம் கிராமத்து அக்ரஹாரம் சத்தமே இல்லாம இருக்கும். ரேடியோ பிளேட்டு ஒண்ணும் வரலை. அக்ரஹாரதுக்குக்கு நடுவிலேயே ஒரு ஓடை போகும். காவேரித்தண்ணி. அந்த சத்தம் எப்பவும் கேட்டுண்டே இருக்கும். அந்த சுருதிய தம்புராவிலே பிடிப்பர். அதிலே சேந்து பாடுவர். மத்தியான்னம் மாமரத்திலே குயில் வந்து ஒக்காந்துண்டு பாடும். அந்த நாதத்தோட சுருதிய பிடிப்பார். வெளியே கேக்கிற எல்லா சத்தமும் அவருக்கு சங்கீதம்தான். அவருக்குள்ள ஓடீண்டே இருக்கிற சங்கீதத்தோட எல்லாமே இணைஞ்சிரும், ஊர்த்தண்ணியெல்லாம் காவேரியா போய்சேந்துக்கற மாதிரி. சரி, காவேரிதானே ஊருக்குள்ளே தண்ணியாகவும் வந்துண்டிருக்கு…’
‘ஊருக்குள்ளே அவருக்கு புண்ணியாத்மான்னுதான் பேரு. குழந்தை பிறந்தா தூக்கிண்டு வந்திருவா. ‘அண்ணா உங்க கையாலே தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கோ’ன்னு நிப்பாங்க. அவரும் குழந்தையை மடியிலே வாங்கி வச்சுண்டு ’ராரா தேவாதி தேவா’ன்னு ஒரு நாலுவரி பாடி திருப்பி குடுப்பர். குழந்தையோட தாயார்காரி நின்னாள்னா கண்ணிலே ஜலம் விட்டு முந்தானையாலே முகத்த பொத்திண்டுடுவா. போன ஜென்மத்திலே சரஸ்வதிக்கு குடம்குடமா தேனபிஷேகம் பண்ணியிருக்கார்னு சொல்லுவா. ஆனா இந்த ஜென்மத்திலே தொடர்ச்சியா அறுபது எழுபது வருஷம் சரஸ்வதிக்கு தேனபிஷேகம் பண்ணியிருக்கார். கும்மோணத்திலே வேதநாராயணப்பெருமாள் கோயில்னு ஒண்ணு இருக்கு. அங்க பிரம்மனுக்கு சரஸ்வதி காயத்ரியோட தனி சன்னிதி உண்டு. வருஷா வருஷம் ஆவணி மாசம் அவரோட பொறந்தநாள் அன்னிக்கு வண்டிகட்டிண்டு அங்கபோய் தேவிக்கு தேனபிஷேகம் பண்ணிண்டு வருவார். அவருக்கு ரொம்ப முடியாமப் போனப்ப எங்க அப்பா போய் செஞ்சார். பாட்டி தவறின வருஷம் மட்டும்தான் செய்யலை
’எண்பதுவயசு வரை இருந்தர். ஒரு நோய்நொடி ஈளை இளைப்பு கெடையாது. குரலிலே கொஞ்சம் கார்வையும் நடுக்கமும் வந்ததேஒழிய அழகு குறையலை. கூன் கெடையாது. ஒத்தைநாடி ஒடம்பு. முடியில்லாத மார்பிலயும் விலாவிலயும் எலும்பு தெரியும். வயத்திலே நரம்பு சுருண்டு கெடக்கும். கடைசி வரைக்கும் சட்டை போட்டது கெடையாது. மாநிறமா இருப்பார். கண்ணு ரெண்டும் பெரிசா கோபுரச்செலைகளிலே இருக்குமே அது மாதிரி பிதுங்கி வெளியே விழுறாப்ல இருக்கும். பேசற வழக்கமே கெடையாதுன்னாலும் அவரோட மனசு கண்ணுலே தெரிஞ்சுண்டே இருக்கும். கடைசியிலே தூக்கம் ரொம்ப