‘ சப்தம் ஆப்பிள் வடிவிலானது’ – அருணாச்சலம் மகாராஜன்

ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் பேசப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் – அருணச்சலம் மகாராஜன்

கவிதை என்ற இலக்கிய வடிவம் மானுடம் சிந்திக்கத் துவங்கிய முதற்கணத்தில் இருந்தே இருந்திருக்க வேண்டும்.மொழி என்பது பொருள் உணர்த்துவதற்கும், வினையறிவிப்பிற்கும் ஆன ஒன்று. மொழி என்பதுசொல்லாகவும், செயலாகவும்  இடத்துக்கேற்ற வகையில் உருமாறும் ஒன்று. உதாரணத்திற்கு “அவள் கனிவு கொண்டிருந்தாள்” என்பது எதையோ உணர்த்த வருகிறது என்றால், “உன்னை நேசிக்கிறேன்” என்பது செயலாகவும்வருகிறது. மொழி என்பது பொருட்சொற்களாலும், வினைச் சொற்களாலும் ஆனது. மீதமிருப்பவை அப்பொருளையும், செயலையும் மேலும் துலக்கும் அணிச் சொற்கள். மானுடத்தின் வினைகளுக்கு எல்லையுண்டு.ஆனால் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிபவற்றிற்கு செல்ல முடிவிலி அல்லவா இருக்கிறது. அவ்வாறு அறிந்த, அடைந்த அனைத்தையும் அடுத்தவருக்கு உணர்த்த கையிலிருந்த பேசும் வடிவம் மட்டும் போதாது என்பதைஉணர்ந்த மானுடம் கண்டடைந்ததே இலக்கியமும், கலைகளும். பாடல், கதை, நெடுங்கதை, சிறுகதை, நாவல் என எத்தனை வடிவங்கள், அதில் எத்தனை எத்தனை வடிவபேதங்கள்!!

வெறும் ஒலியை சொல்லாக மாற்றி, அதில் பொருள் ஏற்றி உணர்த்தவும், செயலைக் கூர்மையாக்கவும் முயன்ற அந்த ஆதி காலத்திலேயே உணர்த்தவும், ஆற்றவும் முடிந்தவற்றிற்கு அப்பாலும் ஏதோ இருந்து கொண்டிருப்பதை, அந்த ஏதோ ஒன்று எல்லை கடந்து இப்பாலும் வந்து எவ்வண்ணமோ நம்மை பாதித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த மானுடம், மொழியின் எல்லைகளைக் கடக்க விழைந்து அதைத் தலைகீழாக்கிக் கவிழ்த்துப் பார்த்து,பொருளேறாச் சொற்களையும், பொருளும் வினையும் மயங்கிய சொற்களையும், பொருளும், வினையும் இடம்மாறிய சொற்களையும் கண்டடைந்து அவற்றை வைத்து விளையாடி விளையாடிக் கண்டடைந்த வடிவம் எனகவிதையைச் சொல்லலாம். இந்த விளையாட்டு எளிதானதல்ல. குழந்தைகள் விளையாடுவதை கவனித்திருக்கிறீர்களா? அதில் பயின்று வரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை கண்டு சிரிக்காமல் வியந்திருக்கிறீர்களா? ஆம்,விளையாட்டு தான், வெளியில் இருந்து பார்ப்பவருக்கு மட்டுமே!! விளையாடுபவர்களுக்கு அல்ல….

எனவே தான் எந்த கவிஞனும் கொந்தளிப்புடனேயே துவங்குகிறான். தன்னுள் முட்டி மோதும் சொற்கடலில் இருந்து சரியான ஒரு சொல்லக் கண்டடைய அவன் மனப் பிறழ்வின் எல்லை வரை சென்றாக வேண்டியிருக்கிறது.அதை வேண்டாம் என்பவர் தவம் பயில வேண்டியது தான், புற்றுறை முனியைப் போல, வியாசரை போல. ஒரு கவிஞனின் முதல் தொகுப்பில் அவனது சொல்லிற்கான தேடல், கவிதைக்கான தேடல் என்பது அவனைஅறியாமலேயே வந்து விழுந்திருக்கும். விதிவிலக்கான கவிஞர்கள் அபூர்வம் என்றே சொல்லலாம். துரையும்  மிக மிகத் தீவிரமான ஒரு அனுபவத்தில் துவங்கும் “இறந்த நீளமான வார்த்தையொன்றைச் சுமந்து வந்தார் தந்தை” என்னும் கவிதையில்

“சில வார்த்தைகள் உயரமான

மலைகளின் உச்சியிலும் இன்னும்

சில வகைகள் நடுக்கடலில் திமிங்கலத்துடன்

வாழ்ந்து கொண்டிருக்கின்றன

இவையெல்லாம் கவர்வதென்பது

படு தீவிரமான புணர்தலின்போது

வருகிற ஒற்றைத் தலைவலிமாதிரி இருக்கிறது”.

