மோடி,ராகுல் -கடிதங்கள்

ராகுல் -ஒரு கடிதம்

ராகுல் காந்தி தேவையா?

வணக்கம் ஜெ

ராகுல் குறித்தும் மோடி குறித்தும் நீங்கள் உங்கள் கருத்துகளைக் கூறி வருகிறீர்கள். அதற்கு எதிர்வினையும் வருகிறது. சிலர் அவர்களுடைய அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து கருத்துகளை கூறிவரலாம். அது பெரிய தவறல்ல.

”ராகுல்,மோடி -கடிதங்கள்” பக்கத்தில் ‘ஆர்.ராஜசேகர்’ என்பவரின் கடிதம் மிக நகைப்புக்குரிய ஒன்று. முதலில் அவர் பயன்படுத்தியிருக்கும் ‘சங்கி’ என்கிற வார்த்தை. இது ஒரு நாலாந்தர கேலிச் சொல். பன்னிருபடைக்கலாம் வரை வாசித்த ஒருவரால் எப்படி இப்படி முதிர்ச்சியற்ற, WhatsApp தரத்திலான விமர்சனத்தை வைக்க முடிகிறது என்று தெரியவில்லை. சங்க பரிவார அமைப்புகளைக் குறிக்கவும், பிராமணர்களைக் குறிக்கவும் இன்றைய சூம்பிப்போன பகுத்தறிவுவாதிகளால் கேலியாக பயன்படுத்தப்படும் சொல். அவர் உங்களை ‘தந்திரச் சங்கி’ என்று புகழ்கிறார்.

அடுத்ததாக மிக அபத்தமான ஒரு வரி… “இத்தனைக்கும் நானெல்லாம் பன்னிருபடைக்களம் வரை வெண்முரசை வாசித்தவன்”.  ‘நானெல்லாம்’ என்ற சொல்லப் பலமுறை அடிக்கோடிடவும். நீங்கள் ஒரே வரியில் சொல்லிவிட்டீர்கள் ‘நீங்கள் வாசித்தும் பயனில்லை’ என்று. இதை படிக்கும்போது சிரிப்பும் கோபமும் வந்தது. அப்போது ஒன்றை நினைத்துக் கொண்டேன். இவர் இதே வரியை சாரு நிவேதிதாவிடம் சொல்லியிருந்தால் அவர் இவரைக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகம் செய்திருப்பார். தப்பித்துவிட்டார்.

‘ஜமீன்தார்’ ஆர்.ராஜசேகரிடம் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வயிற்றைக் கழுவும் ஒரு சாதாரண இலக்கியவாதிதானே ஜெமோ நீங்கள் ? ! ஆம், இவர் வெண்முரசு வாங்கிப் படித்துதான் உங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறார். எனவே அவருக்கு நன்றியோடு இருங்கள். நினைக்கவே காமெடியாய் இருக்கிறது.

நன்றி

விவேக் ராஜ்

ராகுல் காந்தி தேவையா?

ராகுல்,மோடி -கடிதங்கள்

அன்புள்ள ஜெ ,

நான் 20 ஆண்டுகளாக பா.ஜ .க விற்கு வாக்களிப்பவன் . மோதி வரவேண்டுமென 2009 லியே விரும்பியவன். இருப்பினும் மோதியின் “காங்கிரஸ் இல்லாத பாரதம்” என்பதை எதிர்ப்பவன். நீங்கள் சொன்ன அதே காரணம் தான் – ஜனநாயக சம நிலையின் தேவை.

கிட்டத்தட்ட  ராகுலை தவிர வேறு யாரும் காங்கிரசை நடத்துவது கடினம் என்றே தோன்றுகிறது . இருப்பினும் இதுவும் “எந்நிலையிலும் தாங்கள் மட்டுமே ” என்று ராகுலின் குடும்பத்தினர் அமைத்துக் கொண்டதினால் மட்டுமே –  கட்சிக்குள்ளும் , அதிகார வட்டத்திலும் , நீதிமன்ற வட்டத்திலும் , ஊடக வட்ட்ங்களிலும்  தங்கள் இருப்பை காப்பத்திற்காக அவர்கள் அமைதித்திருக்கும் சட்டகத்தினால் மட்டுமே என்றே தோன்றுகிறது.

இதைத்தவிர ராகுல் எடுத்தார் கைப்பிள்ளையாகவே இருப்பதும் தெரிகிறது. இந்தியாவை பற்றியோ , அதன் கலாச்சார ஆழம் குறித்தோ , அதன் பிரச்சினைகள் குறித்தோ, அதன் தேர்தல் அரசியல் குறித்தோ  அவர் எண்ணங்களில் ஆழம் இருப்பதாக கடந்த 12 ஆண்டுகளில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. கண்ணியம் அவருடைய வலுவாக இருந்தது. இம்முறை அதையும் தொலைத்தது போலவே உள்ளது.  அவருடைய “மென்மையான ஹிந்துத்வா ” ஆகட்டும், AFSPA சட்ட எதிர்ப்பு ஆகட்டும் , ரபேல் பிரச்சாரமாகட்டும், கூட்டணி அமைக்கும் திறன் ஆகட்டும்  அவருக்கே அவர் பேசுவதில் நம்பிக்கை இல்லை அல்லது என்னவென்றே தெரியவில்லை என்றே தெரிகிறது.  அவரை சுற்றி இருக்கும் பல்துறை  நிபுணர்களின் எண்ணங்களினால் திக்குமுக்காடி, அவற்றை முழுமையாக உள் வாங்க முடியாதவராக அதனால் புரிந்ததில் இரண்டை சொல்பவராகவே தெரிகிறார். (overwhelmed with varieties of ideas, and unable to internalize those ideas as coherent thoughts).

