ராகுல்,மோடி -கடிதங்கள்

ராகுல் காந்தி தேவையா?

ராகுல் -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ ,

 

சீனாவில் மாணவர்கள் புரட்சி மற்றும் அது சார்ந்த படுகொலைகளின் முப்பதாவது நினைவு நாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது..  நம் சூழலில் அதை பெரிதாக நினைக்காவிட்டாலும் உலகின் மனசாட்சியில் அது ஒரு ரணமாக நீடிக்கிறது அந்த படுகொலைகளால்தான்  சீனா இன்று செழிப்பாக வல்லரசாக இருக்க முடிகிறது என சீன பாதுகாப்பு அமைச்சர் இப்போது கூறுகிறார்

அப்பாவி மக்களை கொன்று  குவித்து அந்த பிணங்களின் மீது  மக்கள் ஆட்சியை நிறுவுவது உலகில் புதிதல்ல .ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்

அந்த படு கொலையாளர்களை நாயகர்களாகவோ , வில்லன்களாகவோ , ஏதோ ஒரு விதத்தில் நினைவுகூர்கிறோம்.. ஆனால் அவற்றை நிறுத்தியவர்களை யாரும் நினைவுகூர்வதில்லை

உதாரணமாக சீனாவின் அதே சூழல் அப்படியே ரஷ்யாவில் உருவானது… கோர்ப்ப்பச்சேவ் நினைத்திருந்தால் , சீன பாணி படுகொலைகளை நிகழ்த்தி சோவியத் யுகத்தை தொடரச்செய்திருக்கலாம் ஆனால் அதில் இருக்கும் அர்த்தமின்மையை உணர்ந்து அமைதியான முறையில் விலகி விட்டார்  நமக்கு விடுதலை கொடுத்தவர் என சோவியத் யூனியனின் எந்த குடியர்சும் அவரை பாராட்டுவதில்லை..  நம் நாட்டை உடைத்து விட்டார் என ரஷ்யாவில் அவர் மீது கோபம்… ஆக , இன்று அவர் எந்த செல்வாக்கும் இல்லாத ஒரு தனி நபர்

ஒருவரது நல்ல குணங்களே அவரது எதிராகும் அபத்தம் அரசியலில் சகஜம் தன்னடக்கம் , அன்பை காட்டுதால் , சூது வாது இல்லாத தன்மை போன்ற நல்ல குணங்கள் ராகுல் காந்தியின் தோல்விக்கு காரணமானதை பார்த்தோம்

தெலுங்கானா பிரிவினை , எப்படி கோர்ப்பச்சேவை ரஷ்யாவில் அழித்ததோ , அதுபோல காங்கிரசை ஆந்திராவில் அழித்து விட்டது மொழி வாதம் , மத வாதம் , சாதி வெறி போன்றவறறை காங்கிரஸ் ஏற்கமுடியாது ஒரு வித நடு நிலையுடன் தான் காங்கிர்ஸ் செயல்பட முடியும்.. இதை பிஜேபி பயன்படுத்திக்கொள்கிறது

போஃபர்ஸ் ஊழல் ,எமர்ஜென்சி போன்ற கொடுமைகளால் காங்கிர்ஸ் தோற்றது மகிழ்ச்சி அளித்தது .ஆனால் காங்கிரசின் நல்ல விஷயங்களால் அது தோற்பது வருத்தம் அளிக்கிறது

 

அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள ஜெ

‘அரசியல் பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை என்று நானே அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் தவிர்க்கமுடியாமல் நீங்கள் அரசியல் பற்றி எழுதும்போது வரும் எதிர்வினைகளைப் பார்க்கையில் ஏன் எழுதவேண்டும் என்ற எண்னமே ஏற்படுகிறது. அரசியல்பற்றிய எழுத்துக்களை வாசிப்பவர்கள் ஏற்கனவே அரசியலை திகட்டத்திகட்டப் பேசிக்கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு அரசியல் சார்ந்த உறுதியான கருத்து உண்டு. அவர்கள் எதன்பொருட்டும் அதை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. என்ன சொன்னாலும் அவர்கள் ஒன்றையே திரும்பத்திரும்பச் சொல்வார்கள்.