இவரது நிலம் நெய்தல். நெய்தல் என்றாலே கடலும், அது சார்ந்த உயிர்களும் தான் நினைவுக்கு வரும். கூடவே குமரியில் இருந்து வந்தவன் என்ற வகையில் எனக்கு கடற்கரை மாதாவின் நிலமும் கூட. கிறித்தவம் பரவி நிற்கும் நிலம். ஆனால் சிலுவையில் மரித்தவரை விட குழந்தையையும், அதன் கன்னித்தாயையுமே முதன்மையாகக் கொண்ட மானுடம் தான் என் நினைவுக்கு வரும். துரையின் கவிதையில் நிலம் என்பதே கடல் தான்!!!

“எங்கள் நிலம் வாயாடி

புரண்டு கொண்டேயிருக்கும்” என்றே அறிவிக்கிறார். அந்த நிலத்தில் இருந்து தேவனுக்கு அவர் விடுக்கும் கோரிக்கை என இக்கவிதையை வாசிக்கிறேன்.

“சற்றே உங்கள் பாழடைந்த குகைப்பூதங்கள்

எங்கள் முன் தோன்றுவதை நிறுத்துங்கள் தேவனே

என்ன வேண்டும் கூறுங்கள் கூறுங்கள் என நச்சரிக்கின்றன

நிலத்தின் மொழியைக் கேளுங்கள்

அவற்றில் ரத்தமில்லை

நரபலியில்லை

தோட்டாக்களில்லை

பரிசுத்தத்தில் மிதக்கிற தேவனே

எங்கள் நிலம் வாயாடி

புரண்டுகொண்டே இருக்கும்

பரிசுத்த கருணையின் மேன்மையை

இசைக்கும் தேவனே

மெழுகுகளை ஏற்றி காற்றை வதைக்கிறார்கள். “

அவரது நிலம் தானே கொடுக்கக் கூடியது. நம்மிடம் கேட்பதில்லை, அளித்துக் கொண்டே இருக்கும். நாம் தான் வேண்டியதை எடுத்துக் கொள்ளவேண்டும். அது கொடுக்க நாம் அதற்கு எதையும் பதிலுக்கு கொடுக்க வேண்டியதில்லை. வேண்டுதல் கூட தேவையில்லை. அது அளித்துக் கொண்டே இருக்கும். இந்த பின்னணியில் வைத்து பார்க்கையில் “மெழுகுகளை ஏற்றி காற்றை வதைக்கிறார்கள்” என்ற வரி விரிந்து செல்லும் தொலைவு அதிகம்.

இவரது கவிதைகளில் இந்நிலத்தின் தாக்கம் சப்தங்களாகவும், அதன் மதத்தின் தாக்கம் ஆப்பிளாகவும் வெளிப்படுகிறது. தலைகீழாக்கம் என்பது இவருக்கு மிக எளிதாக கைவசப்படுகிறது. பிறந்த பிஞ்சின் கைகளில் என்னைத் திணிக்காதீர்கள் என ஆப்பிள் நம்மிடம் கெஞ்சுகிறது. அதே ஆப்பிள் கூட்டமாக இருக்கையில் வியாபாரியையே கிலோ இருநூறென விற்பனையும் செய்கிறது. ஏவாள் கடித்த ஆப்பிளாக, கவிஞனை சிந்திக்க தூண்டிக் கொண்டே இருக்கிறது. மூளையை இந்த ஆப்பிளால் மாற்றிக் கொண்ட ஒருவனின் பாடு, சிந்தனையும், பிழைப்பும் சந்திக்கும் புள்ளியில் இரண்டுக்கும் இடையேயான ஊசலாட்டத்தின் உச்சியில் தவிக்கும் அவனது குரலாகவே இந்த கவிதையைக் காண்கிறேன்!!!

“தற்செயலாக நடந்ததுதான்

மூளையை அகற்றிவிட்டு தலையில்

ஆப்பிளை வைத்து தைத்துவிட்டேன்

வெகுசிறிய மாற்றம்தான்

அது பிரச்சினையில்லை

தற்போது அகற்றிய இந்த மூளையை

என்ன செய்வது என்பதில் ஆரம்பிக்கிறது குழப்பம்

ஒரு கஞ்சாத்தோட்டத்திற்குள் புதைத்துவிடலாம்

பேரல் நிரம்பிய எரிசாராயத்திற்குள் மிதக்கவிடலாம்

பிரேதபரிசோதனை அறைக்குள் தள்ளிவிடலாம்.

கூவம் ஆற்றில் வீசலாம்

தெருநாய்களுக்கு என்றெல்லாம் ஆப்பிள் சொன்னது

எனக்கு எதுவுமே சரிப்பட்டு வரவில்லை.

ஒருமுறை மூளையிடமே கேட்கலாமே

மீண்டும் ஆப்பிளை நீக்கி

தலையில் மூளையை வைத்தேன்

அது ஆப்பிளைத் தின்றுவிடு என்றது”

பிழைப்புக்கும் சிந்தனைக்குமான பூசலில் பிழைப்பே எப்போதும் வெல்லும். “மீச்சிறு வயிறுகளுக்கும் பசியானது மீப்பெரியது இவானோவிச்!” என்பதாகவே முடிக்கிறார் இவர்.

