அழியா வண்ணங்கள்
கலைக்கணம்
மலையாள எழுத்தாளர் கே.சுரேந்திரனை [1921- 1997] நான் ஒருமுறை பார்த்திருக்கிறேன். அன்றைய தபால் -தந்தி துறை ஊழியர். ஆகவே எங்களுடைய ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். மலையாள இலக்கியவாதிகளில் புகழ்பெற்றவர். நாராயணகுருவைப்பற்றி குரு என்ற நாவlலையும் குமாரனாசானைப் பற்றி மரணம் துர்ப்பலம் என்ற நாவலையும் எழுதியவர். அவருடைய ஜ்வாலா, காட்டுகுரங்கு, தேவி, மாயா ,சீமா போன்ற நாவல்கள் திரைப்படங்களாக வந்து வெற்றிபெற்றவை. விரிவான இலக்கிய அறிமுகக்குறிப்புகளும் எழுதியிருக்கிறார்.
அவருடைய தேவி என்னும் நாவலின் திரைவடிவில் உள்ள பாடல் இது மலையாளத்தின் புகழ்பெற்ற மெல்லிசைகளில் ஒன்று. தேவராஜன் இசை. வயலார் எழுதியது. ஏசுதாஸ் பாடியது.
சாம்யம் அகந்நொரு உத்யானமே
கல்பக உத்யானமே
நின்றே கதகளி முத்ரயாம் கமல தளத்தில் என்
தேவியுண்டோ தேவி!
மஞ்சுதரயுடே மஞ்ஞ்ஞில் முங்ஙும்
குஞ்ச குடீரங்களில்
லாவண்ய வதிகள் லாளிச்சு வளர்த்தும்
தேவ ஹம்சங்ஙளே
நிங்கள் தூது போயொரு மனோரதத்தில் என்
தேவியுண்டோ தேவி?
கச்சமணிகள் நிருத்தம் வைக்கும்
விருச்சிக ராவுகளில்
ராகேந்துமுகிகள் நாணத்தில் ஒளிக்கும்
ரோம ஹர்ஷங்களே
நிங்ஙள் பூவிடர்த்திய சரோவரத்தில் என்
தேவியுண்டோ தேவி?
[தமிழில்]
நிகரற்ற மலர்த்தோட்டமே , கற்பகத்தோட்டமே
உன் கதகளி முத்ரை போன்ற தாமரை இதழ்களில்
என் தேவி இருக்கிறாளா? தேவி?
குளிர்ந்த நிலவின் பனியில் மூழ்கி நிற்கும்
இலைக்குடில்களில்
அழகிய பெண்கள் கொஞ்சி வளர்க்கும்
தேவருலக அன்னப்பறவைகளே
நீங்கள் தூதுசென்ற பகற்கனவுகளில்
என் தேவிஇருக்கிறாளா? தேவி?
கச்சைமணிகள் நடனம் ஆடும்
கார்த்திகை மாத இரவுகளில்
காதல்நிலவு போல் முகம்கொண்டவர்கள்
நாணத்தால் ஒளிந்துகொள்ளச்செய்யும்
மெய்சிலிர்ப்புகளே
நீங்கள் பூ விரியச்ச்செய்த குளிர்தடாகங்களில்
என் தேவி இருக்கிறாளா தேவி?
ஒரு சினிமாப்பாடல். வழக்கம்போல மிகையான கற்பனாவாதம். ஆனால் அதன் பண்பாட்டு உட்குறிப்புகள் அழகானவை. இது கதகளியை நினைவுத்தளமாகக் கொண்டபாடல். இதன் முதல்வரியான ’சாம்யம் அகந்நொரு உத்யானம்’ என்பது கேரளத்தின் செவ்வியல் கலைவடிவான கதகளியில் வரும் பாடல்களில் முதன்மைப் புகழ்கொண்ட ஒன்று. உண்ணாயி வாரியர் எழுதிய நளசரிதம் என்னும் கதகளி நாடகத்தில் உள்ள பாடல். தமயந்தியும் நளனும் காதல்கொண்டு மணந்தபின் வரும் அவர்களின் மகிழ்ச்சியை விவரிப்பது.