கம்மியாயிடுத்து. நடு ராத்திரியிலே எழுந்து ஒக்காந்துண்டு மெதுவா தம்புராவ சுதிசேத்து பாடுவார். கேட்டுதா கேக்கலையான்னு ஒரு சங்கீதம். எங்கேயோ கொண்டுபோயிடும். சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம். அந்தபாட்டைக் கேக்கறதுக்குன்னே பக்கத்தாத்திலே எல்லாம் ராத்திரி கண்முழிச்சு தூங்காம கிடப்பாங்களாம்
‘அவருக்கு கடைசியிலே கொஞ்சம் கண் தடுமாற்றமாயிடுத்து. காவேரிக்கு நானே காலம்பற கைபுடிச்சு கூட்டிட்டு போகணும். மத்தியான்னமும் சாயங்காலமும் வீட்டு முன்னாடியிலே ஓடையிலே குளிச்சுக்குவர். ஆனால் நியமநிஷ்டைகள் ஆசாரங்கள் ஒண்ணிலேயும் ஒரு குறையும் இல்லை. எல்லாம் அவருக்கு நினைச்ச மாதிரி நடக்கணும். நடக்காட்டி ஒண்ணும் சொல்ல மாட்டார். பேச்சை நிப்பாட்டிட்டு தம்பூராவ தூக்கிண்டுடுவர். அப்றம் அப்பா அம்மா எல்லாரும் வந்து கன்னத்திலே போட்டுண்டு கண்ணீர்விட்டு கெஞ்சின பிறகுதான் இறங்கி வருவர். எங்க அம்மாதான் எல்லாம் பாத்து செய்யணும். அம்மாவும் தெய்வத்துக்கு பண்றமாதிரி செய்வா.
’ஆமா, பாட்டி இருந்தள்’ என்றார் ராமன். ‘அவளை நான் சரியா பாத்த ஞாபகமே இல்லை. தாத்தாவ விட பதிமூணு வயசு கம்மி அவளுக்கு. ஆனா பாத்தா எம்பது தொண்ணூறு அதுக்கும் மேலேன்னு தோணிடும். என் சின்னவயசு ஞாபகத்திலே வத்திப்போன பசு மாதரி அவ சித்திரம் இருக்கு. முதுகு நல்லா ஒடிஞ்சு வளைஞ்சு இடுப்புக்கு மேலே உடம்பு பூமிக்கு சமாந்தரமா இருக்கும். பசுவேதான். கைய முன்னங்கால்னு வச்சுக்கிட்டோம்னா அவ நடக்கிறது பசு நடக்கிறது மாதிரியே இருக்கும். கண்ணும் மொகமும் தரையப்பாத்துண்டிருக்கும். தலயிலே கொஞ்சம் வெள்ள முடி. அத கொட்டைப்பாக்கு சைசுக்கு கட்டி வச்சிருப்பள். ஜாக்கெட் போடறதில்லை. எப்பவும் ஏதாவது ஒரு மொலை வெளியே தொங்கி கிழட்டு மாடோட அகிடு மாதரி ஆடிண்டிருக்கும். மெலிஞ்சு வத்தி ஒரு பத்துவயசு குட்டி அளவுக்குத்தான் இருப்பா. சாப்பிடுறது ரொம்ப குறைவு. காலம்பற ஒரு இட்லி. மத்தியான்னம் இன்னொரு இட்லி. சாயங்காலம் ஒரு பிடி சோறு. அதையும் உக்காந்து சாப்பிட மாட்டா. சின்ன சம்புடத்திலே போட்டு கையிலே குடுத்திடணும். அத அங்க இங்க வச்சிடுவா. எடுத்து எடுத்து குடுக்கணும். அதுக்கு நல்லது பொரி வாங்கி அவ மடியிலேயெ கட்டி விட்டுடறதுன்னு பிறகு எங்கம்மா கண்டுபிடிச்சள். அதான் சாப்பாடு…