அப்பிளின் மறு எல்லையில் சப்தங்கள் வருகின்றன. அன்றாடத்தை முற்றிலும் வேறு கோணத்தில் பார்த்து அதை மொழியில் ஏற்றி எற்றி விளையாடுவது கவிதையின் போக்குகளில் ஒன்று. ஆப்பிளை சிந்தனையின் வடிவாக்கினார் என்றால், சப்தங்களுக்கு உருவும், வாசமும் கொடுத்து அதை ஒரு கவிப்படிமமாக வளர்த்தெடுக்கவும் இயல்கிறது இவருக்கு.

நண்பா!

என்னை சப்தங்கள் தான் இன்றுவரை இயக்குகின்றன

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால்

எனக்குத்தான் காதுகள்

செயலிழந்து பழகாலமாயிற்றே.

கவிதைகளின் படிமங்கள் பொருள் ஏற்றப்படாதவை. Image என ஆங்கிலத்தில் அழைக்கப்படுபவை. அவை வாசகனால் பொருள் கொள்ளப்படவேண்டும். அவனது கற்பனையால் விரித்து விரித்து எடுத்துச் செல்லப்பட வேண்டும். இங்கே சப்தங்கள் என்பவை அப்படித்தான் இக்கவிதையை பல தளங்களுக்கு எடுத்துச் செல்ல வைக்கிறது. அன்றாடம் மட்டுமே இயக்கும், அதைக்கூட கேட்கவியலாத சமூகம் என பேரலகிலோ அல்லது வழக்கத்தை மட்டுமே செய்யும் சலிப்படைய வைக்கும், அந்த சலிப்பை ஊட்டும் வழமை என்ற சப்தத்தை கேட்கும் காதுகளற்ற தனி மனிதன் என குற்றலகிலோ வைத்து பார்க்கக் கூடிய சாத்தியங்கள் இவ்வரிகளுக்கு அப்படிமத்தால் வருகிறது.

ஒரு நிசப்தமான சப்வேயில் தன் இடக்காலை தானே தொட்ட கவிஞன் தன்னை அறிகிறானா இல்லை மனப்பிற்ழ்வின் எல்லைக்குச் செல்கிறானா? வாழ்வை கரையில் உலரவைத்தவன் “நல்ல வாழ்வு தான்,ஆனால் வீணாய்போகிறது” என்பவன் ஏக்கத்தை உரைக்கிறானா இல்லை சலிப்பின் உச்சிக்கு செல்கிறானா? இவரது கவிதைகள் மனப்பிறழ்வுக்கும், சலிப்புக்கும் இடையே ஒரு அபாரமான சமநிலைப் புள்ளியில் நின்று கொண்டிருக்கின்றன. இவரது இந்த கவிதைத் தொகுப்பின் பொதுவான பேசுபொருள் இருத்தலின் துயர். நான் இவர்கள் எண்ணும் சாதாரணன் அல்லன். கவிஞன், கலைஞன், சிந்தனையாளன். நான் வேறு… இதை உணராத இவர்களுடன் வாழ்வதன் வதை என்பதை விதவிதமாக எழுதுகிறார் என்றே தோன்றியது. இத்தளம் கவிதைக்கு புதிதல்ல.

“நல்லதோர் வீணை செய்தே அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ” என பாரதி கேட்டது தான். ஆனால் அதே பாரதி தான்,

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

எங்கள் இறைவா! இறைவா இறைவா” என்றும் பாடினான்.

துரை இத்துயரைத் தாண்டி வர வேண்டும். மானுடம் துயர் தேடி ஓடும் உயிரினம். அதற்கு இன்பங்களை, மெய்யானவற்றை, காட்ட வேண்டிய கடமை கவிஞர்களுக்கு உண்டு. அக்கடமையை அவர் கையிலெடுக்க வேண்டும். வாழ்வில் இன்னும் நன்மைகள் எஞ்சுகின்றன. அதை நம்புவோமாக. இவரும் நம்புகிறார்.

“நிமிர்த்தப்பட்ட பீரங்கிகளாக

மாறிப்போயின

நகரின் வானுயர்ந்த அடுக்குமாடிகள்

நிலத்தடி அறைக்குள்

யுத்தத்தின் இடையே

பசிக்கிறது என்ற பிஞ்சிடம்

தாயொருத்தி வெடிக்காத

அணுகுண்டை விளையாடக் கொடுத்தாள்

நம்புவோமாக

அது வெடிக்காது

விடியும்வரை பிஞ்சுக்கும் பசிக்காது”

இந்த நம்பிக்கையில் இருந்து துவங்குங்கள் துரை. மென்மேலும் செல்லுங்கள். எங்களுடன் வந்து கொண்டே இருங்கள். வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைகாணப்போகும் விழா
அடுத்த கட்டுரைர் ,ன் என்பவை…