சாம்யம் அகந்நொரு உத்யானம் [கதகளிப் பதம்]
ராகம் பூர்வகல்யாணி தாளம் செம்பட
நளசரிதம் இரண்டாம்நாள்
தொகையறா
காந்தன் கனிஞ்ஞு பறயுந்நொரு சாடு வாக்யம்
பூந்தேன் தொழும் மொழி நிஸம்ய விதர்ஃப கன்யா
த்வாந்தம் த்ரபாமயமஃபாஸ்ய நிஸேந்துநேவ
ஸ்வாந்தர்முதா பூர்வனே ஸஹ தேன ரேமே
பல்லவி
சாம்யம் அகந்நோரு உத்யானம்!
எத்ரயும் அஃபிராம்யம் இதினு உண்டு அது நியூனம்
அனுபல்லவி
க்ராம்யம் நந்தனவனம் ரம்யம்
சைத்ர ரதவும் காம்யம்
நினய்க்குந்நாகில் சாம்யம் அல்ல இது ரண்டும்
சரணங்கள்
கங்கேளி சம்பகாதிகள் பூத்து நில்குந்நு
ஸங்கே வசந்தமாயாதம்
ஃப்ருங்காளி நிறயுந்நு பாடல படலியில்
கிம் கேதகங்ஙளில் மிருகாங்கன் உதிக்கயல்லீ?
பூத்தும் தளிர்த்தும் அல்லாதே ஃபூருஹங்களில்
பேர்த்தும் ஒந்நில்ல இவிடேக் காண்மான்
ஆர்த்து நடக்கும் வண்டின் சார்த்தும் குயில்குலமும்
வாழ்த்துந்நு மதனன்றே கீர்த்தியே மற்றொந்நில்ல
சர்வ ரிது ரமணீயமே அது பொன்மயக்ரீடா
பர்வதம் எத்ரயும் விசித்ரம்
கர்வித ஹம்ச-கோகம் க்ரீடா தடாகமிது
நிர்விருதிகரங்ஙளில் ஈவண்ணம் மற்றொந்நில்ல
சாம்யம் அகந்நொரு உத்யானம் – கே.எஸ்.சித்ரா
சமகால ஒலிவடிவம் சாம்யம் அகந்நொரு உத்யானம்
https://kathakalipadam.com/index.php/en/all-uploads/2191-1991-2019-02-13-16-04-15
[தமிழில்]
தொகையறா
தன் தலைவன் கனிந்து சொன்ன காதல்மொழியை கேட்டு
பூந்தேன் வணங்கும் இனிய மொழியுடையவளான விதர்ப்பனின் கன்னி
நாணம் என்னும் இருண்ட முகத்திரை விலக்கி
இரவும் நிலவும்போல நளனுடன் மலர்த்தோட்டத்தில் அமர்ந்து மகிழ்ந்தாள்.
பல்லவி
நிகரில்லாத மலர்த்தோட்டம்
எத்தனை மனம் மயக்குவது
பிறவெல்லாம் இதன்முன் சிறிது
அனுபல்லவி
நோக்கி மகிழ்கையில் [இந்திரனின்] நந்தன வனம் போல் அழகானது
[குபேரனின்] சைத்ர ரதம் என்னும் தோட்டமும் இதற்கிணையானது
எண்ணிப்பார்த்தால் அவை ரண்டும் விரும்பத்தக்கவை அல்ல
சரணங்கள்
அசோகம் செண்பகம் முதலியவை மலர்ந்து நிறைந்துள்ளன.
வசந்தம் வந்துவிட்டதா என்று மயங்குகிறேன்
பாதிரிப் பூக்குலையில் வண்டுகள் நிறைந்துள்ளன
தாழைமலர்களில் சந்திரன் உதிக்கின்றதா?
மலர்கொண்டும் தளிர்கொண்டும் அல்லாமல்
ஒரு மரமும் இங்கே காணக்கிடைக்கவில்லை
ரீங்கரித்து சுழலும் வண்டுகளின் இசையும் பாடும் குயில்கூட்டங்களும்
காமனின் புகழை வாழ்த்துகின்றன வேறொன்றில்லை!