’அவ ஒக்காந்து நான் பாத்ததே கெடையாது. எப்பவும் வீடு முழுக்க அலைஞ்சுகிட்டேதான் இருப்பள். வீட்டை விட்டு வெளியே போகமாட்டா. முற்றத்துக்கும் திண்ணைக்கும்கூட வரமாட்டா. கடைசி இருபது வருஷத்திலே புத்தி பேதலிச்சு போச்சு. எங்கப்பாவுக்கு கல்யாணமாகி மாட்டுப்பொண்ணு வர்ரப்பல்லாம்கூட நல்லாத்தான் இருந்திருக்கா. பொதுவா பேசறவ இல்ல. எல்லாத்துக்கும் ஒரு மௌனம். எங்கப்பா ஞாபகத்திலேயே அவங்கம்மா பேசி கேட்டது ரொம்ப கம்மி. வீட்டுக்குள்ள பல்லிப்பேச்சு கேட்டாத்தான் உண்டுன்னு அப்பா சொல்வர். வெறிபுடிச்சாப்ல வீட்டுவேலை செய்றதுதான் அவளோட ஒலகம். வெடிகாலைலே எந்திரிச்சு கைவெளிச்சம் வர்ரதுக்குள்ள அத்தனை பாத்திரங்களையும் கழுவி வீட்ட கூட்டிப்பெருக்கி கழுவி குளிச்சிட்டு தாத்தாவோட பூஜைக்கான ஏற்பாடுகளை செஞ்சு முடிக்கணும்.. வேலைதவிர ஒண்ணுமே தெரியாது
’எங்கம்மா வந்ததும் அதே சிக்கல்தான். வீட்டுலே ஒரு வேலை மிச்சமிருக்காது. மாட்டுப்பொண்ணு வேலைபாத்தாத்தானே நல்லா இருக்கும். ஆனா பாட்டிக்கு செஞ்சு தீக்கறதுக்கே வேலை பத்தாது.அம்மா பாட்டி பின்னாடியே அலையறதுதான் மிச்சம். அம்மாவுக்கு மூத்த அக்கா பிறந்தப்ப எல்லாத்தையும் பாத்து செஞ்சதே பாட்டிதான். அம்மா சும்மா படுத்திருந்தா போரும். ஆனா அப்பதான் சிக்கல் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சுது. குழந்தையோட அழுக்குத்துணிகளை போட்டு கழுவு கழுவுன்னு கழுவ ஆரம்பிச்சா. அப்றம் வீட்டுக்குள்ள குழந்தையோட அழுக்கு கெடந்தா ஒடனே மொத்த வீட்டையும் துடைச்சு கழுவறது. என்ன இதுன்னு ஆரம்பத்திலே தோணியிருக்கு. அவ்ளவொண்ணும் ஆசாரமான ஆளும் இல்லை. கேட்டா சரியான பதில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமா கூடிட்டே போச்சு.
’ஆறுமாசத்திலே தெரிஞ்சுடுத்து என்னவோ பிரச்சினைன்னு. அப்ப வீட்டிலே இன்னும் ஒரு தங்கச்சி கல்யாணத்துக்கு இருந்தா. இதைப்பத்தி பேசப்போய் அதுவேற வம்பாயிடும்னு அப்டியே விட்டாச்சு. அப்றம் அப்டியே பழகிப்போச்சு. மடத்துக்கு காரியஸ்தரா அப்ப நாணாவய்யர்னு ஒருத்தர் இருந்தார். தாத்தாவோட லௌகீகமெல்லாம் அவருதான் பாத்துக்கறது. ‘சரிடா, எல்லாரும் மண்ணுல ரெண்டுகாலையும் வச்சுண்டிருக்கா. அவ ஒரு கால தூக்கிட்டா. விடு.வயசு வேற ஆயாச்சு. இனிமே கொண்டுபோய் என்ன பண்றது. வேற ஒரு பிரச்சினையும் இல்லையே. அவபாட்டுக்கு இருக்கா’ன்னு சொல்லிட்டர்.