ஆனால் நீங்கள் சொல்வது மாதிரி இன்று ராகுல் மாத்திரமே. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் காங்கிரசில் இன்றும் இருக்கும் திறமைசாலிகள்.  ராகுல் அடுத்த 4 ஆண்டுகள் இந்தியா முழுவதும் நடை பயணங்கள் மேற்கொண்டு , மக்களை சந்த்தித்து , முகஸ்த்திகளை தவிர்த்து , இந்தியாவை அறிந்து கொள்ள வேண்டும். அவர்  பிரச்சாரத்தில்  மிகவும் தூக்கலாக இருக்கும் எதிர்மறை அம்சங்கள் தூக்கி எறியப்படவேண்டும். அவர் காங்கிரஸ்  தலைவராக மட்டும் இருந்து கொண்டு தானோ அல்லது தன்  குடும்பத்தினர் அல்லாதோரை (மம்தா போன்றோரை )  பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அம்மாதிரியான முயற்சியால் மம்தா, அகிலேஷ் , சரத் பவார் போன்றோரை காங்கிரசில் (மறுபடி) இணைக்கும் வாய்ப்புகள் உருவாகலாம்.

அன்புடன்
பாலாஜி என்.வி
பெங்களூர்

திரு. ஜெ,

தாங்கள் காந்தியைப் பற்றியும், அவர்மீது அவதூறு பரப்புபவர்கள் பற்றியும் எழுதும்போது பொதுவாக ஒன்று குறிப்பிடுவீர்கள்.  இந்துக்களில் உள்ளவர்களும், இஸ்லாமில் உள்ளவர்களும் மகாத்மா காந்தி எதிர்தரப்பினருக்கே அணுக்கமானவர் என்று எண்ணியே அவரை வெறுத்துப் பேசுகிறார்கள் என்பது.  ஆனால் அவர் பேசியது, நியாயத்தையும், தர்மத்தையும், அழுத்தப்படுபவர்களின் விடுதலையையும் பற்றியதே என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

மேற்கண்ட இரு நபர்களின் கடிதங்களையும் படித்தபோது, என்னை அறியாமலேயே காந்தி பற்றிய அந்த எண்ணம் தோன்றி சிரிப்பை வரவழைத்தது.  இந்த இரு நபர்களுமே வெவ்வேறு எதிர் நிலைப்பாடுகளின், முற்றிய நிலையின் எல்லையில் இருப்பவர்களாகத் தோன்றுகிறார்கள்.  ஆனால் மாறுபட்ட கருத்தை உருவாக்கி தங்களைத் திட்டுகிறார்கள்.  இரண்டு வெவ்வேறு நிலை மனிதர்களிடமும் திட்டு வாங்குவது மட்டும் தாங்கள்.  எதிர்ப்பாளன் நீ என்று ஒருவர், ஆதரவாளன் நீ என்று மற்றொருவர் உங்களை ஒரே விசயத்திற்காக திட்டுகிறார்கள்.  ஒரே ஒரு கட்டுரையை எழுதி, அதில் ஆதரவாளனாகவும், எதிர்ப்பாளனாகவும் தோற்றம் கொண்ட நீங்கள்திறமையானவரா, அந்தத் திறமை உங்களிடம் இருப்பதைக் கண்டுபிடித்த அந்த ஆராய்ச்சியாளர்கள் திறமையானவர்களா என்று நாங்கள் முடியைப் பிய்த்துக் கொள்கிறோம்.

அதிலும் இந்த திரு. ராஜசேகர் என்பவர், உங்கள் கட்டுரையின் உள்ளே புகுந்து, துப்பறிந்து, உங்களுக்குள்ளிருந்து சங்கியை ஆபரேஷன் செய்து, வெளியே எடுத்து பொது வெளியில் வைத்து விட்டார்.  மேலும் உங்களுக்கு வெட்கமில்லையா என்ற கேள்வி வேறு. அந்த அறிவாளி வாசகரை இழந்து நீங்கள் பெரும் துன்பம் அடைய வேறு போகிறீர்கள்.

தற்போது நாட்டில் நிறைய நபர்களுக்கு மனநோய் பிடித்து ஆட்டுகிறது போலும்.

பாவம் ஜெ நீங்கள்,

– கண்ணன்

அன்புள்ள ஜெ

ராகுல் காந்தி தேவையா ? – உங்கள் அருளுரைகளை ரசித்தேன்.  இதோடு நீங்கள் நிற்க கூடாது.  குமாரசாமி; உதயநிதி;  தயாநிதி; கார்த்தி சிதம்பரம்; – இவர்கள் நாடறிந்தவர்கள். எனவே இவர்கள் மாநில தலைமையை மக்கள் ஏற்க வேண்டும்.  ஊழல் , பரம்பரை ஆட்சி , ஹிந்து மதத்தை இழிவு செய்வது , தகுதி இன்மை

, அடிமை மன நிலை – இவை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. மோடி தான் பிரச்சனை.  தொண்டர்கள் இல்லாமல் கிட்சேன் கேபினட் அரசாங்கம் மட்டுமே போதுமானது –  இது போன்ற உபதேசங்களானும் சேர்த்து பிரசங்கம் நடத்தினால் நாடு நலம் பெரும். நன்றி

ஹரிஹர வெங்கடேசன்

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-62
அடுத்த கட்டுரைகாணப்போகும் விழா