எல்லா பருவங்களும் ஒன்றிணைந்த அழகு!
அதென்ன பொன்மயமான அந்த மகிழ்வுக்குரிய மலை
எத்தனை விந்தையானது
ஆணவம் கொண்ட அன்னங்களும் சக்ரவாகங்களும்
காதல் செய்யும் இந்த தடாகம்
பேரின்பம் அளிப்பது இவ்வண்ணம் பிறிதொன்றில்லை
இந்த மலர்த்தோட்டம் நிகரற்றது
மலையாளத்தின் கவிஞர்களில் மூவர் நிகரற்றவர்கள். மொழித்தந்தை எனப்படும் துஞ்சத்து எழுத்தச்சன். கேலிநாடக ஆசிரியரான குஞ்சன் நம்பியார். கதகளிப்பதம் பாடியவரான உண்ணாயி வாரியர். கதகளி என்பது இசைநடனநாடகம். அதன் எழுத்துவடிவை நாடகக் காவியம் எனலாம். அது ஆட்டக்கதை எனப்படுகிறது. நாடகவடிவில், பாடல்களால் ஆனது.
கேரளத்தின் செவ்வியல்கலையான கதகளியில் முதன்மையான பல ஆட்டக்கதைகள் உண்டு. ஆட்டக்கதை என்னும் வடிவில் இருவர் முக்கியமானவர்கள். உண்ணாயி வாரியார், இரயிம்மன் தம்பி. உண்ணாயிவாரியரின் நளசரிதம் கேரளத்தின் காவியங்களில் தலையாயது என்றும், ஆட்டக்கதைகளில் சிறந்தது என்றும் கருதப்படுகிறது.
கிபி 1682ல் பிறந்து 1759ல் மறைந்தார் என்று சொல்லப்படுகிறது. திரிச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடையில் பிறந்தார். சம்ஸ்கிருதம் தர்க்கம் சோதிடம் கற்றவர். கும்பகோணம் தஞ்சை காஞ்சியில் இசை பயின்றிருக்கிறார். ராமபஞ்சதி, கிரிஜாகல்யாணம், கீதப்பிரபந்தம் ஆகிய நூல்களை இயற்றினார். நளசரிதம் ஆட்டக்கதையால் அறியப்படுகிறார்
இயற்பெயர் ராமன். உண்ணி ராமன் என அறியப்பட்டார்.. முதுமையில் பெயர் மருவி உண்ணாயி வாரியர் என ஆகியது
[கமலதள முத்திரை]
உண்ணாயி வாரியர் பாடிய அந்த நிகரற்ற பூந்தோட்டமே உன் கதகளியின் மலர் முத்திரை போன்ற தாமரைகளில் என் தேவி இருக்கிறாளா என தொடங்குகிறது பாடல். அழகிய இலைக்குடில்களில் அழகிகள் வளர்க்கும் அன்னப்பறவைகளில் ஒன்று தமயந்திக்காகத் தூது சென்றது. அந்த அன்னப்பறவைகள் அறிந்த காதல்கனவுகளில் என் தேவி இருக்கிறாளா என்பது அடுத்தவரி
கதகளியில் இடையாடையில் கச்சையிலிருந்து தொங்கும் குச்சங்களில் உள்ளவை கச்சைமணிகள். ஆடுகையில் அதிகமாகச் சுழல்பவை. கச்சை மணிகள் சுழன்றாடும் கார்த்திகை மாத இரவுகளின் குளிரில் மெய்சிலிர்த்திருக்கும் தடாகங்களே உங்களில் இருக்கிறாளா என் தேவி என்பது அடுத்த வரி.
சினிமாப்பாடல் அதன் சிறிய எல்லைக்குள் காதலையும் பிரிவையும்தான் பாடியாகவேண்டும். ஆனால் கவிஞன் அதன்பின் இருந்தால் அவன் முழுப்பண்பாட்டையே அதற்குள் கொண்டுவர முடியும். கவிஞன் அறியாத பண்பாடு என ஏதுமில்லை.