’அவ சித்தம்போக்குல இருப்பா. வெடிகாலை நாலுநாலரைக்கே எந்திரிச்சு குளிக்க ஆரம்பிப்பா. மூணுமணிநேரமாகும் குளிச்சு துவைச்சு வர்ரதுக்கு. வந்ததும் வீட்ட கூட்டி பெருக்கி துடைக்கிறது. ஒரு இண்டு இடுக்கு விடமாட்டா. சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது குளிக்கிறது. ராத்திரி வீட்டுக்குள்ள சுத்தி வர்ரான்னு காமிரா உள்ளிலேயே படுக்கைய போட்டு அடைச்சிடறது. உள்ளயும் சுத்தம் பண்ற சத்தம் கேட்டுண்டே இருக்கும்…
‘தாத்தா அப்டி ஒரு ஜென்மம் வீட்டுக்குள்ள இருக்கிறதே தெரியாதேங்கிற மாதிரி இருப்பர். ஒரே ஒருவாட்டி அக்காவுக்கு ஒரு வரன் வந்து அதைப்பத்தி பேசறப்ப இப்டி பாட்டியப்பத்தி பேச்சு வந்தது. ‘ஒவ்வொருத்தரும் அவஅவா வாழ்க்கைய கட்டுச்சோறு மாதரி கட்டிண்டுதாண்டா வர்ரா…ஒண்ணும் பண்ணமுடியாது. பிராப்தம்’ னு மட்டும் சொன்னார். பாட்டியும் ரேழி தாண்டறதில்லை. அவங்க ரெண்டுபேரும் கடைசியா எப்ப சந்திச்சுகிட்டாங்கன்னே தெரியலை. ஒருநாளைக்கு காலம்பற அம்மா காமிரா உள்ள திறந்தா சுவர் மூலையிலே சுவரோட ஒட்டி முதுகைகாட்டிண்டு ஒக்காந்திருக்கா. உள்ள போய் என்ன அத்தைன்னு தொட்டதுமே தெரிஞ்சுடுத்து. நானும் ஓடிப்போய் பாத்தேன். அப்டி ஒத்தர் செத்துப்போய் ஒக்காந்திட்டிருக்கிறதைப்பத்தி கேள்விப்பட்டதே இல்லை. சப்பரத்துக்கு வளைச்ச மூங்கில் மாதரி கூன்முதுகு மட்டும்தான் தெரியறது. கைகால் தலை எல்லாமே முன்பக்கம் சுவர் மூலைக்குள்ள இருக்கு.
’அப்பா போய் சோழியன கூட்டிண்டு வந்தார். அவனும் தொணைக்கு இன்னொருத்தனுமா வந்து தூக்கி போட்டாங்க. பொணத்த மல்லாக்க போட முடியலை. கூனும் வளைவும் அப்டியே இருக்கு. பக்கவாட்டிலே போட்டப்ப ஏதோ கைக்குழந்தை வெரல் சூப்பிண்டு தூங்கற மாதிரித்தான் இருந்தது. குளிப்பாட்டறப்ப அம்மா பாத்திருக்காள். கை வெரலிலே தேள்கொட்டிருக்கு. குழிக்குள்ள கைய விட்டுண்டிருக்கா. நல்ல பெரிய கருந்தேள். சின்ன ஒடம்பானதனால வெஷத்தை தாங்கலை. ஜன்னி மாதரி வந்து ஒதட்டை கடிச்சு கிழிச்சுண்டிருக்கா..