 

நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். இங்கே அரசியல்பேச்சு இல்லை. ஏனென்றால் அரசியல் இங்கே முக்கியமில்லை. கொஞ்சநாளிலேயே அரசியல் ஆர்வமும் இல்லாமலாகிவிட்டது. ஜப்பானில் இருந்திருக்கிறேன். அங்கேயும் அப்படித்தான். இந்தியாவில் முற்போக்கு இந்துத்துவா திராவிடத்துவா எல்லாமே ஒருவகையான பொழுதுபோக்குக்காகவே பேசப்படுகின்றன. எவருக்கும் எதிலும் தீவிர ஈடுபாடெல்லாம் இல்லை. எவரும் எதையும் செய்யப்போவதுமில்லை. எவரும் அதற்காக எதையும் இழக்கவும் மாட்டார்கள்

 

இங்கே சூதாட்டவெறி இருக்கிறது. அது அரசியலின் இடத்தை எடுத்துக்கொள்கிறது. சூதாட்டம் பற்றி எழுதினால் மக்கள் படிப்பார்கள். மக்கள் அதிகம்பேர் சூதாட்டம் பற்றியே பேசுகிறார்கள். மக்களுக்கு அதில் ஆர்வமிருக்கிறது என்று சொல்லி எழுத்தாளர்களும் சூதாட்டம் பற்றி எழுதவேண்டும் என்று சொன்னால் எப்படி? அதைப்போலத்தான் அரசியலை எழுதுவதும். அதனால் எந்தப்பயனும் இல்லை

 

ஆர். சுப்ரமணியன்.

 

அன்புள்ள ஜெ

எழுத்தாளர்கள் ஏன் அரசியல் எழுதக்கூடாது, ஏன் அரசியல்நீக்கம் செய்த கதைகளை எழுதுகிறார்கள் என்ற கூச்சல் இங்கே எழுந்துகொண்டே இருக்கிறது. அது எழுத்தாளர்களை திட்டி சிறுமைப்படுத்தும் ஆசையினால் வருவது. இப்படிச் சொல்பவர்கள் ஓர் எழுத்தாளன் அரசியலில் ஏதேனும் கருத்துச் சொன்னால், அது எவ்வளவு நடுநிலையானதாக இருந்தாலும் சரி, தங்கள் சொந்த அரசியலுக்கு நூற்றுக்குநூறு ஒத்துப்போகவில்லை என்றால் கேவலமாக வசைபாடி இழிவுசெய்துவிடுவார்கள். எழுத்தாளன் தங்கள் கட்சியின் அடிமட்டத்தொண்டனைப்போல் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் அவனுக்கு எழுதித்தரும் கோஷங்களை அவன் அப்படியே போடவேண்டும். ஒருவரி கூடச்சேர்த்தால்கூட கேவலமான வசை.

 

உங்கள் கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளைப் பார்த்தேன். இந்துத்துவர்கள் இடதுசாரிகள் இருசாராரும் ஒரே தொனியிலேயே எழுதியிருந்தனர். பணம் வாங்கிவிட்டான்,விலைபோய்விட்டான் என ஒரு தரப்பு. பசப்பு, இரட்டைவேடம் என இன்னொரு தரப்பு. வசைபாடிய என் நண்பனிடம் ‘பிறகு எதுக்குடா எழுத்தாளன் அரசியல் பேசவேண்டும் என நினைக்கிறாய்?’ என்று கேட்டேன். “தெளிவா பேசமாட்டேங்கிறானே தோழர்?”; என்றார். “தெளிவான்னா உன் கட்சி தொண்டன் மாதிரியா?” என்று கேட்டேன். எழுத்தாளனாக நின்று ஒருவரிகூட சொல்லிவிடக்கூடாது. ”ஐந்தாம்படை, துரோகி, விலைபோய்விட்டவன், பிளாக்மெயிலுக்கு அடிமை’

 

இவ்வளவுதூரம் எழுத்தாளன்மேல் வெறுப்பு இருந்தால், அவன் மேல் மதிப்பே இல்லாமலிருந்தால் ஒவ்வொருமுறையும் எழுத்தாளன் அரசியல்கருத்து சொல்லவேண்டும், அரசியலில் ஈடுபடவேண்டும் என ஏன் கூச்சலிடுகிறார்கள்? அரசியலே பேசாமலிருக்கும் எழுத்தாளர்களான யுவன் சந்திரசேகர் போன்றவர்கள்தான் இங்கே வசை வாங்காமல் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள். அதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எழூத்தாளன் என்ற மதிப்பு அணுவளவேனும் உள்ள ஒரு சமூகத்தில், அவனிடம் பேசும்போது கொஞ்சமேனும் செவிகொடுக்கும் சூழலில்தான் எழுத்தாளர்கள் அரசியல்பேசவேண்டும். மற்றபடி ஒரு வாக்காளன் என்பதற்குமேல் அரசியலை பேசவேண்டியதே இல்லை. அதனால் பயன் ஏதும் இல்லை. வசைகள்தான் வந்துசேரும். அல்லது அரசியல்கட்சியின் அடிமட்டத்தொண்டராக சென்று சேரவேண்டும். யோசிப்பீர்கள் என நினைக்கிறேன்/

 

எஸ்.பாஸ்கர்

எனது அரசியல்

அரசியலாதல்

அரசியல்சரிநிலைகள்

எழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்

இன்றைய அரசியல்

 

முந்தைய கட்டுரைவாசிப்புச் சவால் -கடிதம்
அடுத்த கட்டுரைசிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் – காளிப்பிரசாத்