நாகராஜன் இ.ஆ.ப

இரவோடு இரவாக 1,500 பேருக்கு பணி ஆணை!

என்னுடைய நல்ல வாசகர்களில் ஒருவர் நாகராஜன். குமரிமாவட்டத்தில் பணியாற்றியபோது  இங்குள்ள அரசுப்பள்ளிகள் சிறப்புறச் செயல்படுவதற்காக பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். என் நண்பரும் ஊர்க்காரரும் லண்டன்வாசியுமான சுகுமாரன் நாயர் வலிநீக்கு இறப்புத்தருண மருத்துவத்தின் பொருட்டு ஒரு தொண்டுநிறுவனத்தைத் தொடங்கியபோது அதற்கு எல்லா உதவிகளையும் செய்தார். அந்நிகழ்வில்தான் சந்தித்தேன்.

சமீபத்தில் தேர்தல்காலத்தில் வீட்டுக்கு வந்தார். நள்ளிரவு வரை இலக்கியம், மதம் சார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அடிப்படையில் காந்திய விழுமியங்களில் நம்பிக்கை கொண்டவர். அவரைப்பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன். அர்ப்பணிப்பும் நேர்மையும்கொண்ட, அதேசமயம் நிர்வாகத்திறமை மிக்க அதிகாரி

சென்ற சில ஆண்டுகளாகவே தமிழக நிர்வாகத்துறையில் நேரடியாகத் தெரிவுசெய்யப்படும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தவிர்க்கப்பட்டு நியமனமுறையில் ஆட்சிப்பணிக்குச் செல்லும் அதிகாரிகள் மட்டும் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் அரசியல்கட்சிகளின் சேவையாளர்கள். சாதிய பின்புலம் கொண்டவர்கள். விளைவாக நேர்மையும் திறனும் கொண்ட இளைய தலைமுறையினரின் பங்களிப்பு மறுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஆட்சிப்பணி அதிகாரிகள் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் தெலுங்கானாவிலும் பிகாரிலும் இமாச்சலப்பிரதேசத்திலும் மேகாலாயாவிலுமெல்லாம் சாதனைகள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை சாதனையாளர்களான ஆட்சிப்பணி அதிகாரிகள் பற்றிச் செய்திவருகையிலும் அவர்கள் எவர் எனப் பார்ப்பேன். பெரும்பாலும் தமிழர்கள். பலர் என் வாசகர்களும்கூட.

ஆனால் அவர்களின் பங்களிப்புக்கு தமிழக அரசியல்வாதிகள் இடமளிப்பதே இல்லை. நமது நிர்வாகத்திலுள்ள சாதியமும் ஊழலுமே முதன்மைக்காரணம். இதன் விளைவான இழப்பு நீண்டகால அடிப்படையில் தமிழ்நாட்டுக்கே.

உச்சவலிநீக்கு மருத்துவம் – ஒருநாள்

கல்விக் களைகள்

முந்தைய கட்டுரைச.துரை பேட்டி -அந்திமழை
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்