’தாத்தாகிட்ட விஷயத்தைச் சொன்னப்ப தம்புராவ கீழ வச்சார். புரியாத மாதிரி கொஞ்சநேரம் பாத்தார். ‘தாசரதே’ன்னு முனகிண்டு மறுபடியும் தம்பூராவ எடுத்துண்டார். வாசலிலெ கீத்துப்பந்தல் போட்டு ஊரெல்லாம் கூடி அழுது ஒரே ரகளை. அந்த சத்தம் எதுக்கும் சம்பந்தமில்லாதவர் மாதரி அவர் தம்பூராவ மீட்டி கண்ணமூடி அவருக்குள்ள இருக்கிற சங்கீதத்த கேட்டுண்டு லயிச்சுபோய் ஒககந்திருந்தர். எடுக்கிறச்ச மூத்த அத்தை வந்து ‘அப்பா வந்து ஒரு பார்வை பாத்துடுங்கோ’ன்னார். ஒண்ணும் பேசாம தம்பூராவ வச்சுட்டு எந்திரிச்சு வந்தர். வாசலை தாண்டி கூடத்துக்கு வந்து கீழே கிடக்கிறவளை ஒரு வாட்டி பாத்துட்டு அப்டியே திரும்பி போய்ட்டர். நேரா போய் தம்பூராவ எடுத்துண்டு ஒக்காந்துட்டர். அப்றம் காவேரிக்கரைக்கு கெளம்பறச்சதான் அவர எழுப்பினாங்க’
‘பாட்டிக்கு சங்கீதம் தெரியும்னு கேள்விப்பட்டிருக்கேன். எங்க தாத்தோவோட அப்பா சுப்பையர் , அவரும் பெரிய வித்வான். வர்ணம் பாடுறதிலே அவர் காலத்திலே அவர்தான் பெரிய ஆள்னு கெட்டிருக்கேன். அவருக்கு தஞ்சாவூர் அரண்மனையிலே இருந்து தானமா குடுத்ததுதான் கையிலே இருந்த நெலமெல்லாம். அவர்தான் எங்க தாத்தாவோட மொதல் குரு. அவர் ஒருதடவை ஒரு நெல விஷயமா பத்தூர் போயிருக்கார். பத்தூர்னா கொரடாச்சேரி பக்கத்திலே இருக்கு. அங்க ஒரு பழைய கோயில் ஒண்ணு இருந்து அழிஞ்சு போச்சு. கோயில் அழிஞ்ச்சாலும் அக்ரஹாரம் அழியலை. ஆனா தரித்திரம்புடிச்ச அக்ரஹாரம். தாத்தா அக்ரஹாரம் வழியா வண்டியிலே வர்ரச்ச ஒரு பாட்டு கேட்டிருக்கு. அந்த வீட்டு முன்னாடி வண்டிய நிப்பாட்டி விசாரிச்சிருக்கார். அது எங்க பாட்டியோட வீடு. பாட்டிக்கு அப்ப ஆறு வயசு. அவதான் பாடிண்டிருந்தது.
‘மத்த விஷயங்களை எல்லாம் கேட்டுண்டு அங்கியே இவதான் என் மாட்டுப்பொண்ணுன்னு வாக்கு குடுத்திட்டார். பொண்ணையே பாக்கலை. ’பொண்ணை பாருங்கோ’ன்னதுக்கு ’இந்த குரலுக்கும் இந்த வித்யைக்கும் இவ எப்டி இருந்தா என்னய்யா? சாட்சாத் சரஸ்வதியைன்னா நான் என் வீட்டுக்கு கூட்டிண்டு போகப்போறேன்’ன்னு சொல்லியிருக்கார். அஞ்சுபவுன் எதிர்ஜாமீன் பண்றதா அவரும் வாக்கு குடுத்தர். கல்யாணம் அவராத்திலேயே நடந்திருக்கு. ஆனா பொண்ணுக்கு ஏழு எட்டு வயசானதுக்கு அப்றமும் சொன்ன பவுனைபோட்டு புக்காத்துக்கு அனுப்ப அவாளாலே முடியலை. அப்பல்லாம் பஞ்ச காலம். வயத்தக் கழுவறதே பெரிய விஷயம். ஏதோ நம்பிக்கையிலே சொல்லிட்டார். முடியலை. அப்டியே வீட்டுலேயே வச்சிருந்தர்.
