இசையும் வண்ணமும்
[மார்கழியில் மல்லிக பூத்தால் பாட்டுக்கு கீழே கமெண்ட்ஸ் பகுதியில் ஒருவர் எழுதிய குறிப்பின் தமிழாக்கம். மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘காணான் போகண பூரம் பறஞ்ஞு அறியிக்கணோ?” .பொருள் ,காணப்போகும் திருவிழாவை விவரித்துச் சொல்லவேண்டுமா என்ன? வரப்போகும் கொண்டாட்டம். அதை எத்தனை கற்பனைசெய்தாலும் சென்றடைய முடியாது. ஆனால் வரப்போகும் கொண்ட்டாடத்தைப்ப்போல பெரிய கொண்டாட்டம் வேறில்லை.
காணப்போகும் பூரம்
எஸ்.கோபிநாதன் சிவராமபிள்ளை
பல ஆண்டுகளுக்கு முன் நான் வழக்கறிஞர் வேலையில் சேர்ந்து கொஞ்சநாள்தான் ஆகியிருந்தது. என் சீனியரின் ஆணைக்கிணங்க கேரளத்தின் பல ஊர்களிலும் கறுப்பு கோட் அணிந்து கேஸ்கட்டுகள் அடுக்கிய பெட்டியுடன் அலைந்து திரிந்துகொண்டிருந்தேன். விடியற்காலையில் கிளம்பி செல்வேன். கேஸ் நடத்தி திரும்புகையில் அன்றைய நிலையில் ஓர் இளைஞனை மகிழ்விக்கும் பணம் இருக்கும். அது அன்று பெரிய கொண்டாட்டம். வீட்டில் பணம் குறைவாக இருந்த காலம்.
பாலக்காடு சிவில் ஸ்டேஷனிலும் கன்ஸ்யூமர் டிரிப்யூனலிலும் எல்லாமாதமும் கேஸ் இருக்கும். ஊரிலிருந்து பஸ் ஏறி அங்கமாலியில் இருந்து காலை ஆறுக்கு கோவை கிளம்பும் பேருந்தில் ஏறுவேன். அது ஒன்பது மணிக்கு பாலக்காட்டைச் சென்றடையும். ஒவ்வொரு வழக்கும் ஒரு போர் போல தோன்றும். எதிரியை அடித்து வீழ்த்தத்தேவையான வாதங்களை பேருந்தில் அமர்ந்தே ஆராய்ச்சி செய்வேன்.
அங்கே சிவில் ஸ்டேஷனுக்கு இடதுபக்கம் ஒரு சிறிய டீக்கடை உண்டு. அழகான தூய்மையான கடை. நடத்தியவரின் பெயர் நினைவில் இல்லை. பாலக்காடு போகும்போது அந்த நந்தினி டீ ஸ்டாலில் அமர்வது வழக்கம். நீதிமன்றம் கூட தாமதமாகும். அதுவரை அங்கேதான் இருப்பேன். நம்மை எவருக்கும் தெரியாதென்பதனால் எல்லாரையும் வேடிக்கை பார்த்தும் பகற்கனவு கண்டும் அமர்ந்திருப்பேன்
சூடான அப்பம். பொன்னிறமான பழம்பொரி. இளநிறமான டீ. அதெல்லாம் முன்னால் வந்தமையும்போது இப்பிரபஞ்சம் எத்தனை அழகானதும் ஆனந்தமயமானதும் என்று ஜூனியர் வழக்கறிஞர் அறிகிறார். அவ்வாறு அங்கே இருக்கும்போது பாலக்காட்டு வம்புகள் வந்துகொண்டே இருக்கும். அந்த மகிழ்ச்சியான நேரத்தில், உலகமே எளிதாக வென்றுவிடக்கூடியதுதான் என்று தோன்றும்போது, அழகான ஒரு பாட்டு கேட்டால் எப்படி இருக்கும். அதுவும் கண்ணாடி டம்ளரில் ஆவிபறக்கும் டீ முன்னால் இருந்து மணம் வீசிக்கொண்டிருக்கையில். அதை அவ்வப்போது எடுத்து ஒரு துளி உறிஞ்சி மர டெஸ்கில் வைத்துக்கொண்டு சிம்மாசனத்தில் இருப்பதுபோல் இருக்கையில்
அப்போதுதான் பக்கத்துக்கடையிலிருந்து இந்தப்பாட்டு கேட்டது. “கண்னே நின் கை பிடிச்சு காவு சுற்றண நெரம் சின்ன கட பெரிய கட சிந்தூரக்கட கேறாம்” நான் எண்ணிப்பார்ப்பதுண்டு வாழ்க்கை துயரமாக இருக்கையில் இந்தப்பாடல்களுக்கெல்லாம் வேறு அர்த்தம் வருமா என்ன? நல்ல கோவை பேருந்து. நல்ல வரும்படி. நல்ல டீ. நல்ல பழம்பொரி. நல்ல மனிதர். நல்ல மொழி. எல்லாவற்றையும் விட நல்ல இளமை. அப்போதுதானே நல்ல பாட்டு அவ்வளவு நல்ல பாட்டாக ஆகிறது
”குந்திப்புழ கரையிலுள்ள குளிரு கோரும் காற்றில் பந்தலிச்சு பீலி நீர்த்தும் புன்னாகத்தின் சோட்டில் என்றெ மாறில் நீ மயங்கும் நின்றே மாறில் ஞான் மயங்கும் கண்டு கண்டு கொதிச்சோட்டே பூமியும் நீலவானும் பூமியும் நீலவானும்!” வானத்தை அறைகூவுவதுபோல பாட்டு. அப்போது நானும் சூழலை மறந்து சேர்ந்து பாடிவிட்டேன். மார்கழியில் மல்லிக பூத்தால் மன்னார்காடு பூரம், மன்னார்காடு பூரம்! காடிறங்கி நீயும் ஞானும் காணான்போகண பூரம் காணான்போகண பூரம்!”