’தாத்தாவோட அப்பா நாலஞ்சுவாட்டி ஆளு சொல்லி அனுப்பியிருக்கார். சரியா பதில் இல்லை. ‘சரிடா, உனக்கு இந்த பொண்ணு இல்லை. உன் ஜாதகத்திலே வேற எழுதியிருக்குபோல’ன்னு சொல்லிட்டு வண்டி கட்டி நேரா பத்தூர் போய் எறங்கியிருக்கார். சம்பந்தி அய்யர் எங்கியோ வாழை எலை நறுக்க போனவர் ஓடிவந்து கைய கூப்பிண்டு பேசாம நிக்கிறார். இவரு ‘அவ்ளவுதான் ஓய். அதை சொல்லிண்டு போகத்தான் வந்தேன்’ன்னு சொல்லிட்டு திருப்பி வண்டியிலே ஏறி ஒக்காந்துட்டர். அப்ப பாத்தா பின்னாடியே கையிலே ஒரு சின்ன மூட்டையோட பாட்டி வந்து நிக்கிறா. ஒண்ணுமே சொல்லலை, கண்ணு ரெண்டும் வரைஞ்சு வச்சதுமாதிரி இருக்கு. இவரு பாத்தார். ‘சரி ஏறுடீ கோந்தே’னு தூக்கி ஒக்கார வச்சு கொண்டாந்துட்டர்
’ஆனா கடைசி வரைக்கும் பத்தூர் ஆட்கள வீட்டுப்பக்கமே வர விடலை. சீர் செனத்தி ஒண்ணையுமே வாங்கிக்க மாட்டேன்னுட்டர். பிரசவத்துக்கும் சாவுக்கும் ஒண்ணுக்கும் வரப்படாதுன்னுன்னு பிடிவாதமா சொல்லிட்டர். பலபேரு வந்து சமரசம் பேசியிருக்கா. ‘போனா போகட்டும், திரும்பி வரவேணாம்’னு திட்டவட்டமா சொல்லிட்டர். பாட்டியோட அப்பா வந்து தெருவிலே தென்னை மரத்தடியிலே நிக்கிறார். ‘கூட்டிண்டு போனா அப்டியே போயிரும் ஓய்’ நு தாத்தாவோட அப்பா சொல்லிட்டார். ‘இல்லே, எங்க இருந்தாலும் புள்ளைகுட்டிகளோட நெறைஞ்சு இருக்கட்டும். ஏழையோட ஆசீர்வாதம் எப்பவும் அவ பின்னாலே நெழலு மாதிரி இருக்கும்’னு சொல்லிட்டு அழுதிண்டே போனார். அதோட சரி. பிறகு பாட்டிக்கும் பத்தூருக்கும் சம்பந்தமே இல்லாம ஆச்சு. முப்பது வருசத்திலே பத்தூர் அக்ரஹாரமே அழிஞ்சுபோச்சு
’பாட்டி பாடி கேட்டதே இல்லைன்னு எங்கப்பா சொல்வார். ஏன்னு தெரியலை. எங்க தாத்தாவுக்கு ஒரு கொணம் உண்டு. அவர் மத்தவா பாடி கேக்கமாட்டார். அவரே பாடிக்குவர். ’நெறைஞ்ச குளம்டா, அதுக்கு எதுக்கு ஓடைத்தண்ணி’ன்னு எங்கப்பா சொல்வர். அதனாலகூட இருக்கலாம். எனக்கு எங்க தாத்தா ரெண்டுவயசிலே பாட்டு சொல்லி வைக்க ஆரம்பிச்சார். அவருக்கு சிஷ்யர்களுன்னு எங்கப்பா உட்பட எம்பது தொண்ணூறு பேரு உண்டு. ஒத்தர்கூட வீணாப்போகலை. சிலர் பெரிய வித்வான்களா ஆகி வைரக்கடுக்கனும் தோடாவுமா வந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி போவா. சங்கீதமே வராம போனது நான் மட்டும்தான். சங்கீதம் மனசு முழுக்க இருக்கு. சொன்னேளே, கைவெரல் நுனி வரை வழியறது…ஆனா நாக்கிலே வராது. ‘தேவீ, என்னம்மா இது’ன்னு தாத்தா மார்பிலே கைய வச்சுண்டு ஏங்குவார். சரின்னு வயலின் கத்துக்க வச்சார். புல்லாங்குழல் கத்துக்க வச்சார். ஒண்ணுமே சரியா வரலை. அப்றம் கைவிட்டுட்டர்.
’எனக்கு என்ன ஆச்சுன்னு இப்பவும் சொல்ல தெரியலை. ரொம்பநாளைக்கு அப்றம் ஒண்ணு தோணித்து, தாத்தா கத்துக்குடுக்காம இருந்தா வந்திருக்குமோன்னு. அவர் சொல்லிக்குடுக்கிறப்ப உள்ளுக்குள்ள ஒரு நாக்கு மடங்கிடுது. வெளிநாக்கை பேச வைக்கிற மனசோட நாக்கு அது. வெளிநாக்கு கிடந்து அலைபாயும். மனநாக்கு மடங்கி ஒட்டி நடுங்கிண்டிருக்கும். அதான். இப்பகூட நான் பாடிடுவேன். ஆனா ரெண்டு நாக்கும் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்துக்காது.
ஏன்னே தெரியலை. ஆனா ஒரு சம்பவம். அப்பா சொல்லி அம்மா எங்கிட்ட ஒருவாட்டி ரகசியமா சொன்னது. அதையெல்லாம் பிள்ளைகள்ட்ட சொல்லக்கூடாதுன்னுதான் நேக்கு இப்ப படறது. அந்த நெனைப்பு எங்கியோ உறுத்திட்டிருக்கலாம், தெரியலை. எங்க தாத்தாவோட அப்பா மூணுவருஷம் பக்கம் தளர்ந்து படுக்கையிலே கிடந்துதான் செத்தார். கடைசியிலே மலமூத்திரமெல்லாம் படுக்கையிலேதான். தாத்தாவுக்கு அவர் அப்பா மட்டுமில்ல குருவும் கூட. அதனால அவர் அப்டி பாத்துக்கிட்டார். பாட்டியும் கைக்குழந்தைய பாத்துக்கிடற மாதிரி கவனிச்சுகிட்டா.
ஒருநாள் தாத்தாவோட அப்பா என்னமோ முனகறது மாதிரி சத்தம் கேட்டிருக்கு. தாத்தா உள்ள போய் பாத்திருக்கார். படுக்கையிலேயே கமுகுப்பாளைய வளைச்சு தெச்சு பெட்பான் மாதிரி வச்சிருந்தாங்க. அதிலேயே ரெண்டும் போய் அதிலேயே படுத்திருக்கார். கண்ணு நிறைஞ்சு ரெண்டு மைக்குப்பி மாதிரி இருக்கு.தாத்தா ‘அடியே’ன்னு ஒரு சத்தம் போட்டிருக்கார். சமையல் உள்ளிலே வேலையா இருந்த பாட்டி ஓடி வந்திருக்கா. அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்.
ரொம்ப பின்னாடிதான் எழுத வந்தேன் பாலு. சங்கீதம் உசத்திதான். பரிசுத்தமானதுதான். இலக்கியம் அந்த அளவுக்கு சுத்தம் இல்லை. இதிலே அழுக்கும் குப்பையும் எல்லாம் இருக்கு. பிடுங்கி எடுத்த நாத்து மாதரி வேரில சேறோட இருக்கு. ஆடிக்காவேரி மாதரி குப்பையும் கூளமுமா இருக்கு…அதனால இது இன்னும்கொஞ்சம் கடவுள்கிட்ட போய்டறது…தெரியலை. உளறுறேனா என்னன்னு உன்னைமாதிரி மூளை உள்ளவங்கதான் சொல்லணும். நான் எழுதின முதல்கதையெ பாட்டியப்பத்தித்தான்.
‘வாசிச்சமாதிரி இருக்கு..’ என்றார் பாலு. ‘இல்லே, நீங்க வாசிச்சது ரொம்ப பின்னாடி விகடன்ல எழுதினது. இந்தக்கதை அந்தக்காலத்திலே திரிலோகசீதாராம் நடத்தின பத்திரிகையிலே வந்தது. குபராகூட அதிலே நெறைய எழுதியிருக்கார்’ ராமன் புன்னகை செய்தார். ‘அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்’ என்றார்